POST: 2021-04-05T10:52:55+05:30

கட்டுரை
=====

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 80

செந்தமிழும் நாப்பழக்கம் !

முனைவர் ஒளவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

ஒருமுறை புரட்சித்தலைவர் தலைமைச்செயலகத்தில் திடுமென வரச்சொல்லியிருந்தார் .போய் நின்றேன் .

ஒரு துண்டுத்தாளில் யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்த வரி அது அந்தத் துண்டுத்தாளை என்னிடம் கொடுத்தார். அப்போது நண்பகல் ஒரு மணியிருக்கும் .புரட்சித்தலைவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார் .அனைவரும் ஆயத்தமாக நின்றிருந்தனர் .

நான் உள்ளே நுழைந்ததும் என்னிடம் தந்த தாளைக் காட்டி முழுப்பாட்டையும் சொல்லுங்கள் என்றார் .

எதிர்பாராமல் அப்போதைய கல்வியமைச்சர் அரங்கநாயகம் உள்ளே வந்து நின்றார் .அவரும் புரட்சித்தலைவரோடு செல்வது போலத் தெரிந்தது .அமைச்சரிடம் துண்டுத்தாளைக் காட்டினேன் , சரியாகத்தான் கேட்டிருக்கிறீர்கள் .இது ஒளவையார் பாடலின் வரி , அவ்வளவு தான் எனக்குத் தெரியும் என்றார் .புத்தகத்தைப் புரட்டிப் பார்க்க வேண்டும் .நல்ல வேளையாக எனக்குப் பாடல் நினைவுக்கு வந்தது .

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்

என்று சொன்னேன் .

கல்வி மனப்பழக்கம் தான் .அதனால் தான் உங்களுக்கு நினைவுக்கு வந்தது .

அது சரி கொடை என்பது பிறவிக்குணமா ? அது எப்படி அதுவும் பழக்கத்தால் வருவது தானே என்றார் புரட்சித்தலைவர் .

அப்படியில்லை எத்தனையோ பேர் கொடுப்பதற்குப் பழகிப்பார்த்தார்கள் ,ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை .உங்களைப்போன்ற தனிப்பிறவிக்குத்தான் பசித்தநேரத்தில் ஒரு கவளத்தைக்கூடப் பாதியாகக் கொடுக்க முடியும் என்றார் கல்வியமைச்சர் ,

எழுந்து இருவரும் பேசியபடியே சென்றனர் .அதை நினைத்துத் தான் ஒலிப்புமுறையைக் கருதி செந்தமிழும் நாப்பழக்கம் என்று தலைப்பிட்டிருக்கிறேன் .

மொழியின் அடிப்படைக்கூறுகள் ஒலிகள் அல்லது எழுத்துக்கள் .தமிழ் ஒலிகளைக் கற்பிக்கின்ற பள்ளி ஆசிரியர்களும் சரியான ஒலிப்பு முறைகளைப் பணி முறைப்பயிற்சி மூலம் மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்று அறிஞர் வி .கோ .பரிதிமாற்கலைஞர் ” தமிழ்ப் பாடசாலைகள் ” என்ற கட்டுரையிற் பல ஆண்டுகளுக்கு முன் எழுதியதைக் காணலாம் .

இனி ஒலிப்பு முறைப் பழக்கத்தைப் பற்றிச் சிந்திக்கலாம் .

கிராமந்தோறும் தமிழ்ப்பாடசாலைகள் தொன்று தொட்டு நடந்து வருகின்றன .கிராமச் சிறார்கள் இவற்றில் கல்வி கற்று வருகின்றனர் .

இவற்றின் சரித்திரத்தை ஆராயுங்கால் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இப்பாடசாலைகளில் தமிழ் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு வந்தது என்றும் தற்காலத்தில் அத்தனை அளவுக்குப் பயிற்றுவிக்கப்படவில்லை என்பதும் எவரும் அறிந்த விசயமே ! இதன் காரணம் யாது ? தற்காலத்துத் தமிழ்ப்பாடசாலைகளில் வாத்திமைத் தொழில் நடத்துவோர் பெரும்பான்மையோர் தமிழறிவு நுட்பங்காணாதவரே ! ஆங்கிலேயேப் பாடசாலைகளில் சில்லாண்டு கற்று ஆங்கிலமாயினும் – தமிழாயினும் சீர்பெறக் கல்லாமல் உதர வலி ஒழித்தற் பொருட்டுத் திரிபவர் வாழ்கின்றனர் என்று வருந்தி எழுதினார் ! .

இவர்கட்கு இலக்கண இலக்கிய அறிவு இல்லை அன்றியும் ,இக்காலத்தில் சிறார் தமிழ்ப்பாடசாலைகளில் தங்கும் காலம் சிறிதேயாகும்

.தமிழ்மொழியைப் பிழையின்றி உச்சரிக்க ,ஆர்வமூட்டல் ஆசிரியர்களின் தலையாய கடனாகும்

ஆனால் ஆங்கிலத்தின் ஒலிப்பு முறையோ அவலத்துக்குரியது , எந்தக் காரண காரியத்துக்கும் கட்டுப்படாதது

ஆங்கிலேயர்க்குத் தம் மொழியின் மீது எந்தப் பெருமிதமும் இல்லை

.ஆங்கில எழுத்துக்களை அவர்கள் ஒலிக்கும் முறை தாங்க முடியாத கொடுமையாகும் .

ஒருவர் ஒலிப்பது மற்றொரு ஆங்கிலேயனுக்கே விளங்காது .ஆங்கிலேயன் தன் வாயைத்திறந்து பேசும் முறையால் அடுத்தவனைப் புண் படுத்துவதாக – புறக்கணிப்பதாக இருக்கும் .

செருமன் மொழியும் – இத்தாலிய மொழியும் அயலவர்க்கும் வயப்படும் .ஆங்கிலமோ ஆங்கிலேயர்க்கே வயபடுவதில்லை .

ஆங்கில ஒலிப்புமுறைத் திருத்தத்திற்காக ஒரு புரட்சியாளர் தேவைப்படுகிறார் என்று அறிஞர் பெர்னார்டு ஷா பிக் மாலியன் என்ற நாடகத்தில் எழுதியுள்ளார் .அதற்காக ஒரு நிதியத்தையே அவர் அமைத்துச் சென்றார் .

ஒரு பூக்காரிக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஒலியியற் பேராசிரியரின் கதை தான் .இது திரைப்படமாகவும் பிக் மேலியன் , என் அழகிய சீமாட்டி என்ற பெயர்களில் வெற்றி வலம் வந்தன .

பேராசிரியரும் இருமொழிப் புலமைச் செம்மலாகவும் திகழும் இராம.குருநாதன் எழுதியனுப்பிய கட்டுரை ஒலிப்பு முறை வலியுறுத்து காலத்திற் கனிந்த கனியாகும்

மனிதனின் முதல் மொழியே ஓசைதான்.

நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே அவன் மொழி பற்றிய உணர்வுடையவனாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

மனிதன், தன் உணர்ச்சிகளை ஓசை மூலமாகவும், புறச்செய்கையான சைகை மூலமாகவும் முதன்முதலாகக் கருத்துகளைத் தன்னைச் சார்ந்த குழுவுக்கும், மற்றவர்க்கும் தெரியப்படுத்தினான்.

அருகில் இருக்கும் போதும், சேய்மையில் இருக்கும்போதும் உணர்வுகளுக்கு ஏற்பத் தன் குரலைக் குறுக்கியும், உரத்தும், நீட்டியும் ஒலிக்கத்தலைப்பட்டான்.

நாகரிகம் வளர வளர உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்தான்.

ஒலியால் தன் கருத்தை உணர்த்தி வந்தவன், உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுக்கக் கோடுகளால் ஆன குறிகள், சித்திரங்கள் ஆகியவற்றின் மூலமாக வெளிப்படுத்தத் தொடங்கினான்.

ஒலியின் இயக்கமும், கோடுகளால் ஆன குறிகளும் கொண்டு எழுத்துருவை உண்டாக்கக் கற்றுக்கொண்டான்.

ஒலி வழியாகவே எழுத்துக்குரிய வரிவடிவங்கள் தோற்றம் கண்டன.

ஒலிகள் குறுகி ஒலிப்பனவும், நீண்டு ஒலிப்பனவும் கலந்து ஒலிப்பனவுமாகிய நிலைகளில் எழுத்துக்கள் உருவாகத் தொடங்கின.

ஒலி என்பது காற்றின் இயக்கம். அது அகப்புறக்கட்டமைப்புடையது. ஒலியினால் ஆனதுதான் எழுத்து. மொழியின் கட்டமைப்பில் ஒலியை முதலாகக் கொண்டே எழுத்தும் சொல்லும் சொல்ல வரும் கருத்தை முறைப்படுத்தத் தொடங்கின.

தொல்காப்பியப் பிறப்பியலில் உந்தி முதலா முந்து வளி தோன்றி என்ற நூற்பாவின் பொருளை அறிவியல்படி இன்றைய மொழியிலார் சுட்டிக்காட்டியிருப்பது எண்ணிப்பார்க்கத்தக்கது.

மனிதன் தன் கருத்தைத் தெரிவிப்பதற்கு இலகுவான சூழலில் எழுந்த எழுத்தின் பிறப்பை இலக்கணிகள் கண்டு உணர்த்தியுள்ளனர்.

குறில், நெடில், என்ற அடிப்படையில், உயிரொலி, மெய்யொலி, உயிர்மெய்யொலி என்ற வகையில், எழுத்துகளை ஒலிப்பு முறையைப் பாகுபடுத்தினர்.

ஓசையால் எழுத்தும், எழுத்தால் சொல்லும் தோன்றத்தொடங்கியது.

சொல் என்பது எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுத்தும் ஓசை என்று தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் கூறியிருப்பது நோக்குதற்குரியது.

மொழியே ஒலியினால் இயங்கும் இயக்கம் என்பது இதனால் பெறப்படுகிறது.

தமிழில் ஒலியமைப்பைப் புரிந்துகொள்ளாமல் இன்று தமிழ்ச்சொற்களைச் சரியாகப் பலர் ஒலிக்க இயலாதிருப்பதைக் காண்கிறோம்.

எழுத்துகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்ற சிந்தனை இன்றைய கல்விச்சாலையிலும், இளைஞரிடத்தும் செயலாக்கம் பெறாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

ஒரு சொல்லைத் தேர்ந்தும் தெளிந்தும் சொல்லவேண்டும் என்பது கூடத் தெரியாமல் உச்சரிக்கின்றனர்.

எழுத்துகள் ஒலி அடிப்படையில் உச்சரிக்கவேண்டும் என்று தெரிய வேண்டாமா?

எழுத்துகளில் வல்லொலி, மெல்லொலி எவ்வாறு உச்சரிக்கப்பட வேண்டும் என்பதை அறிந்தால்,சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்ற பாரதியின் உயர்ந்த நோக்கத்தை நாம் காணலாம் !

தமிழில் ஒரு சொல்லைச் சொல்லும்போது அதன் பொருளறிந்து பேசவேண்டும்.

பேசும் முறையில் சரியாக உச்சரிக்கவேண்டும்.

புலி என்பதையும், புளி என்பதையும் உச்சரித்துப்பாருங்கள்.

வேறுபாடு தானாகவே புலப்படும். அதனை விடுத்து ல, ள என்ற எழுத்து உச்சரிக்கும் முறையை அறிந்துகொண்டு அச்சொல்லின் இயல்பு இன்னது என்ற தெளிந்து பேசவேண்டும்.

பல்லியும் பள்ளியும் ஒன்றா ? பள்ளி அறைக்கு மேலே பல்லி ஊர்கிறது. இதனைச் சொல்லிப் பாருங்கள்.

ஒலி அமைப்பில் உள்ள வேறுபாடு புரியவரும்.

கள்ளுக்கடையும் கல்லுக்கடையும் ஒன்றா ? கள்ளுக்கடையில் கல் விற்குமா ? என்பதைச் சொல்லிப் பாருங்கள்.

தமிழ் மொழியின் சிறப்பே அதன் எழுத்துகளின் உச்சரிப்பு அல்லவா! இதை இன்றைய தலைமுறையினர் உணர்வார்களா ?

நாக்கின் போக்கில் சொற்களைக் கண்டபடி கையாளக்கூடாது.

நாக்கின் நகர்வு மேல் நோக்கி மேல் அண்ணம், கடையண்ணம், நடுஅண்ணம் போன்றவற்றை முன்னோக்கியும்,பின்னோக்கியும், மடித்தும் , வளைத்தும் அமைக்கக் கூடியதாகவும், பற்களின் நுனியைத் தடவுவதாகவும், உரசுவதாகவும் இருப்பதால் எழுத்துகள் பிறக்குமாற்றை இலக்கணம் வற்புறுத்துகிறது.

ஒவ்வோர் எழுத்தும் பிறக்கும் இடங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் வகுத்துரைத்துள்ளார்.

அவருக்கு முன்பே அவ்வாறு வழங்கி வந்திருப்பதை எடுத்துரைக்கிறார்.

பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், ய, ர. ல, வ. ழ, ற, ன என்ற இடையின எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக்கொண்டு பிறப்பன.

வல்லெழுத்துகளான க, ச, ட.த, ப, ற ஆகியன மார்பினை இடமாகக் கொண்டு பிறப்பன.

மூக்கினை அடிப்படையாகக்கொண்டு மெல்லின எழுத்துகளான ஞ.ங, ண, ந, ம.ன ஆகியன மூக்கை இடமாகக்கொண்டு பிறப்பன.

இவை எவ்வாறு ஒலிக்கப்படவேண்டும் என்பதை நோக்க,

1) வாயைத்திறந்தால் ஒலிப்பது -அ, ஆ

2) வாயைத் திறப்பதோடு மேல்வாய் பல்லை நாவிளிம்பு தொடுவது – இ.ஈ. எ. ஏ. ஐ

3) உதடுகள் குவிவது – உ. ஊ. ஒ.ஓ. ஔ

4) நாக்கின் அடி மேல் அண்ணத்தைத் தொடுவது – க். ங்

5) நாக்கின் நடு மேல்வாய் நடுவினைத் தொடுவது –ச், ஞ்

6) நுனி நா அண்ணத்தைத் தொடுவது – ட்.ண்

7) மேல்வாய் பல்லின் அடியை நா நுனி தொடுவது- த்.ந்

8) மேல் உதடு, கீழ் உதடு பொருந்துவது – ப், ம்

9) நாக்கின் அடி மேல்வாய் அடியைப் பொருந்துவது –ய்

10) மேல்வாயை நாக்கின் நுனி தடவுவது –ர், ழ்

11) மேல்வாய் பல்லின் அடியை நாவினது ஓரங்கள் தடித்து நெருங்குவது- ல், ள்

12) மேல்வாய் பல்லைக் கீழ் உதடு பொருந்துவது – வ்

13) மேல்வாய் நாக்கின் நுனி மிகவும் பொருந்துவது- ற், ன

14) தலையை இடமாக க்கொண்டு பிறப்பது ஆயுதம் ஃ

தமிழில் சில எழுத்துகளைத் தடுமாற்றத்தோடும் ,தவறாகவும் உச்சரிப்பது இன்று பெருகியிருக்கிறது.

தொடக்க வகுப்பிலிருந்தே எழுத்தின் ஒலிப்பைச் சரியாக உணர்ந்து பேசினால் தவறு நேர வாய்ப்பில்லை.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்று அன்றே நம் முன்னோர் நம் நெஞ்சில் விதைத்துச் சென்றதை நாம் மறந்துவிட்டோம்.

வல்லோசையை ( க ச ட த ப ற ) அழுத்தம் கொடுத்து உச்சரிக்கவேண்டும்.

மெல்லோசையை ( ங ஞ ண ந ம ன ) அழுத்தம் குறைந்து உச்சரிக்கவேண்டும்.

இடைப்பட்ட ஓசையை ( ய ர ல வ ழ ற ன ) மிதமான அழுத்தும் கொடுத்து உச்சரிக்கவேண்டும்.

தமிழ் எழுத்துகளில் மிகுதியும் கவனம் செலுத்தி உச்சரிக்கப்படும் ஒலிகள் ன ண ந ல ள ழ ர ற மேலே காட்டியுள்ள எழுத்துகளின் உச்சரிப்பைத் தவறாக ஒலிப்பதைக் கேட்கும் போது நாம் கேட்பது தமிழா ? என்று வினவத் தோன்றும்?

இவை எப்படிப் பிறக்கின்றன என்பதை மீண்டும் நினைவு ப்படுத்திக் கொள்ளலாம்.

பயிற்சியினால் மட்டுமே இத்தகைய எழுத்துகளைச் சரியாக உச்சரிக்க முடியும்.

எழுத்தின் மீது கவனத்தையும், பேசும்போது உச்சரிப்பு முறையை நன்கு அறிந்தும் சொல்வோமானால் எந்த உச்சரிப்பும் கேட்போர்க்கு நச்சரிப்பைத் தராது என்பதை நம்புவோமாக !

தமிழ் மொழி இயற்கைப் படைப்பாக இலங்குவதைப் பாவேந்தர் பாடிக் காட்டுவதை எவரும் மறக்க முடியாது .

பொருள் மிக்க தமிழ்மொழிக்குப்

புரிந்திடுவீர் நற்றொண்டு,

புரியீராயின்,

இருள்மிக்க தாகிவிடும்

தமிழ் நாடும் தமிழர்களின்

இனிய வாழ்வும் !

காக்கை “கா” என்றுதனைக்

காப்பாற்றச் சொல்லும்! ஒரு

கரு முகில்தான்,

நோக்கியே ” கடமடா ”

என்றேதன் கடனுரைக்கும்

நுண்கண் கிள்ளை

வாய்க்கும் வகை ” அக்கா ” என்று

அழைத்ததனால் வஞ்சத்துப்

பூனை ” ஞாம் ஞாம் ” ( நாம் )

காக்கின்றோம் எனச் சொல்லக்

கழுதை அதை ” ஏ ” என்று

கடிந்து கூறும்.

“கூ” எனவே வையத்தின்

பேர் உரைத்துக் குயில் கூவும்

“வாழ் வாழ்” என்று

நாவினிக்க நாய் வாழ்த்தும்

நற்சேவல் “கோ” என்று

வேந்தன் பேரைப்

பாவிசைத்தாற் போலிசைக்க,

வருங்காற்றே “ஆம்” என்று

பழிச்சும் ! இங்கு

யாவினுமே தமிழல்லால்

இயற்கை தரும் மொழிவேறொன்று

இல்லை யன்றோ

என்ற பாவேந்தரின் பாடல் நம் நெஞ்சை நெகிழ்விக்கும் .

இலக்கணம் வழியாகக் கற்பது ,கற்பிப்பது என்பது முறையான கல்வியாகும்

எனினும் அறிஞர் நூல்களைத் தொடர்ந்து படிப்பதாலும் ,பெருமக்கள் பேசும் உரைகளைக் கேட்பதாலும் எளிதில் இந்த இலக்கண நெறி நம் நாவில் இயல்பாகப் படிந்து விடும் .

பயிற்சி தான் பழக்கமாகும் .
பழக்கம் தான் வழக்கமாகும் .
வழக்கம் மரபாகும் .
மரபு நம் சிந்தை அணு ஒவ்வொன்றிலும் உறைந்துவிடும் .

தொடர்வோம் …

பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை

– ஒளவை நடராசன்

thamizhavvai@hotmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *