ஆற்றுப்படுத்திய ஆசிரிய அன்னையார் !
அருங்குணத்திலகம் பேராசிரியர் இராசலட்சுமி அம்மையாரின் (11.06.1936 – 31.03.2021 )
மறைவு தமிழ்க் கல்வி வளாகத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது .
இளவரசர்களின் எழிற்சோலையாகத் திகழ்ந்த நானிலம் புகழும் மாநிலக்கல்லூரியின்
மகளிர் மாமணியாகவும் – தமிழ்த்துறையின் பேராசிரியராக அணி செய்தவர்( 1967 -1994)
சிரித்த முகத்துடன் தமிழ்ப்பாடல்களைச் செறிவாக நடத்துவார் .
1985 – 1988 ஆம் ஆண்டு வரை இளங்கலைத் தமிழிலக்கியம் பயின்ற பொழுது
என்னை நெறிப்பட வழிநடத்திய புலவர் பெருமாட்டியாராக மாதரசியார் ஒளிர்ந்தார் .
கல்லூரியில் ஒருமுறை வேறொரு மாணவரைக் கடிந்து பேசிக் கையோங்கிய நிலையிலிருந்த , என்னை அருகில் அழைத்து , யார் மகன் நீ ? என் மதிப்பார்ந்த நண்பரின் மகனா இப்படிச் செய்வது!
ஆறுவது சினம் தம்பி என்றார்,
உடனே, நான்,
சீறுவது என் குணம் அம்மா என்றவுடன் , என் தோள் தட்டிப் பிழை செய்யாதே, நண்பருடன் கைகுலுக்கிச் செல்க என்று ஆணையிட்ட
பெருமிதத்தை நினைந்து என் கண்களில் இப்போதும் ஈரம் கசிகின்றது !
.
குடும்பத்தின் மீது அன்புற்றுத் தமிழில் புலமை ஓங்கிச் சில திங்கள் வன்புற்றால்
அனைவரையும் வருந்த வைத்து மறைந்த புனிவதியாருக்கு என் புகழ் வணக்கம் !.
அன்பு மகள் மலர்விழி, பண்புச்செல்வன் எழில்மாறன், பெயர்த்தியர் நிருத்தியா, இலக்கியா, பெயரன் அன்புச்செழியன் சூழ அருமையாக நற்பண்புகளை நாளும் புகட்டிப் பெருவாழ்வு வாழ்ந்த
ஆசிரிய அன்னையார் பிரிவு என்னைக் கலங்க வைத்தது !
பெருந்தகையின் புகழ் வாழ்க !
ஆறாத துயரத்துடன்
முனைவர் ஒளவை அருள்
2 4 2021

Add a Comment