===
கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 74
தன்னேரிலாத தமிழ்ப்பல்கலைக்கழகம்
முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
மனித வாழ்வு, சுழன்று சுழன்று வரும் வளையம் போன்றதன்று, தொடர்ந்து சிகரத்தை நோக்கிச் செல்லும் முடிவில்லாத முன்னேற்றப் பேருலாவாகும் .
தானும் ஒருவன் என்ற நிலையில் உலகமக்கள் இணைகிறார்கள் .
தனி மனிதரை நேற்றினும் இன்று வளர்ச்சியில் மேம்பட்டவன். இன்றினும் நாளை மேலும் மேம்படுபவன் ! இந்த மேம்பாடு நாம் கோல் கொண்டு அளக்க இயலாதது. ஆனால் தொடர்ந்து நிகழ்ந்து வருவது !
வளர்ச்சிக்கு மாற்றம் தேவை. இந்த மாற்றம் தொடர்ந்து தேக்கமில்லாமல் நடைபெறும் .
தவழும் நிலையிலும் தத்தி நடப்பதாகவும் தாவிக்குதிப்பதாகவும் மாற்றம் விளையலாம் .
தாவிக்குதித்து முன்னேறுவது போன்ற மாற்றங்கட்கு அடிப்படை அமைப்பது கட்டிடமன்று , திரளும் கூட்டமன்று . தனி மனித மாட்சியாகும் .
எண்ணாயிரம் ஆண்டுகட்கு முன்பு கலப்பையைக் கண்டு பிடித்து வேளாண்மையைத் தொடங்கிய ஒரு தமியன் முதல், இந்த நூற்றாண்டின் நடுவில் கணிப்பொறியைப் படைத்துக் கல்வியுகத்தை உருவாக்கிய அறிவியலாளர் வரை, எண்ணற்ற தனி மனிதச் சிந்தனைச் செம்மல்களுக்கு இந்தச் சமுதாயம் இன்றும் என்றும் கடன் பட்டிருக்கிறது. இனியும் நாம் கடன் படத்தக்க மாற்றங்கள்,
புரட்சிகள் உருவாகும் என்றே ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறோம் .
புதிய பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் தோன்றிய வரலாற்றுக் குறிப்பை பேரறிஞர் வா செ குழந்தைசாமி அவர்கள் தொடங்கி வைத்ததை அவர்களின் நடையில் காணலாம் .
‘ புதிய பல்கலைக் கழகங்கள் ‘ என்ற தலைப்பில் பல சான்றுகளையும், புள்ளி விபரங்களையும் திரட்டி ஒரு நீண்ட அறிக்கை தயாரித்துக் கல்விச் செயலரிடம் நான் கொடுத்தேன்.
பின்னர், சில வாரங்கள். கழித்து அன்றைய கல்வி அமைச்சரிடமும் அதைக் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை .
எனவே, சில மாதங்கள் கழிந்த பின் 1975 இல் விடுதலை ஆசிரியரிடம் கொடுத்தேன். அவர் விடுதலையில் 6.3.75 இல் ஒரு தலையங்கம் எழுதினார். அத்தலையங்கம் எழுதப்பட்ட சில நாட்களில் அன்றைய முதல்வர் அவர்களின் கவனத்திற்கு அது வந்தது.
அவர் 13.3.75 இல் திருச்சியில், பெரியார் கல்லூரியில் பேசும்போது திருச்சியிலும், கோவையிலும் இரண்டு புதிய பல்கலைக் கழகங்கள் நிறுவப்படும் என அறிவித்தார். ஆனால் அடுத்த ஆண்டு ( 1976 ) தொடக்கத்திலேயே ஆட்சி கலைக்கப்பட்டது – அறிவிக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள் உருவாகவில்லை .
1978 இல் நான் மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்தபொழுது, அப்பொழுது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த உயர்திரு. ஆர்.எம். வீ அவர்களிடம் கட்டுரையின் படியைக் கொடுத்தேன். மதுரையிலிருந்து திருநெல்வேலி சென்ற அவர், அங்குச் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, கட்டுரையில் இடம் பெற்றிருந்த புள்ளி விபரங்களை விரிவாக எடுத்துக் கூறியிருந்தார்.
அன்றைய தமிழக முதல்வரிடம் தாம் நேரிலும், கல்வி பற்றிய பேச்சு வந்த பொழுது அமைச்சரவையிலும் இப்பொருள் பற்றிக் குறிப்பிட்டதாகவும், பின்னர் பல்கலைக் கழக விரிவாக்கத்திற்கு இக்கருத்துரை பெருந்துணையாக அமைந்தது என்றும் 1980 வரை புதிய பல்கலைக் கழகங்கள் அமைப்பதில் எப்படியோ தவறி விட்ட நாம், அதற்குப் பின் குறுகிய காலத்தில் பல பல்கலைக் கழகங்களை அமைத்தோம். இவை பழைய தேக்கங்களை ஈடு செய்வதற்கே யாகும். அந்த அளவிற்கு அது பாராட்டத்தக்கதே .
தோற்றுவிக்கப்படும் ஒரு புதிய பல்கலைக்கழகம் ஒரு கட்டடம் போலவோ, தொழிற் சாலை போலவோ தொடங்கிய ஒரு சில ஆண்டுகளில் கட்டி முடிக்கப் படுவது அன்று.
அது உயிர்ப் பொருள் போல விதையிலிருந்து முளைத்து, கன்றாகி, கொம்பாகி, மரமாக வளர்வது. அதற்குப் பண்பட்ட நிலத்தொடு, நீரும், உரமும் தேவை; காலமும் தேவை. மனத்திட்பமும், வினைத்திட்பமும் இருந்தால் வளர்ச் சியை ஓரளவு விரைவுப் படுத்தலாம். ஆனால் இன்று நட்டு, நாளை மரமாக்குவது இயல்வதன்று. பல்கலைக் கழகங்களை எண்ணிக்கை அளவில் ஈடு செய்யலாம்.
பயனளவில் ஈடு செய்வது எளிதன்று. பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் ஆகிய துறைகள் சார்ந்த பல்கலைக் கழகங்கள் தவிர, மற்ற புதியவை அனைத்தும் குழந்தைப் பருவத்தைத் தாண்ட வில்லை. மேலும் அவை சத்துணவு பெறும் குழந்தைகளாகவும் இல்லை என்று எழுதினார் .அந்த நிலையில் தான் பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகம் புரட்சித்தலைவரால் தோற்றுவிக்கப்பட்டது .
இந்தியப் பண்பாட்டில், நாகரிகத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும் தொன்றுமுதல் இன்றுவரை நமது நாட்டின் கலை, இலக்கியம், சமயம், வாழ்வியல் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புக்கு உரிமையுடையதாகவும் பிறங்குவது நம் தமிழ்மொழியாகும்.
தமிழ் மொழியின் மரபுவழி அமைந்த வாழ்வியல், கலை, பண்பாடு சார்ந்த துறைகளுக்குப் பொலிவும் ,வலிவும் ஊட்டத் தனி நிலையில் பல்கலைக்கழகம் அமைவது பெருமை தருவதாகும் என்று அரசு கருதியது.
தமிழையொத்த தொன்மையும், இந்தியப் பண்பாட்டிற்கு முதன்மையும் கொண்ட வட மொழிக்குப் பல்கலைக்கழகங்கள் சில நிலைகளில் அமைந்துள்ளன.
இந்திய அரசின் உதவியும் பல்கலைக்கழக நல்கைக்குழுவின் இசைவும் பெற்று வடமொழிப் பல்கலைக்கழகங்கள் வட மாநிலங்களில் இருந்தன .
இந்த நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதென தமிழக அரசு மேற்கொண்ட முடிவைத் தமிழர்கள் மட்டுமன்றி, இந்திய நாகரிகத்தின், பண்பாட்டின் ஊற்றுகள் அனைத்தையும் ஆழமாகவும், விரிவாகவும் ஆராய வேண்டுமென்ற எண்ணங் கொண்ட அறிஞர் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.
‘ தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகமா ‘ என்று நயப்போடும், ‘ மொழிக்கென்று ஒரு பல்கலைக்கழகமா ‘ என்று வியப்போடும் பலர் வினவ, 1981 – ஆம் ஆண்டில் புரட்சித்தலைவரால் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பெற்றது.
இன்றைய 2021 ஆம் ஆண்டில் நாற்பதாண்டுகள் முடித்துச் செம்மாந்து மிளிரும் முகப்புக் கட்டடம் போல் பல்வேறு வனப்பும் எடுப்பும் வாய்ந்த மாடங்களும் – கூடங்களும் தலை நிமிர்ந்து நிற்கின்றன கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன்கள் போலவே இப்பல்கலைக்கழகத்தில் அமைந்த
1. கலைப்புலம்
, 2. சுவடிப் புலம்,
3. வளர் தமிழ்ப்புலம்
, 4. மொழிப்புலம்,
5. அறிவியற்புலம்
என்ற ஐந்து புலங்களும், தத்தமக்குள் பல்வேறு துறைகளைப் பெற்றுள்ளன .
1. சிற்பத்துறை
2. நாடகத்துறை
3.அரிய கையெழுத்துத் துறை
4. நீரகழாய்வு மையம்
5. இசைத்துறை
6. ஓலைச்சுவடித்துறை
7. கல்வெட்டுத்துறை
8. அயலகத் தமிழ் வளர்ச்சித்துறை
9. மொழியாக்கத்துறை.
10. சமுதாயவியல் துறை
11. தொகுப்பியல் துறை
12. அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறை
13. இலக்கியத்துறை
14. மொழியியல் துறை
15. தத்துவ மையம்
16. மலைவாழ் பழங்குடி மக்கள் ஆய்வு மையம்
17. நாட்டுப்புறவியல் துறை
18. இந்திய மொழிகள் பள்ளி
19. சித்த மருத்துவத்துறை
20. தொல்லறிவியல் துறை 21.தொழில் – நில அறிவியல் துறை 22. கனிப்புறவியல் துறை
23. கட்டடக்கலைத்துறை
ஆகிய இவற்றோடு தனித் திட்டங்களாக அறிவியல், வாழ்வியற் களஞ்சிய மையம்,
பெருஞ்சொல்லகராதித்துறை, நாடகக்களஞ்சியம், தூயதமிழ்ச் சொல்லாக்க அகரமுதலித்துறை ஆகியனவும்,
பதிப்புத்துறை,
கணினி மையம்,
நூலகம்,
அருங்காட்சியகம்
ஆகியனவும் அமைந்துள்ளன.
மற்றைய பல்கலைக்கழகங்களைப் போன்ற செயலமைப்பையும், முழுமையான கட்டணக் கல்வி முறையையும், பட்டப்படிப்புக்குப் பயிற்றுவிக்கும் நோக்கையும் கொண்டதன்று இப்பல்கலைக்கழகம்.
இப்பல்கலைக்கழகக் கட்டமைப்பின் அது ஒவ்வொன்றிலும் ஆய்வு உயராய்வு என்ற ஆய்வு மணியே முழங்கும்.
உலகளாவி வருவோர்க்கெல்லாம் தமிழ் மொழியை, இலக்கிய நலனை, பண்பாட்டை, நாகரிக நலக் கூறுகளை கலை வளங்களைக் கற்பிக்கும் நிறுவனமாக, பண்பாட்டுப் பலகணியாக, ஆய்வரங்காக இப்பல்கலைக்கழகம் திகழ்கிறது.
சீனம், சப்பான், போலந்து, செக்கோசுலோவேகியா, அமெரிக்கா, . தென்னாப்பிரிக்கா முதலிய பல நாடுகளிலிருந்து வந்த ஆர்வலர்களுக்குத் தமிழ்மொழி, கலை இலக்கியம், பண்பாட்டுக்கல்வி பயிலும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
இவ்வாறே தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் உலக நாடுகளுக்குச் சென்று தமிழ் வகுப்பு நடத்துவதும் அயலகப் பல்கலைக்கழகங்களோடு பரிமாற்ற நல்லுறவு கொண்டும் உள்ளது .
ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர் விரிந்து பரந்த நிலப் பரப்பில் தஞ்சைக்கு மேற்கே திருச்சிச் சாலையில் வரலாற்றுப் புகழ் வாய்ந்த வல்லத்தின் கிழக்கில் அமைந்த இப்பல்கலைக்கழகம் அறிவுலகமும் ஆய்வுலகமும் பாராட்டிப் போற்றும் பல்வேறு பயனுள்ள பணிகளை நிறைவேற்றியுள்ளது.
வியக்கத்தக்க படைப்புகளையும் ஆய்வு முடிவுகளையும் அறிஞர்கள் வழங்கியது போலவே எளியோர்க்கும் ஏதேனும் செய்ய இயலுமா என்ற நோக்கில் சித்த மருத்துவத்துறை, பொதுமக்களின் நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடு வகைத் தன் வழியாகவும் தொண்டாற்றுகிறது .
நாடகக் கலைத்துறை தேசிய விழாக்களில் ஈடுபடுவதோடு சிற்பக்கலை விழாக்களையும் சிறப்புற நடத்துகிறது.
அறிவியல் தமிழ் வளர்ச்சித்துறை, தொழிற்கல்வியில் தமிழ் பயிற்றுமொழியாகப் பெருந் துணைசெய்யும் நூல்களைப் படைப்பதோடு எளிய மக்களுக்கும் அறிவியல் கருத்துகளைப் பரப்பும் பணியையும் கணிம வழியாகவும் ஏற்றுள்ளது .
இலக்கியத்துறை மக்கள் பதிப்புக்களாகப் பேரிலக்கியங்களை எளிய நடையில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
அரிய விலையில் பழம் பதிப்புகள் வெளிவந்தமையும் குறிக்கத்தக்கது.
பிற துறைகளும் மக்கள் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளத் திட்டங்களை உருவாக்குகின்றன.
தொல் . கடல் விளிம்பு நிலையை வரையறுத்த வகையில், தேசிய அறிவியல் தகுதியைப் பெற்றதும் இப்பல்கலைக்கழகமேயாகும்.
தமிழ் என்பது மொழி மட்டுமன்று, கலை, நாகரிகம், பண்பாடு. வாழ்க்கை முறை, வழிகாட்டும் நெறி ஆகிய அனைத்தையும் விரிந்த முறையில் தன்னகத்தே அடக்கிக் குறிப்பிடும் குறியீடாகும்.
இக் குறியீட்டிற்குரிய அனைத்தையும் பேணுதலை இப்பல்கலைக்கழகம் தன் கடனாகக் கருதுகிறது.
இருபது நூறாண்டுக் கால மொழி வளர்ச்சியோடு பண்பாட்டு வரலாற்றையும் சமூக , இலக்கிய , கலை, அறிவியல் மாட்சியையும் கொண்டும் கொடுத்தும் உலகம் முழுதும் இப்பல்கலைக்கழகம் உறவு கொள்ளும் வாயிலாகவும் முற்பட்டுள்ளது .
ஆயிரம் வேலி மனைப் பரப்பென்பது தமிழ் மொழியின் பரந்துபட்ட தன்மையையும், உயர்வுள்ளிப் பணியாற்றும் நிமிர்ந்த அலுவலக மாடம் இம்மொழியின் நிலை உயர்ச்சியையும், கட்டட மாட்சியின் கலையழகையும் பண்ணார் தீந்தமிழின் கவினையும் உருவகப்படுத்துவ தோடு இந்நாளைய அறிவியற்கலைகள் அனைத்தையும் தன்பால் ஏற்கும் தன்மை, புதியனவற்றை உவந்தேற்றுக்கொள்ளும் மாறா இளமைத் தன்மையைக் காட்டுகிறது.
அருமை உடைத்தென்று அசா அவதோடு அறிவறிந்த ஆள்வினையால் முயன்று உரிய குறிக்கோளை எய்தி மகிழ்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னோக்கி நடை பயில்கிறது.
அறத்தாறாய்ச் செந்தமிழை ஓம்பின்
புறத்தாற்றின் போஒய்ப் பெறுவ தெவன்.
நான் அப்போது வழங்கிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 1993 – 94 ஆம் ஆண்டுச் செயன்மைகளை இந்த வரைவு குறிப்பிட்டுள்ளது .
இருபதாண்டுகளுக்கு முன்னால் இது வரையப்பட்டது ,
இன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது .
பெரும் புகழ் பெற்றவர்களால் பொலிவோங்கி வருகிறது .
தஞ்சைக்குப் பெருவுடையார் திருக்கோயில் பெரிய கோயிலாக விளங்குகிறது .
புரட்சித்தலைவர் தமிழகத்துக்குக் கட்டிய தனிப்பெருங்கோயில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமாகும் .
தொடர்வோம் …
பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை
– ஒளவை நடராசன்
thamizhavvai@hotmail.com

Add a Comment