மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 67)
‘ விருப்பு வெறுப்பை விலக்கி வைப்பதே கலை ! ’
முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
புரட்சித்தலைவர் குறிப்பிட்ட “ கலைவாணர் ஒரு சகாப்தம் ” என்ற பேரறிஞரின் கட்டுரையின் சில பகுதிகளைக் காணலாம்.
கலைவாணர் வெறும் நடிகர் மட்டுமல்ல. அவர் ஒரு சின்னமாக விளங்கினார். நகைச்சுவைத் துறை என்பது நாட்டு மக்களைச் சிரிப்பு மூட்டும் வெறும் வெட்டி வேலை என்ற நிலையை விட்டுக் கடந்து, நற்கருத்துக்களை மிக நயமாக நாகரிகமாகப் புகுத்தும் நிலை பிறந்து விட்டது என்பதை விளக்கும் சின்னமாக என்.எஸ்.கே. விளங்கினார்.
உண்ணும்போது சுவைதரும் பண்டம் பல, உண்டு முடித்த பிறகு நெடுநேரம் உமிழ்நீர் உள்ளே செல்லும் போதெல்லாம் சுவைதரும் பண்டம் சில. அத்தகைய நகைச்சுவையை நாட்டு மக்களுக்குத் தந்தார் கலைவாணர். எந்த ஒரு நடிகரும் மக்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்க முடியும், கைதட்டல்களையும், கவர்ச்சியான மாலைகளையும் பெற முடியும், நல்லதோர்ப் புகழையும் பெற முடியும், ஆனால் நம் கலைவாணருக்குக் கிடைத்த புகழுக்கும் மற்றவர்களுக்குக் கிடைக்கும் புகழுக்கும் வேறுபாடு உண்டு.
மக்களின் மன அழுக்கு நீங்க – மூட நம்பிக்கை அகல – குருட்டுப் பழக்க வழக்கங்கள் ஒழிய – தாழ்ந்த மக்கள் தன்னுணர்ச்சி பெற இதுவரை எந்த ஒரு நடிகரும் கலைவாணரைப் போல் பணியாற்ற முனைந்ததில்லை. இந்த நாட்டில் மட்டுமல்ல, மேலை நாடுகளிலும் கூட இப்படிப்பட்ட ஒரு கலைஞன் இருந்ததில்லை.
கலைவாணர் தனி மனிதரல்ல, ஒரு சகாப்தம், தமிழ்நாட்டின் நல்முத்து, மலடி வயிற்றிலே பிறந்த மகன், புதையல் எடுத்த தனம், தென்னகத்துக்குக் கிடைத்த தேன் விருந்து, தமிழகம் தந்த கலைச்செல்வம், கதியற்றுக் கிடந்த தமிழ் மக்களைச் சீர்திருத்துவதற்காகத் தோன்றிய புத்தொளி !
இந்நிலையில் கலைவாணர் மலரில் இயக்குநர் தலைவர் டாக்டர் கே. சுப்பிரமணியம் எழுதிய ஒரு கட்டுரையில் நாம் அறியாத ஒரு தகவலை வழங்கியுள்ளார். இயக்குநர் கே.எஸ். தன் இல்லத்தைக் கலைவளர்க்கும் பண்ணையாகக் கொண்டிருந்தார். அவர் தந்த ஊக்கம் கலை மறுமலர்ச்சிக்குப் பேரொளியை – புத்தெழுச்சியை அளித்தது. அவரால் வளர்ந்த அவருடைய கலைமணிகள் என்று ஆயிரம் பேரைச் சொல்லலாம். கலை மேதையாக அவர் வாழ்ந்தார். நன்மக்கள் நாடறிந்த கலைச்செல்வங்கள் அவருடைய திருமகள் நாட்டியச்சிகரம் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் ஆவார். டாக்டர் கிருஷ்ணசாமி கலை, பண்பாட்டு, நாகரிக நிலைகளைக் கருத்துப்படங்களாக வழங்கிப் பெரும்புகழ் கொண்டவராவார்.
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் உள்ளந்தரங்க தேசிய உணர்ச்சியும், அரசியல் பண்பாடும் என்னளவுக்குப் பிறர் அறிந்திருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்திருக்க முடியாதென்றே நான் நம்புகிறேன். இதில் ஒரு, வெகு ரசமான விஷயத்தை அவர் இறந்தபின் வெளியிடாதிருக்க என் மனம் இடம் தரவில்லை.
“ நம் நாட்டில் எவ்வளவு கட்சிகள் இருந்தாலும், கட்சித் தலைவர்களுக்குள் எவ்வளவு மன வேற்றுமை இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி ஒருவன் தனக்கு உயர்வோ, புகழோ தேடிக்கொள்வது முறையல்ல ” என்ற சீரிய பண்பாட்டை அவரிடம்தான் நான் கண்டிருக்கிறேன்.
அந்தச் சமயம்தான் நமது முதல் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எங்களிடம் மிகவும் நட்பும் அன்பும் கொண்டவர்களும், பிரதமர் நேரு அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களும் ஆன திருமதி துர்க்காபாய் அம்மையார் அவர்களுக்குக் கலைவாணர் அவர்களின் சமூகச் சேவையில் அபாரமான நம்பிக்கை உண்டு.
சென்னை சட்டசபைக்குக் கலைஞர்களின் சார்பில் கலைவாணர் அவர்கள் போட்டியிட்டால் பிரதமர் நேருவின் ஆதரவும் கிடைக்கச் செய்யக்கூடும் என்று அம்மையார் அவர்கள் நம்பினார்கள். அதற்காகவே எங்கள் ரஷ்யப் பிரயாணத்தில் முதலிலே போட்ட திட்டப்படி பல வாரங்கள் அங்கே தங்காமல், அதற்கு இரண்டு வாரங்கள் முன்பாகவே எங்களை மாத்திரம் வந்து சேரும்படி சொல்லியிருந்தார்கள். அதனால்தான் துர்க்கா கோட்டே முதலிய வட இந்தியக் கலைஞர்கள் ருஷ்யாவை விட்டுக் கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்பாகவே கலைவாணரும் – நாங்களும் நாங்கள் மூவரும் கிளம்பி இந்தியா வந்துவிட்டோம்.
ருஷ்யாவில் கலைவாணர் பல விருந்துகளிலும் பேசும்போது தான் தேர்தலில் அபேட்சகராகச் சென்னையில் நிற்பதற்காகவே அவசரமாகத் திரும்ப வேண்டியிருப்பதை எடுத்துச் சொல்ல, அங்குள்ள பொதுமக்களும் அதற்கு ஆசி கூறி ஆரவார முழக்கம் புரிந்து அனுப்பினார்கள்.
நமது மதிப்பிற்குரிய டாக்டர் இராதாக் கிருஷ்ணன் அவர்களும் கலைவாணருக்கு அன்புடன் வாழ்த்து கூறி அனுப்பினார். நாங்கள் மாஸ்கோவிலிருந்து காபூல் வந்து சேர்ந்தவுடன், நாங்கள் வந்து சேர்ந்த அதே தினத்தில் பாகிஸ்தான் பிரதம மந்திரியாக இருந்த லியாகத் அலிகான் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனால் கைபர் கால்வாய்ப் போக்குவரத்து மூடப்பட்டுவிட்டது. ருஷ்யாவிலிருந்து அவசரப்பட்டுக் கிளம்பியும் கூட, காபூலில் நான்கு நாட்கள் தாமதிக்க நேரிட்டது. பிறகு அங்குள்ள இந்திய ஸ்தானிகரும் பாகிஸ்தான் ஸ்தானிகரும் கலைவாணர் தேர்தல் விஷயத்திற்கு அவசரமாய்ச் செல்ல வேண்டுமென்பதை நன்குணர்ந்து, பிரத்தியேகமான முயற்சி எடுத்து, தக்க இராணுவப் பாதுகாப்புகளுடன் எங்களைப் பிஷாவர் பிரதேசத்திற்கு அனுப்பினார்கள். அங்கிருந்து டில்லியும் வந்து சேர்ந்தோம். டில்லி வந்து சேர்ந்த உடனேயே துர்க்காபாய் அம்மையார் அவர்களுக்கும், அதுசமயம் வெளிநாட்டு இலாகா உபமந்திரியாக இருந்த டாக்டர் கேஸ்கர் அவர்களுக்கும் எங்கள் மரியாதைகளைச் செலுத்தி, அவர்கள் தலைமையிலேயே ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டி ருஷ்ய ஸ்தானிகர் அவர்களுக்கு, எங்களை சோவியத் அரசாங்கம் விருந்தினர்களாக அழைத்துச் சென்றதற்காக நன்றி கூறி ஒரு பெரிய வெள்ளிக் கேடயத்தையும் பரிசளித்தோம். அக்கூட்டத்திற்குப் பிறகு துர்க்காபாய் அம்மையார் அவர்கள், கலைவாணர் சென்னையில் அபேட்சகராக நிற்கும் விஷயத்தைப் பற்றி ஆலோசிக்கவும், ஆதரவு பெறவும் பிரதமர் நேரு அவர்களை இரவு 11 மணிக்குப் பிரத்தியேகப் பேட்டிகாண்பது என்ற ஏற்பாட்டைச் செய்து, கலைவாணர் அவர்களிடமும் என்னிடமும் தெரிவித்துவிட்டார்கள். அம்மையார் அவர்களும் எங்களுடன் கூட இருந்து பிரதமரிடம் விஷயங்களை எடுத்துச் சொல்லச் சம்மதித்தார்கள்.
கலைஞர்களுள் சமூகச் சேவை செய்து சட்டசபையில் தகுதி அடையும் கலைஞர் ஒருவர் இருந்தால், அவர் கலைவாணர் அவர்களாகவே இருக்கவேண்டுமென்று நம்பினார்கள். அன்றைய தினம் மாலை என்.எஸ்.கே. அவர்களுக்குத் தமிழ் நாட்டிலிருந்து பல வரவேற்புக் கடிதங்களும், தந்திகளும் வந்து சேர்ந்தன. அவற்றில் திருச்சியிலுள்ள கலைவாணரின் முக்கியமான நண்பரிடமிருந்து ஒரு விளக்கமான கடிதமும் வந்திருந்தது. நாங்கள் ருஷ்யாவிலிருந்து திரும்புவதற்கு முன்னதாகவே – எந்தவிதமாகவோ கலைவாணர் சென்னையிலுள்ள ஒரு தொகுதியில் அபேட்சகராகச் சட்டசபைக்கு நிற்க எண்ணியிருக்கிறார் என்ற செய்தி பொதுமக்களிடையே பரவியிருந்தது. மேற்கூறிய திருச்சி அன்பர், கலைவாணர் தேர்தலில் நிற்பதை வரவேற்று எழுதினார். அத்துடன் திருச்சியில் இரண்டு தினங்கள் முன்பு ஒரு பொதுக்கூட்டம் நடந்தது பற்றியும், அதில் தமிழ்நாடு காங்கிரஸ் பிரதம தலைவர்களில் முக்கியமான ஒருவர் பேசியதையும் குறிப்பிட்டிருந்தார்.
சென்னையிலிருந்து ஆகாய விமானத்தில் பிரதமருக்குக் கொடுப்பதற்காக ஜரிகை மாலையும் வந்திருந்தது. ஆனால் இரவு ஒன்பது மணி சுமாருக்கு, திடீரென்று கலைவாணர் என்னைக் கூப்பிட்டு, “ நாம் இன்று பிரதமரைப் பார்க்கப்போகிறதில்லை. நாளை காலையில் சென்னைக்குப் பிரயாணமாகிவிடுவோம். விமான டிக்கட் வாங்க ஏற்பாடு செய்துவிடுங்கள் ! ” என்றார். இது மாதிரியான சமயங்களில் அவரை உடனடியாகக் காரணம் சொல்லும்படி கேட்டால், அவர் சொல்லுகிற வழக்கமில்லை. அதனால் ஏதும் கேட்கவில்லை. பிறகு அவர், நாங்கள் தங்கியிருந்த போர்டிங் ஹவுஸ் நாராயண ஐயர் அவர்களின் குழந்தை ‘அம்புலு’வுடன் ‘பதினைந்தாம் புள்ளி’ ஆடிக்கொண்டு காலத்தைக் கழித்தார். நான் மெதுவாகப் பத்து மணி சுமாருக்கு அவரிடம் மெல்லக் கேட்டேன்.
“ துர்க்காபாய் அம்மையார் அவர்களிடம் நாம் ஏதாவது காரணம் சொல்ல வேண்டாமா ? அவர்கள் காத்திருப்பார்களே!” என்று சொன்னேன். “ நாம் எந்தக் காரணத்தைச் சொன்னாலும் அம்மையாருக்குச் சரியாகப்படாது. அவரிடத்தில் காரணம் சொல்லுவதில் பிரயோசனம் இல்லை. உங்களைப் பற்றி அவர் தப்பாக எண்ண வேண்டாம். என்ன செய்வது! என்.எஸ்.கே. திடீரென்று பிரதமர் பேட்டிக்கு வரமாட்டேன் என்று சொல்லுகிறார். மன்னித்து விடுங்கள் ! என்று நீங்களே சொல்லிவிடுங்கள். சரி, என்.எஸ்.கே. ஒரு கிறுக்கு! என்று எண்ணிக்கொள்வார்களே ஒழிய உங்களைப் பற்றி ஏதும் குறையாக எண்ண மாட்டார்கள் என்றார்.” நான் மெதுவாக, “என்னிடத்திலாவது காரணத்தைச் சொல்லக்கூடாதா?” என்றேன். அதற்கு அவர், “உங்களிடத்தில் நான் காரணத்தை இப்போது சொன்னால் உங்கள் வாதத் திறமையைக் காட்டி, என் மனதை மாற்றப் பார்ப்பீர்கள்! என் மனதை நான் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. நாளை விமானத்தில் போகும்போது காரணத்தை உங்களுக்குச் சொல்லுவேன்!” என்று கூறிவிட்டார்.
உடனே நான் துர்க்காபாய் அம்மையாரிடம், டெலிபோன் மூலம் விஷயத்தைச் சொல்லி, மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். என் அவர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது என்று நினைக்கிறேன்.
“ இதுபோல் பிரத்தியேகமான பேட்டி கிடைப்பது மிகவும் அரிது. ஒவ்வொரு அரசாங்க மந்திரிகள் கூட அவரிடம் பேச மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன இப்படிச் செய்துவிட்டார்களே.. என். எஸ். கே. ! ” என்று மிகவும் வருந்தினார்கள்.
மறுநாள் விமானத்தில் செல்லும்போது என்.எஸ்.கே. விபரமாக இந்த விஷயத்தை விளக்கிக் கூறும்போது உலகத்தில் இப்படிப்பட்ட பண்புடைய, மனித உணர்ச்சியுடைய ஒருவர் இருப்பது சாத்தியமா ? என்று நான் ஆச்சரியப்பட்டேன் ! அவர் கலைவாணர் சொன்னவற்றை என் நினைவுக்கு எட்டிய மட்டில் அப்படியே வரைகிறேன்:
“ நான் தாஜ்மஹாலைப் பற்றிப் புத்தகங்களில் படித்துப் படங்களிலும் பார்த்து என் மனக்கண்ணில் ஒரு பிரமாதமான சித்திரம் – அமைத்துக்கொண்டிருந்தேன். நான் இந்தத் தடவை தாஜ்மஹாலை நேரில் போய்ப் பார்த்தவுடன் என் மனக் கோட்டைக்கும் அதற்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருந்தது. “அடடா! நாம் ஏன் தாஜ்மஹாலை நேரில் போய்ப் பார்க்கப் போனோம்?” என்றே என் மனம் வருந்திற்று. பண்டித நேரு அவர்களை நான் பார்க்காததற்கு இதுவும் ஒரு காரணம். எனக்கோ அவரை நேரில் தெரியாது. துர்க்காபாய் அம்மையாரிடம் அவர் வைத்திருக்கும் மதிப்புக்காக நமக்குப் பிரத்தியேகப் பேட்டி அளிக்க இசைந்துள்ளார். அம்மையார், மேலும் மேலும் நமக்காகப் பேசுவதை முன்னிட்டு ஒருவேளை நேரு அவர்கள் தேர்தலில் எனக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் வாக்கும் அளித்து விடலாம். ஆனால் நான் ஊர் திரும்பிய பின் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். உலகிலேயே ஏசுநாதர், புத்தர், மகாத்மா காந்தி இவர்களைப் போல் மனிதன் இருக்கிறான் என்றால் அவர் பண்டித நேருதான் என்று என் மனதில் தீர்மானமாக வைத்திருக்கிறேன். என் இதயத்தில் என்றும் பண்டித நேரு ஒரே விதமாக இருக்க வேண்டும். அந்த ஸ்தானத்திலிருந்து நான் அவரைத் தாழ்த்தவே கூடாது. எனக்குத் தேர்தல் வேண்டியதில்லை; பிரச்சாரம் வேண்டியதில்லை; சட்டசபைப் பதவியும் வேண்டியதில்லை!” என்று கூறி முடித்தார் கலைவாணர்.
இந்த உண்மையை யாருமே அறியமாட்டார்கள். எதிர்க் கட்சியானாலும், எதிர்வாதம் செய்பவர் ஆனாலும் அவர்களிடமும் அவருக்கு அன்பும் இரக்கமும் உண்டு. “காந்திஜியின் அன்பான மொழிகளைப் போல நான் பரிகசிக்கும் விஷயங்களையும் ஓர் அன்பின் அடிப்படையிலேதான் செய்கிறேனே தவிர எனக்கு விரோத மனப்பான்மை கிடையாது!” என்று அவர் (கலைவாணர்) அடிக்கடி சொல்லுவதுண்டு. இத்தகைய விருப்பு வெறுப்பு அற்ற கலைவாணரை, இந்நாடு என்றென்றும் மறவாது என்பது உறுதி.
(‘ நடிகன் குரல் – கலைவாணர் மலர்’, 30-9-1957 )
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Add a Comment