நாடறிந்த மழலையர் நரம்பியல் மருத்துவத் திலகம் டாக்டர் ஒளவை மெய்கண்டான் –
என்னை நல்லாற்றுப்படுத்தும் சிறிய தந்தையாராவார் .
அவர் நுண்ணிய புலமையை. மே மாதம் – காலச்சுவடில் வெளிவந்த இம்மடல் காட்டும் .
முகநூலில் பதிவிடுவது பெருமை .
பாட்டினில் பெருமை
பாரதியியலில் ய. மணிகண்டனின் ‘ பாரதியும் பார்க்கப்படாதாரும் ’ என்னை மிகவும் கவர்ந்தது.
வெள்ளகால் சுப்பிரமணிய முதலியாரின் ‘ அகலிகை வெண்பா ’ என்ற புத்தகம் பற்றி அவர் குறிப்பிட்டதில் மேலும் சில விவரங்களைப் பதிவிட விழைகிறேன்.
வெ.ப. சுப்பிரமணிய முதலியார், ‘ அகலிசை வெண்பா ’ நூலை இயற்றிய நூலாசிரியர் வெள்ளகால் அவர்களின் இளைய மகன் வெ.சு. சீத்தாரப்ப முதலியார் அவர்களால் 14.4.1991 தேதியிட்டு மீண்டும் வெளியிடப்பெற்றது.
இந்நூல் 05.01.1914ஆம் ஆண்டு ஆசிரியர் அவர்களால் வெளியிடப்பட்டபோது முதற்பதிப்பின் முன்னுரையும்,
28.02.1920 அன்று வெளியிடப்பட்ட இரண்டாம் பதிப்பின் முன்னுரையும்,
21.05.1941 தேதியிட்டு, மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவ உதவிய தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் முன்னுரையும்
அதில் தொகுக்கப்பட்டுள்ளன.
தன் முதற்பதிப்பு முன்னுரையிலேயே முதலியாரவர்கள்,
“ நான் அகலிகை கதையை ஆங்கில, திராவிட நூன் முறைகள் இரண்டுக்கும் இயைய, என் மனோதர்மத்துக்கு இயன்றவாறு கூறியிருக்கிறேன் ” என எழுதியிருப்பார்.
முதற்பதிப்பு இராமநாதபுரத்தில் 1914 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பதின்மூன்றாம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாடுவதற்குக் கூடிய சபையில் அரங்கேறுவதற்கு உதவும்படி விரைவாகப் பதிக்கப்பட்டதனால் சில குறைபாடுகள் உள்ளன.
அக்குறைபாடுகளை நீக்குவதற்கு உதவிய மகாமகோபாத்யாய சாமிநாதையருக்கும்
ரா. இராகவையங்காருக்கும் நன்றியறிதலையும் தெரிவித்திருக்கிறார்.
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் ‘ அகலிகை வெண்பா ’ நூலின் முன்னுரையில்
“ அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ” என்ற பழைய கிரியையில்,
கல்லாய்ச் சமைந்த அகலிகையை அம்மியாகவும், கற்பொழுக்கத்தில் சிறந்த அருந்ததியை வான் நட்சத்திரமாகவும் குறிப்பிட்டிருப்பார்.
அகலிகை வலிமையற்ற தன்மையடைந்து மயங்கிவிழுந்தபின்தான் இந்திரனால் கற்பிழந்தாள் எனக் காட்டுவதை “
வெற்பின் உச்சிநின்று உருண்டு வீழ் பெரிய பாறை இடை நிற்புறக்கை கொண்டு தடுப்பதையே ஒக்கும் ”
என இந்திரன் கூறுவதாக எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
“ விம்மினாள், வெய்துயிர்த்தாள், வேர்த்தாள், விதிர்விதிர்த்தாள் அம்மினாள் செய்வதறியாளாய் மயங்குகின்றாள் ”
எனப் பாடியிருப்பதையும் பாராட்டுகிறார்.
தமிழ் இலக்கியத்தில் தனி வெண்பாக்களால் ஆகிய நூல்கள் ஒரு சிலவே.
முத்தொள்ளாயிரம்,
பெருந்தேவனார் பாரதம், நளவெண்பா முதலியவே இன்று பிரசித்தமாயுள்ளவை.
அந்த வரிசையில் அகலிகை வெண்பாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனப் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் கூறுவதே இந்நூலின் நயத்திற்குப் போதிய மதிப்புரையாகும்.
ரசிகமணி டி.கே.சி. அவர்கள் தமிழுக்கு வாய்த்த அரும்புதல்வன் என முதலியார் அவர்களை ஆகஸ்டு மாதம் 1937 வெளிவந்த கலைமகள் கட்டுரையில் புகழ்ந்திருப்பார்.
டாக்டர் சாமிநாத அய்யர் இந்நூல் “ ஈசபுஞ்சகமாக ’ இருக்கிறது, தமிழ் பாஷையை நன்கு கற்றவர்கள் இதுவரை எதிர்பாராத ஓர் ஆனந்தத்தை இதனால் அடைவார்கள் என நிச்சயிக்கிறேன் ” எனக் கூறியிருக்கிறார்.
மகாகவி பாரதியார், முதற்பதிப்பைப் பார்த்துவிட்டு இந்தத் தலையங்கத்தை எழுதியிருக்கலாம் என எண்ணுவதைவிட,
தன்னைவிட அகவையில் மூத்தவராகவும், கற்றறிந்த தமிழ்ப் பாரம்பரியத்தில் வந்தவராகவும் இருக்கும் ராவ்சாகிப் நூலைப்பற்றித் திறனற்ற செய்யுள்கள் என சுதேசமித்திரனில் 21.04.1921 தேதியிட்ட தலையங்கம் எழுதியிருப்பதற்கு வாய்ப்பில்லை என்றே கருதத் தோன்றுகிறது.
” பாட்டினில் அன்பு செய் ” எனச் சொல்வதுதான் பாரதியார் என்றே எண்ணுகிறேன்.
டாக்டர் ஒளவை மெய்கண்டான்
மதுரை

Add a Comment