POST: 2021-02-01T09:49:51+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 71

வினாவுக்கு என்ன விடை !

முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்

ஊழல் இல்லாத மக்களாட்சி, தனக்கெனச் சொத்து சேர்க்காத குணம், வள்ளல் தன்மை, அறம் சார்ந்த வாழ்க்கை, உழைத்து ஈட்டிய செல்வத்தை மக்களுக்கு எழுதிக் கொடுத்தது-அவருக்குப் பிறகும் இவ்வித உயரிய பண்புகளைக் கொண்ட அரசியல் தலைமுறையை உருவாக்கவில்லையே , இது ஒரு குறையல்லவா ? என்ற நுணுக்கமான வினாவைக் கேட்டு அறிஞர் ப.ஸ்ரீ .இராகவன் எனக்கொரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் .

அறிஞர் இராகவன் இந்திய ஆட்சிப்பணியில் ஈடிணையற்ற பெருமிதங்களைப் பெற்றவர் .மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளராக – மைய அரசில் நேருவுக்கு நெருக்கமான பல்வேறு உயரிய துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுச் சென்னையில் வாழ்ந்து வருகிறார் .

தென்சொல் கடந்தான்,வடசொற் – கலைக்கு எல்லை தேர்ந்தான் என்ற தொடருக்கு மேலும் மெருகூட்டி ஆங்கிலப் புலமையில் தலைமை பெற்றான் என்ற நிலையில் தகுதி மிகுதி பெற்றவர் அறிஞர் இராகவன் .தன் வாழ்வில் அவர் அறியாத முதலமைச்சர்கள் இல்லை – மாநில அரசுகளும் இல்லை ,ஒரு தலைமுறையைத் தொடர்ந்து அதே நிறைவிலேயே வழிமுறை அமைவதைப் பற்றி நாம் எப்போதும் கருதியது இல்லை .விதிவிலக்காகச் சிலர் ஒளிவிளக்கேற்றியுள்ளனர் .

மன்பதை காக்குந் தென்புலங் காவல் துன்பம் அல்லது தொழுதகவு இல் என்று சேரன் செங்குட்டுவன் மொழிந்ததாக அரசு பதவி துறந்த இளங்கோவடிகள் குறிப்பிட்டது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது .தேர்ந்து தெளிதல் – தெரிந்து செயல்வகை , தெரிந்து வினையாடல் என்ற மூன்று அதிகாரங்களும் திருக்குறளிலேயே தேங்கி நடைமுறைக்கு இயலாதவை போல உள்ளன .

நேரு பெருமகனாருக்கு நெருக்கமாக இருந்தவர்களை மகளார் அரசுப் பொறுப்பேற்றதும் விலக்கினார் .வெறுத்தார் .என்றே சிலர் எழுதியுள்ளனர் .தகுதி கூட ஒருவரைப் பள்ளத்தில் தள்ளி விடுமென்பார்கள் .
திறமையாளர்கள் பலர் சோர்ந்தனர் .தகுதியை நிறுத்திப் பார்க்கும் எடைக்கல்லே கூட ஏமாற்றமளித்தது .அப்படி வாழ்ந்தவர் உண்டு .

நல்லறிஞர் சொல் கேட்பது – நம்பி வாழ்வது – ஒற்றித் தந்த பொருண்மையை வேறொரு ஒற்றினால் உணர்ந்து தெளிதல் என்ற இலக்கணங்கள் எப்படியோ செல்லாக் காசாகிவிட்டன .பல்கலைக் செம்மல் பழ .கருப்பையா நிரம்பிய படிப்பாளி ,கையில் நூலில்லாமல் அவரைக்காண முடியாது .அவருடைய பல்கலை வித்தகத்தை அரசியலாளர்கள் முறையாகப் பயன்கொள்ளவில்லை.

பிரிட்டன் பிரதமர் கூறியதைக் குறிப்பிட்டு இந்தியாவுக்கு அவர் வந்திருந்தால் இந்த அங்கலாய்ப்புக்கு இடமிருக்காது என்று நகைச்சுவை மிளிர சிந்தனை ஒளிர ஒரு கட்டுரையை ” குமுதம் ” இதழில் எழுதினார் .

” அண்மையில் இங்கிலாந்தின் நிகழ்காலத் தலைமையமைச்சர் போரிசு சான்சன் ( Borris Johnson ) தன்னுடைய பதவியை விட்டு விலக நேரம் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் , தலைமையமைச்சருக்கான ஊதியம் தனக்குப் போதுமானதாக இல்லை எனவும் , குடும்பம் பெருகி விட்டதாகவும் , தன்னுடைய பிள்ளைகளின் உயர்படிப்புச் செலவு கூடி விட்டதாகவும் ,ஏற்கனவே தான் பெரும் பொருள் ஈட்டிக் கொண்டிருந்ததாகவும் , இப்போது இந்தக் குறைந்த ஊதியத்தில் தன்னுடைய பெருங்குடும்பத்தைக் கொண்டு செலுத்த முடியவில்லை என்றே வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் !

தலைமையமைச்சருக்கான ஊதியம் மோசமானது என்று கூற முடியாது .அவர் கூடுதல் வருவாயில் கூடுதலான வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டிருக்க வேண்டும்;இதைப் படித்த போது நமக்கு வியப்பாக இருந்தது .

இந்திய சமுதாயத்தில் இருக்கும் இன்றைய நிலை , பின்னடைவு , தாழ்வுக்கூறுகள் , உழைப்பு , ஊதியம் சார்ந்த இறுக்கங்கள் இவற்றை உடைத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் சிந்தித்து வழிநடத்திச் செல்லும் சிந்தனைப்போக்கு உருவாக வேண்டும் .

மக்கள் வாழ்வில் பொருளாதாரத் தேவைகள் காலம் மாறுவதற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டு வருகின்றன .வாழ்க்கை உன்னதமானதாக மலர வேண்டும் ,மகிழ்ச்சி ததும்புவதாக அமைய வேண்டும் எனப் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகள் , கனவுகள் , குறிக்கோள்கள் விரிந்துகொண்டே போகின்றன .ஆனால் அந்த கனவுப் பாதையில் தடுமாற்றங்களும் – தடைகளும் நம்மை நிலைகுலையச் செய்கின்றன .கட்டில்லாத ஆளுமை சார்ந்த கல்வியறிவின் பயனாக ஊருக்கு உழைக்கும் சிந்தனை உருவாக வேண்டும் .உருவாக்கித்தரும் வழிகாட்டுதல் வேண்டும் .இதுவே புரட்சித்தலைவரின் போக்காகத் தொடங்கியது .அவரைத் தனிப்பிறவி ஆக்கியது .

இலஞ்சம் , வஞ்சம் , ஏமாற்று ,தீப்பிடிக்கும் தீவிரம் ,படைக்கருவிகள் என எண்ணாமல் பொறுப்புணர்வு இணைந்த விழிப்புணர்வு வரவேண்டும் என்று அண்ணல் காந்தியடிகள் எழுதி எழுதி விரல் தேய்ந்தார் .

சமுதாயத்தை ஒரு முகமாகக் காணும் நோக்கம் மாற்றவேண்டும் பிற்போக்கான எண்ணங்களை அஞ்சத்தக்கக் கிளை விளைவுகளை எதிர்க்கவேண்டும் .ஏற்கக்கூடாது என்ற உறுதிமொழியினைச் செயற்படுத்தும் தலைமைப்பண்புகளால் ஆளுமை உருவாக வேண்டும் .மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டித் தன்னல ஆதாயத்தைத் தேடிக் கொள்ளும் செயல் தான் இயல்பாகவே உலகெங்கும் பரவி வருகிறது ..ஏற்றதாழ்வின் இடைவெளி மிகுதியாகச் செல்லாத வாழ்க்கை முறையை உருவாக்கும் கல்வி வளம் மேலும் பரவலாக வேண்டும் , காலம் தான் வழிகாட்ட வேண்டும் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை .

தலைமை – ஆளுமை முதலிய அரிய பண்புகளைப் பாடமாகக் கற்றுக் கொடுத்துப் பயிற்சி அளிக்கலாம் என்ற கருத்தாடலையும் சில நாடுகள் முன்வைத்துக் காட்டியுள்ளன . அண்மையில் நியூசிலாந்தில் நோக்கர் என்ற இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை நம் கவனத்தை ஈர்க்கும் .அந்தக் கட்டுரை அங்கிங்கெனாதபடி எங்கும் இலஞ்சம் தருகிற பழக்கம் மரபு வழியாகவும் – பக்திப் போக்காகவும் பண்பாட்டு இழையாகவும் இந்திய நாட்டில் படிந்திருப்பதை கட்டுரையாளர் சுட்டிக் காட்டியிருக்கிறார் .

இலஞ்சம் கொடுப்பதை ஒரு வழக்கமாகவே இந்தியர்கள் கருதுவதோடு தருவதும் – பெறுவதும் இயல்பானது என்று எண்ணுகிறார்கள் .மதம் சார்ந்த கடவுள் வழிபாட்டை எடுத்துக்கொண்டால் அது கூட கொடுக்கல் – வாங்கலாகவே முடிகிறது .செல்வ வளம் மிக்க – பணபலம் கொண்டவர்கள் கோயிலுக்குச் சென்றால் மொத்தமாக பணம் , காசுகளைத் தருவதைக் காட்டிலும் பொன்னாலும் – வைரத்தாலும் – மாணிக்கங்களாலும் புதிய அணிகலன்களைக் கடவுளுக்கு அளிக்கிறார்கள் .

2009 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் இந்து நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டிருந்த .கருநாடக மாநிலத்தின் அமைச்சர் ஜி .ஜனார்த்தன ரெட்டி , தங்கத்தால் ஒரு மகுடத்தையும் – நாற்பத்தைந்து கோடி ரூபாய் பெறுமதியான வைரக்கற்களையும் திருப்பதிக்கு வழங்கினார் . இந்தத் தொகையைப் பெற்ற பெருங்கோயில்களும் தொகையை என்ன செய்வதென்று தெரியாமல் தூசும் – மாசும் படிந்த கோயிற்சுவர்களைக் காணும் போது நமக்குத் தோன்றும் .

ஐரோப்பியர்கள் இந்த நாட்டுக்கு வந்த போது பள்ளிகளையும் – மருத்துவமனைகளையும் கட்டினார்கள் ,ஆனால் இந்தியர்கள் ஐரோப்பிய – அமெரிக்க நாடுகளில் கோயில்களைக் கட்டியுள்ளனர் .கடவுளே நம்மிடத்தில் உண்டியலைக்காட்டி நம்மிடத்தில் கையேந்தும் போது நாமும் நமக்குள்ளே அதைக் கடைபிடித்தால் என்ன தவறு என்று நினைக்கிறார்கள் .

இந்திய வரலாற்றில் கூட சிற்றரசுகளையும் – மாநகரங்களையும் ஆங்கிலேயர் கைப்பற்ற முனைந்த போது காவலர்களுக்கு இலஞ்சம் கொடுத்தும் – படைத்தலைவர்களுக்கு கையூட்டினை வழங்கியும் வெற்றி பெற்றதாக எழுதியுள்ளனர் .வரலாற்று நிகழ்வுகள் பலவும் இலஞ்சம் கொடுத்து வாங்கிய வணிகப் பரிமாற்றமாகவே அமைந்துள்ளன .மேலும் இந்திய மக்கள் சாதியாலும் – மதத்தினாலும் பிரிந்திருந்ததால் எளிதாக பணத்துக்கு ஏமாந்தனர் .

இந்திய நாட்டில் ஒருவருக்கொருவரிடம் நம்பகத்தன்மை இல்லாததால் சமுதாயத்தைக் கையூட்டுக்குக் கவலைப்படாத மக்களாக மாற்றிவிட்டது .கடவுளுக்கும் இந்த கதி தான் என்று அவர் எழுதியது நமக்கு வேதனையாக உள்ளது .

இப்படிப்பட்ட சிந்தனைகள் நமக்கெல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தும் , அந்த மாற்றத்தை தோற்றுவித்த வகையில் தனக்கே உரிய வள்ளன்மையால் செல்வச் செழுமையால் புரட்சித்தலைவர் தன் பங்கை விரிவாக எளியவர்களுக்கு ஆற்றினார் .அதே வகையான அணிவரிசை அமைவது அரிதாகும் .அது குறையாகாது .மக்களாட்சி நாளுக்கு நாள் மாற்றங்களைக் காண்பது மக்களும் மருள்நிலையில் இருந்து மீள்வது ஒரு நாள் நடைபெற்றே தீரும் .
.
ஒரு நாட்டினை அது பெற்றிருந்த இயற்கை வளங்களைக் கொண்டு மலைவளம் , கனிவளம் ,கனிமவளம்,வனவளம் ,வயல்வளத்தால் போற்றினோம் .செயற்கையான மனவளத்தைக்கொண்டு தான் நாடுகள் இனி மதிக்கப்படவேண்டும் என்ற நிலை வளர்ந்துள்ளது .அந்த நாளிலேயே காடாகவோ – மேடாகவோ – நாடாகவோ – பாலையாகவோ எப்படி இருந்தால் என்ன வாழ்கிற மக்களின் திறத்தால் எந்த இடரையும் எதிர் கொண்டு வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முடியும் என்ற கருத்தில் ஒளவையார் பாடிய பாடலை அனைவரும் அறிவர் .” எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே ” என்பது புறநானூற்றுத் தொடராகும் .

இப்போது தங்கள் நாட்டை நம்பத்தன்மை கொண்ட நாடு – வாய்ப்புக்களை வழங்கும் நாடு – வந்தாரை வரவேற்கும் நாடு – நினைத்ததை முடித்து வைக்கும் நாடு என்று அறிமுகப்படுத்தும் போது மக்கள் மனம் எப்படி மாற்றங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள முடிகிறது என்று அறியலாம் .இந்த நினைவுகளோடு தான் புரட்சித்தலைவர் ஆட்சியில் அமர்ந்தார் .

” எனக்கொரு மகன் பிறப்பான் – அவன் என்னைப்போலவே இருப்பான் ” என்ற அவர் கனவு தொடர்ந்து வரும் தலைமுறையைத் தொட்டுக் காட்டியது.மாபெரும் மக்கள் தொகை கொண்ட பாரத நாட்டில் மக்களாட்சிக் கோட்பாட்டால் நல்ல மாற்றங்கள் மெல்ல மெல்ல வரும் .புதுமைகளைப் போற்றி பாராட்டுவார்கள் .

கவியரசர் தாகூர் எழுதிய கவிதை தான் நமது வேண்டுகோளாகும் . அந்தக் கவிதையின் மொழியாக்கத்தைக் காணலாம் .

எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ
தலை நிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே உலகம் சிறு சுவர்களால்
பிரிக்கப்படாமல் அமைகிறதோ

எங்கே சொற்கள் வாய்மையின்
ஆழத்திலிருந்து
வடிவம் பெறுகிறதோ
எங்கே உழைப்பு நிறைவை
நோக்கி நகர்கிறதோ

எங்கே சரியான முடிவு
மூடவழக்கப் பாலையில்
தொலையாமல் இருக்கிறதோ

எங்கே எண்ணங்கள் உயர்ந்த செயல்களால்
கட்டற்ற இன்ப உலகத்தை நம்
கண்முன் காட்டுகிறதோ

அங்கே என் நாடு விழிக்கட்டும்
அங்கே என் நாடு விழிக்கட்டும்….

எந்த மேடையிலும் அறிஞர் துணைவேந்தர் சை வே சிட்டிபாபு தன் ஆங்கில உரையை முடிக்கும்போது நோபல் கவியரசர் தாகூர் வரிகளை உணர்வு ததும்பச் சொல்லி முடிப்பார் .

புரட்சித்தலைவரிடத்தில் வங்க மொழிப் பேராசிரியரை அவர் அறிமுகப்படுத்தியபோது தமிழாக்கத்தைச் சொல்லி அவரை வங்க மொழியிலும் அந்தப் பாடலைக் கூறச் சொல்லுங்கள் என்று புரட்சித்தலைவர் கேட்டு நெகிழ்ந்தார் .அவருக்கு ஏலக்காய்ச் சரிகை மாலையை அணிவித்து பாராட்டினார் என்பதை சொல்லவா வேண்டும் . .

தொடர்வோம் …

பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை

– ஒளவை நடராசன்

thamizhavvai@hotmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *