POST: 2021-05-04T10:14:30+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 84

அறிவியல் நோக்கும் – அமைந்த போக்கும் !

முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்

ஒரு கவிஞர் என்ன நடக்கிறது என்பதை விரிவாகச் சொல்லத் தேவையில்லை , ஒலிக் குறிப்பிலும் ஓசைச்சிறப்பிலுமே நிலையை உணர்த்துவார் .

பந்தாடுகிற மகளிரைக் குறிக்கிற சிலப்பதிகாரப் பாடற்பகுதியும், உறங்குகின்ற கும்பகர்ணனை எழுப்பும் கம்பராமாயணப் பாடலும் சான்றுகள் என்று பாராட்டுவார்கள் .

கற்பனை இன்றேல் கவிதை இல்லை.
அதையே தான் ‘ உள்ளதைச் சொல்வது அறிவியல்; உள்ளதை உணர்ந்து சொல்லுதல் இலக்கியம்’ என்கிறோம்.
உணர்ந்து சொல்கிறபோது கற்பனை கூடவே சேர்ந்து கொள்கிறது.
தமிழில் கவிதை வரும்; கற்பனை வரும்; அறிவியல் வருமா ? என்றும் சிலர் கேட்கிறார்கள். அறிவியலைச் சொல்லித் தர இயலுமா ? என்பது அவர்களது கேள்வி.

தங்களால் இயலாததைச் சில பேர் தமிழால் இயலாது என்று கருதிடவும் பேசிடவும் காண்கிறோம். அது தவறு.

ஒரு மொழி ஒரு துறையில் பயன்படுத்தப்பட்டால் தான், அதற்குரிய கலைச்சொற்கள் வரும்.

உதாரணத்திற்கு, ‘காஸ்மோநாட்’ என்ற ஆங்கிலச்சொல் எப்போது வந்தது ?

ஆங்கிலம் விண்வெளித்துறையில் பயன்படுத்தப்பட்ட பிறகு தானே வந்தது ?

அதுபோலத்தான் தமிழும் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட வேண்டும்.

இதைத்தானே 1913 – ஆம் ஆண்டில் கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் ‘

நீரில் இறங்குகிற வரை நீச்சல் வராது’ என்று குறித்தார்கள் !

தமிழில் மருத்துவம் உண்டு; மருந்தியலும் உண்டு. சித்த மருத்துவத்தின் சிறப்பினைச் செர்மானியர் உணர்ந்த அளவிற்கு நாம் உணர்ந்தோமில்லை.

‘ஆடாதோடை’ என்ற நம் மூலிகை வெளிநாடு சென்று மருந்தாகி, ‘இளைப்பிருமலுக்கு இதுதான் அருமருந்து’ என்று வந்ததால் தானே பாராட்டி வாங்குகிறோம் !

மூலிகை – அவற்றின் குணம் – பயன்பாடு – அனைத்தும் அடங்கியது சித்தர்களின் இலக்கியக் கருவூலம். காணக்கிடைக்காத காட்டு மூலிகைபோல, எத்தனையோ மருத்துவ முறைகள் தமிழ் இலக்கியத்தில் உண்டு.

தமிழில் அறிவியல் கருத்துக்களும் இல்லாமல் இல்லை.

‘ வலவன் ஏவா வானவூர்தி’ என்பதில் ‘விமானம் ஓட்டுதலைப் பற்றிய அறிவியல் சிந்தனை’ வெளிப்படுகிறது. ‘

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி’ என்ற ஔவையார் பாடலில் பாஸ்கல் விதி வெளிப்படுகிறது.

‘அணுவைப் பிளந்து’ என்று வருகிறவரியில் அணுவைக் கூறிடலாம் என்கிற குறிப்பு மேலோங்கி வருகிறது.

‘செஞ்ஞாயிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்’ என் பதில் வானவியலில் வளர்ந்தமைந்த அறிவு புலப்படுகிறது.

குறுந்தொகையில் வருகிற ‘சேமச்செப்பு’ என்கிற சொற்றொடரில் ‘தெர்மாஸ் பிளாஸ்கின்’ தத்துவம் தெரிகிறது.

இப்படி வேதியியல், விலங்கியல் மாத்திரமல்ல – தமிழில் தாவரயியல், புவியியல், வானவியல் ஆகியனவும் ஒளிந்திருப்பதைக் காணுகிறோம்.

பழமைக்குப் பழமையான மொழி தமிழ் என்றால், புதுமைக்குப் புதுமையான மொழி தமிழ்.

அப்படிப்பட்ட ‘ என்றுமுள தென் தமிழுக்குத்தான் இன்று மாநாடு நடக்கிறது.

இந்துக்கள் ( வைணவர்கள், சைவர்கள், முதலானோர் ), சமணர்கள் பௌத்தர்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் – இப்படி எல்லாச் சமயத்தவர்களாலும் வளர்க்கப்பட்ட தனிப்பெருமை தமிழுக்கு மாத்திரமே உண்டு.

இது ஆங்கிலத்திற்கும், உலகிலேயே அதிகம் பேர் பேசுகின்ற சீன மொழிக்குங் கூட, இல்லாத பெருமையாகும்.

நெஞ்சிருக்கும் வரை நினைவிலிருக்கிற ஒரு பெருமை தமிழுக்கு என்னவெனில் – தமிழிலே கவிதை பாடியவர்கள் எந்தக் கவிப்பரம்பரைக்கும் வழி வழியாகச் சொந்தக்காரர்கள் அல்லர்.

வணிகர்கள், வள்ளல்கள், அரசர்கள், ஆளப்பட்டோர், கணக்கர்கள், கற்றறிந்த பெருமக்கள், இப்படி எல்லாத் தரப்பினரும் தமிழுக்கு அணி செய்தனர்.

இதுவே தமிழ் மொழிக்கு அமைந்திருக்கிற தலையாய சிறப்பு என்று நான் கருதுகிறேன்.

இத்தகைய தமிழுக்கு மாநாடு நடக்கிறது என்பதிலே தமிழர்களாகிய நாமெல்லாம் பூரிப்பும் பெருமையும் அடைகிறோம்.

உலகளாவிய பொது நெறித் தத்துவங்களை உடையது தமிழாகும்.

தமிழர்களின் நாகரிகமோ தொன்று தொட்ட ஒன்றாகும்.

உலக வரலாற்றினை உணர்ந்து பார்த்தால் – ஏறத்தாழ 1900 ஆண்டுகளுக்கும் முன்னர்-மேற்கில் டிராஜன் என்பவனது ஆட்சிக்காலத்தில் உரோமாபுரிப் பேரரசு உச்ச நிலை அடைந்திருந்தபோது – கிழக்கில் பசிபிக் சமுத்திரத்திலிருந்து காஸ்பியன் கடல் வரை – அட்லாஸ் மலைகளிலிருந்து இமாலயக் தொடர்வரை சீனப் பேரரசு எழுந்து சிறந்த போது, ஆழ்ந்த கருத்தமைந்த அழகான கவிதைகள், சிறந்த, உயர்ந்த- இலக்கியத் தகுதிகளோடு பாடப் பட்டுள்ளன என்பதனை உணருகின்றோம்.

கிரேக்க -உரோமானிய இலக்கியத்தின் இதிகாச காலம், சீனத்தின் உன்னத நேரம், போலவே சங்ககாலம்- தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று கருதப்படுகிறது.

அப்படிச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மரபிலே தான் — சங்கம் கண்ட சரித்திரப் புகழ்பெற்ற மதுரை மூதூரில்தான்- ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெறுகின்றது.

அகம், புறம் என்று இலக்கியத்தின் கூறுகளைக் காட்டி, களவியல் கற்பியல் என்ற பிரிவுகளையும் நிலை நாட்டி நிற்பது தமிழ் இலக்கியம்.

மற்ற மொழிகள் காதலுக்கு இலக்கியம் படைத்திருக்கலாம்; தமிழ்மொழியோ காதலுக்கு இலக்கணம் கண்ட மொழி. அந்த மொழிக்குத்தான் – மூவாத-மூத்தும் முதிராத – தமிழுக்குத்தான் – இப்போது மாநாடு நடக்கிறது.

புதுமைக் கருத்துக்கள் மாத்திரமல்லாமல்- உலகம் அளாவிய பொதுமைக் கருத்துகளும் அடங்கியது தமிழ் இலக்கியம் என்று மொழிந்தால், அது மிகையாகாது.

‘ யாதும் ஊரே; யாவரும் கேளிர் ‘ என்ற கணியன் பூங்குன்றன், ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்று எடுத்துச் சொன்ன திருமூலர், தமிழில் எழுதப்பட்டும், ‘தமிழ்’ என்று கூட எங்குமே பேசாமல் மனித குலத்திற்கே பெருவிளக்காக எழுந்து வழிகாட்டும் ஏற்றமிகு தமிழாசான் திருவள்ளுவர் போன்றோரால், தமிழ் இலக்கியம் உலக அரங்கிலே இடம் பெறுகிறது.

புத்தம் புதிய புரட்சிக் கருத்துகளுக்குத் தமிழிலே என்றுமே வாய்ப்பு உள்ளது .

தமிழ்மொழியின் வேர்கள் பழமையானவை. ஆனால் அதன் பூக்கள் புத்தம் புதியவை.

‘ தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் ”
என்ற பாரதியாரின் பாட்டு வரிகளுக்குப் புகழ் சூட்டும் வகையில் உலகத்தமிழ் மாநாடு நடக்கிறது.

வருமானம் தேடும் வழிக்காக மாத்திரமே ஒரு மொழி பயிலப்படுகிறது என்ற நிலையில்லாமல் இலக்கியச் செழுமைக்காகத் தமிழ்மொழி பிற நாடுகளிலும் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

பிற நாட்டுப் பல்கலைக் கழகங்களிலெல்லாம் தமிழுக்கென்று ஆய்வுத் துறைகள் தோன்றுவதற்கு அரசின் முயற்சி மாத்திரம் போதாது. தமிழின் பால் பற்றுடைய பலரது முயற்சிகளும் இதிலே இணைந்தாக வேண்டும்.

எல்லாமே தமிழில் உண்டு என்பதும், தமிழில் எதுவுமே இல்லை என்பதும் ஆகிய இரண்டும் மிகைக் கூற்றாகச் சிலருக்குப் படலாம்.

தமிழில் இருப்பதைப் பெருக்க வேண்டும்; இல்லாததை உருவாக்கவேண்டும்.

இதுவே நமது மொழி வளர்ச்சிக் கொள்கையாக அமைந்திட வேண்டும்.

இந்தச் சூழ்நிலைகளிலும் நமக்கு நம்பிக்கை தருகின்ற ஒன்று, நமது அரசு மேற்கொண்டுள்ள எழுத்துச் சீர்திருத்தமாகும்.

பேரறிஞர் அண்ணாவின் வழியில், தடை பல கடந்து, அவர் காட்டிய இலட்சியப் பாதையில் நடைபோட முற்படுகிறோம் .

அண்ணா நினைவாக எழுச்சிப் பணிகள் ஏராளம் இதுவரை நடைபெற்றிருந்தாலும், மதுரையிலே நடைபெறுகிற மகத்தான இந்தத் தமிழ் மாநாடு, அவர் நினைவிற்குப் பெரும் புகழைச் சேர்க்கிற பணியாக மிளிர வேண் டும் என்று புரட்சித்தலைவர் படித்த கட்டுரை முடிந்தது .

மக்கள் திரளாக நின்று எழுத்துப் படிகளை வரிசையில் நின்று வாங்கினர் .

தமிழின் பெருமையைப் பேசினாலும் , நமக்குப் பலநிலைகளில் இடுக்கண்கள் அடுக்கி வந்தபடி தான் .அறிஞர்க்கு அறிஞராகவும் – அறிவியல் மேதையாகவும் – மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகவும் புகழோங்கிய மாமணி டாக்டர் வா செ குழந்தைசாமி அவர்கள் பாரதியார் பாடலை வரைந்து காட்டி அதனைத் தொடர்ந்து

விதியே, விதியே, தமிழச் சாதியை…?

“விதியே, விதியே தமிழச் சாதியை
என்செயக் கருதி இருக்கின்றாயடா”

என்றொரு கேள்வியை எழுப்பினன் பாரதி
தென்றலும் புயலும் சேர்ந்த சிந்தையன்

மின்னணு மிஞ்சிய வேகமும் வலிமையும்
என்னருந் தமிழ்மொழிக்கேற்றிய பாவலன்

விதியெனும் பாவியின் வினை நமக் கெதிராய்ச்
சதியென மாறும் சாத்தியம் பற்றி

அஞ்சினன் போலும்; அன்றே தன்னுடை
நெஞ்சொடு வாதம் நிகழ்த்தினன்

என்று எழுதிய கவிதை வரிகளை இங்குச் சுட்டிக்காட்ட விழைகிறேன் .

நாடிய துணையை, நடந்த பாதையை,
தேடிய இலக்கை, சேர்ந்துள தலத்தை
எண்ணினன்: முன்னாள் எம்மவர் அடைந்த
ஒண்ணிய பெருமைகள் என் உளத்தில் தோன்றின

பேரர சாகப் பிறங்கிய மூவர்தம் வாரிசாய்
வழிவழி வந்தவர் ஆண்டுள , நினைவில் வந்தன
அயலார் நீண்ட நாள் ஆண்டது நீங்கி நம்
வயமாய்த் தாய் நிலம் வந்தது. பன்மொழி

இனங்கள் கொண்டது இந்நிலம் என்பதை
மனங்கொண் டாட்சியர் மாநிலம் மொழிவழி
அமைத்து, வளர் கூட் டாட்சியை முறையொடு
சமைத்து யாவரும் சம மென் றாட்சி செய்

நிலைமை கண்டதாய் நினைத்தோம்: ஆயினும்
தலைமை ஓர் புறம் சாய்வது கண்டனம்!
பன்மையில் ஓர்மை நம் பாரத நாட்டின்
வன்மை யென் றெண்ணிய மனங்கள் மாறின

பன்மை போற்றிடும் பட்டறி வூறிய
தன்மை மிக்கவர் தலைமை ஏற்பது
நாள்தொறும் நாள்தொறும் நசிதல் கண்டனம்.
ஆள்வலி யுண்டெனின் ஆட்சியும் உண்டென

எண்ணுதல் பாமரர்க் கியற்கை யாயினும்
நுண்ணிய சிந்தையும், நுழைந்த பார்வையும்
ஒத்து வாழ்வதில், ஓர் பெரும் நாடெனும்
தத்துவம் ஏற்பதில், தயக்கம் எம்மவர்க்(கு)

அணுவும் இல்லை ; யாம் ஆயிரம் கோயிலில்
முணுமுணுத்திடோம்; முழங்கிக் கூறுவம்.

வெள்ளையர் நீங்கிய
பின்னர் இந் நிலத்தின் ஆட்சியில்
ஆங்கிலம் ஓர் தினம் அகன்று, தாய்மொழி
அதன்றன் மாநிலத் தனைத்துச் சூழலில்
பதவி யேற்றிடும்; பல்லாண் டிழந்த

வாய்ப்பு மீளவும், வளர்ச்சி காணவும்,
தாய்மொழி முந்தைய தலைமை கண்டதாய்ப்
பெருமைப் பட்டனம். பேறெனக் கூடிய
ஒருமைத் தொடர்புக் குதவ இந்தியைக்
கூறினர்.

ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சமாய்
மாறிய விடத்தில் வந்திவண் நிற்பது
நம்மொழி யென்றுநாம் நம்பினம்; காண்பது
நம்மொழி யன்றடா; நம்மொழி யன்று.

மய்ய ஆட்சியில் மாநில மெங்கணும்
பய்யப் பய்யப் பரவியும் விரவியும்
வருவ(து) அங்குள மக்கள் சொல்லல;
தரும மாகுமோ? தமிழம் ஏற்குமோ?

அற்பம் ஆனதோர்
அஞ்சல் அட்டையில் அருந்தமிழ் இல்லை
அஞ்சல் அட்டைக்கு அருகதை யில்லாப்
பஞ்சையர் மொழியா பைந்தமிழ்? இன்னும்
அஞ்சல் அட்டை போல் ஆயிரம் ஆயிரம்

சான்றுள்: பட்டியல் தருவதில் பயனெதும்
தோன்றுவ துண்டோ ? தொன்று தொட் டிதுவரை
ஒற்றுமை யற்றதால், உட்பகை மிக்கதால்
மற்றுள நாட்டினர் வந்தெதிர் கொண்ட நாள்

தொடர்ந்து நம் நிலம் தோல்வி கண்டது.
கடந்த நாளெலாம் கடந்த வாக நாம்
புதிய பாரதப் புத்துணர் வெங்கணும் –

எண்ணில் மிக்கவர் ஏற்றம் காண்பது
மண்ணில் இன்றுள மரபென் றோதுதல்
தரும மாகுமோ? தன் மொழி தாழவோர்
ஒருமை காண்பதில் ஊன், உயிர் ஒன்றுமோ?

“விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செயக் கருதி இருக்கின் றாயடா”
என்னுடல், என்னுளம், என்னுயிர் எல்லாம்
மன்னிய செந்தமிழ் மக்கட் கோதுவன்

நுண்பொருள் காணும், நுழைந்து தேடும்
பண்புகள் நம்மினப் பரம்பரைச் செல்வம்.
வழி வழி வந்தது: வளத்தில் மேலது
அழிவிலா நிதியம். ஆன்றோர் நன்கொடை.

நிலமும் நீரும் நிலம்தரு, நீர்தரு
வளமும் நிறைவுற வாய்த்தில வேனும்
அறிவுள ரென்போர் அனைத்து முளர் எனும்
நெறியினை அன்றே நிறுவிய வள்ளுவன்

பொய்யா மொழியினன்: புலமைஒன் றுளதேல்
எய்தா வளமென எதுவும் இன் றிலையால்
வேண்டுவ படைக்கும் மேதையின் வித்துளர்
யாண்டு தோன்றினும் யாவரே யாயினும்

போற்றுவிர்: நம்நிலப் புதையல்என் றவர் தமை
வேற்றுமை யறியா விழியொடு காணுவீர் !.

தமிழுல கனைத்தும் தம்வழி ஈர்த்துத்
தமிழின முயர்த்தும் தலைவர் காணுவீர்.
நிலமும் நீரும் நிறைந்து காணினும்
வளமென வையகம் வகுத்த யாவையும்

நிரம்பி வழிந்து நிற்பினும், இயற்கை
வரம்பும் இகந்து வழங்குவ தாயினும்
பயனுள அனைத்தும் படைத்(து) அளிக்கினும்
நயனில: இந்த ஞாலத்(து) உயர்வுகள்

தலைமையின் தரத்தின் தகவால் அமைவன.
பாரத ஒன்றியம் பன்மையின் கூட்டெனும்
உண்மை உணரார் ஒற்றுமை குலைக்கும்
வன்கணர்; அவர்முன் வணங்குவ மல்லோம் !.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை

– ஒளவை நடராசன்
thamizhavvai@hotmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *