POST: 2021-06-06T10:56:51+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 62

“கூட்டிலிருந்த குயில்கள்”

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு

என்னுடைய கருத்துக் கோவையில் பதிந்த எஞ்சிய அறிஞர் நா. பார்த்தசாரதியின் அருமையான வரிகளை குறிப்பதில் மகிழ்கிறேன்.

வளர்ந்த ஒரு பொற்காலம் சொற்கோலமாக வரையப்படவிருக்கிறது.

கபாட புரத்தில் இடைச்சங்கத்தின் ஐம்பத்தொன்பது தமிழ்ப்பெரும் புலவர்கள் கவியரங்கேறி நூலாய்வு செய்தனர்.

சிறந்த நல்ல முத்துக்களுக்கு பெயரே கபாடம்; அதனால் பாண்டியா கபாடம் என்று சொல்லி வழங்கலாம்.

ஓரிடத்தில் பொன் நகைகளைக் குறிப்பிடும்போது,
சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூந்தம் என்னும் நால்வகைப் பொன்னும், வயிரம், மரகதம், மாணிக்கம், புருடராகம், வயிடூரியம், நீலம், கோமேதம், பவழம், முத்து என்னும் ஒன்பது வகை மணிகளும், ஆடவர் அணிந்து கொள்ளும் தாழ்வடம், கண்டிகை, கரி, பொற்பூ, கைக்காறை, திருப்பட்டிகை, குதம்பை, திருக்கம்பி, கற்காறை, சுருக்கின வீரபட்டம், திருக்குதம்பைத் தகடு, திரள் மணிவடம் ஆகியவைகள் ஒரு புறம் இலங்க, பெண்கள் அணிந்து கொள்ளும் திருக்கைக்காரை மோதிரம், பட்டைக்காறை, தாலி, திருக்கம்பி, திருமகுடம், வாளி, உழுத்து, ஆடகம், திருமாலை வாகுலலயம், திருக்கைப்பொட்டு, பொன்னரிமாலை, மேகலை… வியப்பாக விரிந்தன விழிகள்…

பக்குவமான மணத்துக்குச்
சாரகந்தம் என்று பெயர்.

தேரின் சட்டம் முறிந்தாலோ, சகடம் உடைந்தாலோ என் குழந்தையின் கையொடிந்தாற் போல் நான் உணர்ந்து மனம் நோவேன் என்பதை மறந்து விடாதே!

கலைஞர்கள் இன்னொருவரைப் பார்ப்பதற்கு ஏங்குபவர்களாக இருத்தல் கூடாது.

இன்னொருவர் தங்களைப் பார்க்க ஏங்கச் செய்பவர்களாக இருக்க வேண்டும்.

கவிஞனின் எழுத்தாணியும், பாணனின் யாழும் வாழ்க்கையின் சோர்வுகளில் கூட அவனிடமிருந்து கீழே நழுவவே கூடாது.

அனுபவம் மட்டும் தேடி அலைந்தே அடைய முடியும்.

நூலறிவைக் கற்பிக்கலாம். உலகியலை கற்றுத்தான் அறிய வேண்டும்.

பெரும் புலவர்களும், பேரறிஞர்களும், மக்களும் கூடிச் சிந்திக்கும் முதன்மையும், அருமையும் இருப்பதால்தானே இந்த மதுரைக்குக் கூடல் என்றே ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள்!

உலகத்தை முழுவதையும் பெயர்த்துக்கொண்டு வந்து ஒரு தராசுத்தட்டில் வைத்து மற்றொரு தராசுத்தட்டில் மதுரை மாநகரத்தை மட்டும் வைத்தால் கூட இதன் மதிப்பு தான் அதிகமாக இருக்கும் என்றெல்லாம் புலவர்கள் புகழ்ந்தது பொருத்தம் என்றே தோன்றியது.

காடுகளும் கூட்டம் கூட்டமாகப் பசுக்களை மேய்க்கும் ஆயர்களும் சூழ்ந்த முல்லை நிலம்!
குன்றமும், அருவியும், தினைப்புலமும், வேடர்களும் நிறைந்த குறிஞ்சி நிலம்!
நிலம் என்னும் நல்லாள் நெடும் பசுமை சூல் கொண்டு தோன்றும் வயல் வெளிகளும், தாமரைப் பொய்கைகளும், சிற்றூர்களும் செறிந்த மருத நிலம்!
தாழம்பூ தரும் மீனவர் குடியிருக்கும் பரதவர் பாக்கமும் மலிந்த நெய்தல் நிலம்!
இத்தகைய நானிலங்களின் நானாவிதமான வாழ்க்கை முறைகளையும் கொண்டது நம் தமிழ் நிலமாகும்!

ஆனாலும் குறிஞ்சி நில வாழ்வின் செழிப்பு மருத நிலத்தில் இல்லை! மருத நில வாழ்வின் வளம் முல்லை நிலத்தில் இல்லை!
முல்லை நில வாழ்வின் ஊட்டம் நெய்தல் நிலத்தில் இல்லை!
ஆனால் மொத்தமாக வாழ்க்கை என்ற ஒன்று எல்லா இடத்திலும்
ஒடிக்கொண்டிருந்தது. நிற்காமல் ஒடிக் கொண்டும் ஓடாமல் நின்று கொண்டும் நிலத்துக்கேற்ப, வளத்துக்கேற்ப, இன்ப துன்பங்களின் மிகுதிக்கேற்ப, உயிரியக்கம் நடை பெய்ர்ந்து கொண்டிருந்தது.

அறிவு ஒருவனை வெறும் விவரம் தெரிந்தவனாக மட்டுமே ஆக்குகிறது.

அனுபவம் தான் உலகிலேயே மிகப்பெரிய ஆசிரியன்.

அனுபவம் தான் திறமையைக் கற்றுக்கொடுக்கிறது.

அனுபவம்தான் மனத்தையும், வாக்கையும், புத்தியையும் பளிச்சென்று இலட்சணமாகத் தெரியும்படி மெருகிடுகிறது.

நம்பிக்கைதான் அரசியலில் தவம்! நம்பிக்கை தான் வெற்றி !
நம்பிக்கை இருந்தால் எதையும் வெல்லலாம்.
நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லோரும் ஒன்றைத் தொடங்கும் முன்னேயே தோற்றுப் போகிறார்கள். நம்பிக்கை உள்ளவர்களோ தோற்றுப்போன பின்னும் வெற்றிகொள்ளத் தொடங்குகிறார்கள்.

நினைவுகள் எல்லாமே நிழலைப் போன்றவை. நாம் எங்கெல்லாம் நடந்து போகிறோமோ, அங்கெல்லாம் அவை நம்மைத் தொடரவே செய்யும் என்று அறிஞர் நா.பா எழுதிய இராணி மங்கம்மாள் வரலாற்றுப் புதினத்திலுள்ள முத்துச் சுடர்களை என் குறிப்பேட்டில் 22.11.1986-ல் குறித்ததை இப்பொழுது சுட்டிக்காட்டுவதில் இன்பம் அடைகிறேன்.

நா.பாவின் நூல்களைப் படிப்பது போல அப்பா என்னை ‘எழுத்துத்திலகம்’ அரு.இராமநாதன் எழுதிய ‘வீரபாண்டியன் மனைவி’ வரலாற்றுப் புதினத்தையும் படிக்குமாறு அறிவுறுத்தினார்.

அதைப்படித்து என் கருத்துக் கோவையில் அப்புதினத்தில் வரும் ஜனநாதனின் மேற்கோள்:-

“அரசியல் என்பது உம்மைப் போன்று உத்தம உள்ளம் படைத்தவர்களுக்கோ, உணர்ச்சியாளர்களுக்கோ ஏற்றதல்ல!

மனித உணர்ச்சிகளையும், உன்னத லட்சியங்களையும் களிமண் பொம்மைகளாக உருட்டி விளையாடும் என்னைப் போன்ற இதயமற்ற அரக்கர்களுக்குத்தான் அரசியல் ஏற்ற தொழிலாகும்!

அரசியல் துறையில் நல்லவர்களை விடப் பொல்லாதவர்கள் தான் வெற்றி கண்டு சரித்திரத்தை உண்டாக்க முடியும்!

நீர் சரித்திரத்தை விட்டு மறைவதைப் பற்றியும் கவலைப்படாதீர்! ஏனெனில் மனைவி மக்களோடு ஆனந்தமாக வாழ்க்கை வாழ விரும்புபவனுக்குச் சரித்திரமில்லை!

சரித்திரத்தை விரும்புகிறவனுக்கு மனைவி மக்களோடு கூடிய வாழ்க்கையில்லை! இந்த இரண்டு பெரும் உண்மைகளில் முதலாவதற்கு உதாரணமாக நீர் விளங்குவீர். இரண்டாவதற்கு உதாரணமாக ஜனநாதனாகிய நான் விளங்குவேன்.

கோவையில் வதிந்து திடுமென மறைந்த கவிஞர் சேவற்கொடியோன் (14.11.1942 – 14.12.1996) என் அப்பாவின் இனிய நண்பர் ஆவார்.

சேவற்கொடியோன், தொண்ணூறுகளில் தமிழ்க் கவிதையுலகில் யாப்பு, அணி போன்ற இலக்கண அலங்காரங்களைத் தன் மீசைக்குள்ளே வைத்து – பீடுநடை போட்ட பெருங்கவிஞர்.

அகவெட்டு, முகவெட்டு இரண்டிலும் தமிழ்த்தாயின் பிள்ளையொத்த சாயலைக் கொண்டவர்.

கம்பீரக் கவிஞராக, தமிழின் அத்துணை உயரங்களையும் தாண்டக் கூடிய தடகளக் கவிஞராக உலா வந்தவர் என்று அருமை நண்பர் பால.ரமணி சொல்லிச் சொல்லி மகிழ்வார். ‘

சேவற்கொடியோன்’ என்னுமவர் கையொப்பத்தில் கூட, தமிழ்க் கொடி பறக்கும் அழகைக் காணலாம் என்று அவர் மகன் கோவலன் பெருமிதமாகச் சொல்லி மகிழ்ந்த கையொப்பமாகும்.

அவர் எழுதிய ‘பர்ணசாலை மான்கள்’, ‘இரத்ததில் கரைந்த சாத்தியங்கள்’ குறிப்பிடத்தக்கன.

அவருடைய மகன் கோவலன் தமிழக அரசின் செய்தித் துறையில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வருகிறார்.

அவரிடம் அவர் அப்பா சொன்னது மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போதே உயிர் நீங்க வேண்டுமென்று, அவ்வண்ணமே, மேடையிலேயே உயிர் நீத்தவர் ஆவார் சேவற்கொடியோன்.

22.11.1986-ல் அவர் எழுதிய சில குறிப்புகளை என்னுடைய கருவூலத்திலிருந்து:

“நவீன கலை இலக்கியம் என்ற பெயரால் இரத்தம் சிந்தாத கொலைகளைச் செய்யும் குருரர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவையும் குறிப்பிடப்படுவதில் வருத்தமடைகிறேன்.

தமிழ்க் கவிஞர்கள் பலரும் வாழ்க்கைக்குரிய கன பரிமாணங்களைப் பெறுவதற்கு முனையாமல் கனவுகளைப் பற்றிக்கொண்டும், அவமானகரமான சோகங்களுக்கு ஆட்படும் அவைகளையே சுகமான கவிதைகளாகச் சொரிந்து சொரிந்து இன்பங்காணும் நோயாளிகளாக மாறிப்போனார்கள்.

கதாசிரியர்கள் இராத்திரிக் கதைகளையே எழுதி எழுதி பகலிலும் அஸ்தமன விகாரங்களில் வாய்பதித்துக் கிடக்கிறார்கள்.

“தகிக்கின்ற உந்தன் கண்ணீர் கோகினூர்” என்று பாடினான் மலையாள கவிஞர் ரமேஷ் நாயர்.

தேவைகள் அனைத்தையும் தெய்வீகமாகக்கருதி மயங்கும் சரீர ருசிக்காரர்கள் தமிழில் அதிகரித்திருக்கிறார்கள்.

அதேபோல சீக்கிய இனப் படுகொலையைக் குறித்து சேவற்கொடியோனின் சீற்ற வரிகள் வலம்புரி நடையில் வளர்ந்தன.

“வெள்ளையராட்சியில் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக்கில் நடத்திய படுகொலையால் மனித நாகரிகத்திற்கே அஸ்தி கண்டதாக உலகம் அறிந்தது.

இன்று தங்களது ஜீவ காண்டத்தை சிருஷ்டிப்பதற்காக இரத்தமே பூமியின் மணமாகும் அளவிற்குச் சீக்கிய சகோதரர்கள் இரத்தம் சிந்தியிருக்கிறார்கள்.

சாம்பிராணி மணக்கின்ற பஞ்சாபில் எதேச்சதிகார துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.

எனினும், அவர்களின் மரணத்திலிருந்து உரிமைப் பேரொளி என்றேனும் எழும்.

சிரைகளிலும், தமனிகளிலும் வீரத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் சீக்கிய சகோதரர்கள் தங்களது உரிமைப் போரில் அடைகின்ற வெற்றியே தேசிய இனங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்.”

அதேபோல வேறொரு இடத்தில் தன்னுடைய சிவப்புச் சிந்தனையைப் படர விட்டதைக் காணலாம்…

“கண்ணுக்கு முன்னால் விரிந்து கிடக்கும் நியாயமான உலகினைப் புறக்கணித்து விட்டுக் கனவு வெளிகளில் வலம் வரும் கவிஞர்களின் படைப்பால் ஆக்கங்கள் விளைவதில்லை.

கற்பனை, நளினம் என்ற பெயர்களில் பலர் உருவாக்கும் சொற்குவியல்கள் காற்றுக் குமிழிகளைப் போல் வலிமையற்று உதிர்ந்து விடுகின்றன.

சமுதாய அவலங்களைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல், எப்படியாவது ஒரு கவிஞனாக முத்திரையிட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் ரசனைக்காகப் பாட்டெழுதுவது ஒரு வகைச் சுயநலமே!

பொய்கள் மண்டிக் கிடக்கும் இடத்தில் நிஜத்தை சிரமப்பட்டே கண்டுபிடிக்க வேண்டுகிறது.

தாகூரின் கவிதைகளை ‘குளிர்காலக் காற்றின் இதமான வருடல்’ என்று எஸ்ரா பவுண்டு கூறினார்.

ஒரு சிலரின் புதுக்கவிதைகளோ புயல் வீசும் கடலில் அலை வீசும் வேகத்தையே உணர்த்துகின்றன.

கவிஞர் மதுபாலிகா (K. வள்ளிநாயகம்), மயக்கம் தெளிவிக்கிற மாற்று மருந்து எழுத்துக்காரர்;

எட்டாம் வகுப்பு பயிலும்போதே கவிதை இயற்றத் தொடங்கியவர்;

அமிலத்தை விழுங்கி அஸ்திரத்தைக் கொப்பளிக்கிற அனல் கவிஞர் மதுபாலிகா ஆவார்.

தான் பணியாற்றிய தொலைதொடர்புத் துறையின் தொழிற்சங்கங்களில் மாவட்டச்செயலாளர், மாநிலச் செயலாளர் மற்றும் அகில இந்தியப் பொதுச் செயலாளர் எனப் பல்வேறு நிலைகளில் தடம் பதித்தவர்.

‘புதிய கீதை’, ‘அசுவமேத யாகம்’, ‘பூச்சொரியும் வானம்’, ‘குங்குமப் பூக்கள்‘, ‘மதுபாலிகா கவிதைகள்’, ‘கந்தர்வ கானம்’ எனப் பல்வேறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.

அவருடைய போர்க்கவிதைகளைப் படித்து என்னுடைய கருத்துக் கோவையில் 23.11.1986-ல் பதிவிட்டேன்.

“பவனிவரும் கவிதைக்குப் பதிலிருந்தால் சொல்லுங்கள். பாய்ந்துவரும் குதிரையிது பாதை விட்டு விலகுங்கள்.

இதன் சுவடுபட்ட மண்ணெல்லாம் சிவப்பாகும் எண்ணங்கள்.

அவனியினை எமது கொடி ஆளும்; விலகி நில்லுங்கள்!

விதி! இது ஆண்டவன் வகுத்ததல்ல; நம்மை ஆள்பவன் வகுத்தது!

இதற்குப் பலியாவது தீர்ப்பல்ல; நாம் ஆள்வதே வழி! உணர்க!

மெல்லினமாய் இருந்தால் மிதித்து விடும் உடைமை வர்க்கம்! இடையினமும் அவர் காலில் இடறிவிழும்! வல்லினமாய் நிமிர்ந்து நீ போராடு, வழிவிடும் உலகமுனக்கு.

அவர்கள் நெற்றிக்கண் திறந்தால் எங்கள் குடிசைகள் சாம்பலாகும் போது எங்கள் அடி வயிற்று நெருப்பில் ஏன் மாளிகைகள் பொசுங்கவில்லை?

அக்கினிதேவனே! நீயுமா அன்பளிப்பில் மயங்கிவிட்டாய்! அறிவுப்புரட்சிக்கு ஆக்க வழி தேடுங்கள்! அமைப்பாக செயற்படுங்கள், ஆழமாக செயற்படுங்கள், இமைப்பொழுதும் லட்சியத்தை மறவாமல் செயல்படுங்கள். கொள்கைத் தீ வளர்த்து வர்க்க பேதத்தைச் சுட்டுப்பொசுக்கிடுவோம்.”

“அர்ச்சுனா! கண்ணனை இன்னும் காணோம்!

…..ம்! சங்கைப்பிடி, சாரதியாகு!”

என்று தன் ‘புதியகீதை’யில் பிரகடனப்படுத்தியுள்ளார்.

மாநிலக் கல்லூரியில் தமிழிலக்கிய வகுப்பில் மூத்த மாணவராக அறிமுகமானவர்தான் கவிஞர் பேரமனூர் சந்தானம்.

சிரிக்க சிரிக்க நம்மை சொக்க வைக்கும் நண்பர்.

நடக்கும் பொழுதே நளினமாகக் கவிதைகளை உதிர்க்கும் வல்லமை வாய்ந்தவர்.

எங்கள் பேராசிரியர், ‘புதுக்கவிதையின் தாத்தா’ என்று புகழ்ப்பெற்ற முனைவர் மேத்தாவின் மனங்கவர்ந்த மாணவச் செம்மல் தான் சந்தானம்.

அப்பாவும் சந்தானத்தின் கவிதைகளையும், எடுப்புரைகளையும் பாராட்டி மகிழ்வார்கள்.

வெடித்த வாயில் தொடுத்த இக்கவிதை சந்தானம் கல்லூரியில் சொன்னது.

“தலைவாரிப் பூச்சூடி

என்னைப் பாடசாலைக்குப்

போ என்றார் என் அன்னை.

இன்று வரைக்கும்

அங்கே தான் இருக்கிறேன்.”

அதே போல, மிதிவண்டியைப் பார்த்தவுடன் சொன்ன வரிகள்,

“டயரே டயரே நீ யாரோ

ட்யூபுக்கு நீதான் தாயாரோ.”

அதேபோலக் கல்லூரிப் போட்டிகளில் பரிசு கிடைக்காமல் வரவே மாட்டார். அப்படித் தவறி விட்டால் உடனே சொன்ன வரி,

“எனக்குப் பழக்கமானவர்களே!
என் வழக்கமான பாதையில் பள்ளம் பறிப்பதால் நான் வழுக்கி விழுகிறேன்!”

என்னிடம் அடிக்கடி சந்தானம் சொல்வது இது. “எப்போதும் நினைவில் வைத்துக்கொள் அருள்…

பூனை எலி பிடிக்கும்

புதுத் தண்ணீர் சளி பிடிக்கும்

ஆனை வரும் முன்னே

அழகாக மணியடிக்கும்

அடங்காத பசங்களெல்லாம்

அப்பனோடு தம்மடிக்கும்…”

“தம்பிக்கு அண்ணன் நான்

அண்ணனுக்குத் தம்பி நான்

தம்பிக்கு அண்ணன் நான்

அண்ணனுக்குத் தம்பி நான்

அண்ணன் தம்பி இருவருக்கும்

ஆங்கிலத்தில் ‘பிரதர்’ நான்”

“பொங்கி வச்ச பொங்கலிலே

புதைந்திருக்கும் முந்திரி நான்

பூட்டி வச்ச நாய்களுக்கு

ஸ்ட்ராங்கான சங்கிலி நான்

ஷாருக் கான் சல்மான் கான்

சத்தியமாய் இல்லை நான்

சாஞ்சுக்கிட்டே தின்னுகிற

சாதாரண பாப்கார்ன் நான்.”

எளிமையாக வாழ்வைத் தொடங்கிப் திரைப்படங்களில் பல நடித்து, இன்று சிந்தனை மன்றங்களில் அருவியாகப் பொழிவாற்றும் அறிவுச்சுடராக மின்னுகிறார்.

அவ்வண்ணமே பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வெற்றி வரலாறுகளை திரைக்காவியங்களாக இயக்கும் வெற்றி வாணராக வலம் வருகிறார்.

——

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

பொருநராற்றுப்படை

சோழன் கரிகால் பெருவளத்தானை, முடத்தாமக் கண்ணியார் பாடியது.

பொருநர், ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என மூன்று வகைப்படுவர்.

இப்பாட்டின் பொருநன், போர்க்களம் பாடுவோன். பரிசின் பெற்றுத் திரும்பும் பொருநன், பரிசில் பெறச்செல்லும் பொருநனை ஆற்றுப்படுத்துகின்ற பாடல்.

இந்த ஆற்றுப்படையின் தலைவன், சோழன் பெருவளத்தான். இவன், புகாரிலிருந்து அரசாண்டவன். இவன், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னியின் மகன்.

இளமையில், கால் கரிந்து போயிற்று என்பதால், கரிகாலனானான்.

148 முதல் 197 முடியவுள்ள அடிகள்

‘கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்

தாள்நிழல் மருங்கி ணணுகுபு குறுகித்

தொழுதுமுன் நிற்குவி ராயின், பழுதின்று,

ஈற்றா விருப்பின் போற்றுபு நோக்கிநும்

கையது கேளா வளவை யொய்யெனப்

பாசி வேரின் மாசொடு குறைந்த

துன்னற் சிதாஅர் நீக்கித் தூய

கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப்

பெறலருங் கலத்தின் பெட்டாங் குண்கவெனப்

பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர,

வைகல் வைகல் கைகவி பருகி,

எரியகைந் தன்ன வேடில் தாமரை

சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி,

நூலின் வலவா நுணங்கரில் மாலை

வாலொளி முத்தமொடு பாடினி யணியக்

கோட்டின் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்

ஊட்டுளை துயல்வர, ஓரி நுடங்கப்

பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்

காலி னேழடிப் பின்சென்று, கோலின்

தாறுகளைந் தேறென் றேற்றி……’

நீங்களும் இளஞ்சேட்சென்னியின் மகனாகிய கரிகால் வளவனிடம் செல்லுங்கள்.

அவன், உங்களுக்கு அனைத்தையும் தருவான்.

வேண்டிய அளவும் தருவான்.

உங்கள் பருத்தியாடைகளை நீக்கிப் பட்டாடைகளை உடுத்தத் தருவான்.

அதையும் நாள்தோறும் தருவான்.

பொற்றாமரைப் பூவைச் சூட்டி மகிழ்வான்.
பொன்னரி மாலைகளையும், முத்து மாலைகளையும் விறலியர் அணியக் கொடுப்பான்.
வெண்குதிரைகள் நான்கிளைப் பூட்டிய தந்தத்தேரில் உங்களை அமரவைத்து, யாழிசைக்கும் பாணர்க்குச் செய்யும் நலங்களையெல்லாம் உங்களுக்கும் செய்வான்.
உங்கள் தேரின் பின்னால் ஏழடி வந்து, உங்களை வழியனுப்பி வைப்பான்.
அத்தகு பண்பாளனாகிய அவனிடம் செல்லுங்கள்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள், தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *