ஒளவை-85
மேதினி அளந்த மேடைத்தமிழ்….
புலவர் தி.வே. விஜயலட்சுமி, எம்.ஏ., எம்.ஃபில்.,
அருளுள்ளம் வாய்ந்த அழகுதமிழ்ச் சொல்வேந்தர்
தமிழிலக்கிய வரலாற்றில் ஒப்பற்ற ஆய்வறிஞராகவும், உரை வேந்தராகவும் தனிப்புகழ் பெற்றிருந்த திரு. ஔவை துரைசாமி அவர்களின் திருமகனார் ஔவை நடராசன் அவர்கள்.
நல்லுரையாற்றலால் நாவேந்தர். சிந்தைக்கினிய செந்தமிழ் நடைகளை ஓதி கேட்பார் தம் நெஞ்சக் களனில் தமிழ் உணர்வைப் பாய்ச்சுபவர். பட்டிமன்ற நடுவராய் இருந்து காய்தல் உவத்தல் இன்றி சீரிய தீர்ப்பு வழங்குபவர் என்ற அளவில் நான் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தரைப் பற்றி அறிந்திருந்தேன்.
முதன்முதலாக 1993இல் உலகத் திருக்குறள் மையம் நடத்திய கருத்தரங்க விழாவில் அவர் தீந்தமிழ் உரையை நேரில் செவிமடுக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.
2009-இல் சென்னை கிருஷ்ண கான சபாவில் நடைபெற்ற பாரதி விழாவில் கலைமாமணி விக்கிரமன் அவர்களுடனும், முனைவர் ஔவை அவர்களுடனும் உரையாடிக் கொண்டிருந்தேன். தமிழில் புலவர் பட்டம் பெற்றுள்ளேன் என்பதைக் கேட்டவுடன் அவர் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியை வருணிக்கச் சொற்கள் இல்லை. அந்நிகழ்விற்குப் பின்னர் அவரைச் சந்திக்கும் பேறு எனக்குப் 2013-இல் கிடைத்தது.
இளம் வயதில் வாழ்க்கைத் துணைவரை இருதய அறுவை சிகிச்சைக்கு (தோல்வியுற்றதால்) இரையாக்கினேன். பின்னர் பத்து ஆண்டுகட்குப் பிறகு என் ஆருயிர்த் தந்தையை இழந்தேன் (1991-இல்) நிலை குலைந்த என்னைத் தன் கண்ணுக்குள் வைத்துக் காத்து, அரவணைத்து பாசத்தைப் பொழிந்த ஆருயிர் அன்னையை 2012 செப்டம்பர் 9-இல் இழந்தேன். மாளாத் துயரத்தால் மனமுடைந்து துயர்க்கடலில் மூழ்கியிருந்தேன்.
இந்நிலையில் 2013 ஜூன் மாதம் எனது ஆருயிர்த் தோழி முனைவர் வாசுகி கண்ணப்பன் என்னைத் தொடர்பு கொண்டு, தி.நகர், திலக் தெரு அலுவலகத்தில் முனைவர் ஔவை நடராசன் அவர்களைக் கண்டு, நூல் அணிந்துரை ஒன்று எழுதுமாறு கேட்டுக் கொண்டார். துயரத்தை மாற்றிக் கொண்டு ஔவை அவர்களைத் திலக் தெரு அலுவலகத்தில் சந்தித்தேன். அந்நாள் என் துயர வாழ்விற்கு ஒரு திருப்புமுனை என்பதை அன்று அறியவில்லை.
பல நூல்களைக் கற்றாய்ந்த பன்னூற் புலவர் பேராசிரியர் துணை வேந்தரைக் கண்டேன். கண்களில் கருணை வெள்ளம் – அன்புடன் வரவேற்று விசாரித்தார். அவரைப் பார்த்தவுடன் தமிழ்க் கடவுளையே தரிசித்த உணர்வு என் உள்ளத்தில் எழுந்தது. என் வாழ்வின் பின்புலம் கல்வித் தகுதி, எழுதிய நூல்கள் பற்றி விவரமாகக் கேட்டார். நான் எழுதிய வெண்பாக்களைப் படித்து வியந்தார்.
டாக்டர் உ.வே.சா. அவர்கள் பரம்பரையில் வந்தவள் என்றதும், ஐயர் அவர்களையே நேரிற் கண்டவர் போல் மகிழ்ந்தார். எங்கள் தந்தையார் பேராசிரியர் எச். வேங்கடராமன் அவர்கள் திருவையாற்று அரச கல்லூரியில் பல்லாண்டுகள் பணியாற்றி, பண்டித வித்வான் தி.வே. கோபாலய்யர், தமிழண்ணல், முனைவர் தி. இராசகோபாலன், முனைவர் ம. இராசேந்திரன் (மேனாள் துணை வேந்தர், தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழகம்) போன்ற பல பேரறிஞர்களை உருவாக்கியவர் என்று நான் கூறியவுடன், அவர் திருமுகம் தமிழ்த் தேனைப் பருகியது போன்ற உணர்வில் ஆழ்ந்தது.
நான் எழுதிய “கண்ணீர்க் கவிதைகள்” (என் வரலாறு) என்ற நூலை அவரிடம் கொடுத்து விடைபெறும் நேரத்தில் ஒரு வினா விடுத்தார். அதுதான் என் மனத்துயரம் தீர்க்கும் அருமருந்தாக அமைந்தது. “உங்கட்கு இலக்கியத்தில் ஆர்வம் உண்டா?” என வினவினார்.
நான், தமிழில் புலவர் பட்டம், தமிழ் முதுகலை ஆய்வியல் நிறைஞர் போன்ற பட்டங்களை முறையே படித்து ஆழங்கால் பட்டவள் என்று சொல்லி, நானெழுதிய திருக்குறள் ஆய்வு நூலையும் கொடுத்தேன். உடனே பிரித்துப் பார்த்தார். பேஷ், பேஷ் எனப் பாராட்டி, “ஒரு நாள் கழித்து மீண்டும் வருக. ஓர் ஆய்வுப்பணி செய்ய வேண்டும். எங்கள் தந்தையார் விட்டுச் சென்ற அகநானூற்றுப் புலவர்கள் பெயர் ஆராய்ச்சி என்ற நூலைச் செப்பனிட வேண்டும்” என்று 120 பெயர்கள் கொண்ட பட்டியலைத் தந்தார். அன்புடன் விடை கொடுத்தார். பிறகென்ன! அவ்வாறே வாரம் இரண்டு நாட்கள் தி.நகர் அலுவலகம் சென்று புலவர்கள் பெயர் ஆராய்ச்சி குறித்து இரண்டு மணி நேரங்கள் ஆய்வு செய்வோம். பின் எழுதி வருமாறு கூறுவார். அவருடன் இணைந்து ஆய்வு செய்தல் ஒரு தனிக்கலை.
ஒவ்வொரு புலவர் பெயர்க்கும் வேர்ச்சொல் தேடுவார். நம் மனம் சங்க காலத்திற்குச் சென்றுவிடும். தமிழ்த் தாயே ஓர் உருவெடுத்து அமர்ந்து உரையாடுவதாகவே நினைப்பேன்.
எழுத்துக்கு எழுத்து ஆய்ந்து ஆழமாக அச்சொல்லுக்குள் போய், பெயர்க் காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வர ஒரு மணிநேரம் ஆகும்.
சான்றாக, ‘நக்கண்ணனார்’ என்ற பெயரை எடுத்தால் ‘ந’ என்ற எழுத்தில் தொடங்கும் புலவர் பெயர்களை சொல்லச் செய்வார். சிறப்புப் பொருளைத் தரும் ‘ந’ என்னும் பட்டத்தைச் சார்ந்து பெயரினர் பட்டியல் எடுப்போம்.
புகழ்வாய்ந்த பெருமக்களைச் சங்க காலத்தில் ‘ந’, ‘நல்’ என்று எழுத்துக்களை முதலிற் சேர்ந்து வழங்குதல் மரபாயிற்று என்று தொடங்கி, பெயர்க் காரணங்களைப் பல நூல்களின் துணையுடன் ஆராய்ந்து முடிவுக்கு வருவோம். இவ்வாறு புலவர்கள் பெயர் ஆய்வினை மேற்கொண்டமையால் நான் அறிந்து கொண்ட செய்திகள் பல.
என் மனத் தளர்வுகள் கொஞ்சம் நீங்கியதைப் போன்ற உணர்வுகள் ஏற்பட்டது. இவை மட்டுமல்ல “முதல்வர்க்கு முதல்வர் ஓமந்தூரார்” முதல் பல தலைவர்கள் பெருமை குறித்துப் பல செய்திகள் கூறுவார்.
தொல்காப்பியம், சங்ககால இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், இருபதாம் நூற்றாண்டு சிறுகதை எழுத்தாளர்கள், தாம் சென்று வந்த உலக நாடுகளைப் பற்றிய அரிய செய்திகள் என அவர் தொடாத துறைகளே இல்லை. நாமணக்க, உளம் இனிக்க, ஔவை அவர்கள் உரையாடும் போது, நேரம் போவதே தெரியாது.
ஒருமுறை பாரதிய வித்யாபவனில் “தூதின் சிறப்பு” குறித்து நாவேந்தர் உரையாற்ற வேண்டிய நிகழ்வு.
கிளி, புறா, அன்னம், தமிழ் போன்றவற்றைத் தலைவனிடம் தூது விடுத்து, தலைவி தன் விருப்பத்தைச் சொல்ல வருமாறு அமைந்த இலக்கிய வகை தூது. தன் உரை தொடங்குவதற்கு முன்பு பாரதியின், கிள்ளை விடு தூது ஒன்று பாட வேண்டும் என்று, ‘சொல்ல வல்லாயோ கிளியே’ என்ற பாடலைப் பாடுங்கள் என்று கூறி பாட வைத்து எனக்கு ஓர் அரிய வாய்ப்பை அளித்தமை நான் பெற்ற பெரும் பேறு.
இவ்வாறு வாரத்தில் செவ்வாய், வியாழன் தி.நகர் திலகர் தெருவில் உள்ள அலுவலகத்தில் 12.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை தமிழிலக்கியப் பரிமாற்றம் நடைபெறும். தமிழறிஞர்கள் சிலரும் உடன் இருந்து உரையாடலில் இணைந்து கொள்வர்.
நான் எங்கள் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லும் நெய் கலந்த உணவை, சுவைத்து உண்பார். நான் முற்பிறப்பில் செய்த தவப்பயனோ என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.
ஔவை அவர்கள் அலுவலகத் தட்டச்சு செய்பவர் திருமதி இலட்சுமி அவர்கள். அவர் இட்ட பணியை உடனுடன் செய்து கொடுப்பார்.
நான் எங்கள் தந்தையாரின் 94-ஆம் ஆண்டுப் பிறந்த நாளையொட்டி என் தாயார் ஆசையை நிறைவேற்ற நினைவு மலரொன்று தந்தையார் பணியாற்றிய கல்லூரியிலேயே வெளியிட விருப்பம் கொண்டேன்.
அவரிடம் 1943 முதல் 1978 முடிய தமிழ் பயின்ற அறிஞர்களைத் தெரிந்த அளவிற்கு, இயன்றவரை தொடர்புகளைத் திரட்டினேன்.
முனைவர் தமிழண்ணல், முனைவர் அ. அறிவொளி, மேனாள் துணை வேந்தர் ம. இராசேந்திரன் போன்ற பல தமிழறிஞர்களிடமிருந்து கவிதைகள், கட்டுரைகள், தந்தை குறித்த நினைவலைகள் பெற்று அத்துடன் “எந்தையாரின் வாழ்வும், தமிழ்த் தொண்டும்” என்ற வரலாற்றையும் இணைத்து நினைவு மலர் ஒன்று உருவாக்கப்பட்டது.
அந்த மலருக்கு ஏற்றதொரு பெயர் சூடிய பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்கள் வழங்கிய அணிந்துரை பன்மணிக் குவையாகத் திகழ்கிறது.
2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் நாள் திருவையாற்று அரசர் கல்லூரியின் முதுபெரும் புலவர் திரு.ப. அரங்கசாமி அவர்கள் வெளியிட, சேக்கிழாரடிப்பொடி டாக்டர் தி.ந. இராமச்சந்திரன் அவர்கள் பெற்றுக்கொள்ள, தமிழகத்துப் பெரும் புலவர்கள் சிறப்புரையாற்ற விருந்தோம்பலுடன் விழா நடைபெற்றது.
திரு. ஔவை நடராசன் அவர்கள் தலைமையேற்று நடத்த ஒப்புக்கொண்டும் அவர் உடல்நலம் சரியில்லாததால் வரவியலாமற் போயிற்று. அஃது எனக்கு ஒரு பெருங்குறை. என் வருத்தம் கண்டு, இளகிய மனம் கொண்ட ஔவையவர்கள் ஒரு சீரிய வாழ்த்துரை பேசிப் பதிவு செய்து விழாவில் ஒலிபரப்புமாறு என்னிடம் நல்கினார். அவர் கண்களில் கண்ணீர். 10 மணித் துளிகள் கொண்ட அவ்வுரை இலக்கிய வரலாற்றில் இடம் பெறத்தக்க ஏற்றமானவுரை. என்னைத் தமிழுலகு அரிய ஒரு முத்தாய்ப்பு எனலாம்.
அவர் நல்கிய வாழ்த்துரை பின் வருமாறு:-
ஔவையின் வியத்தகு வாழ்த்துரை – அருளுரை (சுருக்கம்)
“இமைதிறவாமல் ஏக்கக் கடலில் ஏங்கித் தவிக்கின்ற தம் மக்கட் செல்வங்களையும், தமிழ் படித்து நீ என்னைப் போல் திகழ வேண்டும் என்று சொல்லி வாழ்த்தி வளர்த்த அருமந்தத் திருமகளார் புலவர் விஜயலட்சுமியையும் புலம்புகின்ற நிலையில், பேரறிஞராய், பேராசிரியராய், செந்தமிழ் நாட்டு வேதியராகவும் திகழ்ந்த வெங்கட்ராமய்யர் அவர்களைத் தமிழ் நாட்டு மக்கள் அனைரும் போற்றி வணங்குதல் பெரும் கடமையாகும்.
தமிழ்க் கல்லூரிகளில் பழமையும், புகழும், பெருமிதமும் வாய்ந்த தமிழ்க் கல்லூரிகளில் ஐயாற்று அரசர் கல்லூரியில் நான் மதிக்கும் பெரும் பேராசிரியர்கள் பலர் பணியாற்றியுள்ளனர்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் வைணவத் துறையில் நான் மதிக்கும் பெரும் பேராசிரியராக விளங்கிய திரு. புருஷோத்தம நாயுடு அவர்களும், சென்னை அரசு மாநிலக் கல்லூரிப் பேராசிரியராகவும், தமிழக அரசின் மொழி பெயர்ப்புத் துறைப் பேராசிரியராகவும் பணியாற்றிய திரு. கு. இராஜவேலுவும், நாடகத் துறைக்குப் பெரும் புகழ் சேர்த்த செம்மல் S.D சுந்தரம் அவர்களும் இக்கல்லூரியிற் படித்துப் புகழ் பெற்றவர்கள்.
பேராசிரியர் வித்வான் தி.வே. கோபாலய்யருக்கு இவர் ஆசானாய்ப் அமைந்துள்ளாரெனில் இவர் புலமைக்குச் சான்று வேண்டுமோ?
அடக்கமும் ஆன்றவிந்த கொள்கையும், பதற்றமில்லாமல் பரிவோடு பேசும் பேச்சும், நாமறிந்த தமிழிலக்கண, இலக்கியங்களைக் கன்னல் சாறாய் மாணவர்க்கு ஊட்டிய மாபெரும் மனமும் கொண்டவராய்த் திகழ்ந்துள்ளார் வேங்கடராமன் அவர்கள்.
அவர் திருமகளார் அவ்வப்போது வந்து என்னைக் காணும்போது தம் தந்தையார் படித்த தொல்காப்பியம் மற்றும் இலக்கிய நூல்களைக் கொண்டு வந்து என்னிடம் அவ்வப்போது காட்டுவார். எழுத்துக்கு எழுத்து படித்த பாங்கும், திருக்குறளைப் பரிமேலழகர் உரையுடன் நுட்பமாகப் படித்து, அழகாக உரை நுட்பங்கள், ஒப்புமைக் குறிப்புகள் இவற்றையெல்லாம் நூலில் குறித்து வைத்துள்ள பாங்கை எண்ணிக் கண் கலங்குகிறேன்.
உ.வே.சா. அவர்கள் நூலகம் அரிய நூல்களைக் கொண்ட மாபெரும் நூலகம். போற்றுவாரும், புரப்பாரும் இன்றி ஓர் பக்கத்தில் எளிமையாகச் செயல்பட்டு வருகிறது. இன்றே அப்படியெனில் 25 ஆண்டுகட்கு முன்னர் நம் பெரும்புலவர் வெங்கடராமய்யர் அங்கு அடிக்கடி சென்று உ.வே.சா. ஐயர் அவர்கள் ஏடுகளையும் அவர் எழுதி வைத்த குறிப்புகளையும் ஒழுங்குபடுத்தி, பதவுரை, மேற்கோளுடன் நற்றிணை நானூற்றை அழகிய பதிப்பாகக் கொண்டு வந்தார்.
நற்றிணைக்குப் பின்னத்தூர் நாராயணசாமி அய்யரும், எந்தையாரும் உரையெழுதி வெளியிட்டிருப்பினும், உ.வே.சா. அவர்கள் எழுதிய குறிப்புகள் கொண்டு ஆழ்ந்து குறியிட்டு, ஏட்டின் சில மாற்றங்களுடன் நற்றிணையைப் பதிப்பித்துள்ளார்.
அனைவருக்குமே தளர்ச்சியும், முதிர்ச்சியும் உலகில் பொது என்றாலும், அவர்க்கு தமிழுணர்ச்சி ஒரு சிறிதும் குறையாது இருந்தது.
தமிழ்ப்புலமை பெற்றிருந்தாலும், விதி வயத்தால் மைய அரசோடு தொடர்புடைய நிதி நிறுவனத்தில் நிருவாக அதிகாரியாக விஜயலட்சுமி அவர்கள் பணியாற்றி வந்தாலும், அந்தி வந்தால் தம் அருமைத் திருமகளுக்குத் தாமறிந்த தமிழ்க் கருத்துகளைச் சொல்லி அறிவூட்டி வந்தார்.
ஆருயிர் வாழ்க்கைத் துணைவரை இளம் பருவத்தில் இழந்து, பின் தன் ஆருயிர் தந்தையார், தாயார் அவர்களையும் இழந்து துயருற்றிருந்த விஜயலட்சமி வாய் திறந்தால் வண்ணம் பாடுகிற வெண்பாப் பாடுகிற புலமைத் திறமும், சிறந்த இலக்கண இலக்கிய அறிவும் வாய்க்கப் பெற்றவர்.
தம் தந்தையார்க்கு நினைவு மலர் ஒன்றை பல இடையூறுகளைத் தாண்டி தனியொரு மகளாக இருந்து விழா நடத்தும் அம்மையார் மலர் வெளியிடுகிறார்.
இவ்வம்மையாருக்குத் தமிழுலகும், தமிழறிஞர் பெருமக்களும் அவர் நெஞ்சத்திற்குத் துணையாக என்றும் இருக்க ஊக்கம் அளிக்க வேண்டும்.
தாய், தந்தை, கணவர் என்ற மூவரையும் இழந்து, அவர்களை நினைந்து நினைந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து நெக்கு நெக்காய் உருகி கண்ணீரால் நனைந்து நனைந்தும் தந்தையார்க்கு மகள் தந்தைக்கு ஆற்றும் உதவியாய் இச்செயலைச் செய்கிறதை எண்ணி நெகிழ்கிறேன்.
முன்னியது முடிக்கும் ஆற்றல் பெற்ற விஜயலட்சுமிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
உடல் நலம் சரியில்லாததால், என்னால் வர இயலவில்லையெனினும் என் மனமெல்லாம் திருவையாற்று விழாவிலேயே இருக்கும்”
என்று ஔவையவர்கள் பதிவு செய்து அளித்த வாழ்த்துரை மலருக்கு மணிமகுடமாக அமைந்தது.
குறுகிய நாட்களில் என் தமிழார்வத்தைப் புரிந்து கொண்டு, தந்தையின் தகுதியை எடுத்துக் கூறி, மனித நேயத்தின் எல்லைக்கே சென்று விட்டார் திரு. ஔவை நடராசன் அவர்கள். அவர்கட்கு நன்றி பாராட்ட நற்றமிழில் சொற்கள் இல்லை. அப்பெருமகனைத் தலைதாழ்த்தி வணங்குகிறேன்.
பல்லாண்டுகள் பழகியும் ஒருவர் மனத்துயரம், அவர்தம் திறமைகளைப் புரிந்து கொள்ளாத இவ்வுலகில் இப்படியும் ஒரு மேதகு அறிஞரா? என்று நினைத்து பெருமிதம் கொண்டேன். இறைவனுக்கு நன்றி சொன்னேன். ஏறிய மேடைதோறும் இனிய, அரிய, பெரிய கருத்துகளை அலட்டிக் கொள்ளாமல், கையில் குறிப்பில்லாமல் நளினமாகப் பேசி அவையோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேறும் உலகறிந்த பேரறிஞர், கலைமாமணி, பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்கள் என் மனத்துயரின் ஆழத்தைப் புரிந்துகொண்டு புத்துணர்ச்சி தந்து மலர வைத்த அருளாளர் என்பதை எத்தனை முறை கூறினும் தகும்.
தான் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற குறையை நீக்க, சென்னையில் ‘நூல் அறிமுக விழா’ வொன்று ஏப்ரல் 2014-இல் நடத்தி, சென்னை வாழ் மக்கட்கு எடுத்துரைக்க எந்தையாரையும், அடியேனையும் பாராட்டிச் சிறப்புச் செய்தார். இத்தகு மனப்பான்மை யாருக்கு வரும்? என் பெற்றோர் இறைவனையே ஔவை அவர்களின் உருவத்தில் அனுப்பியுள்ளார் என்றே நினைப்பேன். என் உடன் பிறந்தவர்கட்கும் மிக்க மகிழ்ச்சி.
உலகத் திருக்குறள் மையத்தில் ஆயுள் உறுப்பினராக இருந்து பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு அவர்கள் வழிகாட்டுதலில் “திருக்குறளில் பெண்கள் நிலை” குறித்து ஆய்வு செய்த என் நூலை ஆர்வமாகப் படித்தார். முனைவர் கு. மோகனராசு அவர்கள் திறமையில் பெருமதிப்புக் கொண்டவர். எந்தையார் பதிப்பித்த நற்றிணை நூலை விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். அவர் அல்லும் பகலும் உழைத்து எழுதிய அருந்தமிழ் நூலை இலவசமாகப் பெற்றுக்கொள்ள என் மனம் ஒப்பவில்லை என்ற ஔவை அவர்கட்கு எத்தகைய ஒரு நற்சிந்தனை! வியந்தேன்.
நான் ஒவ்வொரு முறை செல்லும்போதும் திருக்குறள் தொடர்பான கட்டுரை எழுதிச் செல்வேன். உடனே படித்துக் காட்டச் சொல்லி பெருமகிழ்வு அடைவார். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஏற்ற தலைப்பை அவர்தான் வழங்குவார்.
‘இயல்புடைய மூவர்,” “நிலையாமையும், நிலைத்தலும், பாம்பொடு பழகேல்” இவை போன்ற கட்டுரைகளில் யான் தெரிவித்துள்ள புதிய ஆய்வு முடிவுகளை மனமாறப் பாராட்டுவார். “அம்மா எனக்கு இந்நாள் வரை தோன்றாத கருத்துக்கள் தங்கட்கு எப்படித் தோன்றின? என்று வியப்பார். மனந்திறந்து மற்றவரைப் பாராட்டுவதில் அவர்க்தனிநூலார்வம்
.
.
திருக்குறளுக்கு ஒரு வரி உரை எழுதத் தொடங்கினேன். நான் எழுதிய உரையை 1330 குறட்பாக்களையும், எழுத்துக்கு எழுத்து அலசி, பரிமேலழகர், கா.சு. பிள்ளை போன்றவர்கள் உரை நுட்பத்துடன் ஆராய்ந்து பார்ப்பார். அவர் ஒப்புக் கொண்ட பிறகுதான் நான் எழுதி முடிப்பேன்.
நான் எழுதிய கட்டுரைத் தொகுப்பு நூலுக்கு அவர் இட்ட பெயர் “திருக்குறள் அலைகள்”.
அவர் வழங்கிய அணிந்துரைக்குத் தலைப்பு “அலைகளுக்கு அப்பால்”. அணிந்துரையைப் படித்தாலே நூலை முழுமையாகப் படித்த உணர்வே யாவர்க்கும் வரும். “ஒரு வரியுள் வள்ளுவம்” என்ற நூலையும், அவரே வள்ளுவர் கோட்டத்தில் தலைமையேற்று வெளியிட்டார்.
என்னை எழுதுமாறு செய்யும் ஓர் உந்து சக்தியாக, தூண்டு கோலாகத் திகழ்ந்தார் எனில் மிகையில்லை. அதனாலன்றோ நான் தொடர்ந்து 5 நூல்கள் வெளியிட இயன்றது.
தனிச் சிறப்பு
முனைவர் ஔவை அவர்கள் உரையாடும்போது நம்மிடம் வினாக்கட்கு மேல் வினாக்கள் தொடுத்து, நம் அடிமனத்தில் புதைந்துளள அழகு தமிழிலக்கியப் புலமையை வெளிக்கெண்டு வரும் திறமை அவர்தம் தனிச்சிறப்பு நம் உளத்தில் எழுந்த சிந்தனையோட்டத்தைக் கேட்டால் கதிரவனைக் கண்ட தாமரைபோல அவர் முகம் மலரும். ஔவை அவர்கள் தீந்தமிழ் ஆய்வைக் கேட்ட அளவில் நம் கவலைகள் அனைத்தும் விலகுவதுபோல இருக்கும். அவரைச் சந்திக்க வரும் பேரறிஞர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைக்கும் முறை அற்புதமாக இருக்கும். தம்மைக் காண வருபவர்களிடம் தம் உடல் நலனைப் பார்க்காமல் மணிக்கணக்கில் பேசி அவர்கட்கு காபி, டீ என்று உபசரித்து கொடுப்பதையும் வியந்து பார்ப்பேன். ஔவை அவர்களின் பரிந்துரைக் கடிதங்களால் பயன் அடைந்தவர்கள் பற்பலர். எந்த உதவியையும் மறுக்காமல் செய்து வாழ்த்தி அனுப்புவார். கைம்மாறு கருதாத கடப்பாட்டினர்.
நூலார்வம்
ஔவை அவர்கள் அமர்ந்துள்ள இடங்களைச் சுற்றிப் பல துறை நூல்கள் சிதறிக் கிடக்கும். படித்துக் கொண்டும் முக்கிய குறிப்புகளை அடிக்கோடிட்டும் வைத்திருப்பார். அவர், நினைவாற்றலுக்கு ஒப்பாக ஒருவர் இருப்பாரா? என்றால் இல்லை என்பதே மெய். இந்த நூலில் இந்தப் பகுதியில் நாம் தேடும் கருத்துக்கள் இருக்கும் என்பதைச் சொல்லிவிடுவார். நூலகத்தில் எந்த வரிசையில் குறிப்பிட்ட நூல் இருக்கும் என்பது அத்துபடி.
வாழ்க்கைத் துணைவியார் – டாக்டர் தாரா நடராசன்
அவருக்கு இணையாக என்னிடம் பாசமும், நேசமும் வைத்திருப்பவர். அவரின் வாழ்க்கைத் துணைவியார் டாக்டர் தாரா நடராசன் அம்மா அவர்களைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். எங்கள் இல்லத்திற்கு ஔவை அவர்களைப் போலவே பல முறைகள் வந்து உரையாடுதல் வழக்கம். தேர்ந்த மருத்துவராயிருப்பதால் தன் துணைவர் உடல் நலனில் கவனம் கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கி கண்ணிமை போல் கவனித்துக் கொள்வதைக் கண்டால் நான் மகிழ்வேன். ஒரு மனைவி எந்த நிலையிலும், எந்த வயதிலும் கணவன் உடல்நிலையில் இத்துணை அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் ஒரு சான்று. “இல்லது என இல்லவன் மாண்பானால்? என்ற குறட்பாவிற்கு எடுத்துக்காட்டு. அம்மா அவர்கள் பரதக்கலை, வில்லுப்பாட்டு மற்றும் தமிழிசை, கர்நாடக இசையில் பேரார்வம் கொண்டவர். வீணையிசையில் மிக விருப்பம். அண்ணா நகரில் இருந்து திருவல்லிக்கேணிக்கு மாதம் இருமுறை வந்து என்னிடம் வீணை கற்றுக்கொள்வார். ஒரு பாடல் நன்றாக மனதில் பதியும் வரை வாசித்துக் கொண்டிருப்பார். அவர் கற்றுக்கொள்ளும்போது அவர் முக மலர்ச்சியில் கலைமகளின் அருள் கனிந்து இருப்பதைக் காணலாம். ஓரிரு ஆண்டுகள் வந்து சென்றார். பின் எலும்பு முறிவு சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு வரவியலவில்லை. ஆனால் இப்போதும் அண்ணா நகர் இல்லத்திற்கு நான் சென்றால் வீணையை எடுத்து வாசித்துப் பார்ப்பார். இசைக்கு வயது தடையில்லை. ஆர்வம் இருப்பின் எந்த வயதும் அமையும் என்பதற்கு அவர் ஒரு காட்டு. என்னை ஊக்குவிப்பதில் அவர் சளைக்க மாட்டார்.
ஔவை அவர்கள் அளப்பரிய தமிழ் வேணவா
ஒரு கருத்துத் தனக்கு நன்கு தெரிந்திருந்தாலும் நம் கருத்து எப்படியென்பதை அவர் கேட்கும் முறையைப் பார்த்தால் தான் ஒருவர் உணர முடியும். ஔவை அவர்களுடன் உரையாடும்போது எனக்கு உளத்தில் ஓர் அச்சவுணர்வு இருக்கும். ஒரே தலைப்பை எடுத்துக்கொண்டு பல பேர் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறுகிறார்கள். சான்றாக, குறுந்தொகை ஆராய்ச்சி இந்நாள்வரை பலரும் செய்துள்ளனர். ஆய்வில் புதுமை வேண்டுமல்லவா? கூறியதையே திரும்பக் கூறலாமா? இதுபற்றி திருவள்ளுவம் ஏதேனும் சொல்லியுள்ளாரா! என்று ஒருநாள், என்னைப் பார்த்துக் கேட்டார். நான் உடன் விடையிறுத்தேன். “இருக்கிறது ஐயா! பயனில சொல்லாமை’ என்ற அதிகாரம் கூறுகிறதே, யாருக்கும் பயனற்றவற்றைப் பலகாலும் சொல்பவன் மகன் அல்லன்’ என்கிறார் திருவள்ளுவர் (பயனில் சொல் பாராட்டுவானை) என்றேன். பலே! பலே! என்றார். ஔவையவர்களிடம் இது போன்ற பாராட்டுக்கள் பெறும்போது பத்மஸ்ரீ பட்டம் பெறுவது போன்ற உணர்வே எனக்கு ஏற்படும். இதை விளக்கமாக எழுதி, இலக்கியப் பீடத்தில் விக்கிரமன் அவர்களிடம் கொடுத்துப் போடச் சொல்லுமாறு பணித்தார். இச்செய்தி இதழில் வெளியானது. நல்ல வரவேற்பு கிடைத்தது.
திருக்குறள் ஆய்வு
உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு ஒரே வரியில் பொருள் மாறாமல் யான் உரையெழுதத் தொடங்கிய காலம் பொற்காலம். ஒவ்வொரு அதிகாரத்தையும் அலசி பல உரையாசிரியர்கள் உரைகளைக் கொண்டு உரையெழுதச் சொல்வார். ஒவ்வொரு திருக்குறளுக்கும் உரை எழுதியவுடன் அறிஞர் ஔவை அவர்களிடம் படித்துக் காட்டுவேன். அவர் முகத்தில் நிறைவு வந்தால்தான் தொடர்வேன். அதுபோழ்து தலைமைச் செயலக மொழி பெயர்ப்பாளர் திரு. இராஜகோபாலன் (இராஜாஜி) அவர்களும் தன் கருத்தைச் சொல்வார். உவப்பத்தலைக் கூடி, உள்ளப் பிரிதல் போல் அவ்விடம் கலகலப்பாக இருக்கும். ஒரு வரியில் உரை காணலில் அவர்க்கு ஈடுபாடு இல்லையெனினும் ஒப்புக் கொண்டார். அறத்துப்பால், பொருட்பால் இரண்டிற்கும் உரையெழும் போது அவர் கருத்துரையை நினைவிற் கொண்டு எழுதுவேன்; உரைப்பணி மிகச் சிறப்பாக முடிந்தது. “ஒரு வரியில் வள்ளுவம்” என்ற நூல் இன்று பலராரும் பாராட்டப் பெறுகிறது.
திருக்குறளில் புகழ் – அதிகாரம்
“நத்தம் போல் கேடும் உளதாகும்” என்று தொடங்கும் குறட்பாவிற்கு அணுக்கவுரை எழுதிப் படித்துக் காட்டினேன். உரை நயம் கண்டு உவகை கொண்டார். இக்குறட்பா எந்த அதிகாரம்? என்றார். “புகழ்” என்று கூறியவுடன், “சரி, நான் என் கருத்தைச் சொல்கிறேன். இதையும் தக்க இடத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்” என்பார். பின்னர் கண்களை மூடிக் கொண்டு சொல்லத் தொடங்கினால் கடல் மடையென, கருத்தோட்டம் பெருக்கெடுக்கும். புகழை எப்படிப் பெறுவது? எதனால் பெறுவது? எவ்வாறு காப்பது? என்று அடுக்கடுக்காய் வினாக்கள் எழுப்புவார். பல்லாற்றான் சான்றுகளுடன் ஆராய்ந்து பல அறிஞர்களின் உரையைக் கண்டபின், இப்போது எழுதி முடித்து எடுத்து வரவுமெனப் பணிப்பார். இன்றைய நாள் எம் உள்ளத்தில் உரமூட்டிய ஊக்க மருந்து என எண்ணி எழுதுவேன்.
திருக்குறளில் கல்வி / உண்மையறிவு
இவ்வதிகாரக் குறட்பாக்கட்கு உரையெழுதத் தொடங்குமுன் அச்சொல்லை ஆய்வுக்கு உட்படுத்துவார். கற்றல் என்பதற்குக் கேட்டல், அறிதல், உணர்தல், காண்டல் என்ற சொற்களையும் பொருளாகக் கொள்ளவேண்டும். “மெய்ப் பொருள் கண்டார் தலைப்படுவர்” என்ற தொடர் மெய்ப் பெருளைக் காண முடியாது. கேட்க முடியும், உணர முடியும். “தொட்டனைத் தூறும் மணற்கேணி” என்ற தொடரில் நாம் எந்த அளவுக்கு ஆழமாகத் தோண்டுகிறோமோ அந்த அளவிற்குக் கேணியில் நீர் ஊறும். அவ்வாறே ஒரு பொருளில் தோயத் தோயக் கருத்துகள் எழும்பும். இவற்றைப் பயிற்சியால், முயற்சியால், ஊக்கத்தால், உழைப்பால் வளர்த்துக்கொள்ள வேண்டும். “ஆழத் தோண்டினாலும், நன்னீர் தான் சுரக்குமா? உப்புநீர் சுரக்குமா என்ற வினா வந்தால் விடை கூற முடியாது” என்று விளக்க ஆரம்பித்து அதை மற்றொரு குறளொடு ஒப்பிடும் திறன் ஔவை அவர்கள் ஒருவரால் தான் இயலும். கற்றனைத் தூறும் அறிவு என்பதில் அறிவு என்ற சொல்லுக்கு உள்ள அறிவு என்பதுதான் பொருள். ஒருவன் எந்தத் துறையில் வல்லவனாக இருக்கிறானோ அந்தத் துறையின் அறிவுதான் உண்மையறிவு. ஒருவன் பல நூல்களைக் கற்றாலும், அவனுக்கு இயல்பாக உள்ள அறிவுத் திண்மை தான் உண்மை என்று முடிப்பார்.
“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்”
என்ற குறளில் வரும் உண்மையறிவை விளக்கத் தொடங்குவார். நான் வியந்தவாறு செவிமடுப்பேன். “அதற்குச் சான்றாக யாரைக் கூறலாம் ஐயா?” என்று கேட்பேன். சான்றாக டாக்டர் வ.செ. குழந்தை சாமி அவர்கள் ஒரு பெரிய பொறியாளர். இருப்பினும் பொறியியல் துறையின் நுணுக்கத்தை நாம் அவரிடம் அறிய முடியாது. அவர் வாய் திறந்து பேசினால், தாய்மொழிக் கல்வி, அறிவியல் தமிழ் பற்றித் தான் பேசுவார். எனவே இங்கு உண்மையறிவு அவர் மிகவும் விரும்புகிற தாய்மொழியாகிய தமிழ்மொழியின் பால் உள்ள புலமையே” என்று முடித்து விடுவார். இப்படிக் கூடச் சிந்திக்க முடியுமா? என்றால் ஔவை அவர்களால் மட்டுமே முடியும். ஊழ்வினை அதிகாரத்தில் வரும் குறளாயிற்றே! ஊழால் ஒருவன்பெறும் அறிவுதானே உண்மையறிவு? என்று கேட்nப்ன. அவ்வாறு முழுமையாகக் கொள்ள முடியாது. பரிமேலழகர் உண்மையறிவுக்கு தரும் பொருள் என்னவெனில், (ஊழால்) உள்ளதாம் நன்மை என்றும், பரிப்பெருமாள் இயல்பான அறிவு, முறைவழி அறிவு என்ற பொருள்களைக் குறிப்பிட்டாலும், நாம் புதுமையாகப் பொருள் கொள்வோமே என்பார். சான்றாதாரங்கள் காட்டிச் சிந்திப்பார்.
இவ்வாறு அவரை என் பேராசானாகவும், நான் மாணவியாகவும் நினைத்துக் கொண்டு செவிமடுத்த கருத்துக்கள் பற்பல. அவ்வாறே திறனறி காட்சியிர் தெளிந்தனம் ஆதலின் என்ற புறத் தொடரில், காட்சி என்ற தொடர் வரும் இடங்களைச் சொல்லுங்கள். பின்னர் அத்தொடரை ஆராய வேண்டுமென்பார் ஔவையவர்கள். மாசறு காட்சி, கடனறி காட்சி, நடுக்கற்ற காட்சி, செயிர்தீர் காட்சி, ஆசறு காட்சி என்று நான் சொல்லச் சொல்ல, பேஷ், பேஷ் கிடைக்கும். அவையெல்லாம் அவரிடம் நான் பெற்ற உயர்ந்த விருதுகளாக நினைத்து மகிழ்வேன்.
என் கனவு / விருப்பம்
முனைவர் ஔவை அவர்களுடன் உரையாடிப் பார்த்தால், மேடைகளில் அவர் உரைகளைக் கேட்டால், அவ்வுரை நம் நெஞ்சை அசை போட வைக்கும். ஒரு சிந்தனை ஒளியை நம் செவிகளில் அவர் பாய்ச்சுவார். சிந்தனை வெளிப்பாடுகள் நூலாக்கம் பெற்றால் நாளை உலகம் அவர்தம் மேதகு ஆளுமையைப் புரிந்து கொள்ளுமே. மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் நீண்ட சிந்தனைகளைத் தம் படைப்புகளில் பதிவு செய்து போந்ததால் அன்றோ இன்று வள்ளுவரும், கம்பனும், பாரதியும் பல ஆண்டுகளைக் கடந்தும் நம் நெஞ்சில் வாழ்கின்றனர். கட்டுப்பாடுகள் ஒன்றும் இல்லாது, அவரைத் திருக்குறள் 1330க்கும் அல்லது 133 குறட்பாக்களுக்காவது சிந்தனையுரை சொல்ல, நூல் வடிவில் கொண்டுவர பேராவல் கொண்டேன். ஏனென்றால் ஒரு குறளுக்கு அவர் காணும் பொருள் புதிய கோணத்தில் இருக்கும். ஆய்வாளர்கட்கு உறுதுணையாக இருக்கும்.
அவரிடம் நான் அடிக்கடி “தாங்கள் சொல்லுங்கள். நான் பதிவு செய்கிறேன்” என்று சொல்வேன். ஒருநாள் அவர் மகிழ்ச்சியோடு கடவுள் வாழ்த்து அதிகாரம் தொடங்கினார். முதல் குறளுக்குப் பொருள் கூறி முடிக்க ஒரு மணி நேரம் ஆயிற்று. இவ்வாறு 10 குறட்பாக்கட்குச் சொல்லியிருப்பார். இடையில் அவர் உடல்நலம் மிகவும் குன்றிவிட்டது. தொடர இயலவில்லை. தி.நகர் திலக் தெருவில் நடந்த நிகழ்வு இது. அவர் திருமகனார் முனைவர் ஔவை அருள் அவர்கள் தலைமைச் செயலக மொழி பெயர்ப்புத் துறை இயக்குநராக மிளிர்கிறார். அவர் இப்பணியைத் தம் தந்தையாரின் அருகிலிருந்து 133 குறட்பாக்களுக்கு நல்லுரையைப் பெற்றுத் தமிழுலகுக்குத் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ‘தந்தையையொப்பர் மக்கள்’ என்ற தொடருக்கு ஏற்ப இன்று பலப்பல பொருளும், சுவையும் புதுமையும் கொண்ட கட்டுரைகள் பல தந்தையார் ஔவை அவர்கள் சொல் நடை போன்று அருள் அவர்களே இதழ்களில் எழுதி வருவது நமக்கெல்லாம் மகிழ்ச்சி தருகிறது. கண்களை மூடிக் கொண்டு அவர் உரையைக் கேட்டால் ஔவை அவர்கள் குரல் எதிரொலிக்கிறது. உலகத் தமிழ் என்ற இதழும் பாரதியின் குயில் பாட்டை இசை, உரைவிளக்க வடிவிலும் அளித்து வருகிறார். ஏனைய இரு திருமகன்கள் கண்ணன், பரதன் இருவரும் தாயைப் போல் மருத்துவ வல்லுநர்கள். தந்தையாரின் உடல் நிலையைக் கவனித்து வருகின்றனர். தன் குடும்பத்தைத் துணைவியார் தாரா நடராசன் அவர்களுடன் இணைந்து பல்கலைக் கழகமாக்கி வெற்றி நடைபோட்டு வீரவுரை வழங்கி மேன்மைத் தமிழால் மேதினி அளப்பவராய்த் திகழ்கிறார் சொல்வேந்தர்.
ஔவை அவர்கள் ஆய்வுத்திறன்
கம்பராமாயணத்தில் மருத்து மலைப் படலத்தில் ஒரு பாடல் – “என்பு என்பது யாக்கை என்பது என்று தொடங்கும் என்பு, யாக்கை, உயிர், அன்பு என்ற நான்கு சொற்களையும் நான்கு மணிநேரம் ஒருநாள் எடுத்துக் கொண்டு கலந்தாய்வு செய்தோம். மனநிறைவான ஆய்வு. மறக்க முடியாத நிகழ்வு.
கருணைக்கடல்
திரு. ஔவை அவர்கள் பாண்டிச்சேரி கம்பன் கழக பட்டிமன்ற நடுவராகச் செயற்படப் புறப்படுகிறார். தலைப்பு – இராமாயணத்தில் நம் மனத்தை உருக்க வல்லது சீதையின் புலம்பலா? தாரையின் புலம்பலா? என்னிடம் தலைப்பைக் கூறி, தங்கள் கருத்து என்ன? என்று 2014-ல் ஒருமுறை கேட்டார். நான் யோசித்தேன். நான் எதிர்பாராத விதமாக அவர் விடை கூறுகிறார். “விஜயலட்சுமியின் புலம்பலே மனம் உருக்கவல்லது” என்றார். என் இருவிழிகளினின்றும் ஆறாக நீர் பெருக்கெடுத்தது. நான் எழுதிய கண்ணீர்க் கவிதைகள் நூலை எந்த அளவு ஆழ்ந்து படித்திருந்தால் இப்படியொரு விடை வரும் என்று எண்ணினேன். அவர் சொல்லாற்றல், நினைவாற்றல் பழகும் முறை அனைவரும் அறிவர். அதற்கும் மேலாக, அருளின் மறுவடிவமாய், மற்றவர் மனத்தைப் புரிந்து கொள்ளும் பேராற்றலும் உடையவர். தூய்மையான பரிவோடு பேசுவார் என்பதை நான் மட்டுமே அறிவேன்.
வானொலிச் சொற்பொழிவு
ஒருமுறை சென்னை வானொலியில் ஐந்து நாட்கள் ‘உரைக் களஞ்சியம்’ பகுதிக்காக முனைவர் ஔவை அவர்கள் உரையாற்றினார். பெருங்காப்பியத்தின் சீர்மை, பாட்டு, தொகை நூல்கள், கம்பநாடன் கவிதை என்ற தலைப்புகள். பல நூல்களைப் படிப்பார். ஆனால் குறிப்புகள் கையில் இருக்காது. அவர்க்கு மனமே ஏடு. மகிழுந்தில் செல்லும் போதும் இலக்கியச் சிந்தனை. வேறு கருத்துகள் கூறுங்கள் என்பார். அவற்றை ஏற்றுக்கொள்வார். உடல்நலம் சரியில்லையெனினும், யாவர் அழைப்பினும் மறுப்புத் தெரிவிக்காமல் கூட்டத்திற்குச் சென்று உரையாற்றத் தொடங்கின் தன் உடல்நலத்தையே மறந்துவிடுவார். அவையோரைச் சித்திரப் பாவை போய் ஆடாமல் அசையாமல் 3 மணி நேரம் தமிழ்த் தேனைப் பருக வைப்பார். இச்செயற்பாடு இவர் ஒருவரால் தான் முடியும்.
தலைவர்கள் பாராட்டு
வள்ளல் பெருமானைப் பற்றிய ஔவை அவர்கள் ஆற்றிய உரையைக் கேட்ட அருட்செல்வர் நா. மகாலிங்கனார், இவரைப் பலவாறாகப் பாராட்டி அவர் தொடங்கிய இராமலிங்கர் பணிமன்றத்தின் செயலாளர் ஆக்கினார் என்று பலர் சொல்லக் கேட்டுள்ளேன். புரட்சித் தலைவர் தமக்கு அளித்த அரிய வாய்ப்பைச் சொல்லி மகிழ்வார். அரசுத் துறையில் பதவியைத் தம் திறமையால் மட்டுமே பெற்ற அறிஞர் ஔவை நடராசன் அவர்கள் ஒருவரே என்பதை நாம் எண்ணி எண்ணி மகிழலாம். பேச்சு வன்மையால் பெற்ற விருதுகள் கணக்கில. ஆனால் தம் விருகளைப் பற்றி யாரிடமும் சொல்லிப் பெருமை கொள்ளும் எண்ணமில்லாதவர். ‘நிறைகுடம் நீர் தளும்பாது’ என்ற பழமொழிக்குச் சான்றாக விளங்குபவர்.
சிந்தனைச் சிகரம்
சொல்லாராய்ச்சியில் புகுந்து வேர்ச்சொல் தேடுவார். கிடைக்கும் வரை சிந்தனை சிறகடித்துப் பறக்கும். மனத்துயரை மாற்றி, கேட்போரைத் தன்வயப்படுத்தி மலைக்க வைத்து, செதுக்கிச் சிலையாக்கிவிடுவார். கலைஞர் பேச்சின் கனித்தமிழையும், புரட்சித் தலைவரின் பொன்மனப் பண்பையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆளுமை பற்றியும் மணிக்கணக்கில் பேசுவார். பொழுது போவதே தெரியாது, செயல் மறந்து கேட்போம்.
ஔவை அவர்களின் சொல்லாய்வு
ஒருநாள் திடீரென்று அவரிடமிருந்து தொலைபேசியில் வீட்டிற்கு அழைப்பு வந்தது. ‘நார்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள்? என்றார். ஒரு நிமிடம் யோசித்தேன். எளிய சொல்லுக்குக் கேட்க மாட்டார். அதனால் அவரிடம் 1 நிமிடம் யோசித்து விட்டு சார், நார் என்றால் அன்பு, கருணை என்று பொருள் என்றேன். சான்று என்ன? என்னை ஆழம் பார்க்கத் தான் கேட்கிறார் என்று தெரியும். குடிமை என்ற அதிகாரத்தில் வரும் “நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்” என்ற குறளைச் சொன்னேன். மறுமுனையில் அவர் குரல் ஒலித்தது. “இதைத்தான் எதிர்பார்த்தேன் உங்களிடம். ஓர் அணிந்துரை எழுத வேண்டும். நாளை சீக்கிரம் வந்து விடுங்கள்” என்றார். எனக்கு மகிழ்ச்சி. நூல் அணிந்துரை எழுத எந்தவொரு குறிப்பும் கையில் இல்லாமல், நூலை மட்டும் ஏந்தி அவர் சொல்லச் சொல்ல இலட்சுமி அவர்கள் தட்டச்சுச் செய்வார்கள். கட்டுரை, அணிந்துரைக்குத் தலைப்புக் கொடுப்பதில், நம் ஔவை அவர்களை மிஞ்ச இன்னொருவர் பிறக்க வேண்டும். திருப்தி வரும்வரை மாற்றிக் கொண்டேயிருப்பார். வெண்பா எழுதிக் காட்டினால் எதுகை, மோனைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். உண்ணும்போதும், நடக்கும் போதும், ஓய்வு எடுக்கும் போதும் ஒரு கருத்தை எப்படி எப்படியெல்லாம் சொல்லலாம்? என்பதே நினைப்பு. “நடமாடும் உலகளாவிய பல்கலைக் கழகம்” என்று அவரைக் குறிப்பிடுவேன். சிரிப்பார். இல்லம்மா! இன்னும் நான் படிக்க வேண்டியது நிறைய உள்ளன என்று சொல்லி, இரு நூல்களைக் கொடுத்துப் படித்து இதன் சாராம்சத்தைக் கட்டுரையாக எழுதி வாருங்கள். எனக்கு நேரமில்லை” என்று கொடுப்பார். வாரமொருமுறை நினைவுறுத்துவார். நாம் கால தாமதம் செய்தால், மென்மையாகக் கண்டிப்பார்.
பரிமேலழகர் உரையில் ஈடுபாடு
ஔவை அவர்களால் ஒரு மணித்துளிகூட சிந்திக்காமல், படிக்காமல் இருக்க முடியாது. “மலர்மிசை ஏகினான்” என்ற குறட்பாவில் “ஏகினான்” என்ற இறந்த காலத்தால் கூறியமைக்குப் பரிமேலழகர் கூறும் விளக்கம் என்ன? என்று தெரியாதது போல் கேட்பார். “வாராக்காலத்தும் நிகழுங்காலத்தும்” என்ற தொல்காப்பிய நூற்பாவை எடுத்துக்காட்டினேன். தெளிவு பற்றி வந்த காலவழுவமைதி என்று இலக்கணமும் சொன்னேன். தமிழைப் பற்றி மட்டுமே பேசும் உங்களைப் போல ஒருவரைத் தான் தேடிக் கொண்டிருந்தேன். ஏனெனில், தமிழ்தான் எனக்குத் தெம்பை, மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்று சொல்லி இன்று தொல்காப்பியப் பொருளதிகாரம், கலித்தொகை, திருவாசகம் படிக்கலாமா? என்பார். பாடலைப் பண்ணுடன் முதலில் பாடச் சொல்வார்.
“பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து”
என்ற பாடலைப் பாடியவுடன்,
‘புரம்புரம் திரிந்த, செல்வமே சிவபெருமானே’ என்ற இடத்தில் ‘புரம்புரம்’ என்ற சொல்லுக்குரிய பொருளை ஆராய்ந்து அதில் ஒன்றிவிடுவார். எல்லா இலக்கியங்கள், புராணங்கள், பக்தி இலக்கியங்கள், இலக்கணக் கூறுகள் என எல்லா வகைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடும், விருப்பமும், நினைவாற்றலும் நிரம்பியவர். கம்பன் கழகக் கூட்டங்கட்குச் செல்லும்போது, ஒரு சில நூல்களைப் படித்துக் கொண்டேயிருப்பார். அயோத்தியா காண்டத்தில் வரும் அவலச் சுவை பாட்டு ஒன்றில் ஒரு வரியைக் கூறச் சொல்வார். நினைவில்லை என்ற சொல்லே ஔவை அவர்களிடம் சொல்லக் கூடாது. எனக்குத் தெரிந்த ஒரு பாடலை, அதாவது இராமன் அயோத்தியினின்று வனத்திற்கு ஏகும்போது
“ஆவும் அழுத அதன் கன்றழுத அன்றலர்ந்த
பூவும் அழுத புனற்புள் அழுத”
என்று தொடங்கியவுடன், “போதும்மா! இந்த ஒரு வரியில் ஒரு மணிநேரம் பேசிவிடுவேன்” என்று சொல்லிப் புறப்படுவார். உடல் நலம் சரியில்லை என்றாலும், யாரையும் ஏமாற்றக் கூடாது என்ற நல்லெண்ணம் கொண்டவராய், கூட்டத்திற் கலந்து, அருவியாய் நல்லுரை பொழிவார்.
பண்பு நலன்கள்
முனைவர் ஔவை அவர்கள் பண்பு நலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மற்றவர்களை உயர்நிலைக்குக் கொண்டு செல்லவும், அவர்கள் வளர்ச்சி குறித்தும் சிந்தித்துக் கொண்டிருப்பார். அடியேனை முனைவர் பட்டம் பெறவேண்டி பேரவாக் கொண்டு தமிழ்ப் பேராசிரியர்கள் இருவரிடம் ஆற்றுப்படுத்தினார். அவர்கள் ஓரிரு காரணங்களால் மறுத்துவிடவே, வருந்திய ஔவை அவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள்தாம் முனைவரா? எக்காலும் பல பொருள்களை ஆய்ந்து முனைந்து எழுதிக் கொண்டிருக்கும் தங்களையும் முனைவர் என்றே அழைப்பேன் என்று கூறி, அவர் முனைவர் பட்ட ஆய்வேட்டு நூலான ‘சங்க காலப் புலமைச் செல்வியர்’ என்ற நூலில் “முனைவர் தி.வே. விஜயலட்சுமி அம்மையார்க்கு அவர்களின் புலமையை நயந்து வழங்கியது” என்று எழுதிக் கையொப்பமிட்டு அளித்தார். வாழ்வில் என் உயிர் உள்ளளவும் மறக்க முடியாத பெரும் பட்டம் இஃது என்று எண்ணி உவப்படைந்தேன். ‘திருக்குறள் திலகம்’ என்ற விருதையும் ஒரு விழாவில் அளித்துப் பெருமைப்படுத்தினார். அதேபோல், அவர் நினைத்தபடி என் கட்டுரை அமையவில்லை என்றாலோ, அணிந்துரையில் வடமொழிச் சொற்கள் கலந்து விட்டாலோ சினம் வரும். ஆனால் அந்த வெகுளி கணநேரந்தான்.
“குணமென்றும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது”
என்ற குறட்பா நினைவிற்கு வரும். பல புதிய தலைப்புகள், தலைவர்கள், பல இலக்கியச் சுவை மிகுந்த பாடல்கள் பற்றியெல்லாம் கலந்துரையாடிய பேறும் பெற்றுள்ளேன் என்பதை நான் உள்ளார்ந்த உவப்புடன் கூறிக் கொள்கிறேன்.
ஔவை அவர்கள் செயலர்கள்
ஔவை அவர்கள் செயலாளர்கள் இருவர்; இலட்சுமி அவர்கள், திரு பிரதாப் (பொன்னேரி) குறிப்பிடத் தகுந்தவர்கள். ஐயா அவர்கள் இட்ட பணியை நேரங் கடத்தாமல் செய்து, உறுதுணையாக இருந்ததை நான் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். எனவே அந்நிகழ்வைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். “யான் கண்டனையர் என் இளையர்” என்று பிசிராந்தையார் கூற்றிற்கேற்ப, அவர் செயலாளர்கள் ஔவை அவர்கள் குறிப்பறிந்து செயலாற்றுவர். ஐயா அவர்கள் குடும்ப நலன்களை உசாவி, அவர்கட்கு வேண்டிய உதவிகளைச் செய்து முடிப்பர்.
2017 ஆம் ஆண்டு முதல் அறிஞர் ஔவை அவர்கள் உடல்நலம் கொஞ்சம் குன்றியிருந்ததால், தி.நகர் திலக் தெருவிற்கு வருவதைக் குறைத்துக் கொண்டார். அண்ணா நகர் இல்லத்தில் இருந்து விட்டார். அதனால் அவருக்குப் பல நன்மைகள். தாரா அம்மா எந்நேரமும் அவர் அருகில் இருந்து கவனிக்கவும், மருத்துவம் செய்யவும் இயன்றது. நான் அண்ணா நகருக்கு ஆண்டு 4,5 முறை சென்று பார்த்து, இலக்கியம் தொடர்பாகக் கலந்து அளவளாவி, வாழ்த்துகள் பெற்று வருகிறேன்.
எந்தையார் நூற்றாண்டு விழா
2019 நவம்பர் 28ஆம் நாள் எங்கள் தந்தையார் பேராசிரியர் எச். வேங்கடராமன் அவர்களின் நூற்றாண்டு விழாவைச் சென்னை உருசியன் அரங்கில் சிறப்பாக என் குடும்பத்தார் உறுதுணையுடன் நடத்தினோம். நம் ஔவை அவர்களை இதன் பொருட்டுக் கலந்தாய்ந்து, எங்கள் தந்தையார் மாணவர்கள் மூவருக்கு வேங்கட அறவாணர் என்ற விருது அளிக்கப்பட்டது. நூற்றாண்டு விழாவில் முனைவர் ஔவை நடராசன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை தமிழக இலக்கிய வரலாற்றில் இடம் பெற வேண்டியவொன்று. அரசர் கல்லூரியின் பெருமையையும், எம் தந்தையார் இலக்கிய இலக்கண ஆற்றலையும், என்னைப் பற்றிப் பெருமையாகவும் கூறி, தமிழுலகத்திற்கு வேண்டுகோளையும் விடுத்து அரியதொரு இன்னுரையை இயம்பினார். விருதுக்குப் பெயர் வழங்கியவரும் ஔவை அவர்களே. விழா குறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், எங்கள் தந்தையார் மாணவருமாகிய முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுடன் கலந்துரையாடினேன். அவர் அளித்த அறிவுரை, பரிந்துரையின் பேரில் ஔவை அவர்கட்கு தந்தையார் நினைவாக அவர் மிக விரும்பும் உலகின் மூத்த தமிழறிஞர் முன்னாள் துணை வேந்தர் ஔவை நடராசன் அவர்கட்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருதும் வழங்கப்பட்டது என்பதைப் பேருவகையுடன் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன். அஃது தமிழ் வரலாற்றில் என்றும் இடம் பெற்றிருக்கும்.
நிறைவு
அறிவிலே தெளிவும், நெஞ்சிலே உறுதியும் அகத்திலே அன்பினோர் வெள்ளமும், பொழுதெல்லாம் பல்துறை நூல்களைப் படிக்கும் ஆர்வமும், நினைவெல்லாம் சிந்தனைப் புதுமையும், கேளாரும் வேட்ப மொழியும் சொல் வன்மையும் குறைவறப் பெற்ற அறிஞர் ஔவை நடராசன் அவர்கள் தமிழ் மொழிக்கு நிகரான ஆங்கில மொழிப் புலமையும் நிரம்பப் பெற்றவர். இவர் உரையில் அடுக்கு மொழிகள் மிடுக்காக வந்து விழும். நாநயம் மிக்க நாவேந்தராக மட்டும் மிளிராமல் மனிதநேயம் மிக்க மாமனிதர் என்ற எண்ணத்தையும் என்போன்றோர் உள்ளத்தில் உருவாக்கியவர் அவர் என்பது புலம்மிக்கவர் அறிந்த பேருணர்வு. அம்பெருமகனார் பாடகன்ற நல்லுடலுரம் பெற்று, எம் போன்றோர்க்கு உந்துசக்தியாய் ஊக்க மருந்தாய் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டுகள் பாரினில் வாழ வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
“நீலமணிமிடற்று ஒருவன் போல்
மன்னுக பெரும நீயே”
என்று ஔவைப் பிராட்டியார் வேந்தன் அதியமான் நெடுமான் அஞ்சியை வாழ்த்தியதைப் போல நாவேந்தரை வாழ்த்தி வணங்குவோம்.

Add a Comment