POST: 2021-05-02T10:37:56+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 57

“ பேரறிஞர் அண்ணா வளர்த்த பேச்சுத் தமிழ் ”

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர்,
மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் இரண்டாமியாண்டு பயிலும் பொழுது பல நூல்களைப் படித்து வந்த பொழுது, பேரறிஞர் அண்ணாவின் எழுச்சியான உரைகளையும், எழுத்து வடிவில் வந்த நூல்களையும், கவினார்ந்த கட்டுரைகளையும், ‘திராவிட நாடு’ பழைய இதழ்களையும் படிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது.

அதுமட்டுமின்றி ‘தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதங்கள்’ மடலங்களாகப் படித்து அருமை நண்பர் ஐ.நா. உயர் அலுவலர் அண்ணன் டாக்டர் கண்ணன் அவர்களுக்குக் கடிதங்கள் எழுதும்போது அண்ணாவின் மேற்கோள்களையே சுட்டிக் காட்டி எழுதும் வழக்கத்தை வளர்த்துக் கொண்டேன்.

24.01.1986 – ஆம் நாளைய குறிப்பேட்டில், பேரறிஞர் அண்ணாவைப் (15.09.1909 – 03.02.1969) பற்றிய திரு. ஏ. கே. வில்வத்தின் குறிப்புகளைப் படித்து வியந்தேன்.

“ ஒரு மொழி வைத்து உலகாண்டவன் நீ ! இன்று வருமொழிக்கெல்லாம் நடை பாவாடை விரித்து நாசமாவதா ? ”

“ தென்னாடு வேட்டைக்காடு, வடநாடு வேட்டையாடுபவரின் நாடு. இதுதான் இன்றைய அரசியல் ஏடு, இதனால் விளைவது மாபெரும் கேடு ! ”

“ இரும்பென்றால் டாடா ! செருப்பென்றால் பாடா !
மருந்தென்றால் தாதா !
துணியென்றால் கிஷன்சந்த் செல்லாராம் !
சிமெண்ட் என்றால் டால்மியா ! நகையென்றால் சுராஜ்மல் ! நவதானியங்களென்றால் ருட்சர் கேவல்சந்த் ! ”

“ சென்னையில் பிறந்தவன் கைவண்டி இழுக்கிறான். சென்னையில் பிழைக்க வந்தவன் இங்கே தனியாக ஒரு வளாகத்தை வளைத்துக் கொண்டான். ”

“ இந்த மண்ணுக்கு உரியவன் நாளெல்லாம் உழைத்து விட்டு நள்ளிரவில் தன் வாயில் அள்ளிப் போடும் ஒரு கவளச் சோற்றில் கலந்திருக்கும் கற்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். ஒண்ட வந்தவனோ இங்கே உப்பரிகையில் அமர்ந்தபடி வைரக்கற்களில் நீரோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறானே, இது என்ன நியாயம் ?

இவ்வளவு பெரிய பேதத்தை வைத்துக்கொண்டு பேசுகின்ற கூட்டங்களிலே எல்லாம் பண்டித நேரு மக்களைப் பார்த்து ‘ ஜெய்ஹிந்த் ! ’ என்று முழக்கமிடச் சொல்கிறாரே, முழக்கமிடவா தோன்றும்? முகாரியல்லவா எதிரொலிக்கும்.”

“ Respected Chairman and my learned friends! I rarely speak in English! But, that does not mean my English is rare and I belong to the Dravidian stock. I am proud of it ”.

“ குழந்தையிடம் அழகான ரோஜா மலரைக் கொடுத்தால், அது சற்று நேரம், அதன் அழகைப் பார்த்து ரசிக்கும். பிறகு, ஒவ்வொன்றாகப் பிய்த்து எறியும். அது போன்றதுதான் இளமைப்பருவம்.”

“ தங்கத்திலே அரிசி செய்து சமைத்து, கோமேதகக் கூட்டும், வைர வறுவலும், முத்துப் பச்சடியும், மோர்க் குழம்பிலே செம்பும் கலந்தா சாப்பிடுகிறீர்கள் ? உங்களைப் போன்ற சிலர் தர்மப் பிரபுவாக வாழ தொழிலாளர்கள் தரித்திரர்களாக இருக்க வேண்டுமா ? ”

“ தமிழ்க் கடவுள் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்தால் ஏற்க மாட்டாரா ? வேண்டுதல் வேண்டாமை இலானாகிய இறைவன், தமிழ் மொழியை வெறுப்பாரா! தமிழா ! உன் மொழியே வேண்டாமென்றால், உன் மொழியிலேயே அர்ச்சனை செய்தால், உன் வேண்டுகோளை ஏற்க மாட்டேன் என்று மறுத்தால், அந்த இறைவனை வழிபடுவதால் என்ன பயன் விளையும் ? ‘தாயினும் நல்லன்’ என்று இறைவனைப் புகழ்கிறீர்களே, அந்த இறைவன், உன் தாய் மொழியான தமிழ் மொழியை ஏற்றுக் கொள்ள மாட்டாரா ? ”

“ வறுமையில் அச்சமின்றி நம் தந்தையர் நம்மைப் பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்பிப் படிக்க வைத்தனர். ஆசிரியர் அடிப்பாரே என்று அச்சமின்றி, நாமும் பள்ளிக்குச் சென்று படித்தோம். ஆகவே, நம் வாழ்க்கையில் வரக்கூடாதது அச்சம். ‘ அச்சமே கீழ்களது ஆசாரம் ’.

அச்சமின்றி வாழ வேண்டுமானால் நெப்போலியன் வரலாற்றைப் படியுங்கள். அச்சத்துக்கு அச்சம் உண்டாக்க வேண்டுமானால் பெரியாரைப் பாருங்கள்.

ஆகவே நீங்கள் அச்சமின்றி வாழ வேண்டும். பிறரை அச்சமின்றி வாழ வைக்க வேண்டும். அச்சம் வந்தால் மிச்சம் எதுவுமிருக்காது. ஆனால், அச்சம் வேண்டும். தீமை செய்ய அச்சம் வேண்டும். இந்த அச்சம், மச்சம் அழகூட்டுவது போல, வாழ்வுக்கு மகிழ்வை ஊட்டும்.”

“ கோலாரிலே தங்கம் கிடைக்கிறது என்றால், பூமியை வெட்டியவுடன் இது பாளம் பாளமாகக் கிடைப்பதில்லை. கல்லை வெட்டி, அதைக் கரைத்து, அரைத்துக் காய்ச்சிய பின்புதான், மின்னும். தங்கத்தை எடுக்கின்றவர்கள் அவ்வளவு துன்பப்பட வேண்டியிருக்கிறது அது போன்றதுதான் சமுதாய சீர்திருத்தப்பணியாகும்.”

“ கொங்குநாடு கேட்காததை; வங்கநாடு கேட்கிறது. ”

பட்டமளிப்பு விழாவில் பேரறிஞர் அண்ணாவின் முடிவுரை வரிகள் பொன்னான வரிகளாக மிளிர்கின்றன.

“ தமிழ் உமது முரசாகட்டும் !
பண்பாடு உமது கவசமாகட்டும் !
அறிவு உமது படைக்கலனாகட்டும் ! அறநெறி உமது வழித்துணையாகட்டும்…”

அண்ணாவின் புகழ் சூடிய திரைப்பட வசனமாக, ‘ சொர்க்க வாசல் ’ படத்தின் மறக்கவொண்ணா மணிவாசகம்… ‘

சாலையோரத்தில் வேலையற்றதுகள், வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபரீதக் குறிகள்,
வேந்தே ! இதுதான் காலக்குறி.’

‘ புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை இகழ்ந்ததன் பயனே;’ என்பது 202-ஆவது புறநானூற்றுத் தொடராகும்.

புலவரை இகழ்ந்தால், நகரம் அழிந்தது என்பது பொருள்.

அரிய பணிகளைச் செய்யும் புலவர்களை நினைத்து, அண்ணா சொன்ன பொன்வரிகள், “

புலவர்களைப் பழிக்கிறவன் புதைகுழிக்குள் போவான்; புவியில் எங்கிருந்தாலும் அவன் தலையில் இடி விழும் ”.

1942 – ஆம் ஆண்டு, ‘
திராவிடப் பாசறை ’யில் என் பாட்டனார், உரைவேந்தர் ஔவை சு. துரைசாமி எழுதிய வரிகள் இன்றும் பொன்னாய் மிளிர்கிறது.

“ அண்ணாத்துரை ஒருவர் போதாது, பல அண்ணாத்துரைகள் வேண்டும்.

அவருடைய பரந்த அறிவு பல கோளாறுகளை ஆணிவேரோடு அகழ்ந்தெறிய முற்பட வேண்டும்.

அச்செயற்கு அரணாக அஞ்சாமையும், ஆண்மையும் செறிந்த அடல் மிக்க இளைஞர்கள் படை திரள வேண்டும்.

அவர்கள் வாய்ப்பறையாக நாக கடிப்பாக, எல்லோருடைய செவியிலும் அறிவுக் கருத்துரைகள் சென்று முழங்க வேண்டும்.

அதன் விளைவாக, தலைசிறந்த தமிழரது வாழ்வாக சீரிய, கூரிய தீஞ்சொல் அருஞ்செல்வமாக, அணிகலனாக நம் அண்ணா மிளிர்கிறார். ”

சென்னைப் பல்கலைக்கழகத்தில், 1986 – ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி மூன்று நாள் அறக்கட்டளைப் பொழிவில் எந்தையார் உரையாற்றியபொழுது, பெருங்கூட்டமாக ஆயிரக்கணக்கில் ஆர்வலர்கள் வந்து கேட்டதை நானும் கண்டு மகிழ்ந்தேன்.

அக்கூட்டத்தில் ‘
உரை உலகம்’,
‘கலை வானம்’, ‘
கருத்துக் கடல்’
என மூன்று பொருண்மைகளில் நயம்பட உரைத்தார்கள்.

உரையினூடே ஆங்கிலத்தில் அப்பா அண்ணாவைப் பற்றிச் சொன்ன வரிகள் இன்னும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளன. “

The Dravidian Demosthenes has inaugurated a new era of Tamil eloquence which is original and wonderful, but, unorthodox…”.

அவ்வண்ணமே, பேரறிஞர் அண்ணா தமது பேச்சில் பயன்படுத்திய சில தொடர்கள் மட்டுமே சாசன வரிகளைப் போல சாகாமல் இருக்கின்றன என்று சொல்லி அத்தொடர்களை அப்பா அடுக்கிச் சொன்னபோது, கூட்டத்தில் ஆரவாரமான கையொலி அடங்க நெடுநேரமாயிற்று.

தீ! பரவட்டும்.

தம்பி வா ! தலைமை தாங்க வா!

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

எங்கிருந்தாலும் வாழ்க !

வாழ்க வசவாளர் !

ஏழை – கோழையல்ல – எரிமலை.

சாமானியர்களின் சகாப்தம்.

நாம் பலர் – அவர்கள் சிலர்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.

தம்பியுடையான் படைக்கஞ்சான்.

கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு.

பணிவு – துணிவு – கனிவு.

கட்டிமுடித்த கோபுரம் – கொட்டிக் கிடக்கும் செங்கல்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு.

மறப்போம் மன்னிப்போம்.

நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்.

வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது.

கேட்டுப் பழகிய கை – போட்டுப் பழகிய பை – சொல்லிப் பழகிய பொய்.

Revolution – not by bullets, but by ballots.

Determination ever – deviation never.

Tap the rich and pat the poor.

Your days are numbered என்று அண்ணாவைப் பார்த்துச் சொன்னவுடன், அண்ணா சொன்ன பதில், ‘ My steps are measured ’.

அண்ணாவின் சீர்திருத்தக் கட்டுரைகள் ‘வால்டேர்’ எழுதியதற்கு நிகராகும்.

அண்ணாவின் நாடகங்கள் ‘மோலியர்’ நாடகங்களுக்கு நிகராகும்.

அண்ணாவின் சிறுகதைகள் ‘ஓ ஹென்றி’, ‘மாப்பசான்’ சிறுகதைகளுக்கு நிகராகும்.

அண்ணாவின் நீண்ட கதைகள் ‘விக்டர் யூகோ’க்கு நிகராகும்.

அண்ணாவினுடைய பேச்சு ‘மார்க் ஆண்டனி’, ‘எட்மண்ட் பர்க்’, ‘ஆபிரகாம் லிங்கனுக்கு’ நிகராகும்.

தன்னுடைய உரையின் இறுதியில், அண்ணாவின் எழுத்துகளை எண்ணினால், ஒரு இலட்சம் பக்கங்களுக்கு மேலாகவும், பதிப்பித்தால் அறுபது தொகுதிகளாகவும் வெளியிடலாம் என்று வலியுறுத்தினார்.

அதனை அண்மையில், தமிழ்மண் பதிப்பக நிறுவனர், இளவழகனார், அண்ணா அறிவுக்கொடை 110 தொகுதிகளாகத் திட்டமிட்டு, இதுகாறும் 64 தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

அந்த மூன்றுநாள் உரையையும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்து எழுத்து வடிவமாக்கியவர் இலக்கியத் தூதுவர் சிவகுமார் ஆவார் ( 02.05.1986 ).

அவ்வுரையைத் தொகுத்து, திருமகள் நிலையத்தார் ‘அண்ணா’ என்ற தலைப்பில் நூலாக (முதல் பதிப்பு – ஆகத்து, 1986; இரண்டாம் பதிப்பு – நவம்பர் 1989) வெளியிட்டார்கள். இன்றைக்கு அந்த நூல்படி ஒன்றுகூட மிச்சமில்லை.

அப்பாவுடன் எந்நேரமும் நிழலாக மிளிர்ந்தவர் திருவையாறு சிவகுமார்.

அவர்தான் முதன்முதலாக ஸ்ரீராம் நிறுவன இயக்குநர்களான, திருமதி வத்சலா அரங்கநாதனையும், திருமதி அகிலா சீனிவாசனையும் அப்பாவிடம் அறிமுகம் செய்து, பாரதியாருடைய இலக்கியப் போட்டிகளை ஸ்ரீராம் நிறுவனம் நடத்துவதற்குத் துணை நின்றவராவார்.

தமிழக அரசின் வேளாண் துறையில் 38 ஆண்டுகளாக பணியாற்றிய ‘பாரதிமணி’, 1975 முதல் சென்னை பாரதி இளைஞர் சங்கத்தின் இணைச் செயலாளராகவும், பொறுப்பாளராகவும் பொறுப்பு வகித்து ஆண்டுதோறும் திசம்பர் 11 முதல் ஏழு நாள்கள் பாரதியார் பிறந்த நாள் விழாவை சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடத்தினார்.

‘வீட்டுக்கு வீடு பாரதி’ திட்டத்தின்படி, ஒவ்வொரு இல்லத்திலும் பாரதியார் படத்தைத் திறக்க ஏற்பாடு செய்த பெருமையும் ‘இலக்கியத் தென்றல்’ சிவகுமாரைச் சாரும்.

முன்னாள் முதல்வர் பக்தவத்சலம், முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம், கவிஞர் எஸ். டி. சுந்தரம்,
புரட்சித் தலைவர்,
திரு. ஜி. கே. மூப்பனார், இல்லங்களிலும்,

1977ஆம் ஆண்டு தமிழக ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி தலைமையில் ஆளுநர் மாளிகையில் பாரதியார் படத்தைத் திறப்பதற்கும்,

உதகையில், ‘காக்கைக் குருவி எங்கள் ஜாதி’ என்னும் பாரதியார் பாடலைச் சலவைக்கல்லில் அரசு சார்பில் பதிக்கவும்,

1980 இல் கங்கை நதிக்கரையில் ‘அனுமன் காட்’ பகுதியில் ‘இன்னறு நீர் கங்கை ஆறு எங்கள்’ என்ற பாரதியார் பாடலை கல்வெட்டில் பதித்து கங்கைக் கரையில் நிறுவுவதற்கும் துணை நின்றார்.

‘அவருடன்பாரதி காவலர்’ இராமமூர்த்தி ஆற்றிய பணிகள் ஒப்பற்றவை.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாவேந்தர் பாரதிதாசனைப் பற்றிய அறக்கட்டளை உரையை அப்பா ஆற்றியதை திருவையாறு சிவக்குமார் பதிவு செய்தார். ஆனால், என்ன காரணமோ ! அப்பதிவு நூலாக மலரவேயில்லை !

‘பாரதி பணிச் செல்வர்’ சிவகுமார் கருநிற மேனியும், சிரித்த முகமும், வெற்றிலைச் சிவப்பும் மணக்க மணக்கப் பேசும் நல்லன்பர்பால் பல கல்லூரி மாணவிகள் ஈர்க்கப்பெற்று அவரின் அன்பால், பண்பால் அக்காலங்களில் அவரின் வழிகாட்டுதலில் மேடைகளில் வீசிய மெல்லிய தளிர்கள் இன்றைக்குப் பாட்டிமார்களாக பெருமிதமாக வாழ்கின்றனர்.
——
பத்துப்பாட்டில் மனம் பற்றுக !

உரைவேந்தரின் உரைத் தொடர் – (ஏ)

திருமுருகாற்றுப்படை தொடர்ச்சி

கடல் நிலவுலகைச் சூழ்ந்து நிற்பது; அந் நிலவுலகு தோன்றுதற்கு முன் தோன்றிய தொன்மையும் இதற்குண்டு;

இதனால் இது பார்முதிர்கடல் எனப்படுகிறது.

இஃது எப்போதும் நீரறாத நிலையமாதலின் இதனைப் பனிக்கடல் என்றார்.

அளக்கலாகாத ஆழத்தால் நீலநிறங்கொண்டு தோன்றும் இதன்கண் விடியற்காலத்தில் செஞ்ஞாயிறு தோன்றுவது, நீலமயிலின்மீது செம்மேனியனாகிய முருகன் – காட்சியளிப்பது போன்றிருக்கும்.

இதன் நலங்கண்டே இந்நூல், ”ஞாயிறு கடற்கண்டாங்கு ஓவற இமைக்கும். சேண்விளங்கவிரொளி” எனக் கூறுகிறது.

எத்துணைக் கலங்கள் படரினும் காற்றுத் திரண்டு மோதினும் கலங்காத இக்கடல், முருகன் சூர்மருங்கறுத்தற்கு உள்புக்கபோது கலக்க மெய்திற்றென்றார், கலங்காத கடலையும் கலக்கின முருகன் சூர் மருங்கறுப்பது அருமையானது என்பதற்கு. அதனை அவன் படைமேலேற்றிச் ‘சூர் முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்’ என்றார்.

முகில்கள் நிலவுலகிற் பரந்து சென்று பெய்யும் மழைநீர்க்கு முதல் இக்கடலே; இதுபற்றியே இது கார்கோள் எனவும் சிறப்பிக்கப்படுகிறது.

கணவீரம் என்பது செவ்வலரிப் பூவுக்குப் பெயர் ; இப்பூ பெருமையும் தட்பமும் உடையது; இதன் நறுமணம் குறித்துக் குறவர் முருகனைப் பரவுமிடத்தே, மாலையாகக் கட்டி வழிபடு களத்தை ஒப்பனை செய்கின்றனர்.

களிற்றின் பெண்ணினம் பிடி எனப்படும். அது களிறு போலக் கொம்புடைய தன்று. இக் களிறும் பிடியும் அருவிவீழும் மலைச்சாரற் காட்டில் காணப்படுகின்றன.

அருவியின் தட்பத்தால் பிடியானை குளிர்மிகுந்து நீங்குகிறது.

ஆமா என்பது காட்டுப் பசுவகை; இதன் ஏறு வலிய கோடுகளையுடையது; காட்டில் கொடிய பகைவிலங்குகள் பலவாதலின், அவற்றோடு பொருதற்கென அமைந்திருத்தலின், ஆமா ஏற்றின் கோடுகள் வலியுடைய வெனச் சிறப்பிக்கப்படுகின்றன.

“கருங்கோட்டு ஆமா நல்லேறு” என்பது காண்க.

இறால் என்பது தேனடை; வானளவே உயர்ந்த மலைப்பாறைகளில் தேனீக்களால் கட்டப்பெற்றிருக்கும் தேனடை இப்பாட்டில் இடம்பெறுகிறது; நெடிதுயர்ந்து நீனிறங்கொண்டு தோன்றும் நெடுவரையில் தேனிறால் தன் பொன்னிறத்தால் ஞாயிற்று மண்டிலம் போல் காட்சித் தருகிறது.

உளியம் என்பது கரடியைக் குறிப்பது. இதன் உடல் மயிர் மேலே கருமையும் தோலடியில் வெண்மையும் கொண்டு உள்ளே அடியில் வெளுத்து மேலே கருத்துத் தோன்றும் பனைச்செறும்பை ஒத்திருக்கும். கரடியின் அடி உள்வளைந்து காணப்படும்.

முடிப்புரை:-

இறுதியாக ஒன்று கூறி இச்சொற் பொழிவை முடிக்கின்றாம்;

பரங்குன்றில் உறைதலும், அலைவாயிற்சேறலும், ஆவி நன்குடியில் அசைதலும், ஏரகத்து உறைதலும், குன்றுதோறும் விளையாடலும் முருகன் செய்யும் செயல்வகையென இம்முருகாற்றுப் படை மொழிகின்றது.

உறைதற்கு இரண்டிடமும் பிற செயல்கட்கு முறையே ஒவ்வோரிடமும் கூறப்படுகின்றன.

அசைதல் என்பதற்கு உரைகாரர் இருத்தல் என்றே உரை கூறுகின்றார்.

எனினும், முருகாற்றுப்படை கூறுவதையே கொண்டால் உறையுமிடம் பரங்குன்றும் ஏரகமும் என்ற இரண்டுமேயாம்.

உறையுமிடத்து, பரங்குன்றில் அமர்ந்துறை வன் என்றும் ஏரகத்தில் பெரிதுவந்து உறைவன் என்றும் நக்கீரர் சிறப்பித்துக் கூறுவது குறிக்கத்தக்கது.

ஏரகத் தில் உவந்து உறைவதுபோலவே பரங்குன்றில் அமர்ந்த துறைவன் என்பதனால் ஏரகத்தில் அவன் உவத்தற்கேற்ப இருபிறப்பாளர் வழிபாடு செய்யக் காண்பதுபோலும் வழிபாடொன்று பரங்குன்றிலும் நிகழ்வது பெறப்படும்.

ஆனால், பரங்குன்றில் அகன் வயலில் மலர்கள் மலர் தலையும் வண்டினம் தேனுண்டு கிடந்து சென்று சுனைமலரைச் சூழ்ந்து ஒலித்தலையும் காண்கின்றோம்.

வண்டின் நிகழ்ச்சியில் வழிபாடொன்று உள்ளுறுத்தப்படுவது இதனால் உணரப்படுகிறது.

அவ்வழிபாடு யாது? தாமரையைச் செல்வர் மனையாகவும், தாமரையில் துஞ்சிய வண்டினைச் செல்வராகவும், வைகறையில் நெய் தலை யூதுவது செல்வர் வைகறையில் எழுந்து நீராடிச் செல்வதாகவும், அவ்வண்டினம் சுனைமலரை யடைந்து ஒலிப்பதைச் செல்வர் பரங் குன்றடைந்து முருகனை வழிபடுவதாகவும் கொண்டால், மதுரை மாநகரிடத்து வாழும் செல்வப் பெருமக்கள் நாட் காலையில் எழுந்து நீராடிப் பரங்குன்றம் சென்று முருகப் பெருமானை வழிபடக் கண்டு அவன் அங்கே அமர்ந்து உறைகின்றான் என்பது புலனாகிறது.

ஆகவே, ஏரகத்தில் முத்தீச்செல்வர் வழிபாடும் பரங்குன்றில் மதுரைச் செல்வர் வழிபாடும் நிகழ்வது காணலாம்.

மேலும் முருகனைத் தேவரும், முனிவரரும் பதினெண் கணங்களும், எண்வகை வசுக்களும் மக்களுட் செல்வரும் இருபிறப்பாளரும் குறவரும் வழிபடுவதும், மகளிருள் சூரர மகளிர் முதல் குறவர் மகளிர் ஈறாகப் பலரும் வழி படுவதும், உயர்ந்தோர்க்குப் பரங்குன்றம் முதலிய இடங்களில் எழுந்தருளி அவர் செய்யும் வழிபாட்டையேற்று உவந்தருளும் முருகன், குறவர் வெறியயர்களத்தும் குற மகளிர் குரவைக் கூத்தாடுமிடத்தும் எழுந்தருளி அவர் மகிழக் கலந்து தலைக்கை தந்து விளையாடுவதும் காணும் நமக்கு முருகப்பெருமான் எளியார்க்கெளியனாய் எழுந் தருளி இன்பம் அளிக்கும் இனிய பெருமான் என்பது தோன்றி ஊக்கம் தருகிறது.

இவ்வாறு அறிவுக்கு இன்பமும் வழிபாட்டில் ஊக்கமும் பயக்கும் காட்சிகள் பலவற்றை இம் முருகாற்றுப் படை நமக்கும் காட்டி உலகியல் வாழ்வின் புன்மையையும் சொல்லோவியம் செய்து மெய்யுணர்வுப் பேற்றின்கண் நம்மை ஈடுபடுத்தி நிற்கிறது.

புறக்காட்சிகளால் நம் உள்ளத்தைக் கவர்ந்து அகக்காட்சிகளால் முருகனுடைய திருவருட் காட்சிகளைக் கண்டு இன்புறுவித்து அவற்றின் வாயி லாக நம்மை முருகன் திருவடிக்கண் ஆற்றுப்படுத்தும் பெருமை வாய்ந்த திருமுருகாற்றுப்படையின் நலம் ஆயுந்தோறும் இன்பந் தரும்
இயல்பிற்றென்பது தெளிவாம்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *