POST: 2021-04-11T10:43:55+05:30

கட்டுரை

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 54

“பின்னல் சிக்கலைப் பிரித்தெடுப்போம்!”

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு

பல செய்திகளைத் தகவல்களை அறிந்துகொள்ளப் புதினங்கள், கவிதைகள், பலர் சொல்லும் அறிவுரைகளைப் படித்தும், கேட்டும் வந்த சூழலில் கட்டுரைகளும் படிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைக்கப் பெற்றது.

23.02.1986 அன்று நான் எழுதிய குறிப்பு, எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் ‘சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது’ என்ற நூலாகும்.

என்னுடைய மனத்தின் அடியில் ஊன்றி அதில் எழுதிய பல கருத்துக்கள் என்னுடைய செவிப்பறையில் எதிரொலித்தன.

இந்நூலில் நாம் செய்யும் தவறுகளும், நிறைகளும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளன.

மனிதர்கள் அன்றாடம் செய்யும் தவறுகள் முற்றி பூகம்பமாக மாறி நம் வாழ்க்கையை சிறைப்படுத்தி வைப்பது தான் இந்நூலின் மையக் கருத்தாகும்.

இந்நூலின் வாயிலில் நம் வாழ்க்கையில் நிம்மதி, நம்பிக்கை, அன்பு ஆகியவை தான் வாழ்வின் இலக்காக அமைய வேண்டும் என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

பேரன்பு காட்டிய சாவித்திரி இராகவேந்திரா அம்மையார் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாழ்வியல் உண்மைகளைத் தன் மகனுக்குக் கூறும் தந்தையைப் போல பரிவோடு என்னிடம் கூறுவார்கள்.

கலை, சிற்பம், ஓவியம், கவிதை, கதை தனக்கென ஓர் இலக்கு என்ற பாதையில் அவர்களும் டாக்டர் இராகவேந்திராவும் இணையராக சிரித்த முகமாக பெருமிதமாக நடந்து வந்தார்கள்.

சில நேரங்களில் என்னை மகனே என்று தான் அழைப்பார்கள்.

அவர்கள் பரிந்துரைத்த புத்தகம் தான் எழுத்துமாமணி சிவசங்கரி படைத்த நூலாகும்.

தனி மனிதனுக்குத் தோன்றும் சின்ன நூல் இழைகள் போன்ற உணர்வுகள் பெரிதாக மாறி வலிமை பெற்று பல பூதாகரமான சிக்கல்களை இரும்புச் சங்கிலிகள் சிறைப்படுத்தி சித்திரவதை செய்வதை ஆசிரியர் பல எடுத்துக்காட்டுகளுடன் வெளிக்காட்டி இருக்கிறார்.

ஆழ்ந்த சிந்தனைக்கு நம்மை ஆட்படுத்தும் திறமை வியக்க வைக்கிறது.

இந்நூலின் முதல் அத்தியாயத்தில் ஆசிரியர் அருமையாகத் தான் வடிக்கின்ற கட்டுரையைப் பற்றி கூறும் இடம் எப்படி என்றால்,

ஒருவர் நலனில், வளர்ச்சியில் மற்றவர்கள் அக்கறை கொண்டு வேண்டாத தளைகளை நூல்களாக எடுத்துச் சிக்குவதைக் காட்டிலும், கைகோர்த்து, நீங்களும் நானும் நடக்க, உரக்க சிந்திக்க, ஆசைப்பட்டு அதன் விளைவே இக்கட்டுரைத் தொடர் என்கிறார் ஆசிரியர்.

நம் வாழ்க்கையில் பெரிய, சின்ன பிரச்சினை என்று எதுவுமே இல்லை.

நம்மையும் மீறி இயற்கையாகவோ, விபத்தாகவோ வரும் சிக்கல்களைத் தவிர, பாக்கி அனைத்தையும் நாமே உண்டாக்குகிறோம்.

சின்னப் பொறியை ஊதி ஊதிப் பெரிய தீயாக கனன்று எரிவதைப் போல், கடுகத்தனை விஷயத்தையும் பேசிப் பேசி மாய்ந்து, உருகி, தவித்து, படபடத்து, விசுவரூபம் எடுக்கச் செய்து விடுகிறோம் என்பது தான் உண்மை.

ஒருமுறை தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளதை நினைந்து பார்க்க வேண்டும்.

“ஒருவன் ஒரு காரியத்தைச் செய்ய விரும்பினால், அதை எப்படியும் நிறைவேற்றி விடுவான்.

அப்படி அவன் செய்யவில்லை என்றால் அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உண்மையானது அல்ல என்பதாகும்.”

குழப்பத்தைத் தவிர்க்க வழி என்னவென்றால் சரியான
analysis, proper planning, sharing of knowledge, observation and concentration, discipline ஆகும்.

வாழ்க்கையின் பொருள் என்ன?

உயிர் வாழ்தல்.

எப்படி உயிர் வாழ்வது அவசியம்?

நிம்மதியோடு…

சரி, இந்த நிம்மதியை அடைவது எப்படி?

நம்மைச் சுற்றியிருக்கும் எல்லா உயிரினங்களுடன் சரியான உறவை உண்டாக்கிக் கொள்வதன் மூலம், ஒரு இடத்தில், நாம் செய்யும் ஒரு செயலையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லாத செய்கை என்பதோடு, இரசனை, திறமை, வசதி, ஆர்வம், ஈடுபாடு, போன்றவை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும் என்பதையும், மனதில் மறக்காமல் செதுக்கிக் கொள்வதற்கு நமக்கு உறுதி வேண்டும்.

ஒருவரைப்போலவே இன்னொருவர் இருப்பதும், சிந்திப்பதும், நடந்து கொள்வது சாத்தியம் என்றால் அப்புறம் தனித்தன்மை என்பது யாது? பலநிறப் பூக்கள்தானே பூஞ்சோலை!

எதிர்பார்ப்புக்கள் இயல்பான மனித வாழ்க்கையில் ஒவ்வொரு ஏமாற்றம் ஏதாவது பாடத்தை கற்று தரவே செய்யும்.

ஒரு வருடமாக இக்கட்டுரையைத் தொடராக ஆசிரியர் ‘ஜூனியர் விகடன்’ இதழில் எழுதினார்.

நான் இதை நூல் வடிவத்தில் ஒரே நாளில் படிக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இக்கட்டுரையைப் படித்தவுடன் எனக்குள் ஒரு வித தெளிவை அமைத்துக் கொண்டேன்.

புதிதாய்த் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கவும், மீண்டும் தலைநிமிர வைக்கவும், உரக்கச் சிந்திக்கவும், புன்னகைக்கவும் இந்நூல் அனைவருக்கும் உதவும் என்பது திண்ணம்.

எண்ணங்களில் மருட்சியும், புழுக்கமும், கோழைத்தனமும், மனச்சோர்வும், உளைச்சலும் அவரவர் உள்ளத்தில் தான் படிந்திருக்கின்றன.

இதை நாம் உணராமல், உணர முடியாமல் கோபமும், வேதனையும், வலியும், ஆற்றாமையும், அறிவீனமும், பலவீனமும் தொடக்கத்தில் சன்னமான நூல் இழைகளாக நம்மைப் பின்னிப் பிணைக்கும்.

பிற்பாடு, அவையே நம்மை மண்ணோடு மண்ணாய்ப் புதைக்கும்.

வலிமை பெற்ற கனமான இரும்புச் சங்கிலிகளாய் மாறவும் இடம் கொடுத்தால், இழப்பு யாருக்கு? வேதனை, தேக்கம் யாருக்கு? சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது? துணிந்துவிட்டால் எவையும் நூலிழைகள் தாம்… கணப்பொழுதில் அவைகளை அறுத்துக் கொண்டு வெளியேறி உயரே உயரே பறப்பது எவராலும் முடியும்.

ஆக இந்நூலில் என்னுடைய வாழ்க்கையின் திருப்புமுனை அமைந்திருக்கிறது என எவரும் எண்ணலாம்.
அதாவது, ‘The awareness to become a better person’.

தன்னை இன்னும் மேம்படுத்த, ஒளிசேர்க்க விழிப்புணர்வுத் தேவை.

நம்முடைய குறைகளைக் குறைத்து, நிறைகளை வளர்த்து துளித்துளியாய் உயர்ந்து கொண்டே போவதுதான் வாழ்க்கையின் அமைவுக்கூறு ஆகும்.

உயரம், பருமன், அழகு, இளமை இவை வரம்புக்கு உட்பட்டவை. மனிதனின் உடம்பு மட்டுமே கண்ணுக்குத் தெரிந்து உயரமாகும்.

மனதில் வளர்ச்சிக்கு உயரமில்லை, அழகுக்கு உச்சவரம்பு இல்லை, இளமைக்கு முதுமையில்லை. இதை நாம் மறக்கக்கூடாது.

மனதை வளப்படுத்தும் முயற்சிதான் தன்னிலை அலசல்.

ஆக தற்போக்கு என்றால்?
இது எனக்கு இன்பத்தைத் தருகிறது, இது என் கோபத்தைத் தூண்டுகிறது, இது அடுத்தவரை வேதனைப்படுத்துகிறது,
இது என்னை நெகிழ வைக்கிறது, இது எனக்கு நிம்மதியைத் தருகிறது என்று நம்முடைய சிந்தனை, செயல்களால் ஏற்படும் உணர்ச்சிகளை அடையாளம் காட்டி, கட்டம் கட்டத் தெரிவதுதான் தன்னிலை தெளிதலாகும்.

இந்த விழிப்புணர்வு வளர்ந்தால் தேக்கம், அழுக்கு, ஊனம் என்பதெல்லாம் இல்லை.
ஆக மனிதாபிமானம் என்றாலென்ன என்றுணர்ந்து, நெகிழ்ந்து, சிலிர்ப்பதும்; உலகத்தைப் பற்றி, நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களைப் பற்றிக் கவலை கொள்வதும், அக்கறை காட்டுவதும் இன்னொரு கோணம் மட்டுமல்ல, இன்னும் பல நூற்றுக்கணக்கான கண்ணோட்டங்கள் உள்ளன என்ற அறிவுத்தெளிவு உண்டானால் ஒருவர் மனதால் வளர முடியும்.
ஆக, இது எவ்வளவு தூரம் எனக்குள் இருக்கிறது என்றால், திட்டவட்டமான பதில் கூறத் தெரியவில்லை…

உதயத்தைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், போகவேண்டிய தூரம் எல்லை கடந்தது.
இதனை உணர்ந்து, புரிந்து, தெளிந்து, செயலில் காட்டவேண்டியன இன்னும் ஏராளம் என்று மட்டும் கூறத் தோன்றுகிறது.

ஆக, இந்நூலின் கருத்துக்களை மெல்ல மெல்ல அசைபோட வேண்டும்… நிறைய நிறைய என்று நான் முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்பு குறித்திருந்ததை மீள் பதிவு செய்வதில் புரிந்துணர்வு பெறுகிறேன்.

15.10.2019 அன்று எழுத்து மாமணி சிவசங்கரி தன் அன்புக் கரங்களால் தான் எழுதிய சூரிய வம்சம் நூல்களை வழங்கியபோது அம்மையார் சாவித்திரி இராகவேந்திரா நம்முடன் இல்லையே என்று நெகிழ்ந்தேன்.

—–

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

உரைவேந்தரின் உரைத் தொடர் – (உ)

திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி

குன்றுதோறும் விளையாடும் பண்புடையனாகிய முருகன் இழும் என்னும் ஓசை நிலவ வீழும் அருவியொடு சோலைகளிற் பழுத்திருக்கும் பழங்கள் கனிந்து வீழும் பழமுதிர் சோலைமலைக்கு உரிய தலைவனாவன்.

இவ்வருவிகள் மலையினின்று வீழுங்கால் பலவேறு ஆடைகளை விரித்துத் தொங்கவிட்டாற்போலத் தோன்றுகின்றன.

அருவி நீர் அகிற்கட்டைகளைச் சுமந்து வருகிறது; வருங்கால் அயலிலுள்ள சந்தன மரங்கள் அலைப்புண்டு உருண்டு வீழ்கின்றன.

பூச்சுமந்து நிற்கும் சிறு மூங்கில்கள் வேர் அரிப் புற்று வீழும்; வான் அளாவிநிற்கும் மலையுச்சியில் ஞாயிற்று வட்டம்போல் இருக்கும் தேனடை சிதைந்து வீழ, ஆசினிப் பலாப்பழங்கள் வீழ்ந்து பிளந்து, சுளை சுளையாகப் பிரிந்து அருவி நீரில் கலக்கின்றன; மலைமேல் நிற்கும் சுரபுன்னைப் பூக்கள் அருவியின் அதிர்ச்சியால் உதிர்கின்றன; நீர் வீழ்ச்சியில் புகைப்படலம் போல் எழுந்து பரவும் நீர்த்திவலைகளின் குளிரால் கருங்குரங்குகளும் முசுக்கலைகளும் நடுங்குகின்றன; பிடியானைகள் குளிரால் வேறிடத்துக்குச் சிதறியோடுகின்றன; பெருங்களிறுகளின மருப்பின்கண் உண்டாகும் முத்துக்கள் பல அருவி நீரில் கலக்கின்றன.

மேலிருந்து வீழ்ந்து தலைகீழாய்க் கலங்குங்கால் நல்ல பொன்னும் மணியும் மேல் வந்து அழகிய நிறத்தைச் செய்கின்றன.

கரையில் நிற்கும் மலைவாழைகள் அருவியின் பெருக்கால் வேரொடு அரிக்கப்படுகின்றன; தென்னைகள் (வாழை என்ற பெயர் வழக்கம் இருந்தது) தாம் தாங்கும் இளநீர்கள உதிருமாறு தாக்கப்படுகின்றன; மிளகுக் கொடிகள் கரிய துணரொடு அறுப்புண்டு மெலிய, அருகில் மேயும் மயில்களும், கானக்கோழிகளும் அஞ்சி நீங்குகின்றன; காட்டுப்பன்றிகளும், கரடிகளும் அஞ்சிக் கற்குகைகளில் ஒடுங்குகின்றன.

இம் முருகாற்றுப்படை பழமுதிர்சோலைமலை கிழவோன் என்றது கொண்டு, பழமுதிர்சோலையென ஒரு திருப்பதி முருகனுக்கு உரியதாகக் கூறுவதுண்டு.

நச்சினார்க்கினியார் உரையால் அத்தகையதொரு திருப்பதி இருப்பதென அறிய இயலவில்லை; முருகாற்றுப்படையின் சொல்லமைப்பும் அதனை வற்புறுத்தவில்லை.

ஆயினும், பழமுதிர்சோலையென ஒன்று தனியே கொண்டு, அதுவே மதுரைக்கண்மையில் அழகர்மலையென வழங்கும் பகுதி யென்பவரும் உண்டு.

அதனைத் திருமாலடியார்கள் “திருமாலிருஞ்சோலைமலை” யென்கின்றனர்.

அவர்கள் சோலைமலையென வழங்குவதும், முருகாற்றுப்படை பழமுதிர் சோலைமலையென வழங்குவதும் ஒத்திருப்பதுபற்றி இவ்வாறு கோடற்கு இடமுண்டாகிறது. இதுவும் நன்கு ஆராய்தற்குரியது.

இத்தகைய பொருள் நலஞ் சிறந்த அருவிகளோடு கூடிய மலைகட்குரியனான முருகன் குன்றுதோறும் விளையாடிக் காட்சி நல்குவதோடு, ஊர் தோறும் மக்கள் விழாச் செய்யும் இடங்களிலும், தன்பால் அன்புடையவர் தன்னை நினைந்து பரவும் இடங்களிலும், வேலன் வெறியாடுமிடங்களிலும், காடுகளிலும் பூங்காக்களிலும், அழகு பொலியும் ஆற்றிடைத் தீவுகளிலும், ஆறு குளங்களிலும், இவை போலும் வேறு இடங்களிலும், சதுக்கம், சந்தி, மன்றம், பொதியில் முதலிய இடங்களிலும், புதுப்பூ மலரும், கடப்பமரங்கள் நிற்கும் இடங்களிலும் கந்துடை மன்றங்களிலும் வேண்டுவோர் வேண்டியவாறு வழிபட, அவர்கள் வேண்டியவாறு ஆங்காங்கே எழுந்தருளுவன்.

முருகன் எழுந்தருளும் சீர்த்த இடங்களைக் கூறியபோது, திருவாவிநன் குடியில் முனிவர் முதல் பதினெண் கணங்கள் ஈறாகத் தேவர் பலரும் வழிபடுந்திறமும், திருவேரகத்தில் வேதியர் வழிபடுமியல்பும் விளங்கக் காண்கின்றோம்.

இவ்வாறே, சூரர மகளிரும், குறமகளிரும் முருகனைப் பரவும் திறம் தொடக்கப்பகுதியிலும் இறுதிப் பகுதியிலும் குறிக்கப்படுகின்றன.

சூரர மகளிர் வானளாவ உயர்ந்த மலையிடங்களில் செழித்துவிளங்கும் சோலைகளில் விளவின் தளிர்களைக் கிள்ளி விளையாடுவர்;

அப்போது ஒருவர் மேல் ஒருவர் எறிந்து, அது தம்பால் பட்ட பொழுது மகிழ்ச்சி கூர்ந்து முருகனுடைய, ” கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிது” என்று ஏத்தி அவன் புகழைப் பாடியாடுவர்.

அவர்கள், தம்முடைய சிறிய அடிகளில் கிண்கிணி யணிந்திருப்பர்; கணைக்கால் நன்கு திரண்டிருக்கிறது; இடை வளைந்து நுண்ணிதாக இருக்கும்; தோள் பெருத்துளது; அவர்கள் உடுத்திருக்கும் ஆடை தம்பலப் பூச்சி போல் இயல்பாகச் சிவந்த செந்நிறங் கொண்டுளது; அது செயற்கையாக நிறம் ஊட்டப்படுவ தன்று; இடைக்கும் முழந்தாளுக்கும் இடைப்பகுதியாகிய அல்குலிடத்தே பல மணிகள் கோத்த மேகலை அணியப்பெற்றுள்ளது; அவர்கள் பால் தோன்றும் அழகு பிறர் ஒப்பனை செய்வதாற் பிறக்கும் செயற்கையாகாது இயற்கையழகாகும்; அணிந்திருக்கும் இழைகள் சாம்பு நதம் என்னும் உயரிய பொன்னால் இயன்றவை.

அவரது மேனியொளி நெடுந்தொலைவில் சென்று விளங்குகிறது.

அவர்களுடைய கூந்தலொழுங்கு காணும் ஆய மகளிர் நன்று நன்று எனப் பாராட்டுகின்றனர்.

இணை யொப்பப் படிந்த கூந்தலில் வெட்சிப்பூவை வட்டமாகப் புனைந்து இடையே குவளைப்பூவின் இதழ்களைக் கிள்ளி யிட்டுச் சீதேவிக்கோலம் ஒருபாலும் வலம்புரிக்கோலம் ஒருபாலும் செய்து கொள்கின்றனர்.

நெற்றியாகிய பிறையை விழுங்குதற்கு மகாமீன் ஒன்று வாயைத் திறந்து கொண்டு கிடப்பது போலத் தலைவகிரின் ஒழுங்கில் மகரமீன் கோலம் செய்கின்றனர்.

நெற்றியில் மணங்கமழும் திலகம் இடப்பெற்றிருக்கிறது, இவ்வாறு வேண்டுங் கோலமெல்லாம் குறைவறச் செய்யப்பெற்ற கொண்டையில் செண் பகப் பூவைச் செருகிப் பின்பு மருதம்பூவின் கொத்துக்களை அதற்குமேற் சூடுவர்.

நீரின் கீழ்ப் பச்சென்ற காம்பு பெற்று மேலே சிவந்து தோன்றும் நீர்ப்பூ வரும்புகளை மாலையாகத் தொடுத்து அதனைச்சுற்றி வளைத்துக் கட்டுவர்.

அசோகின் தளிர்களுள் இணையொத்த இரண்டைப் பூணார மணிந்த மார்பின்கண் தொங்கியசையுமாறு இரண்டு காதுகளிலும் செருகிக்கொள்வர்.

மார்பின்கண் சந்தனக் குழம்டை மருதிணர்போலும் தோற்றம் அமையப் பூசி அதன் ஈரம் புலா வேங்கைப்பூவின் நுண்ணிய தாதினைத் தூவுவர். இது சூரரமகளிரின் ஒப்பனை.

குறமகளிர் முருகனை வழிபடக் கருதியதும் வழிபாட் டுக்கென ஓரிடம் கண்டு நன்கு தூய்மை செய்வர்.

அங்கே கோழிக்கொடியை நிறுவி, அதனை நெய்யும் வெண்கடுகும் கலந்து பூசி அதற்குரிய மறைமொழியை மந்தமாக வாய்க் குள்ளே ஓதுவர்.

பின்பு, அதனெதிரே வணங்கி நின்று தூய பூக்களைத் தூவுவர்.

உள்ளே ஓர் ஆடையை யுடுத்து அதன் நிறத்துக்கு மாறுபட்ட நிறமுடைய வேறோராடையை மேலே உடுத்திக் கொண்டு கையில் சிவந்த நூலாற் காப்புக் கட்டிக் கொள்வர்.

காப்பு முடிந்ததும், வெள்ளிய பொரிகளைச் சொரிந்து, கிடாயினது குருதி கலந்து பிசைந்த வெள்ளரிசிச் சோற்றைச் சிறு சிறு பிரப்புக் கூடைகளில் படைச்சலிட்டு வைப்பர்.

அதன்பின் சிறு மஞ்சளை அரைத்துச் சந்தனக் குழம்போடு கலந்து தெளிப்பர். இதனைக் கூந்தல் தெளித்தல் என்று இக்காலத்துக் குறவர் வழங்குகின்றனர்.

இனி, அக்கொடியில் செவ்வலரிப்பூவையும் வேறு பல நறியபூக்களையும் தம்மில் ஒப்பத்தொடுத்து இணையொப்பத் தொங்குமாறு கட்டிவிடுவர்.

பின்பு குறமகள் முன்வந்து மலைப்பக்கத்தில் அமைந்த தம் ஊர்கள் பசியும் ,பிணியும், பகையுமின்றி வசியும் வளமும் சிறக்க என்று வாழ்த்தி நறும்புகை காட்டிக் குறிஞ்சிப் பண்ணிற் பல பாட்டுக்களைப் பாடுவள்.

ஒருபால் அருவியொலிக்க, பலவகை இயங்களும் ஒலிக்கும்.

பாட்டு முடிந்ததும் சிவந்த பூக்களைத தூவிக் குருதி கலந்த தினை யரிசியைப் பரப்பி முருகன் விரும்பும் இயங்களை இயக்குவர்.

அப்போது அவ் வழிபாட்டின்கண் முரணிய கருத்துடையவர்களும் கண்டால் முரண் நீங்கி வழிபடுவர்.

இவ்விடத்தே தான் வேலன் வெறியாடுவதும் செய்வன். வெறியாடு களம் எதிரொலிக்க அதற்கு ஏற்ற பாட்டுக்களைப் பாடிக் கொம்புகள் பலவற்றை வாய்வைத்து ஊதி, கொடிய ஒசையைச் செய்யும் மணியை ஒலிப்பிப்பர்.

இறுதியில் முருகன் ஏறிவரும் யானையை வாழ்த்தித் தம் வேண்டுகோள் புலப்பட நின்று வழிபடுவர்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள், தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *