பெருமானும் – பெருமாளும் பெருமை பெற்றனர் !
தோளிரண்டும் ஒரு பொன்மாலையைத் தொட்டணைவது போல கலைச்செம்மலும் – கருத்துரைத் திலகமும் பரிசில் பெற்று நின்ற கோலத்தைக்கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன் !.
அடக்கத்தால் கலைக்கே தம்மை ஆட்படுத்திக்கொண்ட
கலைமாமணி எம் எஸ் பெருமாள் ஒரு மிகுசொல் கூடப் பேசி அறியாதவர் .
நாடக ஊடகத்தின் நம்பியாக நிற்பவர் .
ஒருமாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணியாகத்
தமிழ்நாடு அரசு அவருக்குக் கலைமாமணி சூட்டுவது போற்றுதற்குரியது
மன்னவன் தோளுக்கு மற்றுமொரு மாலை !
” சொல்வலை வேட்டுவன் ” என்ற புறநானுற்றுத் தொடருக்கு நூற்றுக்கு நூறு பொருந்தியவராக இளவல் சுகிசிவம் ஒளிர்கிறார் .
பாராட்டும் – பரிசும் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்று எண்ணிப் பெருமை பாராட்டிக் கொள்ளாத பெருமிதம் கொண்டவர் சுகி சிவம் .
தலைநிமிர்வும் அடக்கமும் சுகியின் உயிரோடு பிறந்தவை .
பன்னாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நடுவில் தனக்கேயுரிய கருத்துக்களைத் துணிவாகப் பேசும் தகைமையை நான் வியந்து போற்றுகிறேன் .
சமயவுணர்வோடு – சமுதாய மேம்பாடு இணைந்திருக்க வேண்டும் என்றும் தேவையானால் எதையும் எப்போதும் திருத்தி மாற்றலாம் என்ற தெளிவு சுகிசிவத்தின் பொழிவுகளின் திரட்சியாகும் .
” தம்பியுடையான் தளர்ச்சி அடையான் ” என்று நான் உரிமை பாராட்டி உவகையடைகிறேன்
.நாளும் ஒரு நூலும் நாவில் புதுக் கருத்துமாகப் பொழிந்து வரும் என் அருமை இளவல் சுகி சிவம் உரையை நாளும் கேட்பது என் செவிப் பெருமையாகும் .
பாரதி விருது உரியவரைச் சேரும்போது தமிழக அரசும் தகுதி பெறுகிறது .
அண்ணல் சுகி குடும்பத்தின் அருமந்தச் சுடர்விளக்குகளை வாழ்த்துகிறேன் .
அன்போடு
ஒளவை நடராசன்
22 2 2021

Add a Comment