கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் ( பகுதி – 66 )
கலைவாணரிடம் கற்ற பாடம் கொடை மனம்
அப்போது தந்தை பெரியார் நூற்றாண்டு விழா சிறப்பாக நடந்துகொண்டிருந்தது .மாவட்டம் தோறும் கருத்தரங்கம் , கவியரங்கம் ,சிந்தனை மேடை ,தலைவர்கள் பேருரை , கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன .
புரட்சித்தலைவர் முதல்வர் என்ற நிலையில் ஏறத்தாழ அனைத்துக் கூட்டங்களிலும் பங்குகொண்டார் .
நாவலருடைய சீர்திருத்தப் பொறி பறந்த பொழிவுகள் நாடு முழுவதும் எதிரொலித்தன .
ஈரோடு மாநகரில் காலை ஒன்பது மணிக்குத் தொடங்கிய கருத்தரங்கம் முழுவதும் புரட்சித்தலைவர் மனம் தோய்ந்து கேட்டுக்கொண்டிருந்தார் .
பெரும்பாலும் ஏதேனும் நிகழ்ச்சிக்கு வந்தால் நடுவில் எழுந்து போவதில்லை .
எத்தனை மணி நேரமானாலும் .
மதியம் ஒரு மணி அளவில் நாவலர் பேருரை முடிந்தது .பிறகு கூட்டத்தில் களைப்பும் சோர்வும் படியத்தொடங்கின .நிறைவுப் பேச்சாளர் திருக்குறளாராவார் ! .
திருக்குறளாருக்கு ஈடாக நகைச்சுவை மிளிர நற்கருத்துக்களைப் பேசுவதற்கு இன்றுவரை எவரும் பிறக்கவில்லை .
திருக்குறளார் பேச்சு தேனாய்த் தித்திக்கும் திருக்குறளின் ஆழ்ந்த பொருளை எத்திக்கும் சென்று சிரிக்க வைத்த சிந்தனைச் செம்மல் அவர் . .
மேடைக்கு வந்து நின்றார் திருக்குறளார் .அப்போது ” பெரியார் பெருமை ” என்ற தலைப்புக் கொடுத்திருந்தோம் .
அவர் பேசத் தொடங்கினார் .
தந்தை பெரியார் யாழ்ப்பாணத்துக்குப் போயிருக்கிறார் .தந்தை பெரியாருடைய பெருமிதமான தோற்றம் – செக்கச்சிவந்த மேனி – மார்பில் விழும் தாடி – ஆடையைப் போர்வையாகப் போர்த்திருந்த அழகு ,
இவைகளையெல்லாம்
வருணித்த திருக்குறளார் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார் .
தந்தை பெரியாருடைய தோற்றத்தைப் பார்த்து யாரோ ஒரு மகரிஷி வந்திருக்கிறார் .இமயமலையில் தவத்தை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் என்று சரடு விடுவதற்கு ஆட்களா இல்லை !
பெரியார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மூடப் பழக்கங்களைக் காலில் போட்டு மிதித்துத் தேய்த்தார் .கூட்டம் முடிந்தது .எல்லோரும் சென்ற பிறகு ஒரு பெண்மணி ஓரமாக வந்து கை குவித்தார் .
” என்னம்மா நான் தான் எல்லாம் பேசி முடிச்சாச்சே ! , நம்பிக்கையால தானே நாடே நாசமாகப் போயிற்று , உங்களுக்கு என்ன வேணுமென்று கேட்டார் ,
அந்த அம்மையார் கைகளைக் கட்டிக்கொண்டு , வாய் புதைத்துப் தந்தை பெரியார் காலடியில் விழுந்து சாமி ! எனக்கு திருமணம் ஆகிப் பத்து வருடம் ஆயிற்று , பிள்ளை பாக்கியம் இல்லை .சாமி தான் ஆசீர்வதிக்க வேண்டும் என்றாராம் .பெரியார் மனசுக்குள் நமக்கே குழந்தை பிறக்கவில்லை, இது என்னடா பெரிய தொல்லை , திருந்தவே மாட்டார்கள் முணுமுணுத்துக்கொண்டே , சரிம்மா உனக்குக் குழந்தை பிறக்கும் – நல்ல பேரெடுப்பான் என்று அனுப்பிவிட்டார் ..
இப்படித் திருக்குறளார் பேசியதைக் கேட்டு அலைமோதிய கூட்டம் நகைத்து நகைத்து வயிற்றைப் பிடித்துக்கொள்கிற அளவிற்கு களிப்புக்கடலில் மிதந்தது .
புரட்சித்தலைவர் கைக்குட்டையை வாயில் வைத்துக்கொண்டு நாற்காலி சாய்ந்துவிடுதே என்ற நிலைக்குத் திருக்குறளார் பேச்சில்
திளைத்துப் போனார் .
இன்னும் பேச்சு முடியவில்லை .
பதினைந்து ஆண்டுகள் கழித்துப் பெரியார் மீண்டும் யாழ்ப்பாணம் போனார் .பேசி முடித்தார் .ஓர் அம்மையார் தன் மகனோடு வந்து காலில் விழுந்து – சாமி வரம் கொடுத்தபடியே மகன் பிறந்து பள்ளிக்கூடத்தில் நல்ல பேர் வாங்கி வருகிறான் என்று கண்களில் நீர் துளிர்க்க மீண்டும் காலில் விழுந்தார்களாம் .
போதும்மா ஒரு பையன் போதும் , நல்லா இருங்க , நல்லா படிக்க வைங்க என்று சொன்னாராம் .
மகரிஷி சொன்னா நடக்குமோ – நடக்காதோ தந்தை பெரியார் சொன்னால் நடக்கும் , அவர் வழியில தான் நாடு நடக்கும் என்று முடித்தார் .
இது கற்பனை நிகழ்ச்சியாகக் கூட இருக்கலாம் .ஆனால் திருக்குறளார் தெரிவித்த செய்தி தந்தை பெரியாருடைய பெருமைக்கு வைரமுடி சூட்டியதாகும் .
இது நடந்து சில மாதங்கள் கழிந்த பிறகு புரட்சித்தலைவர் ஒருமுறை என்னிடத்தில் பேசிக்கொண்டிருந்த போது திருக்குறளார் சொன்னது உண்மைதானா என்று பேசிக்கொண்டார்களாம் . ,
பெரியார் பேச்சு உண்மை தான் ,தந்தை சொல்மிக்க மந்திரமில்லை , எனக்கு அப்படி நடந்திருக்கிறது .என்றார் .
நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டு நின்றேன் ,என்ன அண்ணா அப்படி நடந்தது என்று கேட்டேன் .
நாடக உலகிலும் – திரையுலகிலும் என்னையும் என் அண்ணனையும் தந்தை போல் அரவணைத்து வளர்த்து ஆளாக்கியது மட்டுமில்லாமல் எனக்கு உடன்பிறக்காத உத்தம அண்ணனாக எம் கே இராதாவும் வாய்த்தார் .
உங்கள் பிள்ளைகளைக் குறித்து நீங்கள் கவலைப்படாதீர்கள் அம்மா !, அவர்களையும் சேர்த்து எனக்கு மூன்று பிள்ளைகள் ,
அவர்கள் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு உயர்ந்து வர நான் பொறுப்பு என்று கூறி என் அன்னை சத்தியபாமா அம்மாவுக்கு சத்தியவாக்குக் கொடுத்தார் .கலை உலகத்துக்கே ஆசிரியராக நடிப்புக்கலைஞர்கள் அனைவரும் ” வாத்தியார் ” என்று வணங்கி அழைத்த கந்தசாமி முதலியார் , வாக்கு எனக்குப் பலித்திருக்கிறது .
திருக்குறளார் பேசும்போது பெரியாரை நினைத்தேன் , அவர் நிழலாக ஆசிரியர் கந்தசாமி முதலியாரை எண்ணிக் கலங்கினேன் என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக்கொண்டார்
தான் வளர்ந்தபோது தன்னை வளர்த்தவர்களை , நண்பர்களை , உடன் இருந்தவர்களை எப்போதும் நினைத்து நெகிழ்வது புரட்சித்தலைவரின் இயல்பு .
மேடையில் தமிழக முதல்வரான நிலையில் என் அண்ணன் என்று சொல்லிப் பெருந்தகை எம் கே .இராதாவின் முன்னிலையில் விழுந்து வணங்கியதைத் திரண்டிருந்த கூட்டம் திகைப்போடு பார்த்து விம்மிதம் அடைந்தது .
அரசத் தோற்றமும் – அமைதி படிந்த திருமுகமும் கொண்ட அழகனாக விளங்கியவர் எம் கே இராதா , அந்தப் புகழோங்கிய குடும்பம் இன்றும் செழிப்போடும் – சிறப்போடும் வாழ்ந்து வருகிறது .
எம் கே இராதாவின் பெயரன் ,அவர் குடும்பப்புகழ் மிளிரப் பெருமிதத்தோடு தொழிலதிபராக சுற்றுலாத் தலங்களில் அழகிய வியன் மாளிகை விடுதிகளை அமைத்திருப்பதும் – அயல்நாட்டவர்கள் பாராட்டிப் போற்றுவதுமான திருப்பெயர் கொண்டவர் குமார் சீதாராமன் ,
அவர் கலைவாணர் குடும்பத்தை எங்கள் சிற்றப்பாவின் குடும்பம் என்று நாங்கள் அப்படி நெருங்கிய உறவு கொண்டு வாழ்ந்தோம் என்று அண்மையில் என் மகன் அருளுக்கு அனுப்பிய ஒரு சுட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் .
நாங்கள் திருவண்ணாமலை சென்றபோது அவர் கட்டியிருந்த கற்கோட்டை போன்ற கவினார்ந்த விடுதியில் தான் தங்கியிருந்தோம் .
என் மகன் அருள் , குமார் சீதாராமின் குண நலங்களைச் சொல்லச் சொல்லி கேட்டுக் கேட்டு நானும் என் துணைவியாரும் – அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தைத்தான் நினைவிற்குக் கொண்டுவந்தோம் .
மரபார்ந்த குடும்பத்தின் மாட்சி குமார் சீதாராமின் முகத்தின் பொலிவாக ஒளிர்கிறது .திரு குமார் சீதாராமன் அயல்நாடு ஒன்றுக்கு மதிப்பியல் தூதுவராக நியமனம் பெற்றிருந்தார் .
கலைவாணர் பற்றிப் புரட்சித்தலைவர் 1957 இல் வரைந்த கட்டுரையின் ஒரு பகுதியைக் காணலாம் .
கலைவாணர் என். எஸ் கே. அவர்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்து பல நாட்கள் ஆயின. ஆயினும் எதை எழுதுவது ? எப்படி எழுதுவது ? என்ற கேள்விக்குப் பதில் கிடைக்காத காரணத்தால் இந்தப் பல நாட்களாக நான் எடுத்த முயற்சிகள் அத்தனையும் வீணாயின.ஆனாலும் நான் அந்த மகத்தான சக்தியை- அறிஞர் அண்ணா அவர்கள் கூறியபடி, சகாப்தமாக விளங்கிய கலைவாணரைச் சந்தித்த முதல் கட்டத்திலே நடந்த ஓரிரு நிகழ்ச்சிகள் அவருடைய நெஞ்சுரத்திற்கும், நேர்மைத் திறனுக்கும், சிந்தனைச் சிறப்பிற்கும், சீர்திருத்த ஆர்வத்திற்கும் கொடை மனத்துக்கு எடுத்துக்காட்டாக அமைவதால் இங்கே குறிப்பிட முயலுகிறேன்.
முதன்முதலாக 1934 – ஆம் ஆண்டில் தான் கலைவாணரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. திரு. எஸ். எஸ். வாசன் அவர்கள் எழுதிய ” சதிலீலாவதி ” என்ற கதையைப் படமெடுத்தபோது அதில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நான், படக் கம்பெனியார் ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தங்கியிருந்த சமயம்.
காலஞ்சென்ற எம். வி. மணி அவர்கள் எங்களிடம் என் தமையனாரிடமும் நெருங்கிப் பழகுபவர்.
அவர்தான் முதன்முதலாகக் கலைவாணரைப் பற்றி அதிகமாக எங்களிடம் தெரிவித்தவர். கலைவாணரின் திறமையைப் பற்றியும், அறிவைப் பற்றியும் மணி அவர்கள் சொல்லும்போது, இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று சொன்னால் அது மிகையே அல்ல.
இப்படிக் கலைவாணர் எங்களைச் சந்திப்பதற்கு முன்பே மணி அவர்களின் புகழுரை காரணமாக எங்கள் உள்ளத்தில் ஓர் இடத்தைத் தனதாக்கிக்கொண்டு விட்டார். என். எஸ். கே. எப்போது வருவார், அவருடைய நடிப்பை எப்போது பார்க்கலாம் என்ற ஆர்வம் கரை மீறி இருந்தது. நான் அடிக்கடி கேட்பேன், கம்பெனி நிர்வாகியிடம் ” என் எஸ் கே எப்போது வருவார் ? ” என்று. இப்படிக் கேட்டுக் கேட்டு அலுத்துவிட்ட நிலையில் இருந்தேன்.
ஒரு நாள் மாடிமீது உட்கார்ந்து மணி, நான், தமையனார் மற்றும் சிலரும் சீட்டாடிக் கொண்டிருந்தோம்.
திடீரென மாடிக்கு வந்தார் என். எஸ். கே.ஆவலும் ஆச்சரியமும் கலந்த நிலையில் அவரையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிரில் இருந்தவர்கள் ” சீட்டைப் போடு, ஆட்டத்தைக் கவனித்து ! ” என்று சொன்ன பிறகுதான் போட்டேன். இல்லை; நான் போடவில்லை . என். எஸ். கே. அவர்கள் தான் என் கையிலிருந்த சீட்டைப் பறித்துப் போட்டார். நான், ” அதுவல்ல துருப்பு ” என்று சொல்வதற்குள் சீட்டு விளையாட்டில் கலந்திருந்த மற்றவர்களும் ‘ அதுவல்ல ! ‘ என்று சொல்லவே, என் கையிலிருந்த சீட்டுகளை வாங்கிக் கீழே
விரித்து, இதில் எதைப் போடுவது ? நீங்களே போட்டுக்கொள்ளுங்கள் ! ” என்று சொல்லி என் கைச்சீட்டுகளை விரித்து வைத்துவிட்டார்.
எல்லோரும் தங்களை மறந்து வயிறு குலுங்க, வாய் வலிக்கச் சிரித்தார்கள். காரணம், என் கையிலிருந்த சீட்டுக்கள் அத்தனையும் ஒரே ஜாதிச் சீட்டுக்களாக ( டைமன்களாக ) இருந்தன.
கம்பெனி முதலாளி முதல் சாதாரண ஊழியன் வரை யார் தவறு செய்தாலும் கண்டிக்க அவர் பின் வாங்கியதில்லை.
எப்போது பார்த்தாலும் மணி அவர்களின் நடிப்பையும், அவர் வசனம் பேசும் முறையையும் கற்பனைத் திறனையும் போற்றிப் புகழ்ந்து கொண்டேயிருப்பார். மணி அவர்கள் மீது அத்தனை பற்றுக்
கொண்டிருந்தாராயினும் மணி அவர்கள் செய்யும் சில செயல்கள், தவறு என்று கண்ட நேரத்தில் எதிர்க்கவும் தவறமாட்டார்.
பயங்கரமான சாதி வேற்றுமையுணர்ச்சியை நாட்டிலிருந்தே ஓட்டி, மக்களினத்தின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் போக்கை அடியோடு களையவேண்டும் என்பதிலே கலைவாணருக்கு அந்தக் காலத்திலேயே இருந்த தீவிரமான உணர்ச்சியைக் காணுகிறோம்.
அவர் மற்றவர்களுக்கு யோசனை சொல்பவராகத்தான் பெரும்பாலும் இருந்திருக்கிறாரே தவிர மற்றவர்களின் யோசனையைக் கேட்டு நடக்கும் நிலை அநேகமாக ஏற்பட்டதேயில்லை .
கொடையும் தயவும் பிறவிக்குணம் என்பார்கள் .
கலைவாணருக்கு அது பிறவிக்குணம் .
என் வாழ்வில் கொடுக்கும் மனத்தை கலைவாணரிடம் கற்றுக் கொண்டேன் .
முனைவர் ஔவை நடராசன்

Add a Comment