POST: 2020-12-26T10:46:04+05:30

கல்கி – 16.9.2012

A TO Z பெண் நலம்

தாய்ப்பால் …ஆயுட்காலப்பரிசு !

மருத்துவர் தாரா நடராசன்

” பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே ஒஸ்தி ” என்று நினைத்த காலம் மாறி இன்று குழந்தையில் ஆணென்ன ? பெண்ணென்ன ? பெண் குழந்தையானாலும் தாய்ப்பால் மிக முக்கியம் .

குழந்தை பிறந்தவுடன் அழவேண்டும் .அதுதான் இயற்கை .

பாதுகாப்பான சூழலில் உருவான குழந்தை ,பிரசவத்தில் வெளி உலகத்தை எட்டிப் பார்க்கிற போது , இதுவரை இல்லாத ஒரு புதிய சூழ்நிலையை உணர்கிறது .

காற்றை இழுத்து ,மூச்சுவிட ஆரம்பிக்கிறது அந்தப் புதிய அனுபவம் தான் குழந்தையின் அழுகுரல் .அதன் மூலம் இந்த உலகத்துக்கு நான் பத்திரமாக வந்துவிட்டேன் என்று அறிவிக்கிறது .

குழந்தை பிறந்தவுடன் அழணும் இல்லாவிட்டால் வீட்டில் மற்ற எல்லோரும் அழும்படி ஆகிவிடும் ” என்பார் வாரியார் சுவாமிகள் .”

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை ” தாய்ப்பாலைவிடச் சிறந்த பாலும் இல்லை

தாய் நம் குழந்தைக்குத் தரும் ஆயுட்காலப்பரிசு தான் தாய்ப்பால் .காரணம் அவள் கொடுக்கும் பால் குழந்தையின் பசியாற்றும் சாதாரண உணவு இல்லை .ஒரே உணவு அதுதான்

குழந்தை பிறந்து ஒன்றிரண்டு நாட்கள் வரை சுரக்கும் சீம்பாலை ஆங்கிலத்தில் ” கொலஸ்டிரம் ” என்பார்கள் .இது வழக்கமான வெள்ளை நிறத்தில் இல்லாமல் பழுப்பு நிறத்தில் இருக்கும் .சற்று “திக்”காகவும் இருக்கும் .

இதைப் பார்த்து இன்றைய நவநாகரிக இளம் தாய்மார்கள் சிலர் , இது தாய்ப்பால் இல்லை ,இதைக் குழந்தைக்குக் கொடுக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள் .

இது முற்றிலும் தவறு .இதைப்பற்றி பிரசவத்துக்கு முன்பாகவே தாயாகவிருக்கும் இளம் பெண்களுக்கு எடுத்துச்சொல்லி புரிய வைக்க வேண்டும் .

அபரிமித சத்துக்கள் கொண்டது சீம்பால் .அதில் இருக்கும் கொழுப்பு பிறந்த குழந்தை எளிதாக ஜீரணிக்கும் வகையில் உள்ளது .தவிர ,குழந்தைக்கு ஆரம்பகாலம் முதல் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது .

இது பொதுவாகக் குறைவாகத்தான் கிடைக்கும் என்பதால் கிடைத்த பொக்கிஷத்தை வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .

இதன் மூலமாக குழந்தையின் ஆரோக்கியத்துக்கு பலமான அஸ்திவாரம் இடப்படுகிறது .

நார்மல் டெலிவரி மட்டுமில்லை .சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தாலும் கூட தாய்க்கு உடனே பால் சுரக்க ஆற,பிடித்துவிடுகிறது .இது கடவுளின் வரப்பிரசாதம் .

சில தாய்மார்கள் பிரசவித்த சில வாரங்களிலேயே குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுகிறார்கள் .இது மிகத் தவறு .

தாய்க்கு எய்ட்ஸ் போன்ற தீவிரமான காரணங்கள் இருந்தாலோ ,குழந்தைக்குப் பால் அலர்ஜி பிரச்னை இருந்தாலோ தான் பால் கொடுக்காமல் இருக்கலாம் .

இன்னும் சிலர் போதுமான பால் சுரக்கவில்லை என்று பாலை நிறுத்திவிடுகிறார்கள் .குழந்தை ,தாயிடம் பாலைக்கு குடிக்கக் குடிக்கக்தான் மேலும் தாய்க்கு பால் சுரக்கும் .

சில தாய்மார்களுக்கு , தாய்ப்பாலை நிறுத்த விருப்பம் இல்லை என்றாலும் கூட குழந்தைக்குத் தேவையான அளவுக்குப் பால் சுரக்குமா ? என்ற சந்தேகம் இருக்கும் .

இதுவும் தவறு தான் .ஒரு தாய் ,தமக்குப் போதுமான அளவுக்குப் பால் சுரக்காது என்று நினைக்கத் தொடங்கினாலே , பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.எனவே பாசிட்டிவ் நம்பிக்கை வேண்டும்.இந்த எண்ணமே தாராளமாகப் பால் சுரக்க வழி செய்யும் .

இன்னும் சில இளம் தாய்மார்கள் தங்களுக்கு மார்பகம் சிறியதாக இருப்பதால் ,அதிகமாகப் பால் சுரக்காது என்று நினைத்து மன வருத்தமடைகிறார்கள் .இதுவும் தேவையற்றது

மார்பகத்தில் இருக்கும் சிறப்பு சுரப்பிகள் மூலமாகவே தாய்ப்பால் சுரக்கிறது .அளவைப் பொறுத்து அல்ல .

குழந்தைக்கு ஒரு நாளில் எத்தனை தடவை பால் கொடுப்பது ?

எப்போதெல்லாம் குழந்தைக்குப் பசி எடுக்கிறதோ ,அப்போது நாமே தம் தேவையை அழுகையின் மூலமாக உணர்த்தும் ,

அதேபோல் குழந்தை பால் குடித்துக்கொண்டே இருக்கிறபோது வயிறு நிரம்பிவிட்டால் , அது தாமாகவே நிறுத்திவிட்டு வாயை எடுத்துவிடும்.

சில சமயங்களில் , குழந்தைக்குப் பசி எடுத்து , பால் குடிக்க ஆரம்பிக்கும் .தாய் குழந்தையை தம்மோடு அனைத்துப் பாலூட்டும் போது குழந்தைக்கு தாயின் அரவணைப்பும் பாலோடு சேர்ந்து கிடைக்கும் .

அது குழந்தைக்கு ஒருவித திருப்தியை ஏற்படுத்தும்.அந்த மாதிரியான தருணங்களில் , வயிறு நிரம்பாவிட்டாலும் கூட ,குழந்தைக்கு வயிறு நிறைந்த திருப்தி ஏற்பட்டுவிடும் .

அப்போது குழந்தைக்கு அடுத்த தடவை சீக்கிரமே பசி எடுத்துவிடும் .

இப்போதுதானே பால் கொடுத்தோம் !அதற்குள் குழந்தைக்குப் பசிக்காது ;பாலுக்கு அழவில்லை ‘என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது

.மறுபடியும் பால் கொடுக்க வேண்டும் .

தாரா நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *