குடும்ப டாக்டர் பத்மானந்தன் கொட்டிய கண்ணீர் !
ஆகத்து 10 – 2020 – இரேலா மருத்துவமனையில் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வரும் அம்மாவின் உடல்நிலையில் சற்றுப் பின்னடைவு ஏற்படும் அறிகுறிகள் வெளிவரத் தொடங்கிய திணமது .
14 8 2020 அன்று இரவு 9.40 மணி ,” அம்மா ! ” எத்தனையோ போராட்டங்களை வெற்றிகரமாக்கிக் காட்டியவர் நீங்கள் .நிச்சயம் இதில் வென்று வருவீர்கள் .நலமுடன் வீடு திரும்புவீர்கள் .
ஆசுதிரேலியாவிலிருந்து மருத்துவர் கண்ணன் அடக்க முடியாத அழுகையை அடக்கிக்கொண்டு மன தைரியம் ஊட்டுவதற்காகச் சொன்ன வார்த்தைகள் ” .
” கண்ணா ! இந்தப் போரில் நான் தோற்றுவிட்டேன் ” .( I LOST THIS BATTLE ) .போய் வருகிறேன் .அனைவருக்கும் கையசைத்து விட்டு மீளா உறக்கத்திற்கு அம்மா சென்ற போது இரவு மணி 9.50.தன் இறுதி நொடிகளை மிக துல்லியமாகக் கணித்தது அம்மாவின் மருத்துவப் பேரறிவு .
நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததற்கான அடையாளம் தான் அம்மா .
இளம் வயதிலே பல எதிர்நீச்சல் போட்டவர் .
வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியான தருணங்களாகவே அமையும் – என்ற கோணத்தை மட்டும் பார்க்காமல் எப்பொழுது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நிகழலாம் .அதற்குத் தயாராக நாம் இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் .
இந்த அசைக்க முடியாத உறுதி தான் அவரின் வாழ்க்கை சரித்திரம்.
மகளாக ,வாழ்க்கைத் துணையாக சிறந்த தாயாக நாடு போற்றும் நல் மருத்துவராக சுற்றத்தை அரவனைத்துச் செல்லும் பாதுகாவலராக எத்தனை பரிமாணங்கள் – இந்த 87 ஆண்டு கால வாழ்வில் அத்தனையையும் மிக நேர்த்தியாகச் செய்து முடித்த நிறை வாழ்வு அம்மாவுடையது .
மரணம் தவிர்க்க முடியாதது தான் என்றாலும் வாழும் ஒவ்வொரு நொடியிலும் ஏற்படும் இன்பத்தையும் – துன்பத்தையும் அதனதன் போக்கில் எதிர்கொள்ள வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய மாதரசி .
குழந்தை வளர்ப்பில் நேர்த்தி, அய்யாவின் அயராத அலுவலகம் மற்றும் இலக்கியப்பணிக்கு துணை நிற்றல், மருத்துவமனையின் நிர்வாக பொறுப்பில் தன் தனித்துவத்தை வெளிப்படுத்துதல், குடும்பம் மற்றும் சமுதாய நிகழ்வுகளில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்துதல்,தன்னை ஏதாவது ஒரு பணியில் எப்பொழுதும் ஆட்படுத்திக் கொள்ளுதல் , இத்தனைக்கும் மேலாகத் தொடர்ந்து வாசித்தல் – இதுதான் நான் அறிந்த அம்மா .இது அவர் வாழ்ந்து காட்டிய வழி .
கனிவும்,கண்டிப்பும் ஒருங்கே அமைந்த அற்புதம் ..
ஒழுங்கீனத்தைச் சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாத குணம்
.எதிலும் நேர்மை ,
எதற்காகவும் தனக்குச் சரி என்று பட்டதிலிருந்து விட்டுக்கொடுக்காத திடமனம் .
எப்பொழுதும் ஆழ்மனதில் இழையோடிக்கொண்டிருக்கும்
.இரக்கம் கலந்த தாயுள்ளம்
இவற்றின் மொத்த உருவம் தான் அம்மா !
எத்தனைப் பணிகள் இருந்தாலும் அய்யாவின் உடல்நிலையைச் சிந்திக்காமல் இருந்ததே கிடையாது .,
மருந்தோ – உணவோ , உடற்பயிற்சியோ சரியான நேரத்தில் நடைபெறவில்லை என்றால் சினத்தோடு துடித்துப் போய் விடுவார் .
அம்மாவின் குழந்தை மனத்தை இறுதிவரை மாற்ற முடியாமல் சில வேளைகளில் தோற்றும் போய் விட்ட குழந்தை மருத்துவர் .
அலுவலகப்பணிவேறு , குடும்பப் பொறுப்பு வேறு என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டு , மூன்று நன்மக்களையும் நல்ல நிலைக்கு உயர்த்த பெரும் பங்காற்றியவர் .
அய்யாவின் தொடர் பயணங்களால் குடும்ப பாரம் முழுவதையும் தன் தோளில் சுமந்த சுமைதாங்கி
எனக்குத்தெரிந்து தன் துயரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் தன் உள்ளில் தானே அரண் அமைத்த அற்புதம் அவர் .
1961 – திசம்பர் 10 – திருப்பரங்குன்றத்தில் அய்யா – அம்மா திருமணம் , 58 ஆண்டுகள் ஒரு மாதம் – பதினான்கு நாட்கள் ( ஆகத்து 14 – 2020 வரை ) இல்வாழ்வின் இறுதி நாட்கள் .
யாரும் சற்றும் எதிர்பாராத நாளாய் அமைந்ததுதான் வேதனை .இந்த நீண்ட நெடிய வாழ்க்கைப் பயணத்தின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் உறவுகள் துடித்த தருணங்கள் மிகவும் சோகமான நாளது .
தோன்றிய அனைத்தும் மறைந்தே தீரவேண்டும் என்பது இயற்கையின் நியதி என்றாலும் ,பல மறைவுகளை அய்யா நேரில் பார்த்திருந்தாலும் அம்மாவின் மறைவை அய்யாவிடம் சொல்ல யாருக்கும் துணிவில்லை .சொல்ல முடியாமல் சொல்லத் தெரியாமல் நடப்பவைகளை மௌனமாய்ப் பார்க்கும் பார்வையாளர்களாக நின்றது தான் சோகத்திலும் சோகம் .
வாழ்க்கைப் பொய் தான் என்பதை காலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டது .
இனிமேல் அந்த கைகள் நாட்குறிப்பை எழுதாது .அந்தக் கண்கள் சிந்தும் கருணை – அம்மாவின் ஆறுதல் மொழி , இனி எங்களுக்குக் கிட்டாது .விடியாத மன இருளின் மென்கரையில் காத்து நிற்கிறோம் .
கரை கடந்த கண்ணீரோடு டாக்டர் கண்ணன் ,
ஓயாத அழுகையுடன் அறிஞர் அருள் ,
பதறிக்கதறிய டாக்டர் பரதன் ,
நீந்தத் தெரியாமல் அவலக்கடலில் மூழ்கியுள்ள என் தந்தை போன்ற ஐயா உங்களுக்கு யார் ஆறுதல் கூற முடியும் ?
விண்வெளியில் ஒளி மின்னும் தாரகையாய் அன்னையைக் காண்கிறேன் .
வணங்குகிறேன் .அம்மா !
கண்ணீரோடு
மருத்துவர் .பத்மானந்தன் .
28 12 2020

Add a Comment