தினசெய்தி 3.6.2021,பக்கம் 3
முரசொலி 5.6.2021,பக்கம். 3
எல்லாமே நீங்கள் தானே !
பூக்களை அடுக்கிக் காட்டும் கபிலர் நீங்கள்
கபிலரே தான்.
போர்க்கள வரலாறு காட்டும் பரணர் நீங்கள்
பரணரே தான்.
நாக்கு நலங்காக்கட்டும் நக்கீரர் நீங்கள்
நக்கீரரே தான்.
ஆக்கும் அரசியலில் அதியன் நீங்கள்.
அதியனே தான்.
யார்க்கும் நீதி சொல்லும் ஒளவை நீங்கள்.
ஒளவையே தான்.
சேர்க்கும் கலை தெரிந்த கரிகாலச் செம்மல் நீங்கள்
கரிகாலனே தான்.
சிலம்பால் வென்ற சேயிழைக்குச் சிலை வைத்தான் சேரன்
நீங்கள் சேரனே தான்.
கலங்காத கடல் அலைமேல் அய்யனுக்குச் சிலை வைத்த ஆற்றல் .
அய்யனே நீங்கள் தான்.
ஊர்க்கு அஞ்சாது உறுமும் தந்தை பெரியார் நீங்கள்.
பெரியாரே தான்.
தீர்ப்பாய்த் தமிழ்த் தேனைத் தெளித்த அண்ணா நீங்கள் .
அண்ணாவே தான்.
ஒட்டி வெட்டிப் பேசுவதில் ஒட்டக்கூத்தர் நீங்கள்
ஒட்டக்கூத்தரே தான்.
தொட்டுத் தடவினாலும் பாட்டில் தளை தட்டாப்
புகழேந்தி நீங்கள்
புகழேந்தியே தான்.
கண்டனத்தில் காளமேகம்
கவிச் சுவையில்
கடிகை முத்துப் புலவர் நீங்கள்
நீங்களே தான்.
கட்டுண்டோம் இனிமேலும் பொறுப்பதில்லை என்னும்
கவிமேதை பாரதிதான் நீங்கள்
பாரதியே தான்.
வெட்டொன்று துண்டிரண்டு என்று
வெடித்துப் பாடும் பாவேந்தர் நீங்கள்
பாவேந்தரே தான்.
பசுந்தமிழே செம்மொழி என்ற பரிதிமாற் கலைஞர் நீங்கள்
பரிதிமாற் கலைஞரே தான்.
இன்னும் .. இன்னும்..
அல்லலோடு வாழ்ந்தாலும் அரிய திராவிடம் கண்டு சொன்ன
கால்டுவெலும் நீங்கள்.
கால்டுவெலே தான்
சொல்லழகும் பொருளழகும் சொன்ன
சுந்தரமும் நீங்கள்.
சுந்தரமே தான்.
ஈடற்ற முதல்வர் என்று நாடுரைத்த
முதல்வர் நீங்கள்
நீங்களே தான் !
இன்று நாம் காணும் முதல்வரும்
நீங்கள் தான்
அவர் முயற்சியெலாம்
நீங்கள் தான் !
எல்லாமும் நீங்கள் தான்
எப்போதும் நீங்கள் தான்…
என்றமிழர் நலம்காக்கும்
முப்போக விளைச்சல்தான் !
என்றும் வாழ்க !!
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

Add a Comment