தந்தையர் தின நிகழ்வு – பிரித்தானிய இந்திய வானொலி
(British Indian Tamil Online Radio)
19.6.2021 சனிக்கிழமை,மாலை 3.30 மணி….
பத்மஸ்ரீ ஒளவை நடராசனார் மகன் அருள் அவர்கள் தன் அப்பாவைக் குறித்து நேரலை உரை
——
இலண்டன் வாழ் தமிழ்ப் பெருமக்களே!
உங்கள் எல்லோரையும், இந்நன்னாளில், தந்தையர் தினத்தன்று அலை நிலையில் உரையாற்றுவதில் பெருமிதமடைகின்றேன்.
இலண்டன் வாழ் தமிழர் அண்ணல் சக்திதாசனின் வழிகாட்டுதலால் தந்தையர் தினத்தைப் பற்றி ஓரிரு கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
‘தந்தையர் நாடென்னும் போதினிலே
சக்தி பிறக்குது மூச்சினிலே’
என்ற பாரதி வரிகள்தான் நமக்கு இயல்பாய் நினைவுக்கு வரும்.
தந்தையால் தான் உலகம் சிறந்து ஓங்கி உயர்ந்து வளர்வதுமாக உள்ளது.
தந்தையினுடைய சிறப்புகளையெல்லாம் எண்ணிப் பார்க்கின்ற ஒரு நன்னாள், பொன்னாள் இன்னாள் என்பதில் நான் மகிழ்கிறேன்.
எதற்கெடுத்தாலும் இலண்டன் மாநகரத்தில் ‘My Father’ என்று சொல்வதும் ‘Our great father’ என்று பாராட்டிக் காட்டுவதிலும் ஆங்கிலேயர் மகிழ்ந்து திளைப்பார்கள். அவ்வண்ணமே, தமிழர்களாகிய நாமும் தந்தையின் பெரும்பணிகளையும் அவர்கள் நடந்து வந்த பாதையையும், நம்மை வளர்த்த சிறப்பினையும், நம்மை இட்டுச் செல்கிற இலட்சியப் பாதையையும் எண்ணி உருகலாம்.
உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடுவதைப் போல,அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் 1908 ம் ஆண்டு,சூன் மூன்றாவது வார இறுதி நாளில்
தந்தையர் நாள் கொண்டாடப்படுகிறது.
இந்தியா உட்பட 52 நாடுகளில் சூன் 20ம் தேதியன்று தந்தையர் தினம் இவ்வாண்டு கொண்டாடப்பட உள்ளது.
தனக்கும் மேலே தூக்கி,உலகை காண்பிக்கும் ஒப்பற்ற உறவு தான் தந்தை.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
எனக்கு அவ்வகையில் ஒரு தலைசிறந்த தந்தையார் வாய்க்கப் பெற்றதில் நான் மிகுந்த நெகிழ்கிறேன்.
எங்கள் குடும்பத்தில் உடன்பிறந்தார் மூவருமே எங்கள் அப்பா அம்மாவின் முகச் சாயலையும், குணவியல்புகளையும், நலன்களையும் ஒருசேரப் பெற்றவர்களாகவே இருக்கிறோம்.
அப்பாவிற்கு அகவை முதிர்ந்தாலும், பிள்ளைத் தமிழாகவே அவர் எப்போதும் எனக்குத் தெரிகிறார்.
அப்பாவிடத்தில் எப்போதும் எதைச் சொல்லவும் நான் அஞ்சியதில்லை. ‘அம்மாவைக் கேட்டுச் செய். அவளன்றி ஓரணுவும் அசையாது’ என்பதே அப்பாவின் மந்திரச் சொல்லாகும்.
14.08.2020-இல் திடுமென மறைந்த எங்கள் ஆருயிர்த் தெய்வம் என் அம்மா… என்னால் முடியவில்லை என்று எப்போதும் சொல்லாதவர். என்னிடம் என் அம்மா கடைசியாகப் பேசியது எனக்கு இன்னும் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது.
“அருள் நீ அப்படியே உன் அப்பாவைப்போலவே அச்சாக உள்ளாய். அவரைப் போலவே நடப்பதும், நிற்பதும், அசைவதும், பேசுவதும், அவரைப்போலத்தான் உள்ளன. ஆனால், அவரைப்போல் உன்னால் ஏன் அவ்வளவு நூல்களையும் படிக்க முடியவில்லை. படித்த பாடல்களையும் நினைவுக்குக் கொண்டுவந்து இன்னமும் ஏன் திருப்பிச் சொல்ல முடியவில்லை. நயம்பட எடுத்துச் சொல்கிற அந்த நளினத்தில் நீ இன்னும் வெற்றிபெறவில்லையே என்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. உன்னைச் செல்லமாகவே வளர்த்தேனே… இனிமேல் என்னால் ஏதும் முடியவில்லையே. நீயாக அப்பாவை இப்போதாவது பார்த்து முயன்று கற்றுக்கொள்” என்றார் என் அம்மா.
இந்த உருக்கமான நீதிமொழி என் நெஞ்சை உருத்திக் கொண்டிருக்கிறது.
அடிக்கடி நான் அம்மாவைப் பார்த்து நான் சொல்கிற பாட்டு வரி,
“எனக்கென்ன மனக்கவலை
என் தாய்க்கன்றோ
தினம் தினம் என்கவலை”
அந்தப் பாடல்வரிகளே கண்ணீர்க் கோடாகவே என் கன்னத்தைச் சுவடாக்கி விட்டன.
நண்பர்களே!
என் தந்தை எழுத்தறிவித்த இறைவன் மட்டுமல்ல. எங்களை அவையத்து முந்தியிருக்க அரும்பாடுபட்டு நன்னெறி காட்டிய நாயகர்.
அகிலம் முழுதும் அவரை மேடைத் தென்றலாகவும், சொல்லின் செல்வராகவும் தமிழிலக்கிய மாமேதையாகவும் போற்றும்போது நாங்கள் செல்லுமிடங்களெல்லாம், எங்களுக்குப் பெருமையும் பாராட்டும் கிடைக்கும்.
எங்கள் மற்ற சகோதரர்கள் என் தாயைப் போல் மருத்தவரானபோதும் நான் மட்டும் என் தந்தை வழியிலேயே செல்லத் துணிந்தேன்.
அவர் கல்லூரியில் தமிழ்த்துறை ஆசிரியராகவிருந்து தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையின் அரசு செயலாளராக உயர்ந்து தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான வரையில், தன் நாவன்மையினால், நலமிக நட்புறவினால், சிந்தனைச் சிறப்பால் நல்லிணக்கத்தால் உயர்ந்து வளர்ந்தவர் ஆவார்.
எனக்குத் தெரிந்து என் அப்பா ஔவை நடராசன் அவர்கள், தனியாக இருந்ததேயில்லை.
எங்கள் இல்லம் எப்பொழுதும் ஒரு சிந்தனை மன்றமாகவே இருக்கும். வரவேற்பறையில் கவிஞர்களும், பேச்சாளர்களும், இன்னிசை வாணர்களும், கலைஞர்களும் என்றும் குழுமியிருக்கும் அரங்கமாகவே அமையும்.
பலர் அப்பாவின் அறிவுரை கேட்பதற்கென்றே தினம் வருவதுண்டு.
சொற்பொழிவாற்றுவதை ஒரு கலையாகவே மாற்றிக் காட்டியது மட்டுமின்றிப், பல பேச்சாளர்களையும், கவிஞர்களையும் உருவாக்கியுள்ளார்.
அவர் ஒர் ஆலமரம்.
அதன்மேல் வந்தமர்ந்து அறிவுரை பெறும் பறவைகள் நாங்கள் என்று பலர் என்னிடம் இன்றும் போற்றுவதுண்டு.
இல்லத்தில் எங்களின் தந்தை என்பதை விட நல்ல நண்பராகவே எங்களோடு பழகுவார்.
புதியன விரும்புதலையும் நூலினைப் பகுத்துணர்வதையும் இரு கண்களாகவே கொண்டுள்ளார்.
தன் அறிவியல் கண்ணோட்டத்துடன் பழந்தமிழ் இலக்கியங்களை அவர் அணுகியதால் அவரின் கருத்துக்கள் என்றும் புதுமையானவையாகவே இருக்கும் என எல்லோரும் கூறுவார்கள்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, செம்மொழிக்காவலர் கலைஞர், பாவேந்தர் இவர்களை மிக மதித்துப் பாராட்டியவர் எங்கள் அப்பா.
அதேபோல கவிஞர் சுரதா, கவிஞர் அப்துல் ரகுமான், கவியரசர் மீரா, கவிஞர் மேத்தா, கவிப்பேரரசு வைரமுத்து எனப் கவிஞர்கள் பலர் எங்கள் இல்லத்தில் அப்பாவுடன் அளவளாவுவதை அருகில் இருந்து கேட்டு இன்புற்றவன் என்பது எனக்குக் கிடைத்த வரமாகவே கருதுகிறேன்.
என்னுடைய அப்பா தன்னை ஆளாக்கிய அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கத்தை என்றும் உருகிப் போற்றுபவர்.
உலகம் முழுவதும் சுற்றி வந்தவர்.
தெள்ளுதமிழ் ஆராய்ச்சி எள்ளத்தனைப்பொழுதும் பயனின்றி இராது அவர் நாவின் வெள்ளமெனச் சொற்களால் பொழிந்திடும் பேறு பெற்றவர்.
சொல நலமும் ,பொருள்நலமும் சுவை கண்டு துய்த்து மற்றும் கவிவுலகில் சுவையறியும் குழந்தைகள் போல் தமிழ்ச்சுவை களித்து உரைத்தும் பலருக்கு ஊட்டி வளர்ப்பவர்.
அவரின் மென்மையான எண்ணத்திற்காகவும் உண்மையான உள்ளத்திற்காகவும் உலகம் முழுவதும் உறுதுணையாக நண்பர்கள் இன்றளவும் அவரிடம் தொடர்பு கொண்டு இருப்பதுதான் நான் வியந்து பார்ப்பதுண்டு.
பகுத்தறிவுக் கொள்கையில் மிகுந்த பற்றுக் கொண்டவர். அதேசமயம் திருவருட்பா முதல் பன்னிரு திருமுறைகள், திவ்யப் பிரபந்தங்கள் வரை பக்தி இலக்கியத்திலும் தோய்ந்து திளைத்ததவர். ஆயினும் சமய நெறியில் சாய்ந்ததில்லை.
குழந்தைகள் மீது மிக அன்பாக இருப்பார்.
அவர்கள் கல்வியைப் பற்றி மிகவும் அக்கறை காட்டுவார். அயல் நாட்டு அறிவியல் முதல் விண் வெளி ஆய்வு வரை நம் செல்வங்கள் சென்று பெரும் புகழ் அடைய வேண்டுமென்ற நம்பிக்கையையும் துணிவையும் ஆர்வம் பெருக ஊட்டுவார்.
ஆங்கில இலக்கியத்தில் ஆழங்கால் பட்டவர். சரளமாக ஆங்கிலச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் நிகரற்றவர்.
அவரின் கலை இலக்கிய அறிவும்,தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளும் வியக்கத்தக்க வகையில் உள்ளன.
இன்றைய முதுமையிலும் தினமும் படிப்பதிலும் எழுதுவதிலும், பிறர் எழுதித் தருவதை திருத்துவதிலும், இலக்கியங்களோடு மகிழ்ந்து மேற்கோளிட்டும் சொல்வார்.
நான் ஔவை மகனென்றே பள்ளியில் போற்றி வளர்க்கப்பட்டேன்.
ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் சென்னை கிறித்தவ மேனிலை ஆடவர் பள்ளியில் பயின்ற போதும், தலைமையாசிரியர் திரு. கிளமெண்ட் பிளிக்ஸ் முதல் வகுப்பு ஆசிரியர்கள் அனைவருக்கும், ‘ஒளவை மகன்’ என்று தான் என்னைத் தெரியும்.
அப்பா எங்களை அவரவர் போக்கில் அவரவர் வளரட்டும் என்று எப்போதும் மனத்தில் ஒரு சிந்தனைத் தனிமையிலேயே இருப்பார்.
நான் எந்த வகுப்புப் படிக்கிறேன் என்று கூட எப்போதும் வினவ மாட்டார்.
உரிமை தருவதில் அவருக்கு நிகர் அவர்தான் எல்லையில்லாத உரிமை எதிலுமுண்டு.
ஒருமுறை நான் ஏழாம் வகுப்புப் பயிலும் போது, என்னுடைய தமிழாசிரியர் பெருந்தகை, ஜயராமன் தமிழைத் தேனாய்க் கற்றுதரும் உத்தியையும், கூடுதலாகவே தவறு செய்யும் மாணவர்களையும் தன்னுடைய இரும்புக் கரங்களால் அடிக்கும் வல்லமை கொண்டவர் ஆவார்.
எங்குச் சென்றாலும், யாரைப் பார்த்துப் பேசினாலும் என்னை உடனே தொலைக்காட்சியில் பட்டிமன்றத்தின் நடுவராய் வரும் ஔவையின் மகனா நீ என்று கேட்டு விடுவார்கள்.
எனக்கு எந்த நேரத்திலும் அப்பாவின் மகன் என்ற நிழலிலிருந்து தப்பவே முடியாது என்பது கல்லூரிக் காலங்களிலேயே தெரிந்து விட்டது.
“துன்பமெலாம் தவிர்த்து அன்பெலாம் நிரம்பி
இன்பமெலாம் அளித்த என் தனித் தந்தையே”
என்றுதான் என் அப்பாவைப் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.
“தம்மில் தம் மக்கள் அறிவுடைமை” என்ற திருக்குறளை அப்பா எப்போதும் எங்கள் உயர்வுக்குச் சுட்டிக் காட்டுவார்.
“தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல்
என்னை இயற்றிய என் தனித் தந்தையே
உன் உரு என் உரு தன் உரை என் உரை
என்ன இயற்றிய என் தனித் தந்தையே!”
என்று திருவருட்பா வரிகள் தான் என் அறையில் எழுதி வைத்துள்ளேன்.
எந்நிலையில் எங்கிருந்தாலும் நிறைவடைவதே நமக்கு நிலையான பண்பாகும்.
ஆனால் ஆர்வத்தில் கல்வியில் நிறைவே வரக்கூடாது என்ற நன்மொழியும் எங்களுக்கு ஊட்டி வளர்த்தவர், வளர்த்து வருபவர் எங்கள் அப்பா தான்.
தமிழையே படித்தாலும் எந்தத் துறையிலும் இணையாக தலை நிமிர்ந்து நிற்கலாம் – தடையில்லை என்ற போக்கு எனக்கு இயல்பாக வளர்ந்தது என் அப்பா தான்.
எனக்குள் ஏராளமான கனவுகளை வளர்த்து வரும் நற்சொற்கள் கூறி என்னை நாளும் வளர்த்த தந்தை என்பது கம்பரின் தொடர்.
என் தந்தையைப் பாராட்ட வணங்கக் கடமைப்பட்டுள்ளேன்.
நன்றி வணக்கம்.

Add a Comment