POST: 2021-03-13T10:08:58+05:30

ஒளவை 85

அசதிக்குச் சுடர்தந்த தேன்

– முனைவர் கல்யாணராமன்
முதல்வர் – அப்துல்கலாம் கலை அறிவியல் கல்லூரி
இராமேசுவரம்

நானும் என் நண்பன் இலக்கியச்சுடர் இரகுவும் உரைவேந்தரின் திருமகன் நாவேந்தர் ஒளவை நடராசன் அவர்களைக் கடந்த இருபதாண்டுகளாக அறிவோம்.

2003 முதல் 2009 முடிய ஓர் ஆறு ஆண்டுகள், அல்லும் பகலுமாய் அவரோடு நானிருந்து மகிழ்ந்திருக்கிறேன்.

அவர் எங்குச் சென்றாலும், அது வானொலி நிகழ்ச்சியாக இருந்தாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசியல் மேடையாக இருந்தாலும், தமிழ் மன்ற நிகழ்ச்சிகளாக இருந்தாலும், வெளியூர்ப் பயணங்களிலும் என்னை விருப்பத்துடன் உடனழைத்துக்கொண்டு செல்வார்.

நிகழ்ச்சியில் தான் பேசப் போவது பற்றி என்னுடன் விவாதிக்கும் பழக்கமுடையவர் அவர்.

அவர் சொல்வதற்கு எதிராகப் பேசுவதற்கு என்னைத் தூண்டுவார். அவரின் விருப்பப்படி, எப்போதும் நான் அவர் கருத்துக்களுக்கு எதிர்நிலையெடுத்துப் பேசுவேன். அதை மிக ரசித்துக் கேட்பார்.

அவர் கருத்துகளைக் கொஞ்சமும் விட்டுக்கொடுக்கமாட்டார். ஆனால், மாற்றுக் கருத்துகளைக் கவனத்துடன் காது கொடுத்துக் கேட்பார். தர்க்கபூர்வமாகத் தக்க பதிலளித்து மறுப்பார்.

அவருடன் பேசுவது எப்போதும் ஓர் அலாதியான மகிழ்ச்சியைத் தரும்.

வயதை மீறிப் பொங்கும் இளமை, காலத்தால் மங்காத கூர்மை, புதியன தேடிக் கொண்டேயிருக்கும் தணியாத ஆர்வம், எதிலும் ஆழம் அகலம் காணும் அறிவின் விரிவு, நடைமுறை வாழ்வின் நெளிவு சுளிவுகளில் கரைகண்ட கூரிய புலமை…. ஐயா ஒளவை பற்றி இப்படி எத்தனையோ சொல்லி வியக்கலாம்.

பழந்தமிழ்ப் பாடல்களின் சிறப்பைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டால், அவருக்குக் காலம் போவதே தெரியாது.

ஒருநாள் அவருக்கு நல்ல காய்ச்சல். காலையில் ஓர் இல்லப் பிறந்தநாள் நிகழ்ச்சிக்குப் போவதற்காக, என்னை அழைத்திருந்தார்.

பகல் பன்னிரண்டு மணிக்கு நிகழ்ச்சி. வழக்கம்போல் பத்து மணிக்கே நான் அவர் வீட்டிலிருந்தேன்.

“இராஜா! அமைப்பாளர்களுக்குத் தொலைபேசி செய்து இன்றைக்கு என்னால் வரமுடியாது, காய்ச்சல் என்று சொல்லிவிடுங்கள்” என்றார். தொலைபேசியை என் கைத்தொடுவதற்குள், “ஏதாவது ஒரு சங்கப்பாடல் சொல்லுங்களேன்” என்றார்.

“அகமா புறமா சார்” எனக் கேட்டேன்.

“என்ன இராஜா! இலக்கிய விழாவுக்கா போறோம்? அரசியல்வாதியோட அறுபதாவது பிறந்த நாள்தானே! புறநானூற்றிலிருந்து ஒரு பாட்ட எடுத்து விடுங்க!” என்றார்.

என்ன இது? இப்பத்தானே நிகழ்ச்சி கேன்சல்னு சொல்லச் சொன்னாரு. அதுக்குள்ள இப்படிப் பேசுறாரே ! ஒன்றும் புரியாமல் குழம்பிக்கொண்டே, நான் ஆரம்பிக்கிறேன்.

” உடையன் ஆயின் உண்ணவும் வல்லன் கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும் மடவர் மகிழ்துணை நெடுமான் அஞ்சி ! ”

“பலே சோழா! சொல்லு” என்றார்.
“எல்லாரும் பலே பாண்டியான்னுதானே பாரதியார் சொல்லுவார்னு சொல்லுவாங்க. நீங்க என்ன இப்படிச் சொல்றீங்க!”

“ஐயோ இராஜா. எத்தன வாட்டி நான் உங்களுக்குச் சொல்லியிருக்கேன். எதைச் சொன்னாலும் நாம சொந்தமா ஒரு சொல்லாவது சேர்த்துச் சொல்லணும்

இராஜா. கிளிப்பிள்ளைப் பேச்சு எனக்கு பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியாதா ?

நீங்க திருவாரூர்க்காரர்தானே, அப்புறமென்ன ! மீதிப் பாடலக் கணீர்னு சொல்லுங்க இராஜா” என்றார்.

” இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத் தோன்றாது இருக்கவும் வல்லன் மற்றதன்…”

என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடைமறித்து,

” கான்றுபடு கனைஎரி போலத் தோன்றவும் வல்லன் தான் தோன்றும் காலே ”

என்று பாட்டை முடித்துவிட்டார்.

” புறநானூறில இது எத்தனாவது பாட்டு ராஜா ? ” என்றார்.

ஐயோ ! இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று எனக்கு எப்படித் தெரியும் ?

” என்ன இராஜா முழிக்கிறீங்க ! 315ஆம் பாடலாச்சே இது ! ” என்றார்.

அது ஒரு பாடம்.

அவர் சொல்லிக் கொடுக்கும் முறை அப்படித்தானிருக்கும். அதற்கப்புறம் எந்த இலக்கியத்தில், எந்தப் பாடலை நான் படித்தாலும், இன்றுவரை அது எங்கே வருகிறது, எத்தனையாவது பாடல் என்ற விவரங்களையும் சேர்த்தே தான் படித்துக்கொள்கிறேன்.

” இப்ப தொட்டுப் பாருங்க என்னை ” என்கிறார். அவர் கழுத்தில் கைவைத்துப் பார்க்கிறேன். இயல்பாக இருக்கிறது ! காய்ச்சலைக் காணோம். சரியாகிவிட்டார். அவர் வாய் முணுமுணுக்கிறது. ”

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் “.

என்னை நிறையப் பாடல்களைச் சொல்லச் சொல்லிக் கேட்பது அவர் இயல்பு.

பல தருணங்களில், ஒரு பாடலின் தொடக்க அடிகளை அவர் சொன்னவுடன், அடுத்துவரும் அடிகளை நான் சொல்ல வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்.

” படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில் ”

என்று தொடங்குவார். உடனே நான்,

” இராமாநுசன் குணம் கூறும் அன்பர் கடிகொண்ட மாமலர்த்தாள் கலந்துள்ளம் கனியும் நல்லோர் அடிகண்டு கொண்டுகந்து என்னையும் ஆள் அவருக்கு ஆக்கினரே

” என்று சொல்லி முடிக்க வேண்டும். அப்போதுதான் அவர் முகம் ஒளிரும்.

” வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் மணிவயிரத் தோளன் ”

என்று அவர் தொடங்கியதும்,

” தான்நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்பதற்கு நாணான் ”

என்று அடுத்த அடியை நான் சொல்லவேண்டும். அதற்கடுத்த வரியை அவர் சொல்வார். இறுதியை நான் சொல்லி முடிக்கவேண்டும். இது செம்மையாக நடைபெற்றால், அவரைக் கையில் பிடிக்க முடியாது. அவ்வளவு உற்சாகத் துள்ளலுடன் உரையாடுவார்.

ஆனால், அவர் சொல்லும் சில பாடல்களை நான் தொடர முடியாமல் விழிக்கும்போது, ” என்ன இராஜா ! நீங்க கூடவா, இப்ப இப்படி ஆயிட்டீங்க ?” எனச் சிரிப்பார்.

என் உயிரே போய்விடும் போலிருக்கும் !
அவரைப் பார்க்கப் போவதாயிருந்தால், புதிதாகச் சில பாடல்களைத் தேடிப்பிடித்துப் படித்துக் கொண்டுதான் போவேன். அவரை வியக்க வைப்பதும், அவர் வாயால் உண்மையான ஒரு பாராட்டுச் சொல்லைப் பெற்றுவிடுவதும் எனக்கு ஒரு சவால். அதைப் பெரும்பாலும் சமாளித்துத் தப்பிவந்திருக்கிறேன் என்பதுதான் என் நிறைவு.

வாதப்பிரதிவாதங்கள் செய்வதற்குச் சளைக்கமாட்டோம்.

“எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே!”

என்ற பாடலில் வரும் ஆடவர் என்பதற்கு, உரைவேந்தர்

, ‘மக்கள்’ என்று பொதுப்பொருள் தருவது ஏற்கக்கூடியதாக இல்லை என்று வாதிடுவேன். “அது ஆண்களையே குறிக்கிறது. அப்போதுதான் அப்பாடலின் பொருள் சிறக்கிறது” என்பேன். ”

அப்படியா இராஜா சொல்றீங்க!” என்று கேட்டுக்கொள்வார். பிறகு,

‘ஆடவர்’ என்ற சொல், ‘மக்கள்’ என்ற பொருளைக் குறித்து வரும் சில இடங்களைச் சுட்டுவார். மெலிந்த குரலில் நான், “இல்லை சார். இது ஒரு பெண் எழுதின பாட்டு…” என்று இழுப்பேன். “சரி இராஜா. உங்க கருத்து உங்களுக்கு” என்று விட்டுவிடுவார்.

இது நடந்து பதினைந்து வருடத்திற்கும் மேலிருக்கும். ஒரு வெளியூர்க் கூட்டத்திற்குப் போயிருந்தோம்.

எப்போதும் காரில்தான் பயணம். வழியில் நல்ல காஃபி கிடைக்கும் சைவ ஹோட்டல்களில் நிறுத்திக் குடித்துக்கொள்வோம். சிற்றுண்டியும் உண்போம். ஒரு பெரும் செல்வந்தரின் வீட்டுத் திருமண விழா. விழா முடிந்து ஊரின் பிரபல அரசியல்வாதியைப் பார்க்கப் போனார்.

“நீங்க போங்க. நான் காரிலேயே காத்திருக்கிறேன்” என்று நான் சொன்னாலும், என்னை அவர் விடவில்லை. உள்ளே போனோம். அருமையான கவனிப்பு நடந்தது.

கோதுமை அல்வா, காஃபி. சுமார் 50 வருடமாக, அவருக்குச் சுகர் இருக்கிறது. கவலையே படமாட்டார். இனிப்பை உண்டுவிட்டு, ஒரு வெளிநாட்டு மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொள்வார்.

அப்போது ஒரு வயதான பெண்மணி உள்ளே நுழைந்தாள். முருகனைப் பற்றித் தான் ஒரு காவியம் பாடியிருப்பதாகவும், அதை ஆயிரம் பிரதிகள் அச்சடிக்க வேண்டும் என்றும் சொன்னாள். “30,000 போதுமா?” என்று கேட்டார் அரசியல்வாதி. அந்தப் பெண்மணி வாயடைத்துப் போய்விட்டாள். கண்களில் நீர் தளும்ப, “மிக மிக நன்றி ஐயா” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

அவள் போன பிறகும், மாநில அரசியல் பற்றிக் கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் பிறகு விடைபெற்றுக்கொண்டு வந்தார். இப்படி எத்தனையோ பெரிய பெரிய இடங்களுக்கு
என்னை உடனழைத்துப் போயிருக்கிறார். “நான் அவரைப் பார்த்துட்டு வரேன். நீங்க வெளியில கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ராஜா” என்று என்னிடம் ஒருபோதும் அவர் சொன்னதில்லை.

இந்தச் சந்திப்பு முடிந்து வெளியில் வந்ததும், காரில் ஏறிக்கொண்டோம். நாவேந்தர் ஒளவையிடம் நான் கேட்டேன். “என்ன சார் இது? இவ்வளவு நல்லவரா இருக்காரு! எவ்வளவு பெரிய மனசு!” என்று நான் வியந்தேன்.

தலையில் அடித்துக்கொண்டு அவர் சொன்னார். ” ஐயோ இராஜா, நீங்களுமா இப்படி ஏமாந்துட்டீங்க! உங்களைப் புத்திசாலின்னு நினைச்சேனே ! ” என்றார்.

“என்ன சார்…” என்று தடுமாறினேன். “ஒண்ணும் பேசாதீங்க. ஒரு திருக்குறள் சொல்றேன். கேளுங்க.

“அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம்”

என்றாரே பார்க்கலாம்! எனக்குத் தூக்கிவாரிப்போட்டது! “842ஆம் திருக்குறள் இராஜா. வீட்டுக்குப் போய் நல்லா படிங்க” என்றார்.

இப்படியும் ஒரு திருக்குறளா ? அதற்குப் பின், அந்த அரசியல்வாதி பற்றி அவர் என்னிடம் என்ன சொன்னார் என்பது இரகசியம்.

அதை நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை. முடிந்தால் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் ! ஆனால், என்னுடைய இந்தக் கட்டுரையை, இப்படித்தான் நான் முடிக்க விரும்புகிறேன்.

நான் கண்ட மிகச்சிறந்த பின்நவீனத்துவவாதி டாக்டர் ஒளவை நடராசன் அவர்களே !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *