ஔவை 85
———————————————————————–
துலையல்லார் கண்ணும் துணை
************************************
நல்கு பெரியர்.
*****************
வழக்கறிஞர் பால சீனிவாசன்
“தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.
– பொய்யாமொழி. 444.
(இளையதலைமுறையினர் அறிதற்காகும் உரைப் பதிவிது.)
வாழ்க்கையின் மேன்மை ,
பெரியரைத் துணைக் கொள்வதால் சிறப்பாக அமையும் என்பது என் நம்பிக்கை.
திறனறி அறிஞர்:-
^^^^^^^^^^^^^^^^^^^^^
1982-1984இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைப் பொருளியல் பயின்று வந்தேன். சென்னை கம்பன் கழகப் பேச்சுப்போட்டிக்குத் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறையின் செயலாளர் முனைவர் ஔவை து. நடராசன் அவர்கள் நடுவராக (தேர்வு மதிப்பீட்டாளராக) வரவழைக்கப்பட்டிருந்தார். அந்த நாள் தொடங்கி தொடர்ந்து இலக்கிய அரங்குகளில் ஐயாவோடு என் சந்திப்பு.
இராமலிங்கர் பணிமன்றத்தின் வள்ளலார் காந்தி விழாவும், பாரதியார் சங்க விழாவும் ஔவை ஐயாவால் சிறந்து விளங்கியது.
இளைய தலைமுறையினரில் திறமை மிக்கவர்களுக்குக் களம் காட்டி உயர்த்தும் பண்பாளராக விளங்கினார்.
என் பட்டறிவுப் பயிலகமாக விளங்கிய ஔவை ஐயாவின் பணியிடம்….
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
1984-1987ஆம் ஆண்டுகளில் நான் சென்னை சட்டக்கல்லூரியில் பயின்றுவந்தேன். ஒருகிழமை காலை 8 மணி முதல் பகல் 1மணி வரையும் மறுகிழமை பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் கல்லூரி வகுப்புகள் நடக்கும்.
பகல் வகுப்பெனில் காலையும், காலை வகுப்பெனில் பிற்பகலும் என் பட்டறிவுக்கல்வி ஔவை ஐயா அவர்களின் பணியிடம்தான். …
தலைமைச்செயலகம் அவருக்குப் பணியிடம் எனக்கு அது புகலிடம்.
இரவு இல்லம் திரும்பும்வரை அவர் நடந்தால் உடன் நடந்து அமர்ந்தால் உடனிருந்து பட்டத்திற்கன்றி பழக்கத்திற்குப் படித்துக்கொண்ட பாடங்கள் பல. அவற்றுள் மிகச் சிலவே இப்பதிவில்……
நவில்தொறும் நூல் நயம். :–
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அமெரிக்கர் தூதுவரக நூலகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலர் நூலகம் இரண்டிலும் ஐயா உறுப்பினர். மகிழுந்தில் ஏறிப் புறப்படும்முன் ஆங்கில நூல்கள் ஒன்றிரண்டின் பெயரையும் எழுதியவர் பெயரையும் சொல்லி இதை எனக்கு நினைவுப்படுத்து ராஜா என்பார். நூலகம் சென்றதும் வேண்டிய நூல்கள் உள்ள அடுக்குகள் நோக்கிச் சென்று தானே தேர்வுசெய்வார். புதிய வருகை ஏதும் உள்ளனவா என்று நூலகரிடத்துக் கேட்டுப் பெற்றுக் கொள்வார். அவர் நினைவுப்படுத்தச் சொன்ன பெயர்களை நினைவுப்படுத்தினால் பாராட்டு ஒன்று ராஜா என்ற சொல்லோடு சேர்ந்து வரும். மறந்துவிட்டாலும் திரும்பக் கேட்கவே மாட்டார்.
பெரும்பாலும் அவ்விரண்டு நூலகங்களுக்கும் ஒரேநாளில் தான் பயணிப்பது அவர் வழக்கம். நூல்களோடு ஓரிரு இதழ்களும் பெற்றுக் கொள்வார்.
அண்ணா சாலையிலிருந்து அண்ணா நகர் இல்லத்திற்கு வருவதற்குள் ஓரிரு நூல்களின் சில பக்கங்களின் செய்திகளை உள்வாங்கி இருப்பார். ‘ராஜா இதை வாய்விட்டுப் படித்து வா’ என்பார்.
அவர் மகிழுந்தின் பின் இருக்கையின் வலப்புறத்தே தான் அமர்வார். நீரிழிவு காரணமாக அவரது வலதுகைத் தோள்பட்டை அடிக்கடி வலிதரும்போலும் அவர் வெளியே சொல்லாத போதும் முகம் காட்டிவிடும் அதனால் வலதுகையைத் தனியே உயர்த்தி வைக்க அந்த இடத்தில் அமர்வதாக எனக்குத் தோன்றியது.
நூல்கள் மிகுதியாக இருந்தால் நான் மகிழுந்தின் முன் இருக்கையிலும் சிலநூல்கள் இருப்பின் பின் இருக்கையின் இடப்பக்கத்திலும் அமர்ந்து வருவேன். இருவருக்கும் மையத்தில் நூல்கள் இருக்கும். அவர் குறித்துக்காட்டிய பக்கத்தைப் படித்தபடி பயணிப்போம் சற்றுநேரத்தில் அமைதியாகக் கண்மூடி இருப்பதை உறக்கம் எனக்கருதி படிப்பதை நிறுத்தினால் இல்ல ராஜா , எங்கே இந்தப் பக்கத்திலிருந்து படி எனும்போதுதான் அவர் நுட்பமாகச் செவிமடுத்து வருகிறார் என்பதை உணர்வேன். செவிச்செல்வமே தலைச்செல்வம் எனப் பொய்யா மொழியார் சொன்னது நினைவில் வரும். படித்ததன் பயனாகச் செய்திகளை முழுமையாக உள்வாங்கியிருப்பார். பிறகு வாங்கிக் கொண்ட கருத்துகளைக் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வதோடு கருத்துரை செய்யப்பழக்குவார். அவை நம் சிந்தனையைத்தூண்டுவதாக அமையும்.
கேள்வியின் முதல்வன்:-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
முதலாண்டு இளநிலை பயிலும் மாணவனாயினும், பள்ளிமாணவனாயினும் அவன் சொல்லும் கருத்து சிறப்புடையதாக இருந்தால் தானும் பாராட்டுவார் ,
அடுத்து தான் சந்திக்கும் நபர் எவ்வளவு உயர்பதவியினராயினும் அவரிடத்துக் காட்டி அந்த இளையனை அவன் கருத்தை நினைவுகூறாமல் இருக்கமாட்டார்.
மேடை நிகழ்வாக இருந்தால் பயணத்தில் நானும் என்போன்ற இளையரும் சொன்ன கருத்தில் உடன்பாடிருக்குமானால் அக்கருத்தை அப்படியேவோ அல்லது தேவையானால் அக்கருத்தோடு தன் விளக்கத்தைக் கோர்த்தோ வெளிப்படுத்துவார்.
எம் போன்றோர்க்கு அது பெருமையாக இருக்கும். அத்தோடு கருத்துரைத்தவர் பெயரையும் குறிப்பிட்டுவிடுவார்.
நானறிந்தவரை இல்லை இல்லை நானுணர்ந்தவரை ஔவையோடு, சிலம்பொலியார், திருக்குறளார் போன்றோரும் இப் பண்பினர்கள்தாம்.
முகங்காட்டும் அகம்:-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மேடையில் உரை செய்வதற்கு அமர்ந்திருக்கும்போது தனிஉரை, வாழ்த்துரை ,பாராட்டுரை ,கருத்துரை, ஆய்வுரை, பட்டிமண்டப வழக்காடுமன்ற உரைகள், நடுவன்உரை என ஒவ்வொன்றுக்கும் மாறுபட்ட உணர்வோடே அமர்ந்திருப்பார்.
கூட்டத்தில் தனித்திருத்தல் கூச்சல் ஒலிக்குள் மௌனித்து இருத்தல் எனும் போது தன் மனக்கருத்தைத் தானே அசைபோடுவதையும் பாடல் பகுதிகளை நினைவு கூறுகிறார் என்பதையும் அவரோடு பழகியவர்களால் அவரது முகக் குறிப்பு கொண்டு நன்கு உணரமுடியும்.
புதிய கருத்துகளும் இதுவரை அறியப்படாத சிந்தனைகளும் அவர் வாய்மொழியாக வரும்போது அவையும் இசைச்சொற்கள் தாங்கி அவை நடன அசைவுகளோடு ஆற்றொழுக்காக வந்து விழும்போது வியப்பாக இருக்கும். கூடவே பாட வேறுபாடுகளும் வரவே செய்யும்.
உண்பித்து உண்பிப்பவர்:-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தனக்குப் பசி வரும்போது, அருகிருப்போரை ஒருபோதும் மறவாது, வேறுபாடும் கருதாது எண்ணிக்கையைக் குறித்துக் கவலைப் படாது ஒன்றுபோல அனைவரையும் நடத்தும் தன்மையைப் போற்றவே வேண்டும். தன்னிடம் கைத் தொகை இல்லாவிடினும் உடன் வந்தவரின் நிதி நிலை அறிந்து அவரிடம் நேரடியாகவே அனைவருக்கும் வேண்டுவன செய்விப்பார்.
மனப்பாடம் நாள் பாடம்:-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சில நாட்கள் நிகழ்வு முடிந்து வீடு திரும்ப இரவு வெகுபொழுதாகும். நான் பாடியில் வாடகை வீட்டிலிருந்ததால் காலையில் போய்க்க ராஜா என்பார். இரவு படுக்கச்செல்லும் முன்னர் நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படையின் 317அடிகளையும் முழுமையாகச் சொல்லிவிட்டு உறங்கும் வழக்கத்தைக் கைக்கொண்டிருந்தார்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திர வேட்கையும் நம்நாட்டுச் சான்றோரின் கருத்துக்களையும் தேடிப்படிக்கும் வழக்கம் இவருக்கு.
அறிவுறுத்தலும் அரவணைப்பும்:-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இவரது அலுவலகத்தில் பணியாற்றுவோரிடம் குறைகண்ட போது எள்ளி ஏசினாலும் தாயுள்ளம்போல் தழுவி நடத்தும் பாங்கு எனக்கு வியப்புத்தரும்.
என் இல்லத்திற்குச் செல்ல மிதிவண்டி வைத்திருந்தேன். இல்லாத போது பேருந்தில் அனுப்பாமல் காலம் கடந்த காலமானால் அழைக்கவோ , விட்டுவரவோ, மூன்றுக்கு மேற்பட்டமுறை தனது மகிழுந்தையே எனக்காக அனுப்பிவைத்தார்.
பண்படப் பட்டறிய நெறி காட்டியவர்:-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஒருமுறை சிங்கப்பூர் கல்வி அமைச்சர், தமிழறிந்தவர் திருப்பதிப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைக் காணவும் திருக்கோயில் வழிபாடு செய்யவும் தன் துணைவியாரோடு வந்திருந்தார். இப்படி வருவோரை விருந்தோம்பி உரியமுறையில் காத்து அனுப்புவது தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத்துறையின் பணிகளில் ஒன்றாக இருந்தது.
அவர் வந்திருந்த போது அரசுப்பணியின் நெருக்கமான நேரம்.
நான் பயின்ற சென்னை சட்டக்கல்லூரி செயலகத்திற்கு மிக அருகில் என்பதால் வகுப்பிற்கு வந்த எனக்கு மகிழுந்தனுப்பி அழைத்து வரச்சொல்ல, காரணமறியாது நான் சென்றேன்.
ராஜா கையில் ஒருநாளுக்கான உடை வைத்திருக்கிறாயா என்றார். சில நாட்களில் வெளியே தங்கும் சூழலிருப்பின் வைத்திருப்பேன் என்பதறிந்து அப்படிக் கேட்டார்.
இல்லை ஐயா என்றேன்.
நான் கதர்தான் உடுத்துவேன் என்பதை அவர் நன்கு அறிவார் என்பதால் உடனே தொகை கொடுத்து மகிழுந்து எடுத்துச்சென்று அண்ணாசாலை காதி கிராமோத்யோக் பவனில் உடைவாங்கிச் செயலகம் திரும்பினேன்.
பாதுகாப்புக்கருதி துறைசார்ந்தவர்களை அனுப்புமிடத்துச் சூழ்நிலை காரணமாக அப்பணியில் என்போன்றோரை ஈடுபடவைப்பது வளர்ந்துவரும் என்போன்றோருக்கு ஊக்கம்தானே.
எனக்கும் ஒருபட்டறிவு பெறும் வாய்ப்பு, புதிய அறிமுகம். ஆம்! அவர்களை அழைத்துக்கொண்டு ஔவை ஐயாவின் வழிகாட்டுதல்படி இரவு திருப்பதியில் விருந்தினர் மாளிகையில் தங்கி அறிஞர் மு.வ.அவர்களின் தலைமாணாக்கரில் ஒருவரும் வேங்கடவன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் சௌரிராசன் ஐயாவைக் கண்டு அறிமுகமாகி அவரது இல்லத்தில் உண்டு பின்னர் வேங்கடவன் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் அறிமுகமாகி உரையாடிவிட்டுத் திருக்கோயில் வழிபாடு முடித்து சென்னை திரும்பினோம்.
இது ஔவை ஐயா எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அறிய வாய்ப்பு.
பயணத்தில் பட்டவையும் பதிந்தவையும்:-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பெங்களூர் மற்றும் கோலார் தங்கச்சுரங்கத் தொழிலாளர்கள் நடத்தும் தமிழ் அமைப்புகளுக்கும், புதுவை கம்பன் கழகத்திற்கும் அவரோடு பயணித்தது இன்றும் நினைவில் நிற்பவை.
அப்பயணப் போதுகளில் அவருடைய எளிமையை நான் அருகிலிருந்து கண்டுகொள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்புதான் அவை.
ஒரு முறை முன்பதிவு செய்ய இயலாமல் ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு அரசுப்பேருந்தில், தாரா அம்மாவையும் அழைத்துக்கொண்டு நெருக்கமான சூழலிலும் கிடைத்த மகளிர் இருக்கையில் அம்மாவை இருத்திவிட்டு நானும் ஔவை ஐயாவும் ஓட்டுனர் இடப்பக்க முன் இருக்கையில் அமர்ந்து இரவுப் போதில் பயணித்ததும் அப்போது மது அருந்தியவரிடம் பேச்சுக்கொடுத்து நகைச்சுவையாகப்பேசி அவருடய பிதற்றலை மாற்றி சிரிக்க வைத்து அமைதிப்படுத்தியதையும் பேருந்துப் பயணத்தில் நிகழ்ந்த நகைச்சுவை வழக்கு மன்றமாகக் கருதி இன்றும் எனக்குள் நினைத்துப் பார்ப்பதுண்டு.
அலை ஆழிக்கரையில் அறிஞர் கூடல்:-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மாலைவேளையில் இலக்கிய நிகழ்வுகளில் பங்கு கொள்ளாத நாட்களில் கடற்கரைக்கூடலில் இராயபுரம் ஔவையார் அமைப்பின் தலைவர் அரு.சங்கர் ஐயா சுண்டலோடு வர, பண்மொழி இலக்கியக் கருத்துரையாளர் நல்லபெருமாள் ஐயா, மிகச்சில போதுகளில் சென்னை மருத்துவக்கல்லூரிப் பேராசிரியர் தெய்வநாயகம் போன்ற பெரியவர்கள் சூழ அமர்ந்து இலக்கியமும்,உலகியலும் தண்ணிய ஆழித் தென்றலோடு தவழ்ந்து வரும் இலக்கிய அமுதப் பொங்கலை நகைச்சுவையோடு அள்ளிப்பருகும் போது, அவர்களும் கல்லூரி மாணாக்கர்கள் போல இளமையோடு குதூகளித்ததை எழுத்தில் வடிக்க இயலாது.
மிகச் சில நாட்களில் ஐயா திருக்குறளார் மற்றும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. போன்றோரும் இக்குழுவில் கூடிக்களைந்ததுண்டு.
திருமயிலைச் சிற்றுண்டி மாமிவீட்டுத் திண்ணையும், உட்லேண்ட் உணவு விடுதிகளும் கூட இலக்கியச்சுவையைக் குறிப்பாக ஔவை ஐயாவின் உரையொலிச் சிதறலை மாந்தாமல் இருக்கமாட்டா.
சிலநாட்களில் மகிழுந்தும் அதன் ஓட்டுனரும் அம்மா பிள்ளைகளுக்கான தேவைக்கு இல்லத்தில் வேண்டப்பட கையில் இருந்த அனைத்துப் பொருட்களையும் மகிழுந்தில் அனுப்பிவிட்டு இரவு ஏழு எட்டுமணிவரை கடற்கரை வாழ்க்கையைத் துய்த்துவிட்டு சென்னைப் பல்கலைக்கு முன் பக்கத்தில் நின்றிருக்கும் 27B பேருந்தில் ஐயாவின் அண்ணாநகர் இல்லத்திற்குப் பயணிப்போம்.
சிலநூறாயிரம்ரூபாய் மதிப்புள்ள மகிழுந்துப் பயணத்திலிருந்து பலநூறாயிரத் தொகை மதிப்புள்ளப் பேருந்துப் பயணம் சற்றே மாறுபட்டிருக்கும்.
அப்பயணத்தில் வள்ளுவர், இளங்கோ, கம்பன்,பாவேந்தன் இப்படியான இலக்கியப் படைப்பாளர்களும் எங்களிருவரோடும் இணைந்து பயணிப்பர்.
ஔவை ஐயாவின் வகுப்புத்தோழி சாவித்திரி அம்மையார் அவர்தம் கணவர் இராகவேந்திரர் இவர்களின் ஆசிரியராக முந்நாளில் விளங்கிய நீதியரசர் மோகன் போன்றோரும் ; அன்றைய இளைய தலைமுறையினரான வழக்கறிஞர் த இராமலிங்கம், இரா.கண்ணன் ,இராமலிங்க ஜோதி ,சுமதி , மோகனசுந்தரம் , மணிகண்டன் எனப்பலரும் கூடி இலக்கியமும் உலகியலும் ஐயாவோடு சுவைத்து மகிழ்ந்த நாட்கள் மனத்திற்கு ஊட்டம் தரும் நினைவு ஊக்கிகள்.
வாழ்க்கைப்பாடத்தின் தனி வழி:-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இலக்கிய அறிவோடு அரசியல் அறிவு வாழ்வியல் அறிவு தரும் சந்திப்புகளும் நடப்பதுண்டு.
சில நாள்கள் சௌந்தரா கைலாசம் அம்மையாரின் அழைப்பின் பெயரில் அவரது இல்லத்தில் சந்திப்பு நிகழும். கவிதை ,கவிஞன் ,ஆட்சி என உரைத்துறைகளின் கிளைகள் பரவும். ஏழுமணி வரையும் அதற்கும் மேலும் கூட ஆகும்.
நாட்டின் முதலமைச்சர் தொடங்கி நட்புக்கொண்டு உரையாடுவது போலவே இளந்தலைமுறையோடும் அதே அளவில் உறவுகொண்டிருப்பது ஔவை ஐயாவின் இயல்பு. இவ்வியல்பு மிக மிகச் சிலருக்கு மட்டுமே வாய்க்கும்.
பேச முடிந்தது போல எழுத முடியவில்லை உடலும் உள்ளமும் அதற்கு அவர்க்கு இடந்தரவில்லையே என்று நான் இதுநாளும் கருதிப்பார்த்து ஏங்குவேன்.
இடர்ப்பாட்டிலும் இனிய சொல்லினர்:-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பொறையுடையர்:-
^^^^^^^^^^^^^^^^^^^^^
வழக்கம்போல ஒருநாள் எனக்குப் பிற்பகல் வகுப்பு என்பதால் காலையிலேயே அவரது இல்லம் சென்றேன். எப்போதும் ஓரிருவர் அவ்விடியலில் இருப்பர்.
அன்று ஐவருக்கு மேற்பட்டவர்கள் இருந்தனர்.
(அன்றைய வீட்டை நினைத்துக்கொண்டு இப்பதிவைப் படிப்போருக்குப் புரியும். )
ஏதோ ஒரு சோகச்சாயல்.
நேரே மாடிக்குச் சென்றேன்.
நூல்களைத் தேடிக்கொண்டிருந்தார். அலுவலகம் செல்லும் ஏற்பாட்டிலும் இல்லை. எனக்கு மனவுறுத்தல். கையில் என்றேனும் முறுக்கு, வடை என வாங்கி வைத்திருக்கும் நான் அன்று கொய்யாப்பழம் எடுத்துச்சென்றிருந்தேன். அதைக்கழுவி அவருக்குத்துண்டுகளாக்கிக் கொடுத்துவிட்டு நானும் ஒன்றிரண்டு துண்டுகளை வாயிலிட்டுக்கொண்டேன்.
அப்போது சிரித்துக் கொண்டே என்னராஜா பணியிலிருந்து நீக்கிவிட்ட மகிழ்ச்சியின் கொண்டாட்டமா இது என்றார். என்னங்க ஐயா என்றேன். கீழே இன்று பலர் இருக்கிறார்களா என்றார். எள்ளலாகவே துக்கம் கொண்டாட வந்திருக்காங்கபோல என்றார்.
(தொலைக்காட்சி செய்தி ஊடகங்களை அன்று நான் கண்ணுறவோ செவிமடுக்கவோ இல்லை) பிறகுதான் தெரிந்தது அவரைத் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறையின் செயலாளர் பதவியிலிருந்து காத்திருப்புப் பட்டியலில் வைத்திருப்பது. அதன்காரணத்தை எனக்கு விளங்கிக்கொள்ள இயலவில்லை.
அந்தச்சசூழலிலும் ஒருகதையாகக் கருத்தாக சிரித்துக்கொண்டே அவர் சொன்ன செய்தி இப்போதும் என் நினைவில் உள்ளது.
ஐயா சொன்னார்……
“ராஜா இரயில் இயந்திரத்தில் நிறைவாகப் பொருள்களை ஏற்றிய பல பெட்டிகள் கோர்த்தாலும் அந்த இயந்திரம் மிகக் குறைந்த ஒலியோடு அப்பெட்டிகளைச் சுமந்து இழுத்துக்கொண்டு இலக்குவரைப் பயணிக்கும்.
ஆனால் பொருள்கள் குறைந்தால் ஒலி கூடும். பெட்டிகளில் வெற்றிடம் இருக்குமானால் பேரிரைச்சலோடுதான் அது பயணப்படும். இப்போது நான் பொருளேதுமற்ற இயந்திரம் போல”
என்று சொல்லிச் சிரித்தபடி பழத்துண்டுகளை வாயில் போட்டுக்கொண்டார். அந்தக்கருத்தும் சிந்தனையும்தான் எவ்வளவு ஆழ்ந்த பொருள் பொதிந்தவை?! கருதிப்பாருங்கள்.
பிறகு சில நாட்களில் உலகளவிலான உலகத்தமிழ்ச்சங்கத்தின் தனி அலுவலராக சில திங்களுக்கு அமர்த்தப்பட்டார். பிறகு மீண்டும் செயலாளராக்கப்பட்டார்.
இடைப்பட்ட நேரத்தில் அவருக்குக் குரல் கொடுத்தவர்கள் சிலர் ஒருபுறம்; குற்றங்குறைகளை அள்ளிவிட்டவர்கள் பலர் மறுபுறம்.
நிகழ்ந்தது யாதெனில் அப்போது போக்குவரத்துத் துறையின் ஆணையாளராகப் பதவியிலிருந்தவர் ,இலக்கிய ஆர்வலரும் ,சிவநெறியாளரும், பச்சையப்பன் அறக்கட்டளையின் தலைவராகவும் விளங்கியவர் முன்பு எனக்கு சட்டக்கல்லூரி சென்னைக்கு மாற்றம்பெற உதவியவர். பச்சையப்பன் கல்லூரி தமிழ்மன்ற நிகழ்வில் நான் பாரதி படைத்த புதிய கோணங்கியின் புனைவு தாங்கி நல்லகாலம் வருகுது எனப்பாடியதை மகிழ்ந்து ஏற்று அவ்விழா நிறைவில் மீண்டும் மேடையேற்றிப் போற்றிய திரு எஸ்.டி. காசிராஜன் இ. ஆ. ப.
துணைவேந்தர் பணிநிறைவு பெற்ற பின்னரும் இதுநாள்வரையும் தமிழ், தமிழர் என்பதோடு மானுடச் சிந்தனையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஔவை ஐயா உடல், உள்ளம் இரண்டும் நலமும் வளமும் பெற்று விளங்க வணங்கி மகிழ்கிறேன்.
பெரியர் உறவும் கற்ற பாடமும்:-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
முன்னோர் ஒருவரின் வாழ்க்கைக் கூறுகளில் இருக்கும் நலமான பகுதிகளை இளைய தலைமுறைக் கைக்கொள்வதே அப்பெரியோரைப் போற்றுவதன் பயனாகும்.
சிறியரைத் தூற்ற வேண்டாம்
பெரியோரைப் போற்றுவது
அவர்களுக்காக அன்றி
நமக்காகப்
போற்றிக்காப்பது சிறப்பன்றோ.
பொய்யாமொழியார் சமைத்த இரு அதிகாரங்களில்
பெரியாரைத் துணைக் கொள்வோம். பிழைப்பதைத் தவிர்ப்போம்.
இளையர்க்கு இவை பாடம்.

Add a Comment