சாதனைச்சிகரம் டாக்டர் சாந்தா அம்மையார்.
மரபாலும் புகழாலுலும்
மாணப் பெரிய குடும்பத்தில் பிறந்து
வாழ்வு முழுவதும்
புற்றுநோய் நீக்கத்துக்காக
மருத்துவக்கழகம் நிறுவி
அல்லும் பகலும் அயராது உழைத்த
அருங்குணத்திலகம்
டாக்டர் சாந்தா அம்மையாரின் பிரிவு
மருத்துவ உலகத்துக்கு நிலையான
வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது .
அன்புற்றாய் ! – பண்புற்றாய் ! –
நோயர்பால் நண்புற்றாய்
வன்புற்றால் வருந்தியோர்க்கு
வாழ்வளித்தாய் !
அவரெல்லாம் திரண்டு வந்து
டாக்டர் எங்குற்றார் எனக் கேட்டு
நீங்காத கண்ணீரோடு
நெஞ்சம் நனைய நிற்கின்றார்
ஆறுதல் கூற முடியுமா !
என் இளவல் ஞானசம்பந்தன்
மருத்துவமனையில் சேர்ந்திருந்த போது
நீங்கள் வந்து கூறிய ஆறுதலும் அளித்த
மருத்துவச் செழுமையையும்
நான் என்றும் மறப்பதிற்கில்லை .
புனிதவதியாராகப் புற்றுநோய்க்கழகத்தை
நிறுவித் தந்த பெருமிதத்தோடு
வாழ்ந்து மறைந்துவிட்டார் !
காலம் எப்படியும் தன்
கணக்கை முடிந்துவிடுகிறது !.
துயரத்தோடு
ஒளவை நடராசன்
19 – 1 – 2021

Add a Comment