புலவர் விசயலட்சுமி நூல் வெளியீடு விழா 5.3.2021
பொதிகை விஜய கிருஷ்ணன் அறிமுக உரை….
குயிலின் குரலை தன் எழுத்துகளிலே கொண்டு வந்த எங்கள் அன்பிற்குரிய தமிழ் வளர்ச்சித்துறையின்
,மொழிபெயர்ப்புத்துறையின் இயக்குநர் பாசமிகு அவ்வை அருள் அவர்களை மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கின்றேன்.
இவர் தமிழுக்கு ஓர் அடையாளம், இனிமைக்கும் பேச்சிற்கும் ஓர் இலக்கணம் ,
பழகுதற்கு ஓர் பலகனி
இவர் பூத்த பண் நெருப்பு புதுமையை யாத்த சொற்செம்மல் கோர்த்த இசைப் பூங்கா
குரல் சீர்த்த அவ்வைத் தோன்றல் திரு அவ்வை நடராசன் அவர்களுடைய திருக்குமாரன் அவ்வை அருள் அவர்களை தலைமையுரையாற்ற அன்போடு அழைக்கின்றேன்.
You are the true descendant of Dr Avvai Natarajan welcoming Dr Avvai Arul
———————————–+++++++++++++++
அருளின் உரை( 5.3.2021)
புலவர் விசயலட்சுமி அம்மையார் அவர்களே!
இன்றைக்கு எனக்கு ஒருமிகப்பெரிய வாய்ப்பு கிட்டியுள்ளதாகத்தான் கருத வேண்டும்.
காரணம் நான் மகிழ்வுரை ஆற்றுவதற்குதான் வந்துள்ளேன்… ஆனால்,என்னுடைய பேராசிரியப் பெருந்தகை இ.சுந்தரமூர்த்தி அவர்கள் இன்று வர முடியாத சூழலினால் தலைமையுரை ஆற்றுவதற்கு உறுதிசெய்யப்பட்டிருக்கிறேன்
ஆக, இது எனக்கு பெரிய வாய்ப்பு நண்பர்களே!
பெருமக்களே!
எங்களுடைய குடும்பத்திற்கு மிக நெருக்கமான உறவினர் புலவர் விசயலட்சுமி ஆவார்.
என்னுடைய அருமைத் தாயார் அண்மையில் தான் (14.8.2021) மறைந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
என்னுடைய அம்மாவினுடைய இசை நுணுக்கத்தை மேம்படுத்தி அவர்களுடைய வீணைத் திறத்தையும் செழுமைப்படுத்தி அம்மாவுக்கு பத்தாண்டுகளாக பயிற்றுவித்த ஆசிரியப் பெருந்தகை புலவர் ஆவார்கள் என்பதை பெருமையாகச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
என்னுடைய அம்மா… எனக்கு நன்றாக நினைவிருக்கிறது எப்பொழுதும் அப்பாவை தியாகராயநகர் அலுவலகத்தில் விட்டு பிறகு புலவரின் இல்லத்திற்கே அம்மா சென்று வாய்பாட்டையும் வீணையையும் கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.
அதேபோல எப்போதும் புலவர் அண்ணா நகர் வரும்போதெல்லாம் இசைப் பயிற்சியை செய்து கொண்டிருந்ததை நாங்களெல்லாம் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தோம்.
அதேபோல அவர்களுடைய தந்தையாருடைய (பேராசிரியர் H.வெங்கட்ராமன்) நூற்றாண்டு விழாவின் தொடக்க விழாவாக சோவியத்து பண்பாட்டு அரங்கத்தில் அனைவரும் போற்றும் வண்ணம் நடத்தினார்கள்.
அந்நிகழ்விற்கு மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மா. இராசேந்திரன் அவர்களும் சென்னை கிருத்தவக் கல்லூரியினுடைய மேனாள் பேராசிரியர் தாம்பரம் இராசகோபாலன் அவர்களும் பெருமிதமாக எந்தையாருடன் நாங்களெல்லாம் ஹெச் வி ஐயாவினுடைய மாணவர்கள் என்று அவர்களெல்லாம் மிகப் பெருமையாக பேசியது கேட்டு மகிழ்ந்தேன்.
இன்றைக்கு இவ்விழாவிற்கு வரமுடியவில்லை என்றாலும் பேராசிரியர் கு.சிவமணி, 91 வயதில் தன்னேரில்லா தமிழ்ப்பேராசிரியர், கரந்தை தமிழ்ச்சங்கத்தின் தொடக்கத் தூணாக இருக்கின்ற அவர் இன்றைக்கு (5.3.2021)முக நூலில் குறித்துள்ளார்.
1951 இல் திருவையாறு கல்லூரியில் முதல்வராகவே எனக்கு வாய்ப்பு நல்கிய பொழுது அவ்வாய்ப்பினை நான் எடுத்துக்கொள்ளவில்லை ஆனால் அப்போது ஹெச் வி ஐயா அவர்கள் தான் என்னை வந்து அப்பதவியை ஏற்றுக்கொள்ள ஆற்றுப்படுத்தினார் என்று நெகிழ்வாக எழுதியுள்ளதை குறிப்பிட விழைகின்றேன்.
கலைமகள் ஆசிரியர் இங்கு வந்து வாழ்த்துரை வழங்குவது பெரிய பொருத்தமாகும்.
கீழாம்பூர் அவர்களுடைய ஆற்றல் அளப்பரியதாகும்.
அவருடைய அலுவலகத்தில் மூன்று பெரும் பேராசிரியர்கள் பயன்படுத்திய பொருட்களை தனது வழிபாட்டறையில் பேணுகிறார்.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பயன்படுத்தியதையும் தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் file padஐயும்,
வாகீச கலாநிதி கி.வா.ஜ பயன்படுத்தியதை வழிபாட்டுப் பொருள்களாகவே கலைமகள் அலுவலகத்தில் பேணுகிறார்கள்.
கலைமகள் ஆசிரியரின் ஒவ்வொரு கட்டுரையையும் மணிமணியாய் எழுதும் ஆற்றல் மிகுந்த பெரும் ஆற்றலாகும்.
கொரோனா தீநுண்மிக் காலத்திலும் தன்னுடைய பதிவுகளை அவர் முகநூலில் தொடர்ந்து பதிவிட்டுக்கொண்டும் தமிழ் இலக்கியத்தில் தன்னுடைய பெரும் ஈடுபாட்டினை செயற்படுத்தி வருவது பாராட்டத்தக்கதாகும்.
அதேபோல இன்றைக்கு வருகை புரிந்திருக்கின்ற காது மூக்கு மருத்துவர் குமரேசன் எனக்கு மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகத்தில் உள்ள எல்லா அறிஞர்களுக்கும் மருத்துவ மாமணியாக விளங்குகிறார்.
அவரைப்போலவே என்னை கல்லூரிக் காலத்திலிருந்து பேச்சுப் போட்டிகளுக்கெல்லாம் அழைத்துச் சென்று செதுக்கிச் செதுக்கி என்னை வளர்த்த வழக்கறிஞர் அண்ணல் பாலசீனிவாசன் இங்கு இருக்கின்றார்.
தமிழக அரசின் அயோத்தி தாசர் விருதுபெற்ற திருமதி. செல்லம்மாள் அவர்களும் இங்கு வருகை புரிந்திருக்கின்றார்கள்.
மற்றும் மணிவாசகர் பதிப்பகம் என்றால் தமிழ்நாட்டினுடைய மேக்மில்லன் என்று மேனாள் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறையின் செயலாளர் பெருந்தகை திரு எச்.டி காசிராஜன் அற்புதமான கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளதை அண்மையில்தான் நாங்கள் உலகத்தமிழ் இதழில் வெளியிட்டிருக்கிறோம்.
அக்கட்டுரையில் அவ்வளவு பெருமையாக மெய்யப்பனார் அவர்களைப் பற்றி தொடங்கும் வரிகள் அளப்பரிய வரிகளாகும்.
அண்ணல் குருமூர்த்தி அவர்களைப்பற்றியும் பாராட்டியுள்ளதை[யம் போற்றத்தகுந்ததாக உள்ளது.
புலவர் விசயலட்சுமி அம்மையார் சொல்வதைப் போலத்தான் மணிவாசகர் பதிப்பகம் என்றாலேயே உங்களுக்கு எக்கவலையுமில்லை, விளம்பரமே தேவையில்லை அவர்கள் செய்கின்ற பதிப்புப் பணியால் நூலாக வெளிவருவதில் நாம்தான் பெருமை அடைய வேண்டும்.
அதேபோல என்னையெல்லாம் வளர்த்த ஒயெம்சிஏ பட்டிமன்றத்தினுடைய தலைவரும் செயலாளர் திரு பக்தவசலம் அவர்களை சித்தப்பா என்றுதான் நான் உரிமையாக சொல்ல வேண்டும்
அவருடைய இனிய மகன் ஒயெம்சிஏ தமிழ் பட்டிமன்றத்தினுடைய புதிய செயலாளர் பேராசிரியர் தாமரைக்கண்ணன் வெளியிடப்படும் நூல்களைப்பற்றி திறனாய்ந்து பேச இருப்பதனால், நான் அதிகம் நூல்களுக்குள் செல்ல விருப்பப்படவில்லை,
காரணம் திருக்குறள் பேரொலி, தமிழ் இலக்கிய சோலைப் பார்வை என்று அழகான நூல்களாக அவர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள் புலவர் பெருமாட்டியார்.
ஞாயிறு தவறாமல் வாரம் தவறாமல் வள்ளுவர் கோட்டத்தில் நடக்கின்ற திருக்குறள் வகுப்பிற்கு பேராசிரியர் கு மோகனராசு வகுப்பில் அருமையான மாணவியாக தங்களை அவர்கள் வழிநடத்திச் சென்றதையெல்லாம் நான் பார்த்திருக்கின்றேன்.
பேராசிரியர் கு மோகனராசு அவர்களிடம் கற்றப் பாடத்திற்கு பேறாக திருக்குறள் பேரொலி நூலில் தன்னுடைய கட்டுரைகளை வரைந்திருக்கிறார்கள்.
தமிழ் இலக்கியச்சோலைப் பார்வையில் பல்வேறு கட்டுரைகளை பாமாலையாக புலவர் வெளியிட்டிருக்கின்றார்கள்.
தமிழ்கூறு உலகம் போற்றும் பேராசிரியர் மு.வ அவர்களுடைய நுணுக்கமான புதினங்களைப் பற்றியும்,
தமிழ்ப் புதின உலகத்தினுடைய பிதாமகன் என்று அழைக்கப்பெறும் பிராதப முதலியார் சரித்திரத்தை எழுதிய வேதநாயகம் பிள்ளை பற்றிய மிக நுட்பமான கட்டுரைகளையும் இந்நூலில் எழுதியுள்ளார்.
கம்பன் கவிதை நயத்தில் தாங்கள் எங்கெல்லாம் ஆட்படுத்தப்பட்டோம் என்று அவ்வண்ணம் புலவர் எழுதியிருப்பதை நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்
எனக்கு ஒரே ஒரு வியப்புத்தான் புலவர் விசயலட்சுமி முதுகலை படித்தார்கள், முதுநிலை ஆய்வு படித்தார்கள் ஏன் முனைவர் தமிழாய்வில் ஈடுபடவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வியாகும்.
பேராசிரியர்கள் அளவிற்கு தன்னை தகுதிப்படுத்திக் கொண்டிருக்கின்ற புலவர் விசயலட்சுமி அவர்களை நான் நெஞ்சார பாராட்டுகின்றேன்.
அவர்களுடைய கட்டுரைகளெல்லாம் தொடர் வகுப்புகளாக நடத்தப்பட வேண்டும்.
தமிழாய்வு நடத்துகின்ற பல்கலைக்கழகங்கள் புலவர் விசயலட்சுமியை வருகை தரும் பேராசிரியராகவே நியமிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு
அவர்களுக்கு தமிழக அரசினுடைய விருதுகள் பெற மிகுந்த தகுதி வாய்ந்த புலவர் விசயலட்சுமியை வாழ்த்தி அமைவதற்கு முன் என்னைக் குறித்து அற்புதமான கவிதை வரிகளில் அறிமுகப்படுத்திய பொதிகை விஜயகிருஷ்ணனுக்கு என் நன்றி என்று சொல்லி விடைபெறுகிறேன்
. வணக்கம்.

Add a Comment