வீரம் ஏந்திய வில் முறிந்தது !
அறிவுத் திருவிளக்காய்ப் பொலிந்த ,தத்துவ மேதை அண்ணல் டி கே சீனிவாசன் அவர்களின் இளைய மகன் பேராசிரியர் வில்லாளன் மறைந்தார் என்பதைக் கணம் கூட எண்ணிப்பார்க்க முடியவில்லை.
மூன்று நாளுக்கு முன்னர் தான் மருத்துவமனையில் சேர்ந்திருந்தார் .
என் மகன் அருள் பதறிப்போய் மருத்துவமனைக்குப் பேசியதாகவும் – மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நிலைமை கட்டுமீறிச் செல்கிறதே என்று கலங்கிக் கூறியதாகத் துடிதுடித்துச் சொன்னார் .
இதுவா முடிவு !
இந்தக் கொடுந்தொற்றுக்கு என்று தான் விடிவு !
வீசும் புயலில் இந்த கனிமரம் வேரோடு சாய்வதா !
பொருளியல் கற்ற புலமையும் – பேராசிரியத் தலைமையும் – மலேசியப் பல்கலையில் பணியாற்றிய மாட்சியும்
அடிக்கடி அழைத்து பேசியில் அப்பா என்று கனிந்து காட்டிய பரிவும் – உருக்கமும் நினைந்து நெகிழ்கிறேன் .
நாடாளுமன்ற உறுப்பினராய் நாடு புகழ ஒளிர்ந்த கழகக் கண்மணி அண்ணல் டி கே எஸ் இளங்கோவனுக்கு இளவலின் மறைவுக்கு எவர் ஆறுதல் கூற முடியும் .
குடும்பத்தின் மேல் விழுந்த இந்தக் கொடுமையான இடி ஆற்றமுடியாத பேரவலத்தைத் தருகிறது .
இது தான் நிலையாமையா ?
கண்ணெதிரிலேயே கட்டிடம் சரிவதா !
காலம் செய்த அலங்கோலம் !
ஒளவை நடராசன்

Add a Comment