POST: 2021-04-18T10:41:22+05:30

கட்டுரை

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 55

“நின்னளந்து அறிதல் அருமை!”

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு

எந்தையாரின் நெருங்கிய மாணவர் திலகமாகவும் – கவிச்செம்மலாகவும் பச்சையப்பர் கல்லூரிக் காலங்களிலேயே எங்கள் குடும்பத்தோடு நெருங்கிப் பழகியவர் கவிப்பேரரசர் ஆவார்.

அவருடைய அடுக்குக் கவிதைகளைப் பல இலக்கியக் கூட்டங்களில் எந்தையார் மேற்கோள்களாகக் சொல்கிற பாங்கினைக் கண்ட அறிஞர் பெருமக்கள் பெருமிதம் கொண்டார்கள்.

தான் எழுதுகிற நூல்களை வெளியிட்டவுடன் எந்தையாருக்கு வழங்குவதில் கவிப்பேரரசர் பெருமகிழ்ச்சி அடைவார்.

அந்நூல்களில் முதல் பக்கத்தில் எந்தையாரைக் குறித்து அவருடைய அழகான கையெழுத்தில் எழுதித் தருகிற தித்திப்பு வரிகள் என் கல்லூரிக் காலத்திலேயே நெஞ்சில் வேரூன்றியன. சான்றாக,

Ø என் தாக நாட்களின் தண்ணீர்ப் பந்தலாயிருந்த டாக்டர் ஔவை நடராசன் அவர்களுக்கு அன்புடன் வைரமுத்து. (14.02.1983)

Ø கலங்கரை விளக்கத்திற்குப் படகின் பரிசு. (1985)

Ø தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், தமிழ்ப்புலமையில் இணையில்லா வேந்தருமாகத் திகழும் திருமிகு டாக்டர் ஔவை நடராசன் அவர்களுக்கு நன்றியில் நனைந்து வைரமுத்து (05.08.1993)

Ø என் ஆருயிர்ச் சகோதரர் முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்களுக்கு அன்புடன் வைரமுத்து (1996)

Ø தமிழ்நாட்டு நல்லறிஞர், முன்னைப் புதுமைக்கும், முன்னைப் பழமையராய்ப் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியராய்த் துலங்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசனுக்கு அன்போடு வைரமுத்து. (16.07.2002)

Ø என் வழிகாட்டியும் ஒளிகாட்டியுமான முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்களுக்கு, அன்போடு வைரமுத்து (14.10.2015)

என்ற எழில் வரிகளைக் குறிப்பிடலாம்.

ஒருமுறை இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் எந்தையாரிடம் பேசும்போது

‘கவிஞர் உங்களுக்கு மாணவரா? என்று கேட்டபொழுது, ‘

அவர் என் மாணவரல்ல. ஆசிரியர்’ என்றே பெருமிதமாகச் சொன்னார்.

அதற்கு உடனே இயக்குநர், ‘எப்படி ஆசிரியர் என்று சொல்லுங்கள்’ என்று கேட்டார். ‘

எனக்குத் தெரியாத பலவற்றைப் புரியாத சிலவற்றை எவ்வளவு அழகாக எடுத்துப் பொருத்திக் காட்டியிருக்கிறார்,

உங்கள் படங்களின் பாடல் வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் நான் புதிய உலகத்துக்கே போய் வருகிறேன். ஆகையினால், கவியரசர் வைரமுத்து எனக்கு ஆசிரியர்’ என்று வலியுறுத்திச் சொன்னவுடன்,

இயக்குநர் திலகம் சிரித்துக் கொண்டே, ‘ஆமாம்,

வைரமுத்து ஆசிரியர்தான். ஔவை! நீங்கள் பேராசிரியர் என்பதை எனக்குக் காட்டிவிட்டீர்கள்’ என்றார்.

அப்படிக் கிடைத்த வாய்ப்பில் நான் முதன்முதலாகக் கவிஞரின் நூலினை இளங்கலை இரண்டாமியாண்டு தமிழிலக்கியம் மாநிலக் கல்லூரியில் பயிலுங்கால், 04/10/1986 அன்று நான் குறித்து வைத்திருந்த ‘கல்வெட்டுகள்’ என்ற நுட்பமான ஆய்வு நூலிலிருந்து பல கருத்துக்களைச் சுவைத்து மகிழ்ந்தேன்.

கவிஞர், ஆய்வாளராக இருப்பதற்குப் பேராற்றல் கொண்டவர் என்ற கருத்துக்குக் கட்டியம் கூறும் கட்டுரைகளாக ‘கல்வெட்டுகள்’ நூல் அமைந்துள்ளது.

“ஓசை ஒலிகளின் எடையைக் கூட நிறுத்தச் சொன்ன தொல்காப்பியம் – மனித மனத்தின் போக்குவரத்திற்குக் கோடு கிழித்துக் கொடுத்த கொடை தான் திருக்குறள் – மனிதனின் சமுத்திர உணர்ச்சிகளைச் சின்னச் சின்னச் சிப்பிகளில் சிக்கவைத்துக் காட்டிய சங்க இலக்கியம் – மனக்கசடுகளை வடிகட்டிக் கொடுத்த நீதி நூல்கள் என்னும் சல்லடை இலக்கியங்கள் – வெறும் உபதேசங்களாக அல்லாமல் வாழ்க்கைக்கு வாய்மொழிச் சட்டங்களான நீதி நூல்களாகிய பதினெண் கீழ்க்கணக்கு – கவிதைச் சத்து மிகுந்த காப்பியங்கள் – ஆழ்வார்கள் நாயன்மார்களின் ஆனந்த அழுகைகள் – சித்தர்களின் நெருப்புச் சித்தாந்தங்கள் – ஆடம்பரமான பிரபந்தங்கள் – சிருங்காரத்தில் நனைந்த தனிப்பாடல்கள் – பழைய இலக்கியங்களைத் திருகித் திசை திருப்பிய பாரதியின் எழுத்துக்கள் – பாரதிதாசனின் வாள் வார்த்தைகள் – புதிதாய்ப் பிறப்பெடுத்த உரைநடை இலக்கியம் – கண்ணதாசன், சுரதா என்னும் தனித்தனிப் பள்ளிகள் – பிரபஞ்சப் பசியோடு பேனா பிடித்திருக்கும் புதுக்கவிதைக் காரர்கள் – தமிழ்கூறு நல்லுலகின் பரப்பு இதுதான்”

என்று வனப்பாக வரைந்திருந்த வரிகள் என் நெஞ்சில் கல்வெட்டு வரிகளாகவே நிலைத்தன.

“இலக்கியம் படைப்பவன் அல்லது ஒரு சமூகப் பொதுச் சிந்தனையாளன் எல்லோருடைய சிரிப்பையும் தன் உதடுகளால் சிரித்து விடுகிறான்.

எல்லோருடைய கண்ணீரையும் தன் கண்களால் அழுது விடுகிறான்.

ஆழ்வார்களும், நாயன்மார்களும் அழுத கதையை நான் அப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

அவர்களின் அழுகை பொது அழுகை, சமூக மேம்பாட்டுக்கு அவர்கள் ஒரு விடியலை நம்பினார்கள்.”

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்! – என்றவரும்,

காக்கைக் குருவி எங்கள் ஜாதி – நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்! – என்று பாடியவரும்

புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட

போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்! – என்று குரல் கொடுத்தவரும் உலக அமைதியின் தூதுவர்கள் அல்லவா?

அதிகமாகப் புகழப்படுகிறபோது ஐயப்படவும், அதிகமாய் இகழப்படுகிறபோது சிரித்து விடவும், நம் படைப்பாளிகள் பழகிக்கொள்ள வேண்டும்.

விமர்சகன் என்பவன் ஒட்டகம், கனிகளை விட்டுவிட்டு முட்களை மேய்ந்து கொண்டிருப்பவன்.

இன்னொன்று, ஒரு படைப்பாளன் தினமும் எழுதிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதே மூடநம்பிக்கை.

தினமும் எழுதிக் கொண்டிருக்க படைப்பு என்பதொன்றும் நாட்குறிப்பன்று.

எழுத்தே எழுந்து வந்து எழுதச்சொல்லும் போது எழுது.

இக்கட்டளை வரிகள் என்னை மிகவும் ஈர்த்த வரிகளாகும்.

எழுதுவதெல்லாம் ஒரு மன உறுதிக்காகவும் மக்களுக்குத் தரும் செய்தியாகவும் தான் எழுதவேண்டும் என்று எனக்கு அன்று புரிந்தது.

கவிதை என்பது மொழியின் மின்சாரக் கிடங்கு. அது ஓர் இனிய நெருப்பு; அல்லது சுடும் பூ.

மொழி – மனிதனை மேம்படுத்துகிறது; கவிதை – மொழியை மேம்படுத்துகிறது.

போர்க்குணம் கொண்ட ஒரு புதுக்கவிதைக்காரனின் கைகளில் பேனா நிமிர்ந்தால் வேலாகிறது; வளைந்தால் வில்லாகிறது.

நமது கல்வி முறையில் போதிப்பதை விடச் சோதிப்பது அதிகமாக இருக்கிறது.

பாரதியார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே, பழமையின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டுமென்பதற்கு முன்னுரையாக ஐதீகத்தின் பிடியிலிருந்து தன்னை அறவே விடுவித்துக் கொண்டு வெளியே வந்தவரல்லவா! வறுமை அவர் உயிரை முற்றுகையிட ஒத்திகை பார்த்தபோதும், அவரது கம்பீரத்தின் உயரம் குறையவில்லையே! சீட்டுக்கவி எழுதும்போதும் கூட தானும் ஓர் அரசராகவே மன்னருக்கே ஆணையிட்டவர்.

முப்பது கோடி உள்ளங்களின் ஊமை எண்ணங்களை அவர் ஒரு நாவால் பாடினார்.

அந்தப் பாடலின் எதிரொலியில் ஊமை உள்ளங்களும் பேசத்தொடங்கின.

தமிழ் இலக்கிய வரலாற்றில், அதிக மொழிகள் தெரிந்த கவிஞராக நமக்கு அடையாளம் தெரிகிறவர் பாரதியார் ஒருவரே.

‘யாமறிந்த மொழிகளிலே’ என்று செருக்கோடு சொல்வதற்குக் கவிஞருக்குப் பொருளுண்டு.

காரணம், பாரதியின் ஆங்கிலக் கல்வி அவருக்கு இலட்சிய வேட்கையை வளர்த்தது.

வடமொழிக் கல்வி அவர் நெஞ்சில் சமய தத்துவங்களுக்குக் கால்கோள் செய்தது.

கவிதை, சொற்களால் மட்டும் அமைவதில்லை.

ஆங்கிலக் கவிஞர் கீட்சு சொல்வதுபோல், கவிதை – சொற்களில் இல்லை; சொற்களுக்கிடையில் இருக்கிறது; (Poetry is not in the words. It is in between the words).

மானிடக் காதலியை வர்ணிக்கும் கவிஞர் ஷெல்லி காதலியின் கண்களை,

‘அந்த ஆழமான கண்கள்; அவை இரட்டை கிரகங்கள்.’ (Thy deep eyes a double planet) என்று சொன்னதைப்போல, பாரதியும் இதே படிமத்தில்,

‘சுட்டும் விழிச் சுடர் தான் – கண்ணம்மா

சூரிய சந்திரரோ!’

என்று பாடும்போது, ஷெல்லியின் பாட்டிலில்லாத உட்தொனி, உள்ளுறை பாரதியார் பாட்டிலும் படிந்து கிடக்கிறது என்று பெருமிதமாகப் பாரதியாரைப் பற்றி பெரும் பாடமே கவிப்பேரரசு நடத்தியுள்ளார்.

இப்படி வாழ்க்கைக்கும் உணர்ச்சிக்கும் வண்ணம் பூசிய உலகப் பாடல்களாக உலா வந்து கொண்டிருக்கின்றன.

‘எனக்காகப் பிறந்தவள்,

நீ மட்டும்தான்,

இருமுறை சொல்’

‘நீ என்னை எழுப்பும் போது தான்

என் கண்களுக்கு வெளிச்சம்’

உலகப் பாடகன் மைக்கேல் ஜாக்சன் பாடலை மிக அழகாக கவிஞர் மொழிபெயர்த்த விதத்தைக் கண்டு கல்லூரிக் காலத்திலேயே நாங்களெல்லாம் பெருமிதம் அடைந்தோம்.

மேற்கத்தியப் பாடல்கள் வாழ்க்கையின் சிதைவுகளையும் கனவுகளையும் உள்ளது உள்ளபடியே சித்தரிக்கின்றன என்று அப்பொழுதுதான் நாங்களெல்லாம் உணர்ந்தோம்.

காலமே! உனது கையில் நானொரு தூரிகை; சின்னத் தூரிகை. என்னை உயர்ந்த சித்திரங்கள் வரையப் பயன்படுத்திக் கொள்.

இப்படி எத்தனைப் பாடல்கள் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களையும் நான் எழுதித் தரச் சித்தமாய் இருக்கிறேன் என்ற கவிஞரின் அழியாத வரிகள் என் நெஞ்சத்தைக் கவர்ந்தன.

——

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

உரைவேந்தரின் உரைத் தொடர் – (ஊ)

திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி

திருவாவிநன்குடியில் முருகனை வழிபடும் முனிவர்கள் இயல்பை இனிக் காணலாம்.

இம்முனிவர்கள் அரையில் மரவுரியை யுடுப்பர்;

தலைமயிர் வலம்புரிச் சங்கின் நிறம்போல வெளுத்து நரைத்திருக்கும்;

காலந்தோறும் நீராடும் இயல்பினராதலால் அவர் மேனி மிக்க தூய்மையாய் ஒளிவிட்டு விளங்கும்.

மார்பில் கிருட்டினாசினம் என்னும் மான்தோலையணிந்திருப்பர்;

விரதங்களால் பட்டினியிருந்து மேனி கரைந்திருத்தலின், அவர் உடல் எலும்பை நன்றாகக் கண்களால் எண்ணலாம்;

பல நாள்கள் வரை உண்ணாநோன்பு மேற்கொண்டிருந்து சிறிதே உண்ணுவர்.

அவர் நெஞ்சில் எதனிடத்தும் மாறுபட்ட உணர்வோ எவ்வுயிர்மீதும் பகைமையோ இருப்பது கிடையாது;

எல்லாம் கற்ற பேரறிவினர்க்கும் தெரியாத பெரு நுட்பமுணர்ந்த பேரறிவுடையவர்.

கற்றோர் எனப்படுவார் எல்லோருக்கும் தலைவராக இருக்கும் கல்விச் சால்பு மிக்கவர்.

அவர்பால் காமமும் கடுஞ்சினமும் கடுகளவும் இல்லை;

ஒன்றை வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவராதலால், எவ்வகைத் துன்பமும் அவர்கள் அறிந்திலர்;

ஒருவரையும் வெறுத்து நோக்கும் இயல்பில்லாதவர் இம் முனிவர்கள்.

இவரிடையே முருகன் திருப்புகழைப் பாடும் இசைவாணர் உள்ளனர்.

அவர்கள் இடையில் புகைபோன்ற மெல்லிய ஆடையணிந்து, மார்பில் புதிது மலர்ந்த பூவால் தொடுக்கப்பட்ட மாலை அணிந்து கொள்ளுகின்றனர்.

நல்ல யாழ்ப்பயிற்சியும் அன்பு நிறைந்த நெஞ்சும் உடையர்;

இவருடைய வாயில் மென்மையான மொழிகளே நிலவுகின்றன.

இப்பெற்றியோர் நரம்பை இயக்கி இனிய இசையை இசைக்கின்றனர் இவர்களுடன் மிடற்றாற் பாடும் நன் மகளிர் உள்ளனர்.

அவர் நோயின்றியன்ற உடம்பும் மாந்தளிர்போலும் மேனியும் உடையர்; அம் மேனியில் பொன்னிறம் கொண்ட தேமல் பூத்துளது. இவர்கள் அல்குலிடத்தே பருமமென்னும் மேகலையணிவர். இவரது கற்பு மாசுமறுவற்றது.

திருவேரகத்தில் முருகனை வழிபடும் வேதியர் அறு தொழிலோர் என்ற இலக்கணத்திற் குறைவில்லாதவர்; தாய் தந்தையர் நற்குலத்தவர் என உலகினர் புகழும் பல்வேறு குடியினர்.

நாற்பத்தெட்டு யாண்டு பிரமசரியம் காப்பவர்;

எப்பொழுதும் அறம் கூறும் கொள்கையுடையவர்; மூன்றுவகையான தீயை வளர்ப்பதையே செல்வமாகக் கொண்டவர்; முப்புரி நூல் மூன்று கொண்ட பூணூல் விளங்கும் மார்பையுடையர்.

இவ்வண்ணம் முருகனை வழிபடுவோர் இயல்பை மிக நுட்பமாக அறிந்து கூறும் ஆசிரியர் நக்கீரர், மகளிர் நலங்கூறுமிடத்து அவரது கற்பு மாண்பை “மாசில்கற்பு'” என்றும் “மறுவில்கற்பு” என்றும் எடுத்துக்காட்டி வற்புறுத்துவதும் அவர்கள் ஆடவரிடையிலும் முருகன் திருமுன்பும் இருக்கும் நிலையின் தூய்மை நலத்தை “மறுவின்றி விளங்க” என்று சுருங்கக் காட்டி விளக்குவதும் நுனித்தெண்ணி இன்புறத்தகுவன.

மகளிர் நலம்புனைந்துரைத்த பண்டைச் சான்றோருள் இவர்போல மகளிரது யாக்கையமைப்பை வியந்து நோயின்றியன்ற யாக்கையர்” என்றதுபோல மொழிந்தோர் பெரும்பாலும் சிலர் என்றே கூறலாம்.

மகளிரது யாக்கை நோயின்றியன்ற அமைதி யுடைய தாக வேண்டுமெனக் கருதிக்கூறும் இப்புலமையுரை பொன்போற் போற்றத்தக்கது.

இனி, இம்முருகாற்றுப் படையினை இவ்வாறு வளமிகக் கூறும் ஆசிரியர் முருகனைக் கண்டு வழிபடுவோர் அவன் புகழ்களை யெடுத்தோதும் வகையைச் சிறிது விரித்துரைக்கின்றார்.

‘நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கையேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ,

ஆல்கெழு கடவுள் புதல்வ,

மால்வரை மலைமகள் மகனே,
மாற்றோர் கூற்றே,
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ,
இழையணி சிறப்பின் பழையோள் குழவி,
வானோர் வணங்குவில் தானைத் தலைவ,
மாலை மார்ப,
நூலறி புலவ,
செருவில் ஒருவ,
பொருவிறல் மள்ள,
அந்தணர் வெறுக்கை,
அறிந்தோர் சொன்மலை,
மங்கையர் கணவ,
மைந்தரேறே,
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ,
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ,
பலர்புகழ் நன்மொழிப் புலவரேறே,
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக,
நசையுநர்க் கார்த்தும் இசைபேராள, அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய். மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்,

பெரியோ ரேத்தும் பெரும் பெயர் இயவுள்,

சூர்மறுங் கறுத்த மொய்ம்பின் மதவலி,
போர்மிகு பொருந,
குரிசில்.”
என்பது முருகனைப் பரவுவோர் சொல்லி யேத்துதற்குரிய புகழுரை.

நெடும் பெரும் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை யேற்ப

அறுவர் பயந்த ஆறமர் செல்வ” என்றது நெடும்பெரும் சிமயமாகிய இமயத்தின்கண் இறைவன் தந்த கருப்பத்தினை இந்திரன் வாங்கி முனிவர்பால் தர, அவர்கள் அதனைத் தாங்கமாட்டாது தீயின்கட்பெய்து தம் மனைவியர்பால் தந்தாராக, அவருள் அறுவர் தலைக் கொரு குழவியாக நீலம் மலர்ந்த பசிய சுனையின்கண் பதுமப் பாயலில் பெற்றெடுப்ப அந்த ஆறும் சேர்ந்து ஆறுமுகமும் பன்னிரண்டு கையுமுடையனாய் அமர்ந்த செல்வனே என்பது. ஐவருள் ஒருவன் ஏற்ப அறுவர் சிமயத்துப் பைஞ்சுனைப் பயந்த ஆறமர் செல்வ என இயையும்.

ஆல்கெழுகடவுள் புதல்வ என்றது, கல்லாலின் கீழிருந்து முனிவர்க்கு அறமுரைத்த கடவுளாகிய சிவபரம் பொருட்கு மகன் என்பது. இழையணி சிறப்பின் பழை யோள் குழவி என்றது, இழையணிந்து விளங்கும் சிவ சத்தியாகிய பழையவளின் குழவி யென்றவாறு.

இறைவன் பங்கிலுறையும் உமைநங்கையை மலைமகள் என்றும் கொற்றவையென்றும் பழையோள் என்றும் மூவகையாகப் பிரித்துக்கூறுகின்றார்.

சிவசத்தியாய் இறை வனுக்குத் திருமேனியையும் எல்லாவுயிர்கட்கும் வேண்டிய உடல் கருவி கரணங்களையும் உலகுகளையும் உலகியற் பொருள் நுகர்ச்சிகளையும் தரும் முதலாய் அமைதலின் பழையோள் என்றும், வெற்றிக்கு வேண்டிய ஆற்றலே தன் வடிவாகக் கோடலின் கொற்றவை யென்றும், உயிர்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடி உலகியல் நடாத்தி உய்கி பெறுவித்தலின் மலைமகள் என்றும் கருதப்படுவது விளங்க இம் மூவகையினையும் எடுத்தோதினார்.

நுண்ணூற் பொருள்களைச் சான்றோர்க்கு ஐயமறத் தெளிவித்துரைக்கும் சீர்மிக்க ஆசிரியன் என்பது விளங்க நூலறி புலவன் என்றும், பலர் புகழும் நல்லுரையால் சமயப்புலவர் தொடுக்கும் வாதங்களை வென்று மேம்படும் உயர்வு தோன்ற, ‘பலா புகழ் நன்மொழிப் புலவரேறே,” என்றும் கூறுகின்றார்.

என்றுங் குன்றாத இளமையும், பெறற்கரிய வீடுபேறு நல்குதலும் தனக்கு உரிமையாகவுடைமை பற்றி ”அரும்பெறல் மரபின் பெரும் பெயர் முருக” என்றார்.

பிறரால் இடுக்கண்பட்டு வருந்தி வருவோர்க்கு, நடுவு நின்று முறை வழங்கும் செம்மையுடைமை தோன்ற ”அலந்தோர்க் களிக்கும் பொலம் பூண் சேஎய்” என்றார்.

நெடுவேள் என்பதற்கேற்பத் தன்னையடைந்த பரிசிலர்க்கு. வேண்டுவன பெருக நல்கித் தாங்குவது தோன்றப் ”பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்” என்றார்.

எத்தகைய பெரியோர்க்கும் பெருமைக்குரிய செயலாற்றுதற்கேற்ற மனத்திட்பமும் வினைத்திட்பமும் இன்றியமையாதன.

அவற்றிற்குரிய அவரது ஆற்றலை எழுப்பி இயக்கும் திருவருள் இயக்கத்துக்கு அவன் முதலாதல் தோன்றப் “பெரியோ ரேத்தும் பெரும்பெயர் இயவுள்” என்றார்.

உலகியல் நுகர்ச்சிக்கு இளமையும் வினைத்திட்பத் துக்கு இயக்கமும் பெறற்கு முதலா தலின் இரண்டையும் உணர்த்தும் முருகன், இயவுள் என்ற பெயர்களைப் பெரும் பெயரெனச் சிறப்பித்தார்.

எல்லையில் காலமாகப் பல்வகைப் பிறப்பும் பிறந்து பிறந்து அறிவு சிறந்துவரும் மன்னுயிரெல்லாம் தன்னுள் ஒடுங்கத் தான் அவற்றை ஒடுக்கி மேற்பட விரிந்து நிற்றலின், அவ்வுயிர்கட்கு, அவன் பண்பெல்லாம் அறிதல் இயலாமையின், “நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமை” என்றும், அவ்வருமை யுணர்ந்து அவை செயற்பாலது அவன் அடியில் வணங்குவது அன்றி வேறில்லை என்பார்,

”நின்னடி உள்ளி வந்தனன்” என்றும் கூறினார்.

ஞான சம்பந்தரும், தாட்பால் வணங்கித் தலை நின்றிவை கேட்கத் தக்கார்’ என்பது காண்க.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *