POST: 2021-04-29T10:59:24+05:30

பெருந்தகை பெ சு மணி(2.11.1933-27.4.2021) வரலாற்றைத் தமிழுலகம் என்றும் பேசி ஆறுதல் பெறலாம் !

பெருந்தகை பெ சு மணி அவர்களை எழுத்துத்திலகம் –
சிந்தனைச்சோலை –
பாரதி சுரங்கம் – வரலாற்றுப்பேரொளி
என்று எத்தனை புகழ்மொழிகளை அடுக்கினாலும் பெ சு மணியின் பெரும்புலமைக்கு அவை பொருந்தும் .

நான் இராமலிங்கர் பணி மன்றத்தில் சேர்ந்த 1966 ஆம் ஆண்டிலிருந்து அவரோடு பழகி வரும் நண்பனாகப் போற்றி வந்தேன் .

சிலம்புச்செல்வரின் சிந்தை கவர்ந்தவராகவும் – பாரதி பாடல்களை – பாரதியார் விழாக்களில் எடுத்த குரலில் பாடி எழுச்சியூட்டினார் .

எதனை எழுதுவது என்றாலும் அகரத்தில் தொடங்கி ஆழத்தின் எல்லை வரையில் சென்று கண்டு தோய்ந்து படைத்தவர் .

அவர் செல்லாத நூலகங்கள் இல்லை .
சேர்த்து வைக்காத குறிப்புக்கள் இல்லை .

பாரதியார் பாடல்களுக்கு விளக்கம் எழுதியதோடு – வ வே சு ஐயர் கட்டுரைகளைத் தொகுத்தவரும் , விடுதலைப் போராட்ட வீரர்களின் குறிப்புக்களைத் தேடித்தேடி எழுதியவரும் ,

அறிஞர் வெ சாமிநாத சர்மா நூல்களை மீளக்கொண்டு வர முயன்றதையும்
இலங்கை சென்று விபுலானந்த அடிகளின் எழுத்தோவியங்களைத் தொகுக்கச்செய்த பெருமையும் அவருக்கே வாய்த்த தனித்திறமையாக மிளிர்ந்தன

.
தமிழகத்தின் பழைய வரலாற்றைத் தேடிக்கண்டறிய வேண்டும் என்பதற்காக ” விடுதலை ” நூலகத்தை அவர் எத்துணை அளவு பயன்கொண்டார் என்று ஆசிரியர் வீரமணி அவர்களே அவருடைய நடுநிலைப் பாங்கைப் போற்றியதை நான் அறிவேன் .

சென்னையில் இருந்தவரை காலை ஏழு – எட்டு மணியளவில் நாங்கள் தொலைபேசி வழியாக நான் அறியாத பலவற்றை அவர்பால் கேட்டு நெகிழ்ந்தேன் .

நாம் இருவரும் ஒருவகையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் .
உங்கள் மாமனார் ஆதம்பாக்கத்தைச் சார்ந்தவர் .
என் ஊர் பெண்ணாத்தூர் என்று குறிப்பிடுவார் .

பாரதியார் கருத்துகளைப் பரப்புவதற்காகத் தமிழகத்தில் முதன்முதலில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ” பாரதியார் சங்கம் ” தோற்றுவித்தவர் சுவாமி விபுலானந்த அடிகளே என்று கண்டறிந்து சொன்னவர் .

இராமகிருஷ்ணர் இயக்கத்தில் நரம்போடு நரம்பாகப் பின்னித் திளைத்தவர் .

இன்னும் தம் எடுப்பான குரலில் பாரதியார் பாடல்களை முழங்கியதை என் செவிகள் மீள நினைத்தால் கேட்டுச் சிலிர்க்கின்றன .

ஏறத்தாழ என் அகவையராக வாழ்ந்த அவர் தன் துணைவியாரைப் பிரிந்த துயரத்தைப் சில ஆண்டுகளுக்கு முன்பு பங்கிட்டுக்கொண்டார் .

அறிஞர் பெ சு மணியின் எழுத்துக்கள் இன்றைய இளைஞர்களுக்கு ” கருத்துக்கருவூலமாகவும் ‘ ஆய்வின் அருமை பெருமைகளை வரைந்துகாட்டும் பயனுள்ள பனுவல்களாகவும் அமையும் .

பெருந்தகை பெ சு மணியின் நூல்களை தொடர்ந்து வெளியிட்ட பூங்கொடி பதிப்பகத்தாரையும் நான் நினைவு கூர்கிறேன் .

துயரத்தோடு
ஒளவை நடராசன்
28 4 2021

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *