POST: 2021-03-06T10:31:49+05:30

அவர் கீர்த்தி எப்போதும் ஒளிக்கீற்றாய் மின்னிக்கொண்டிருக்கும் .

தினமலர்க் குடும்பத்தில் திறனாளர்கள் பலர் இருந்தாலும் , தினமலர் என்றவுடனேயே அறிஞர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நினைவு தான் தமிழர் உள்ளங்களில் எப்போதும் நிலையாய் நின்றது .

அருட்செல்வரின் நெருங்கிய நண்பராக இருந்த அறிஞர் கிருஷ்ணமூர்த்தியோடு இருவரும் உரையாடிய மழையில் அருட்செல்வரின் சாரலில் பலமுறை நானும் நனைந்து குளிர்ந்திருக்கிறேன் .

திறமையாலும்,பெருமையாலும் புகழோங்கிய அறிஞர் கிருஷ்ணமூர்த்தி கணினி வரைவுப் புதுமை,
எழுத்துச்சீர்மை, கல்வெட்டுத்தோய்வு, நெஞ்சுரம் , நாணயவியலின் முன்னோடி ,நேர்மைத்திறம் கொண்ட இதழாசிரியர் என்று அவர் ஆற்றல் முகடுகளை அளவிட்டுப் புகழமுடியாது .

எந்த நேரமும் – எந்த நிலையிலும் அவர் பதட்டம் கொண்டதேயில்லை .

ஆசிரியரின் புன்னகை ஆயிரம் பொருள் கொண்டதாக அமைந்தது .

தன் கருத்தை எடுத்து மொழிவாரே தவிர திணித்து வலியுறுத்தமாட்டார் .

தொல்லியல் – அருங்காட்சியியல் – அறநிலையத்துறை முதலிய துறைகளில் தமிழ்ப்புலமை வாய்ந்தவர்கள் நீங்கள் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று அதற்கேற்ற முதுகலையைத் தொடங்க வேண்டுமென்று தலைமைச் செயலகத்துக்கு வந்து என்னிடம் பலமுறை வேண்டினார் .அதற்கேற்ற பாடத்திட்டத்துக்கு முன்வடிவை அனுப்பியதை நான் நினைவு கூர்கிறேன் .

கடந்த பத்தாண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளாமல் அவர் ஓய்வாக இருந்தாலும் .ஒடுங்காமல் தன் மனக்கருத்துக்களை கூறி வழிகாட்டி வந்தார் .

இன்றும் ” நாணயவியலின் தந்தை ” என்று நாடு அவரைப் போற்றுகிறது .

உரிய முறையில்
மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மையம் சார்பில் – செம்மொழித் தமிழுக்கான தொல்காப்பியர் விருது ஆசிரியரும் – நாணயவியல் அறிஞருமான டாக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது.

தொல்காப்பியர் விருதைத் தமிழக அரசு வழங்கியதை நினைத்து நான் ஒருமுறை பாராட்டி நெகிழ்ந்தேன் .

நீங்கள் நினைத்தால் நாடாளுமன்ற மேலவையில் உறுப்பினராகச் சென்றிருக்க முடியாதா என்று அருட்செல்வர் ஒருமுறை கேட்டபோது நீங்கள் சென்றால் அடுத்த இருக்கையில் நான் வந்தமர்வேன் என்றார் .

பண்புத்திலகமாகிய ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நான் உடல்நலம் குன்றியதைக் கேட்டுப் பெரிதும் வருந்திப் பேசினார் .

இதழியல் உலகத்தில் ஒளி வீசிய தாரகையை நாம் இழந்து நிற்கிறோம்.

தகுதி வாய்ந்த தமிழண்ணலாக அறிஞர் உலகம் போற்றிய பெருமகனை இழந்த தினமலர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதை விட நாம் எப்படி அமைதி காண முடியும் .

ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மறைந்தாலும் அவர் கீர்த்தி எப்போதும் ஒளிக்கீற்றாய் மின்னிக்கொண்டிருக்கும் .

ஆழ்ந்த இரங்கலோடு
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர் .
4 3 21

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *