கட்டுரை
—–
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 52
“பட்டிமண்டபம் ஒரு பல்கலைக்கழகமே!”
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்று கொண்டிருந்த பொழுது என்னுடைய மாலை நேர நிகழ்ச்சிகளாக அப்பாவின் பட்டிமன்ற, வழக்காடு மன்றங்கள் கண்டு கேட்பதை வழக்கமாகப் பேணி வந்தேன்.
அப்பா ஆற்றிய ஆற்றொழுக்கான உரைகளைக் கேட்டுப் பெருமிதம் அடைந்தேன்.
தங்குதடையின்றி எல்லாக் கூட்டங்களிலும் எவ்விதக் குறிப்புகள் இன்றி, தான் விரும்பிய கவிஞர்களின் கவிதைகளை, சங்க இலக்கியம், பாரதியார், பாவேந்தர் பாடல்களை அருவியெனச் சொல்லிக் காட்டிய விதத்தை கண்டு விழிகள் வியப்பில் விரிந்தன.
அம்மா அடிக்கடி சொல்வார்கள், ‘அப்பாவைப் பார், அவர் பேசும் விதத்தைப் பார். எவ்வளவு பாடல்களை அவர் மனப்பாடமாகச் சொல்லும் திறனைக் கேட்டு நீ வியப்பது பெரிதல்ல. அவருடைய கல்வியாற்றல் எவ்வளவு பெரிய ஆற்றல் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். எதைப் படித்தாலும் பசுமையாக நினைவில் வைத்துக்கொண்டு அவர் சொல்லும் மேடைத் திறத்தை நீயும் கடைப்பிடிக்க வேண்டும்’
என்று அடிக்கடி வலியுறுத்துதியதை நான் இன்றும் நினைந்து நெகிழ்கிறேன்.
அப்பாவின் கம்பன் கழக உரைகளெல்லாம் சிறப்பாக அமையும்.
அவர் பேசிய கம்பன் கழக சென்னைக் கூட்டங்கள் ஏ.வி.எம். இராஜேசுவரி மண்டபத்திலும், புதுவையில் நடைபெற்ற கம்பன் கழகக் கூட்டங்கள் அளப்பரியன.
புதுவை கம்பன் கழகச் செயலாளர், அண்ணல் அருணகிரி, வழக்கறிஞர் முருகேசன் ஒருங்கிணைத்து நடத்துகின்ற கூட்டங்கள் சிறப்பாக நடைபெறும்.
புதுவை அரசின் முதல் அமைச்சர் தொடங்கி அனைத்துப் பெருமக்களும் கம்பர் கழக அறிஞர் பெருமக்களின் தனித்திறனைப் பாராட்டிக் கூட்டம் முடிந்த பிறகு மதிய விருந்து, அல்லுணா நேர்த்தியாக நடத்துவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கும் பொழுது பேராசிரியர் ஒருவர் என்னைப் பார்த்து, (1990-இல்) ‘
அருள்! பட்டிமன்றம் பேசி விட்டாலே தமிழ் வளர்ந்து விடும் என்று நீ நினைக்கிறாயா?’ என்று தொடர்ந்து கேட்பார்.
நான் சொல்வேன்
‘பட்டிமன்றம் பேசுவதும் ஒரு கலைதான் அக்கலையை நாம் போற்ற வேண்டும்.
வருங்காலத்தில் பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு இந்திய அரசே பத்மஸ்ரீ விருது வழங்கும் பொற்காலம் வரும்’ என்றேன்.
அவ்வாறே, 2010-ஆம் ஆண்டில் எந்தையாருக்கும், 2021-ஆம் ஆண்டிற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுக்கும் பத்மஸ்ரீ விருது கிடைத்தது.
பெரும்பேராசிரியர் ப. நமசிவாயம் எந்தையாருக்கு பச்சையப்பன் கல்லூரியில் ஓராண்டு மூத்தவர்.
நயமாகவும் – நளினமாகவும் – நகைச்சுவைப் படரப் பேசுபவர். என் மீது பேரன்புசொரிந்தவர்.
அவர் திடுமென்று கேட்டார். நீ எப்படி இங்கே வந்தாயென்று, அப்பாவுடன் வந்தேன் பட்டிமண்டபம் பார்க்கவும் – கேட்கவும் ஆசையென்றேன்.
ஆமாம் எந்த அணி உனக்குப் பிடிக்கும்? உங்க அப்பா அணிக்கு பாலசந்தர் அணி என்று பெயர்.
மதுரையில் வருகிற அணிக்கு பாரதிராஜா அணி என்று பெயர் என்று சொல்லி மகிழ்ந்தார்.
பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் என்றேன். அப்படியானால் நீ பாலு மகேந்திரா அணி,
தாம்பரம் பேராசிரியர் இராசகோபாலன் வாதிடுவது என்னைக் கவரும் என்றேன். அப்படியானால் நீ பார்த்திபன் அணி என்றார்.
என்ன இப்படி சினிமா பெயர்களையே சொல்லுகிறீர்களே என்றேன்.
பட்டிமண்டபம் பாதி சினிமா போலத்தானே நடக்கிறது என்றார். பிறகு சிரித்துக் கொண்டே மேடையில் சொன்னார்,
நடிகை விஜயகுமாரி மாதிரி இருப்பார்களே அவர்கள் தானே கண்ணகி என்று என்னை மாணவன் ஒருவன் கேட்கிறான்.
நடிகர் திலகம் சிவாஜி மாதிரி இருப்பாரா வ.உ.சி. என்று கேட்கிறான் இன்னொரு மாணவன் என்றதும் அரங்கே அதிர்ந்தது.
தவத்திரு குன்றக்குடி அடிகளார், திருக்குறளார் முனுசாமி, வாகீச கலாநிதி கிவஜ, பேராசிரியர் சீனிவாச இராகவன், பேராசிரியர் எஸ்.ஆர்.கே.(எசு இராமகிருஷ்ணன்,) பேராசிரியர் அ.சா.ஞா., புலவர் கீரன் இப்படி ஒரு மூத்த அறிஞர் தலைமுறை தொடங்கி வைத்தது தான் பட்டிமண்டப அரங்கம் .
எந்த ஒரு கருத்தையும் விளக்குவது, கதைகளால் மறுப்பது ,விடைகளால் சிக்கலை விடுவிப்பதும், பட்டிமண்டபத்தின் வாதமாக அமைந்து இலக்கியத்தில் திறனாய்வுப் போக்கை வளர்த்தது.
நீதியரசர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள் என்ற உயர்நிலையில் பங்கு கொண்டிருந்த இளையோர்கள் அனைவரும் பட்டிமண்டப பேச்சாளர்களாய் இருந்ததையும் நான் கேட்டதையும் எண்ணியெண்ணி மகிழ்கிறேன்.
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷைய்யனும், உச்ச நீதிமன்ற நீதியரசர் திரு. இராமசுப்பிரமணியமும் பட்டிமண்டபத்தில் பங்கேற்றவர்களே.
இன்று நாடறிந்த வழக்கறிஞர்களும், சொல்வேந்தர்களும் பட்டிமன்றத்தில் பேசிய காலம் ஒன்று உண்டு.
பல்கலைத்திலகமாக பாரதி பாஸ்கர், வழக்கறிஞர் மாமணியாகிய திருமதி சுமதி இவர்களெல்லாம் இன்றும் பேசிவரும் பெருமை உடையவர்கள்.
பட்டிமன்ற பேச்சு போன்ற மிக சிறந்த உரைகளை எல்லாம் கேட்டு வளர்ந்த விதத்தைக் கண்டு நான் பெருமைப்படுகின்றேன்.
அப்பாவைப் போலவே பேசுகின்ற ஆற்றல் படைத்த பட்டிமன்றப் பேச்சாளர்கள் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம், பேராசிரியர் தாம்பரம் இராசகோபாலன் ஆற்றும் அறிவார்ந்த உரைகளைக் கேட்டு இன்புற்றேன்.
கனிவாக, தன் கருத்துக்களை வலியுறுத்தி மென்மையாக ஆணித்தரமாகப் பேசுகின்ற பேராற்றல் பேராசிரியர் தெ.ஞா.வின் தனிப்பெரும் சிறப்பாகும்.
மாநிலக் கல்லூரியில் மாணவராக இருந்தபொழுது எங்கள் கல்லூரியின் தமிழ் மன்றத்திற்கு அவரைப் பேசவைக்க அவருடைய அண்ணாநகர் இல்லத்திற்குப் பேராசிரியர் ஷேக்மீரானும், ஆண்டவரும் நானும் சென்றிருந்தோம்(1987).
அப்போது அவர் சொன்னார்.
மாணவர்களுடைய தமிழ் உணர்ச்சியைப் பாராட்டுகிறேன். நீங்களெல்லாம் ஆழமாகப் படித்து கல்வியுலகில் முன்னேற வேண்டும்.
ஒரு மணிநேர நிகழ்ச்சியை நீங்களெல்லாம் அமைதியாகக் கேட்கும் பக்குவம் இன்னும் பெறவில்லை.
கூச்சலும் குழப்பமுமாகவேதான் கல்லூரித் தமிழ்மன்றக் கூட்டங்கள் நடைபெறுவதைக் கண்டு நான் வருந்துகிறேன்.
நான் ஒரு மணிநேரம் பேசுவதற்குப் பல மணிநேரம் பல கருத்துகளைப் படித்து ஆய்ந்து சொல்வதற்கு விரும்புகிறவன் என்று அன்றே அவர் சொன்னதுதான் அவருடைய நல உரைகளின் வெற்றியாகும்.
பேராசிரியர் தாம்பரம் இராசகோபாலன் பட்டுச் சட்டை அணிந்து கொண்டு மிக அழகாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டு, தன்னுடைய சிகையை மிக நேர்த்தியாக வாரிக்கொண்டு அவர் கலகலப்பாகப் பேசுகின்ற காட்சிகளும், அவர் ஒருமுறை கம்பன் கழகத்தில் தயரதனை ஷேக்ஸ்பிரின் லியர் மன்னனுடன் ஒப்பிட்டு ‘King Lear is a tragic hero’ என்று ஆங்கிலத்தில் சொன்ன விதத்தில் நாங்களெல்லாம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தோம்.
அவர் ஒவ்வொரு வரியையும் மிக அழகாக நேர்த்தியாகப் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்த பெரும் பேராசிரியர் ஆவார்.
அவ்வண்ணமே, மதுரைப் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியம், முதல்வர் திருமதி இளம்பிறை மணிமாறன், பேராசிரியர் திருமதி சரசுவதி இராமநாதன், வங்கி அலுவலர் திருமதி உமையாள் முத்து, கல்லூரி முதல்வர்கள் திருமதி சாரதா நம்பி ஆரூரன், திருமதி உலகநாயகி பழநி, பேராசிரியர் அரங்க இராமலிங்கம் உரைகளெல்லாம் எங்கள் வகுப்பாசிரியர்களின் பாடங்களை விட நுட்பமாக அமைந்திருந்தன.
கம்பன் கழகக் கவியரங்கத்தில் நாவலர், பொற்கிழிப் பாவலர் சொ.சொ.மீ. சுந்தரம், கவிஞர் மரியதாஸ் போன்றோரின் கவிதைகள் என்னைக் கவர்ந்தன.
கவித்துவ வரிகளை விட மானுட நம்பிக்கைகளையே தம் மூச்சாக அமைத்துக் கொண்டு, நேர்த்தியாக எந்தையாருடன் உரையாற்றிய பெருமாட்டிதான் திருமதி சாவித்திரி இராகவேந்திரா ஆவார்கள்.
இயல்பான மேடைத் தமிழும், எளிமையான சொற்களிலும், எதிரிலிருப்பவரை ஈர்த்த உரையாளராகத் திகழ்ந்தார்கள்.
ஒருமுறை அவர்கள் கூட்டத்தில் சொன்ன கருத்து இன்றைக்கும் பொருள்பொதிந்த கருத்தாகவே அமைந்துள்ளது.
‘கைம்பெண்ணுக்கு மறுமணம் நடந்தது. அவருடைய புதிய கணவர் மறைந்த தன் முதல் மனைவியின் ஒளிப்படத்தைச் சுட்டிக் காட்டி, அக்காவை வணங்கு என்று சொன்னாராம்.
இதே கருத்தை மாற்றி, மறுமணமான அக்கைம்பெண் தன் புதிய கணவரிடம், மறைந்த அத்தானின் ஒளிப்படத்தைச் சுட்டிக்காட்டி, அண்ணனை வணங்குவோம்’
என்று சொல்லி பார்வையாளர்களின் எண்ண ஓட்டத்தை மாற்றிக் காட்டிய புரட்சிப் பெண்மணியாவார்.
அவர்களுடைய அறிமுகத்தால் தான், நான் தில்லிக்குச் சென்று, பிரதமர் இராஜீவ் காந்தியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அந்நாளைய பட்டிமன்றங்களையெல்லாம் செவ்வனே விழாக்குழுவினர் நடத்துவதற்கு அறிவுரைகளையும் நல்கிப் பல பேச்சாளர்களுக்கு அதிகமான மதிப்பூதியம் வழங்குவதற்கு ஆற்றுப்படுத்திய பெருமை திருமதி சாவித்திரி இராகவேந்திராவைச் சாரும் என்றால் மிகையாகாது.
விண்மீன்களுக்கு நடுவில் முழு நிலாவாக இலக்கியச்சுடர் த இராமலிங்கம் தனிப்பட உயர்ந்து நின்றார்.
அவருடைய உரைத்திறம் என்ற உலைக்கூடத்தில் தீட்டிய ஈட்டிகள் சில மிளிர்ந்தன.
அறிஞர் அமெரிக்கா கண்ணன் ஐ.நா.வில் சென்று அமர்ந்திருக்கிறார்.
ஆங்கிலமும் தமிழும் அவரிடம் ஏவல் கேட்கும் யுக்தி குறிப்பிடத்தக்கது.
எங்கே பேசினாலும் தன் எழுச்சியான உரையால் பகுத்தறிவு பார்வையோடு அணுகி தமக்கையார் வழக்கறிஞர் அருள்மொழி தன் வாதத்திறமையால் அவையை வியக்கச்செய்வார்.
நிமிர்ந்த நடையோடு இலக்கிய உணர்வோடும் திகழ்ந்த கவிஞர் நிர்மலா சுரேஷ் மண்டபங்களுக்கு ஒளி கூட்டினார்.
அந்நாளிலேயே தன் நகைச்சுவையாலும் கருத்துரையாலும் ஒளிர்ந்த மணிகண்டன் – மோகனசுந்தரம் குறிப்பிடத்தக்கவர்கள்.இப்போது சிம்மாஞ்சனாவின் முழக்கம் தான் எங்கும் ஒலிக்கிறது.
—–
பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
உரைவேந்தரின் உரைத் தொடர்
திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி
இனி, இத்திருமுருகாற்றுப்படையில் அடங்கியுள்ள பொருளைக் காணுமிடத்து, முதற்கண் முருகனுடைய உருநலம், செயல் நலம் கூறுவதும்; பின்னர் அவன் எழுந்தருளும் பரங்குன்றம் முதலாக வரும் இடங்களைக் கூறுவதும்; பின்பு இறுதியாக முருகனை வழிபடும் திறம் கூறுவதும் அவ்வழிபாட்டையேற்று அவன் எழுந்தருளிக் காட்சி வழங்கியருளுவது கூறுவதும் காணப்படும்.
முருகப் பெருமானுடைய உரு நலன் செயல் நலன் ஆகியவற்றை திருமுருகாற்றுப் படையின் கருப்பொருட் பகுதியில் கண்டோம்.
இனி, அவன் எழுந்தருளும் இடங்களைக் காணலாம்.
மதுரை மாநகர்க்கு மேற்கில் உள்ளது; மதுரை மாநகரின் வாயிலில் போர்குறித்து நெடுந்கொடி நிறுவப்பட்டிருக்கிறது;
கொடியில் சிறியதொரு பாவையும், பந்தும் தொங்கவிடப் பட்டுள்ளன. நகரவாயில் பகையச்சமின்றித் திறந்தே கிடக்கிறது. பொருதற்குக் கருதும் பகைவரும் இல்லையாயினர். வாயிலைக் கடந்து சென்றால் திருவீற்றிருக்கும் கடைத்தெரு உளது; அதற்கப்பால் இருமருங்கும் மாடங்கள் நிற்கும் நெடுந்தெரு நிலவுகிறது. இத்தகைய சிறப்புடன் திகழும் மதுரைமாநகரின் மேற்கில் வளவிய சேறு பரந்தநெல் வயல்கள் காட்சி நல்குகின்றன. அகன்ற அவ்வயல்களிடையே தாமரை மலர்ந்து விளங்குகின்றது. அவற்றிற் படிந்து வண்டுகள் தேனுண்ணும்; இந் நிலையில் பகற்பொழுது மறை தலால் தாமரை குவிந்துவிடும்; அப்போது தேனுண்டு கிடக்கும் வண்டு அம்மலரிடத்தே உறங்குகிறது. விடியலில் அவ்வண்டு வெளிவரும், அப்போது நெய்தல் புதுப்பூ மலர, அதனுள் அவ்வண்டு படிந்து தா தளைந்து தேனுண்ணும்; இதற்குள் ஞாயிறு எழுந்துவிடும். உடனே அவ்வண்டு பரங்குன்றத் துக்குச் சென்று அங்குள்ள சுனையில் மலர்ந்திருக்கும் நீலமலர்களின் தேனையுண்டு சூழ்வந்து பாடும். இத்துணை இயற்கை நலம் சிறந்த பரங்குன்றத்தில் முருகன் விரும்பி உறைகின்றான்.
திருப்பரங்குன்றத்தில் அமர்ந்துறையும் முருகப் பெருமான், திருச்சீரலைவாய்க்கு யானையேறிச் செல்வன். அந்த யானை நெற்றியிலே பட்டமும், பக்கத்தில் மாறியொலிக்கும் மணியும் கட்டப்பெற்றது; கூற்றத்தையொக்கும் வன்மையும் காற்றையொத்த கடுநடையும் உடையது.
இதன் மேல் காட்சியளிக்கும் முருகனுடைய சென்னியில் பலவகை ஒளிமிக்க மணிகள் இழைத்த முடியிருந்து அழகு செய்யும்; அவன் காதுகளில் அணிந்துள்ள மகரக் குழைகள், முகம் முழுத்திங்கள் போல இருத்தலால், முழுமதியைச் சூழ்ந்து திகழும் விண்மீன்கள் போல விளங்குகின்றன; தத்தம் கொள்கையில் தப்பாது,
மேற்கொண்ட தொழிலைச் செய்து முடிக்கும் திறலுடையவர் சிந்தை யின்கண் அவனுடைய திருமுகம் ஒளிவிளங்கித் தோன்றும்; முகம் எனப் பொதுப்படக் கூறினும், அம் முகம் ஆறெனக் கொள்ளல் வேண்டும்.
திருமுகங்கள் ஆறனுள், ஒருமுகம், புறவிருளிலே அழுந்திக் கிடக்கும் உலகம் குற்றமின்றி விளங்குமாறு பல வேறு ஒளிக்கதிர்களைப் பரப்பி ஞாயிறுபோல ஒளிசெய்யும்;
ஒருமுகம், தன்பால் அன்பு செய்யும் அடியவர்கள், தன்னை வழிபட அவ் வழிபாட்டை மகிழ்ந்தேற்று அவர்கள் விருப் பத்துக்கேற்ப இனிதொழுகி, அவர் வேண்டும் வரங்களை அன்புடன் நல்குகின்றது; ஒருமுகம் மறைகளில் விதித்த முறையில் தவறாமல் அந்தணர்கள் செய்யும் வேள்வி குறித்து அதற்குத் தீங்கு வாராதபடி பாதுகாக்கின்றது; ஒருமுகம், நூலறிவாலும் இயற்கையறிவாலும் உணரப் படாத உண்மைப் பொருளை, இருள் நீங்கத் தண்ணிய நிலவினைப் பொழிந்து விளக்கும் கலைநிறைந்த திங்களைப் போல், அறியாமை நீங்கத் தண்ணிய அருளொளியைச் செய்து உண்மை ஞானத்தைத் தலைப்படுவிக்கின்றது; ஒருமுகம், அன்பராயினாருடைய பகைவரை வலியழித்து அவர் செய்யக் கருதும் போரைக்கெடுத்து அதுவே வாயிலாகக் கறுவு கொண்ட நெஞ்சத்தால் அவர் செய்யும் களவேள்வியை நிகழச் செய்கின்றது; ஒருமுகம், குறவருடைய இளமை நலங் கனிந்த மகளும், கொடிபோன்ற இடையையுடையவளுமாகிய வள்ளியுடன் மகிழ்ச்சி கொண்டாடுகின்றது.
இங்ஙனம் விளங்கும் முகங்கள் ஆறுக்கும் ஏற்ப, அவனுடைய கைகள் பன்னிரண்டும் முறையே பணி புரிகின்றன; அகன்றுயர்ந்த அவனது மார்பின்கண் சிவந்த வரிகள் கிடந்து சிறப்புச் செய்கின்றன. வெற்றி யாலும் கொடையாலும் வீறுமிக்குப் புகழால் அவனுடைய தோள்கள் உயர்ந்திருக்கின்றன. புறவிருளை நீக்கும் திருமுகத்திற்கேற்ப, ஒருகை ஞாயிற்றொளியின் மிகுதியைத் தாங்கி விண்ணிடத்தே ஞாயிறோடு திரியும் முனிவர் களைத் தாங்கிச் செல்ல, ஒருகை இடையிலே ஊன்றி யிருக்கும், யானை மேல் தோன்றி வரங்கொடுக்க வரும் திருமுகத்திற்கேற்ப ஒருகை அங்குசம் ஏந்த, ஒருகை துடையின்மேல் கிடக்கும். அந்தணர் வேள்வி காக்கும் திருமுகத்துக்கியைய ஒருகை கேடகத்தையேந்த, ஒருகை வேலைச் சுழற்றிக் கொண்டிருக்கும். உண்மை ஞான முணர்த்தும் திருமுகத்துக்கொப்ப ஒருகை மார்பின்கண் ஞானக்குறிப்பொடு விளங்க, ஒருகை அம்மார்பின் மாலையோடே அழகாகத் தவழ்ந்து கிடக்கும்; களவேள்வி காணும் திருமுகத்துக்கேற்ப, ஒருகை தான் அணிந்த கொடியுடனே மேலே சுழன்று கொண்டிருக்க, ஒருகை மணிகள் மாறி மாறி யொலிக்கச் செய்யும்; வள்ளியொடு நகைமகிழும் திருமுகத்துக்கமைய ஒருகை நீல முகிலை மழை பெய்விக்கும்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள், தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment