நின்றவூர் நித்திலம் !
ஓங்கிய புகழோடு ஒளிரும் ஒய் எம் சி ஏ பேரவையின் செயலாளர் அவர்களே
அறிஞர் பெருமக்களே!
நண்பர்களே!
ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம் என்று உலகமெல்லாம் கண்டு மகிழத்தக்க வகையில் நாளும் வேளையும் பட்டிமன்றத்தின் பெருமையைப் பரப்புவதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த என் நெஞ்சத்தில் எப்போதும் நிலையாக நின்று ஒலிபரப்பும் பண்பாட்டுப் பெட்டகம் பக்தவச்சலம் அவர்களை நினைத்துப் போற்றுகின்ற இந்த நிகழ்ச்சி என் கண்களில் வற்றாமல் நீர் வழியச்செய்கின்றது.
அருமை நண்பர் பக்தவச்சலம் அவர்கள் இளம் பொறியாளராகத்தன் வாழ்வைத் தொடங்கியவர்.
எளிமையிலேயே வாழ்ந்து எங்கெல்லாம் தமிழ் வளம் கொழிக்கும் இடங்கள் உண்டோ அங்கெல்லாம் சென்று நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதோடு தான் கண்ட, கேட்ட கருத்துக்களையெல்லாம் பரிந்துரைப்பதிலும் பேரார்வம் கொண்டவராகத் திகழ்ந்தார்.
அருமை நண்பர் பக்தவச்சலம் வாழ்வு தமிழ் வாழ்வுதான்.
தான் தமிழில் முதுகலை பயிலவில்லையே என்ற ஏக்கத்தில் தான் தன் அருமைத்திருமகன் பேராசிரியர் தாமரைக்கண்ணனை தமிழில் முதுகலைப் பட்டப்பேறு பெற வேண்டும் என்று தந்தையின் வழியிலேயே நின்று அவர் சிந்தை செல்லும் போக்கிலேயே உறைந்து, இன்று ஒய்எம்சிஏ-இல் செயலாளராகவும் திகழ்வது நமது நெஞ்சை உருக்குகிறது.
நண்பர் பக்தவச்சலம் தொடக்க காலத்திலேயே அறிஞர் சேதுப்பிள்ளை, பேராசிரியர் மு.வ, பேராசியர் சிதம்பரநாதன் செட்டியார் ஆகிய அறிஞர் பெருமக்களோடு நெருங்கிப்பழகி பல்வேறு நிலைகளில் அவர்களோடு நிகழ்ச்சிகளெல்லாம் பங்குகொண்ட பெருமிதம் உடையவர் ஆவார்.
பக்தவச்சலம் அவர்கள் தம்முடைய வாழ்க்கையைத் தொடங்கும் போதே பொதுவுடமைப் போக்கு என்பதுதான் இந்த நாட்டைக் காக்கும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்.
அந்த வகையிலேயே தான் தன்னுடைய இளம்பருவத்தில் இருந்தே ஆராய்ந்த கட்டுரைகளைத் தாமரை இதழில் எழுதியதை நண்பர்கள் பலர் இப்போது வேண்டுமென்றால் நினைவுக்குக் கொண்டுவர முடியாமல் போயிருக்கலாம்.
அவர், அறிஞர் பெருமக்களோடும் பொதுவுடமைத் தலைவர்களோடும் எவ்வளவு நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியும்.
பெருந்தகை கணேசலிங்கம் அவர்கள் பக்தவச்சலத்தின்பால் பேரன்பு காட்டியதும், கணேசலிங்கம் அவர்களும் பக்தவச்சலமும் அறிஞர் மு.வ.அவர்களோடு அமர்ந்து ஒன்றாகப் பொதுவுடைமை இயல்புகளைப் பற்றிப் பேசியதும் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்.
நான் பேரறிஞர் அண்ணா பங்குகொண்ட நிகழ்ச்சியில் தான் முதலில் பக்தவச்சலத்தைக் காணும் வாய்ப்பு தொடங்கியது.
எண்ணினால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நான் மாணவ நிலையில் இருந்து பச்சையப்பன் கல்லூரியில் நீங்கி அன்பு தொடர்ந்தது.
அன்பின் வழிவந்த கேண்மை என்று சான்றோர்கள் புகழ்கின்ற வகையில் அவர் என்னோடு அவ்வளவு நெருக்கமாக இருந்தார்.
அவர் என் மீது காட்டிய உருக்கத்தை நான் இப்போது எண்ணி எண்ணிக் கலங்குகிறேன்.
சான்றாக, நான் செல்லும் ஊர்களுக்கெல்லாம் என்னோடு உடன் வருவார்.
நான் ஆற்றுகிற உரைகளை எல்லாம் குறிப்பெடுத்து வெளியீடாக வேண்டும் என்று பெரிதும் விழைந்தார்.
அவருடைய எண்ணம் அழகு; எழுத்தும் அழகு; சிந்திப்பதும் அழகு; பழகுவதும் அழகு. இப்படி வாழ்ந்த பெருந்தகை எனக்குப் பின்னாலிருந்து என் இரங்கல் கூட்டத்தில் பங்கு பெறுவார் என்று தான் நான் எதிர் நோக்கினேன்.
ஆனால், அவர் வாழ்வு இப்படி திடுமென முடிந்தது; அந்த சுடர் விளக்கு இப்படி திடீரென்று நம்மை விட்டு நீங்கியது என்று நான் நினைந்து உருகுகிறேன்.
நண்பர் பக்தவத்சலத்தினுடைய பெயர் தமிழ் உள்ளவரை, தமிழறிஞர்கள் மேடையில் பேசும் நாள் வரை, தமிழ் வளர்க்கின்ற நெறிப்பாடுகள் எல்லாம் பக்தவச்சலத்தினுடைய பெயர் நிலையாக இருக்கும்.
பக்தவச்சலம் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் வாழ்கின்ற பெருமிதத்தோடு தான் வாழ்ந்தார்.
வாழ்வை பயனுடைய வாழ்வாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே நாள் தவறாமல் எண்ணிப்பாருங்கள், திருநின்றவூரில் இருந்து மாலை நான்கு மணிக்கெல்லாம் புறப்பட்டு ஒய்எம்சிஏ அரங்கத்துக்கு வந்து அமர்வார்.
ஒய்எம்சிஏ- வை அவரை விட்டு யாரும் பிரிக்க முடியாது.
ஒய்எம்சிஏ -வின் வளர்ச்சியில் அவ்வளவு ஊன்றிய ஆர்வம் காட்டியவர் நண்பர் பக்தவத்சலம் அவர்கள்.
பண்பாட்டுத்திலகம்; சிந்தனைச் செம்மல்; தமிழ்த்தானையைத் தலைமை தாங்குகிற தகுதி கொண்டவர் என்றெல்லாம் நாம் ஆயிரம் புகழ்ப் பெயரை அவருக்கு சூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அவருக்குத் தமிழ் உலகம் கடன்பட்டிருக்கிறது.
பக்தவத்சலத்தினுடைய புகழ் நீடு நிலை பெறுவது என்றால் ஒய்எம்சிஏ அரங்கம் தான் அதைப் போற்றிக் காக்க வேண்டும் என்று நான் பணிவோடு சொல்கிறேன்.
பக்தவத்சலம் அவர்கள் பெயருக்குத் தான் செயலாளரே தவிர, அவர் தான் தலைவராக இருந்தார்; அவர் தான் உறுப்பினராக இருந்தார்; அவர் தான் ஒய்எம்சிஏ பட்டிமண்டபத்தின் உயிரோட்டமாக இருந்தார்.
அப்படி தன் வாழ்வை தமிழ்ப் பட்டிமண்டபத்தில் கரைத்துக் கொண்ட மாட்சியை நினைக்கிறேன்.
அவர் நினைவும், அவருடைய எண்ணமும், அவருடைய கனவும், அவருடைய கருத்தும், எல்லா வகையிலும் தமிழகத்தில் பரவி நம்முடைய இல்லந்தோறும் உள்ளந்தோறும் பக்தவச்சலத்தினுடைய நினைவு நம்மை வாழ்விக்க வேண்டும் என்று சொல்லி பக்தவச்சலத்தின் நினைவேந்தல் என்பது தமிழுக்கு அமைந்த ஓர் இலக்கியப் பணிக்கு நாம் நன்றி செலுத்தும் செயலாகும்.
வணக்கம்.

Add a Comment