POST: 2021-04-19T10:52:18+05:30

கட்டுரை
=====

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 82

தமிழால் தலைமை பெறலாம் !

முனைவர் ஒளவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

ஆராய்ச்சியென்பது ஒரு பழஞ்சொல்.

திறனாய்ந்து தெளிதல் என்று விரிவாகக் குறிப்பிடுவார்கள்.

கீரையை ஆய்வது என்ற பழஞ்சொல் தளிர்களையும்,துளிர்களையும்,வேர்களையும் வேறுபடுத்துவதாகும்.

முதலில் தண்ணீரில் தோய்த்துப் பிறகு கீரைகளை ஆராய்வது மகளிரின் செயல்முறையாகும்.

அந்த வகையில் தான் பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்ற தலைப்பைத்தன் ஆய்வுக்குரியதாக அமைத்து மரஞ்செடி கொடிகளை,மலை,ஆறு குளங்களைக் குறிப்பிட்டு அறிஞர் மு வ அழகுற எழுதினார்.

இயற்கையைப் பற்றி உலகம் என்ன எண்ணுகிறது.

அயலவர்கள் இயற்கையை எப்படி நோக்கினார்கள் என்ற சிந்தனைப் புதையலாக தவத்திரு தனிநாயக அடிகளார் எழுதினார்.

சொல்லடைவினை மேலோட்டமாகத் தொகுத்தாருமுண்டு .அதனையும் ஆய்வு என்று அழைத்தார்கள்.

தனிநாயக அடிகள் தவிர எஞ்சியவர்கள் ஆய்வின் ஓரத்தில் கூட நிற்கத் தகுதியை பெறாது போயினர் .

அண்மையில் பேசிய பேராசிரியர் அரவிந்தன்,அறிவியல் ஆய்வுக்கு ஒரு கோடி ரூபாயும், இலக்கிய ஆய்வுக்கு ஒரு லட்சம் ரூபாய தருவதற்குத் தயங்குவதாகவும் வருந்திக் குறிப்பிட்டார்.

நிறுவனங்கள்,ஆய்வு மன்றங்கள்,நடுவண் வனங்கள்,கல்லூரித்துறைகள்,பல்கலைகழகத்துறைகள் அனைத்திலும் ஆய்வுகள் நடைபெறுகின்றன.

அவற்றை ஆற்றுப்படுத்தும் பெருங்கடமையை அறிஞர் மேற்கொள்வர் .

எல்லையும்,வரையறையும் வகுத்துத் திட்டமிடாமல் ஆய்வு நூல் புற்றீசல் போல ஆய்வுப்பெயரில் பொலபொலவென உதிர்கின்றன .

மொழியைச் செம்மையாக,அழுத்தம் திருத்தமாக உச்சரிக்க,மொழிப்பயிற்சி முதன்மையாகும் .

இதனை நண்பர்கள் பலர் எழுதி வலியுறுத்தினர்

சிறப்பு ழ கரத்தைச் சரியாக உச்சரிக்க,வாழைப்பழம் நழுவி அழுகிக் கொழுகொழுத்துக் கீழே விழுந்தது எனும் வாக்கியத்தைப் பயிற்சிக்காகக் கொடுப்பது நாம் அறியாததல்ல.

இதைப்போல்,தமிழில் ல,ள ,ழ மூன்றும் அடுக்கிவரும் ஒரு சொல் தொழிலாளி ஆகும்.

உச்சரிப்பு முயற்சிக்கு இச்சொல்லைப் பயன்படுத்தினால்,உழைப்பவரை நினைவு கூர்வதும் நிகழும்.

ல,ள ,ழ ஆகிய எழுத்துகளின் நா ப் பழக்கமும் நன்கு கைகூடி வரும்.”

ழ ” கரத்துக்கு அறிஞர் மன்றம் நடத்திய பெருமை தேவநாதனைச் சாரும் .

இசைச்செம்மல் திரு இரமணனும் – இசையரசி திருமதி உமா இரமணனும் தமது இசைக்குழுவில் ஒருமுறை சங்க இலக்கியப் பாடல்களைத் தெரிவுசெய்து அணுவளவும் ஒலிப்பிழை இல்லாமல் பாடி மகிழ்வித்ததை நான் நன்றியோடு நினைவு கூர்கிறேன் .

கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியில் சிகரப்பாடகருக்கான போட்டியில் பங்குபெற வந்தவர்கள் திறமையும் அருமையும் மிளிரப் பாடினார்கள்

.நடுவராக இருந்த இசைத்திலகம் அனுராதா ஸ்ரீராம் அவர்கள் பாடியதெல்லாம் சரி , எனக்கு மிகவும் பிடித்திருந்தது .

ஒரு குறையை நான் சொல்லத்தான் வேண்டும் .

பாடுகிறவர்கள் தாம் பாடும் பாடல் எழுத்து ஒவ்வொன்றையும் திருத்தமாக உச்சரிக்க வேண்டும் .அது தான் இசைக்குப் பெருமை , தமிழுக்குத் தனிப்பெருமையாகும் என்றார் .

நாடு பாராட்டும் சிந்துவெளி ஆய்வாளராகவும் ,இந்திய ஆட்சிப் பணியாளராகவும் ஆய்வுப் பேரொளியாகவும் திகழும் திரு. ஆர். பாலகிருஷ்ணன். அவர் எழுதிய சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம், Journey of A civilization – Indus to vaigai ஆகிய நூல்கள் குறித்துப் பாராட்டாதவரில்லை .

ஏப்ரல் மாதத்தில் நிகழும் அனைத்துலகப் புத்தக தினத்தை முன்னிட்டு பெருந்தகை அறிஞர் பாலகிருஷ்ணன் எழுதிய நூல்களின் பின்னணி குறித்து புத்தகம் பேசுது’ இதழுக்காக டாக்டர்.சங்கர சரவணன் அவரை நேர்காணல் செய்தார்.

நேர்காணல் நமக்குப் பெருமிதமும் தமிழ் பயில்வோர்க்கு ஊக்கமும் அளிப்பன .

தமிழ்ப்படித்தால் வேலை கிடைக்காது – எதிர்காலம் ஒளிமயமாக இருக்காது என்பது போன்ற அச்சங்கள், தாங்கள் தமிழ் படித்த 1970 – களிலும் இருந்தனவா ? அவற்றை எப்படி எதிர் கொண்டீர்கள் ?

எங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, எனது நெருங்கிய உறவுமுறையிலும் கூட நான் தான் முதல் பட்டதாரி

. தமிழ் இலக்கியம் படிக்கத் தயங்கும் இன்றைய நிலவரத்திலிருந்து 1970 களின் கல்விச் சூழ்நிலை எந்தவகையிலும் வேறுபட்டிருக்கவில்லை.

வீட்டுக்கொரு பொறியாளர் வளர்க்கப்படவில்லை என்றாலும் மருத்துவப் படிப்புக்கும், பொறியியல் கல்விக்கும்தான் அப்போதும் மவுசு அதிகம்.

வணிகவியல் படிப்பவர்கள் தங்களை ராயல் பி.காம் என்ற அடைமொழியோடு அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்ற அவநம்பிக்கை அப்போதும் இருந்தது.

தமிழ் வளர்த்த மதுரையில் தாடி வளர்த்துக் கொண்டிருந்தவர்களில் பாதிப் பேர் தமிழ் மாணவர்கள்தான் என்ற நையாண்டி வேறு.

புகுமுக வகுப்பில் அறிவியல் படிப்பில் அவ்வளவாக எனக்கு ஈடுபாடு இல்லை.

தவளையை மல்லாக்கப் போட்டு அறுப்பதிலும், அழகிய மலர்களின் அல்லி வட்டங்களைப் புல்லிவட்டங்களை அலசுவதிலும் மனம் ஒன்றவில்லை .

அடுத்தது. இளம் அறிவியலா ? இளங்கலையா என்று தடுமாறினேன்.

பிடித்தது எது, பிடிக்காதது எது என்பது கொஞ்சம் பிடிபட்டது.

சுட்டுப்போட்டாலும் வராத கணக்கைத் தொட்டுப் பார்ப்பதில்லை என்று துணிந்தேன். தமிழ் பிடித்திருந்தது. தமிழ்க் கவிதைகள் பிடித்திருந்தன. அதனால் தமிழ் மாணவனாய் ஆனேன்.வேலை எதுவும் கிடைக்காது என்று என்னைச் சுற்றியிருந்தவர்கள் பாட்டாய்ப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், நான் படித்து முடித்து ஒருநாள் கூட வேலையில்லாமல் இருக்கக்கூடாது என்று எனக்குள் சொல்லிக் கொண்டிருந்தேன், தமிழ் என்னைத் தாங்கியது.

முதுகலைத்தேர்வு முடிவு வரும் முன்னரே தினமணியில் வேலை தேடி வந்தது.

பயிற்சிக் காலத்தில் மாத ஊதியம் 240 ரூபாய்தான். தினம் எட்டு ரூபாய் என்ற கணக்கு.

சொந்த ஊரான நத்தத்திலிருந்து பேருந்தில் மதுரைக்குப் போய்வரவே ஐந்து ரூபாய் செலவு. மீதியில் தேநீர் குடிக்கலாம். இருந்தாலும் அது குறையாகத் தோன்றவில்லை. பத்திரிகைப் பணியில் மேலும் மேலும் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. கரும்பு தின்னக் கூலியும் கிடைத்தது. கசக்குமா ?

இலக்கியக் கல்வி பயின்றுவிட்டு இந்திய ஆட்சிப் பணிக்கு வந்துவிட்டீர்கள்.

இந்திய ஆட்சிப்பணியில் நுழைந்த முதல் தமிழ் இலக்கியப் பட்டதாரி நீங்கள் தான்

. நீங்கள் பயின்ற இலக்கியக்கல்வி இந்திய ஆட்சிப்பணியிலும் வழி நடத்துகிறதா ?

இந்திய ஆட்சிப்பணியில் இன்றும் என்னை வழி நடத்துவது எனது இலக்கியக்கல்வி தான் !

இப்படிப் பெருமிதம் ததும்பக் தமிழ்க்கல்வியைப் புகழ்கிறார் நாடு போற்றும் ஆய்வுச்சுடராகவும் , இந்திய ஆட்சிப்பணியில் சிங்க நடை போட்டுக்கொண்டுச் சிகரத்தைத் தொட்டுக்கொண்டிருப்பவர் பெருந்தகை பாலகிருஷ்ணன் .

என்னென்று சொல்வேன் தமிழால் அவர் பெருமை பெற்றதும் ,தமிழ் அவரால் பெருமை பெற்றதும் என்று பாவேந்தரின் தொடரை இவருக்குப் பொருத்தமாகக் கூறலாம் .

” புலம் மிக்கவரின் புலமை தெரிதல் புலம் மிக்கவர்க்கே புலனாம் ” என்ற பொன்மொழிக்கிணங்க

அறிஞர் உதயச்சந்திரன் இ ஆ ப தமது மகத்தான நூலில் அறிஞர் பாலகிருஷ்ணனின் ஆற்றலைப் பாராட்டிக்கூறும் பகுதி நம் நெஞ்சை அள்ளத் தக்கதாகும் .

முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது அந்தச் சம்பவம். ஒடிசாவின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம்

மேற்கொண்டிருந்தார் அந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி.

மதுரையில் பிறந்து முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து, முதன் முதலில் தமிழிலேயே சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றிபெற்றவர்.

தமிழ்மேல் தீராக்காதல் கொண்டவரைக் காலம் கலிங்கத்தில் பணியமர்த்தியது.

ஒடிசாவைப் புரிந்துகொள்வதற்காக அதன் உள்ளும் புறமும் சுற்றிக்கொண்டிருந்தவர் கண்ணில், கோராபுட் நகருக்கு அருகேயிருந்த ஒரு மைல் கல் புதிய தரிசனத்தைக் கொடுத்தது.

‘தமிளி’ என்று எழுதப்பட்டிருந்த அந்தக் கல் அவரது பயணத்தை மாற்றியது.

‘தமிளி’ என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கிராமத்திற்குள் நுழைந்தார். அந்தக் கிராமப் பழங்குடி மக்கள் பேசிக்கொண்டிருந்த ‘குவி’ எனும் மொழியின் வேரை ஆய்ந்து பார்க்கிறார்.

அது திராவிடப் பூர்வீகம் கொண்ட மொழியாக இருக்கிறது. அந்த மொழியின்மீது வேட்கை உருவாகிறது. குவியையும், கோயா போன்ற பழங்குடி மொழிகளையும் கற்றுத் தேறுகிறார்.

தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் குறிஞ்சித்திணை வாழ்வியலும் அந்தப் பழங்குடி மக்களின் வாழ்வியலும் அப்படியே பொருந்திப்போவது அவருக்கு வியப்பூட்டுகிறது.

மாநிலம் கடந்து அவரது ஆய்வுகள் நீள்கின்றன. மத்தியப்பிரதேசப் பழங்குடி கிராமங்களின் பெயர்களும் தேனி, பழனி, குமுளி, இடுக்கி போன்ற தமிழக-கேரள எல்லையோர நகரங்களின் பெயர்களும் ஒன்றுபோலிருப்பதை அறிந்ததும் அவரது ஆய்வின் தன்மை மாறுகிறது.

முப்பதாண்டுக் காலம், தன் வாழ்வின் பெரும்பகுதியைத் தமிழின் வேர் தேடி அலைந்த அந்தத் தமிழ் மகனின் பெயர் பாலகிருஷ்ணன் இ ஆ ப .தமிழ் தலைமை தாங்குவது நமக்குப் பெருமிதம் தருவதாகும் .

புரட்சித்தலைவர் ஒருமுறை என்னைப்பார்த்து ஆமாம் தமிழ் பக்திமொழி என்று சொல்கிறார்களே எப்படிக் ! கோயில்களில் தமிழே இல்லாமல் போய்விட்டது என்றார் ,நான் விடை சொல்லாமல் ஒரு கணம் நின்றேன் .

பக்கத்திலிருந்தவர் சமஸ்கிருதம் தேவபாஷை என்று சொல்வார்கள் என்றார் .

நான் அப்போது தஞ்சையில் அறிஞர் டி என் ஆர் சமஸ்கிருதத்தைத் தேவபாஷை என்றால் தமிழை மகாதேவ பாஷை என்றல்லவா சொல்லவேண்டும் என்று கூறியதைத் திருப்பிச் சொன்னேன் .

திருவருளைப் பெறுவதற்காகத் தமிழால் வழி கண்டவர் என்று திருஞான சம்பந்தரை குறிப்பிட்டுள்ளார்கள் .

தமிழால் வழி கண்டவர் என்ற கருத்து ஆழமானது , தத்துவப் பேராசிரியராக விளங்கிய அறிஞர் டாக்டர் தேவசேனாபதி எழுதிய கட்டுரையை நான் என் கோப்பில் எடுத்து வைத்திருந்தேன் .நான் இன்புற்றதை

இந்தக் கட்டுரையைச் சுட்டிக்காட்டி மகிழ்கிறேன் . .

தமிழ்மொழி மிகச் சிறந்த சமய இலக்கியமுடையது என்று அறிஞர்களால் போற்றப்பெறுகிறது. மேலும் இறைவன் அருள் பெற்று வீடுபேற்றினை அடைவதற்கு இம்மொழி தான் துணைசெய்கிறது.

சைவ நூல்களை முறைப்படுத்திய நம்பியாண்டார் நம்பிகள் என்னும் புலவர் பெருமான், இறைவனையடைந்து பேரின்பம் துய்த்தற்கு வாயிலாகவுள்ள அறிவு மொழி இத்தமிழ் மொழியெனக் கண்டு, அக்காட்சியைத் திருஞானசம்பந்தர் பிள்ளையார் பெருமைகூறு முகமாக,

” ஆறதேறுஞ் சடையான் அருள்மேவ அவனியர்க்கு வீறதேறுந் தமிழால் வழிகண்டவன் ”என்று வெளியிட்டருளினார். ”

சிவபிரானது திருவருட் பேற்றையடைய உலகத்தவர்க்குத் தமிழால் வழிகண்டவர்’ ‘ என்னும் இதனால் இது ஞானமொழி என்பதில் ஒரு சிறிதும் ஐயமின்றாம். ஈண்டுத் தமிழைச் சுட்டுங்கால், ” வீறதேறுந்தமிழ் ” என்றார்.

வீறு என்னும் சொல் ” வேறொன்றற்கில்லா அழகு ” என்னும் பொருள் கொண்டது .

இப்பொருள் சீவக சிந்தாமணி யில் ‘ ‘வீறுயர் கலச நன்னீ ர்” என்புழி நச்சினார்க்கினியர் கண்டதாகும். வேற்று மொழி கட்கில்லாச் சுருங்கச் சொல்லல், விளங்கவைத்தல் முதலிய அழகுகள் இத்தமிழ்மொழிக்கண் மலிந்திருத்தலின்,

இச் சொற்பொருள் நச்சினார்க் கினியர் கண்ட அவ்விடத்திலும் இங்கு மிகவும் இயைபுடைத்தென்பது நன்கு விளங்கும்.

வீடுபேற்றுக்குத் தமிழால் வழி என்னும் கருத்து ஆராயத்தக்கதாம். வீடு பேற்றுக்கு வழியாக அறிவு நெறி ( பக்தி மார்க்கம் ), தன்னலமற்ற தொண்டுநெறி ( கர்ம மார்க்கம் ) என்பவை பேசப்பெறுகின்றன.

** எழுத்தறியத் தீரும் இழிதகைமை; தீர்ந்தால்

மொழித்திறத்தின் முட்டறுப்பானாகும் – மொழித்

திறத்தின்

முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து

கட்டறுத்து வீடு பெறும் ”

என்னும் வெண்பாவில் வரும் கருத்து,

மொழியைச் சரிவர உணர்வதன் கட்டாயத்தை வற்புறுத்துகிறதெனினும், மொழி அறிவு அல்லது இலக்கண அறிவு, எம் மொழியிலும் கருவியாகக் கூறப்படுவதாகக் கொள்ளலாம்.

எனவே, தமிழ் மொழியின் வழி, வீடுபேறு என்பது மிகத் தெளிவாகத் தமிழ்மொழியின் முதன்மையைக் கூறுவது புதிய கருத்தாகத் தோன்றுகிறது.

மேலும், மொழியை முன்கூறிய மூன்று நெறிகளுள் யாதேனும் ஒன்றைக் கற்பிக்கப் பயன்படுத்தலாமெனினும், முதன்மை மொழிக்கே தரப்பெறுவது வியப்பையுண்டாக்குகிறது.

இதே கருத்து வேறு எங்கேனும் கூறப்பட்டுள்ளதா என்று எண்ணும்போது,

” சித்தர் சித்தத் துறப்பற்றி மெத்தப் புகழ் செப்பு முத்தித் தமிழ்ப் பெருமாளே ”

என்னும் திருப்புகழ் நினைவுக்கு வருகிறது.

முத்தித் தமிழ்ப் பெருமாளே ” என்பதற்கு முத்தியைத் தரவல்ல தமிழாம் தேவாரத்தை அருளிய பெருமாளே (அல்லது )முத்தியைத் தரவல்ல பெருமாளே ! தமிழ்க் கடவுளாம் பெருமாளே ‘ என்று தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள் பொருள் கண்டுள்ளார்கள்.

‘ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் வல்லார் எய்துவர் வீடெளிதே’ என்னும் வரியையும் திரு. பிள்ளை அவர்கள் அடிக்குறிப்பாகக் கொடுத்துள்ளார்கள்.

‘ செஞ்சொல் சேர் சித்திரத் தமிழாலுன் செம்பொனார்வத்தைப் பெறுவேனோ ‘

” வாய்ப்புற்ற தமிழ் மார்க்கத்தின் பொருள் வாய்க்கும் சித்திர முருகோனே ” –

” குறுமுனிவ விருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற அறிவு நெறி தவ நிலைகள் செப்புத் தமிழ்க்கினிய குருகுமர பழனிவளர் வெற்புத்தனிற்றிகழும்

பெருமாளே ”

” அருண தள பாதபத்ம மது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தானளித்த மயில் வீரா ”

என்பன போன்ற திருப்புகழ் வரிகளும் ஆராயத்தக்கன.

“அவிழ்க்கின்ற வாறும் அது காட்டு மாறும் சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் எனு மிவ் விரண்டும் உணர்த்தும் அவனை யுணரலு மாமே” என்பது திருமந்திரம்.

“ஆதியிற் றமிழ் நூல் அகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகனை வழுத்துதும் போதமெய்ஞ் ஞான நலம்பெறற் பொருட்டே” என்னும் தொல்காப்பியப் பாயிரம் தமிழுக்கும் மெய்ஞ்ஞான நலத்துக்கும் உள்ள தொடர் பினைக் காரண காரிய முறையில் குறிப்பதாக வும் கொள்ள இடமிருக்கிறது.

சிவன் திருமால் முருகன் இம்மூவரையும் வழிபடும் அடியவர்கள் இத் தெய்வங்களுக்குத் தமிழில் மிகுந்த ஆர்வமிருப்பதாகவும், தமிழுக்கே இவர்கள் உறைவிடமாக அல்லது தமிழே இவர்களுடைய உறைவிடமாக இருப்பதாகவும் நினைத்துப்பாடி மகிழ்கிறார்கள்.

”அங்கண் முல்லையின் தெய்வம் என்றருந் தமிழ் உரைக்கும் செங்கண்மால்’ என்று சேக்கிழார் கூறுவது நினைவுக்கு வருகிறது.

செந்தமிழ்ப்பின் சென்ற கொண்டலாகக் குமரகுருபரர் கூறுவது கணிகண்ணன் வரலாற்றினைக் குறிப்பதாகும்.

தமிழ் ஞானசம்பந்தன்” என்று பெருமிதத்தோடு ஞானசம்பந்தர் பாடுவதைப் போலவே, பூதத்தாழ்வாரும் “பெருந்தமிழன்” என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறார்.

பொதுவாகத் திவ்வியப் பிரபந்தத்தையும், சிறப்பாகத் திருவாய் மொழியையும் திருமால் அடியார்கள் பாராட்டிப் போற்றுகின்றனர்.

‘……….. குருகூர் நிமலன் புனையுந் தமிழ்க்கவியா லிருணீங்கிப் பொருள்

விளங்கி வினையுந் திரிவுற்றன குற்ற நீங்கினவேதங்களே ”

மொழி பலவாயின செப்பம்

பிறந்தது முத்தியெய்தும் வழிபல வாயவிட்டொன்றா

யது வழு வா நரகக் குழிபல வாயின பாழ்பட்டன

குளிர் நீர்ப் பொருநை சுழிபலவாயொழு குங்குரு

கூரெந்தை தோன்றலினே ”

செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளியவோதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே ” என்று தேசிகப் பிரபந்தத்தில் வருவன ஈண்டு நினைவு கொள்ளத்தக்கன.

குறிப்பாகக் ” குரு கூரெந்தை தோன்றலின் மொழிபலவாயின செப்பம் பிறந்தது., முத்தி யெய்தும் வழிபல வாயவிட்டொன்றாயது ” என்பதும் ” செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளியவோதித் தெளி யாத மறை நிலங்கள் தெளிகின்றோமே ” என்பதும் பெரிதும் இன்பம் பயன்பனவாகும்.

மறைகளுக்கெல்லாம் வித்தாயும் விளைவாயும் உள்ள பிரணவத்தின் பொருளை இறைவனுக்கு முருகர் தமிழில் கூறினார் என்னும் கருத்து,

” கொன்றைச் சடையாற் கொன்றைத் தெரியக் கொஞ்சித் தமிழாற் பகர்வோனே

என்று திருப்புகழில் காணப் பெறுகிறது.

கூடலில் தமிழாய்ந்த சிவனைப் போல முருகரும் முத்தமிழை ஆயும் வரிசைக்காரராகப் போற்றப் பெறுகிறார்.

மேற்கூறியனவற்றால் வீடுபேற்றுக்குத் தமிழை வழியாக நம் முன்னோர்கள் கொண் டார்கள் என்பது விளங்கும்.

நம் மொழியைப் பற்றி விரிவான விஞ்ஞான முறையில் ஆராய்ச்சி மேல்நாட்டில் பல ஆண்டுகளாகவும், நாட்டில் சில ஆண்டுகளாகவும் நடந்து வருகிறது.

மொழிகளின் ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராய்வதோடு தனிப்பட்ட முறையிலும் ஒரு மொழிக்கு என்ன சிறப்பு உளது என்று பார்ப்பது நலம்.

உலகியல் நுகர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் மொழி ஏற்பட்டதா ? புறப் பொருள்கள் அல்லது வேற்று நிலை உண்மைகள் ( Abstract truth ) பற்றி விஞ்ஞான முறையில் விளக்கம் தரவும் மொழிக்கு ஆற்றலுண்டா ?

மற்றும், அகவுணர்வுகளையும் புலன்களுக்கு எட்டா உண்மைகளையும் தெரிவிக்க மொழி உதவுமா ?

உதவுமெனின் விஞ்ஞான முறைக் கட்டுப்பாட்டுடன் அவ்வாறு செய்யமுடியுமா ?

இன்றேல் அவற்றின் மெய்ம்மை பொய்ம்மைகளை எவ்வாறு பிரித்தறிய முடியும் ?

இன்னபல கேள்விகள் தற்கால மெய்யுணர்வியலில் மொழி பற்றி எழுகின்றன.

பண்டிதமணி அவர்கள், வேற்றுமொழிகட்கில்லாச் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய அழகுகள் இத் தமிழ் மொழிக்கண் மலிந்திருத்தலின் இச் சொற் பொருள் நச்சினார்க்கினியர் கண்ட அவ்விடத் தினும் இங்கு மிகவும் இயைபுடைத்தென்பது நன்கு விளங்கும் ” என்கிறார்கள்.

சுருங்கச் சொல்லல் ( Brevity ), விளங்கவைத்தல் ( Lucidity ) இவற்றுடன் கருக்காகச் சொல்லல் ( Precision ) என்பதும் விஞ்ஞானத்திற்கு மட்டுமின்றி மெய்யுணர்வியலிலும் சமய இயலிலும் வேண்டற் பாலன.

ஆயினும் வெறும் அறிவு நிலைத் தெளிவுடன் நின்றுவிடாது உள்ளத்தை உருக்கும் தன்மையும் மொழிக்கு அமையவேண்டும்.

பகுத்துணர்வுக்கு விஞ்ஞான முறை தேவைப்படுவது போலத் தொகுப்புணர்வுக்கு உள்ளுணர்வு முறை வேண்டற்பாலதாகிறது.

இவை ஒன்றற்கொன்று மாறுபட்டவையாகக் காணப்படுவதால், இரண்டின் நலத்தையும் ஒருங்கே எவ்வாறு ஒரு மொழியில் பெற முடியும் ?

அறிவு விளக்கம் தருகிற ‘ தெள்ளு தமிழ் பாடத் தெளிவோனாக ‘ முருகர் கூறப்படுகிறார்.

உளத்தின் உருக்கமும் தமிழுக்கு உண்டென்பது திருவாசகத்தைப் பற்றிச் சிவப்பிரகாசர் முதலியோர் கூறுவனவற்றால் அன்பர்களுக்குத் தெரியும்.

திருவாசகத்தைப் பாராட்டுவது போலவே திருவாய் மொழியையும் அறிஞர்கள் பாராட்டுவதற்கு எடுத்துக்காட்டாக, “உயிர்த்தாரையிற்புக்குறு

குறும்பாமொரு மூன்றனையுஞ் செயிர்த்தார் குருகைவந்தார்

திருவாய்மொழி செப்பலுற்றால் மயிர்த்தாரைகள் பொடிக்குங்

கண்கணீர் மல்குமாமறையுள் அயிர்த்தா’ ரயிர்த்த பொருள்

வெளியா மெங்களந்தணர்க்கே” எனக் கம்பர் கூறுவது நினைவுக்கு வருகிறது.

பண்டைக் கால முதல் தமிழ்மொழியின் பெருமை பலவாறாகப் பாராட்டப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் மொழி ஆராய்ச்சியில் அதன் சிறப்பு, எழுத்துக்களின் ஒலியால் ஏற்படுவதா ?
சொற்களின் திறனால் உண்டாவதா ? சொற்றொடர்களின் அமைப்பால் விளங்குவதா ?
இன்னபல கேள்விகளுக்கு விடை காண இம் மொழியைப் பிறமொழிகளுடன் ஒப்பு நோக்குவதுடன், இம்மொழியையே உலகியல், விஞ்ஞானம், மெய்யுணர்வு ஆகிய மூன்று நிலைகளின் தேவைகளுக்கேற்ப எவ்வாறு அமைந்துள்ளது என்று ஆராய்வதால் மிகுந்த பயன் உண்டாகும் .அறிவு விளக்கத்தால் உருக்கம் ஏற்படுகிறதா ?

உருக்கத்தால் அறிவு தெளிவு அடைகின்றதா ? ( ‘கண்கள் நீர்மல்க, மாமறையுள் அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம்’ ) அறிவு வழி உருக்கம்-அல்லது உருக்கத்தின் வழி அறிவு என்னும் இவ்வரிய நிகழ்ச்சியை உண்டாக்கும் தமிழ் சித்தர் சித்தத்துறப் பற்றும் தமிழ்’ ‘அருள்மேவ வழியாம் வீறதேறும் தமிழ்’ என்பதனை இக்கால மொழி ஆராய்ச்சியாளர் நிலை நாட்டினால் ‘ என்றுமுள தென் தமிழ் என்பது வலியுறுத்தப் பெறும்.

தொடர்வோம்

பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை

– ஒளவை நடராசன்

thamizhavvai@hotmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *