POST: 2021-06-27T10:57:21+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 64

“தென்றலை வருடிய திரு.வி.க! ”

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு

கல்லூரியில் திரு.வி.க நூலான “முடியா? காதலா? சீர்திருத்தமா?” என்ற பனுவலை வகுப்பிலும், இல்லத்திலும் நான் பயின்ற போது நூலாசிரியரின் நுண்மான் நுழைபுலம் கண்டு விம்மிதம் அடைந்தேன்.

வின்சர் கோமகனாரைப் பற்றி எழிலோவியமாக காட்சித் தந்தது கவின் நடைப் படைப்பாகும்.

சொல் ஆளுமைத் திறனைக் குறித்து அந்நாளைய கூட்டங்களில் மேற்கோள் வரிகளாகவே சொல்லிப் பழகினேன்.

அறிமுகவுரை, முடிப்புரை என்றெல்லாம் எழுத மாட்டேன், திரு.வி.க. வின் நடையழகிலேயே தோற்றுவாய், இறுவாய் என்று தான் எழுதி மகிழ்வேன்.

அந்நூலில் எத்தனை மேற்கோள்களை அடுக்கி அடுக்கி அறிவுக்கு விருந்தாக அணி செய்துள்ளார் என்பது பாராட்டத்தக்க பணியாகும்.

கடமை நமது ஆனால் பெரிது, பெரியதையே நினைப்பது உரிமை, நினைவு மனத்தின் பயிற்சி,
மனப் பயிற்சிதான் ஒழுங்கு, ஒழுங்குதான் வாழ்வின் உண்மை, உண்மைதான் உலகிற்கு ஒளி, உள்ளுங்கள் உயர்வடையலாம்

இப்படிச் சின்னஞ்சிறு தொடர்களாக எழுதிய தமிழ்த்தென்றல், அரசியல் ஞானி, அருளாளர், தொழிற்சங்கத்தின் தாய் என்றெல்லாம் நாடு போற்ற வாழ்ந்து பன்முகத் தமிழ் விளக்காய் திரு.வி.க. இருந்தார்.

திரு.வி.க.விற்கு நடையில் எளிமை, உடையில் எளிமை,
வாழ்வில் எளிமை,
அரசியலில் வாய்மை,
நெஞ்சில் நேர்மை, தொழிலாளர்களை அரவணைக்கும் தாய்மை,
அனைத்துச் சமயங்களையும் ஒன்றாகக் காணும் பெருந்தன்மை, பெண்களைத் தாயாக, இறைமையாகப் போற்றிப் பாராட்டிய பண்பு.

இவையெல்லாம் ஒரு வடிவம் பெற்றால் திரு.வி.க.வின் வடிவமாகத் திகழும்.

ஐந்தடி நான்கு அங்குலம் உயரமும் மெல்லிய உடலோடும் ஒரு கையில் ஆறு விரல்களோடும், காலில் மூன்று விரல்கள் ஒட்டிய நிலையிலும் பிறப்பிலேயே புதுமை வாய்ந்தவராகப் பிறந்தவர் என்பர்.

உறுதியான மனத்தோடும் வாழ்ந்த திரு.வி.க.வைத்தான் அறிஞர் மு.வ. தனது வழிகாட்டியாகக் கொண்டார்.

அறிஞர் மு.வ. அவர் தோற்றத்தைக் காட்டி எழுதியதை என் கருத்துக் கோவையில் 18.12.1986-இல் குறித்த வரிகள்:-

“வெள்ளாடை சூழ்ந்த மெல்லிய உடலும்,
புலமைப் பொலிவு பெற்ற அழகிய முகமும்,
அருள் பெருகும் கூரிய விழியும் பெற்ற வானம்பாடி அவர்; தமிழ்நாட்டில் பிறந்த தமிழ் வானம்பாடி;
சமரச வானம் கண்டு களிக்கும் வானம்பாடி;
தமிழகம் தழைக்க உலகம் உய்யப் பொதுமை மழை பொழியுமாறு வாழ்த்துப் பாடும் ‘வானம்பாடி’ எனத் திரு.வி.க.வுடன் மிக அணுக்கமாக நெருங்கிப் பழகிய நிலையில் டாக்டர் மு. வரதராசன், அவரைப் பொதுமை வானம்பாடியாகச் சுட்டிக்காட்டினார்.

பொதுவாக, திரு.வி.க. போராட்டவாதி; வர்க்க உணர்ச்சி கொண்டவர்; அன்புள்ளத்தில் காந்தியடிகளின் சீடர்; பொருளாதாரத்தில் காரல் மார்க்சின் பக்தர்; இந்தச் சிறப்பு இயல்புகளால்தான் அவர் சென்ற காலம் – நிகழ்காலம் – வருங்காலம் ஆகிய மூன்றுக்கும் பிரதிநிதியாக இருக்கிறார்.

திருக்குறள் தெளிவுரை என நூற்றுக்கணக்கான உரைகள் இன்று பெருகியுள்ளதற்குத் திரு.வி.க. எழுதிய திருக்குறள் விளக்கமே அடிப்படையாகும்.

திரு.வி.க. ஐம்பத்தாறு நூல்களை எழுதினார்.

திரு.வி.க. பெரிய ஆலமரம் போன்றவர்.

பெண்ணின் பெருமையில் காதல் மணம், விதவை மணம், கலப்பு மணம் முதலியவற்றை வற்புறுத்தியதோடு இளைஞர்கள் வாழ வேண்டிய நெறிமுறைகளும் அதில் வகுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவும் விடுதலையும் என்ற நூலில் அரசியல் வளர்ச்சியும், சமுதாய சீர்திருத்தமும்,தீண்டாமை ஒழிப்பும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும் என்ற நூலில் மனிதன், வாழ்க்கை, காந்தி அடிகள் என்ற மூன்று பெரும் பிரிவுகளில் அரிய கருத்துக்கள் இடம் பெற்றன.

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளாகிய மிலாதுநபியில், நபிகள் நாயகம் – திருநாவுக்கரசர் – விருஷப தேவர் ஆகிய மூவரையும்
ஒருங் கிணைத்து இசுலாமியர் கூட்டத்தில் அனைவரும் மகிழ்ந்து போற்றும் வகையில் பேசிய பேராற்றல் படைத்த திரு.வி.க.வின் மேடைத்தமிழ் தமிழுக்கு வாய்த்த அணிகலனாகும்.

அரசியலில் தெளிவான தமிழ் நடனமாடியது.

திருவாரூர் விருத்தாசல முதலியார் மகனார் கலியாண சுந்தரனார் என்ற பெயர் தான் திரு.வி.க. என நிலைத்தது.

படிப்பாலும், பண்பாலும், உழைப்பாலும், ஒழுக்கத்தாலும், நாட்டுப்பற்று, மொழிப்பற்றாலும், அரசியல் பொதுத் தொண்டினாலும், பொதுமை உணர்வாலும் சிறப்புற்று வாழ்ந்த இவரை இராயப்பேட்டை முனிவர் என்றே அழைத்தனர்.

தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை பல்கலைக்களஞ்சியமாக எழுதியதோடு அரசியல் தலைவர்கள், கலைவாணர்கள், இலக்கியப் புலவர்கள், பல்வேறு சமயங்களின் தலைவர்கள், சமுதாயத் தொண்டர்கள், மகளிர் என்று 125 சான்றோர் பெருமக்களைப் பற்றி அந்த வரலாற்று நூலில் எழுதியுள்ளார்

ஏறத்தாழ திரு.வி.க. வின் வாழ்க்கைக் குறிப்புகளைக் காட்டிலும், தமிழகத்தினுடைய வரலாறு என்றே அதைக் குறிப்பிடலாம்.

சான்றாக தமிழ்த்தாத்தா உ.வே.சா வைப் பற்றிய கருத்தைக் காணலாம்.

டாக்டர் சாமிநாத ஐயர் வாழ்க்கை ஓர் இலக்கியம். சாமிநாத ஐயர் தமிழிலே பிறந்தார்; தமிழிலே வளர்ந்தார்; தமிழிலே வாழ்ந்தார். அவர் பிறப்பும் தமிழ்; வளர்ப்புந் தமிழ்; வாழ்வுந் தமிழ். அவர் மனமொழி மெய்களெல்லாந் தமிழே ஆயின. அவர் தமிழாயினர்; தமிழ் அவராயிற்று. அவர் தமிழ், தமிழ் அவர்.

பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சாமிநாத ஐயர்.

தமிழகத்தில் சங்கங்கள், நிலையங்கள், நிறுவனங்கள், இதழ்கள் முதலிய பல்வேறு அமைப்புக்கள் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாமல் சில சீர்குலைந்து போனதற்கு 13 காரணங்களைத் திரு.வி.க. சுட்டிக் காட்டியுள்ளார் என்று என் நெருங்கிய உறவினர் அறிஞர் நாகலிங்கம் பட்டியலிட்டுள்ளார்.

1.சங்கங்கங்களை எல்லாம் ஒன்றுபடுத்தி காக்க வல்ல ஒரு தாய்ச்சங்கம் இன்மை,

2. பல கலைகளை விடுத்து வெறும் இலக்கிய இலக்கண ஏடுகளைக் கட்டி அழுதல்,

3.உள்ளாட்டம் – வெளியாட்டம் – ஆடல் பாடல் – சிலம்பம் – சிற்றுண்டி – முதலியன இன்மை

4.வகுப்புப் பிணக்கு

5.தமிழ் பயின்றவருள் பெரும்பான்மையோர் பிற் போக்கராயிருத்தல்,

6.நாட்டுப் பற்றின்மை

7.கருத்து வேற்றுமைக்கு மதிப்பளியாமை

8.பொறாமை

9.பிடிவாதம்

10.கால தேச முறைமைக்கேற்பச் செயல்களை மேற்கொள்ளத் தயங்கள்

11.தன்னலம்

12.பொறுமையின்மை 13.ஊக்கமின்மை

இவை இன்றும் பொருத்தமாகின்றன.

அப்பா, ஒன்றைச் சொல்லி சுட்டிக் காட்டுவார்.

தமிழிலேயே தோய்ந்த தமிழ்த் தென்றல் தான் நடத்திய இதழ்களின் பெயர்கள்: தேசபக்தன், நவசக்தியாகும்.

அதே வேளையில் தந்தை பெரியார் நடத்திய இதழ்களின் பெயர் விடுதலை, குடியரசு.

——

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

பொருநராற்றுப்படை தொடர்ச்சி…

5. விளக்கல் உருவின் விசியுறு பச்சை

எய்யா விளஞ்சூல் செய்யோ ள்அவ்வயிற்று

ஐதுமயி ரொழுகிய தோற்றம் போலப்

பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை

பொருநராற்றுப்படையின் படையின் புனைதிறம் காண சில தொடர்களுக்கு உரையமைந்ததை எண்ணி இன்புறலாம்.

விளக்கு அழல் உருவின் – விளக்கினது எரிகின்ற நிறத்தையுடைய, விசி உறு – விசித்துப்போர்த்தலுற்ற, பச்சை. தோலாகிய,

(6) எய்யா-மிக அறியப்படாத, இள சூல்இளையகருப்பத்தையுடைய, செய்யோள் – சிவந்தநிறத்தையுடை யோளது,அ வயிறு – அழகினையுடைய வயிற்றின்,

(7) ஐது மயிர் ஒழுகிய மெல்லிதாகிய மயிர் ஒழுங்குபடக்கிடந்த, தோற்றம்போல -,

(8)பொல்லம் பொத்திய- கூட்டித்தைத்த, பொதிஉறு – பொதிதல்பொருந்திய, போர்வை – போர்வையினையும்.

இது, பத்தரைப்போர்த்ததோல். ”விளக்கழலஉறுத்தபோலும் விசியுறுபோர்வை” என்ற சிந்தாமணியிலும் வரும்.

உரு – . பத்தரைமூடிய தோலின்தையலுக்குச் செய்யோளின் இளஞ்சூலையுடைய வயிற்று ஐது ஒழுகியமயிரையுவமை கூறினார்.

செய்யோளென்றது. மயிரொழுங்கு விளங்கித்தோன்று தற்கு. ‘எய்யாமையே அறியாமையே’.
அளைவாழ் லவன் கண்கண் டன்ன

துளைவாய் தூர்ந்த துரப்பமை ஆணி

(9) அளை வாழ் அலவன் – வளையிலே வாழ்கின்ற நண்டின், கண் கண்டு அன்ன – கண்ணைக் கண்டாலொத்த,

(10) துளை வாய் தூர்ந்த – துளைகளின் வாய் மறைதற்குக் காரணமாகிய, துரப்பு அமை-( தோல்ஞெகிழாமல் ) முடுக்குதலமைந்த, ஆணிஆணியினையும், துளைவாய் தூர்ந்த துரப்பமையாணி என்பதற்கு – பத்தல் இரண்டுஞ்சேர்தற்கு முடுக்கின ஆணியென்றும் கூறுவர் .

ஆணி அளைவாழலவன் கண்ணைப்போலுமென்பர்.

“திவவுத்திங்கள் கோணிரைத் தனையவாணி” என்ற இடத்து ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘கோள் நிரைத்த திங்கள் பத்தரில் தோலைச் சூழ முடுக்கின ஆணிக்கு உவமம்.

அதுளைவாய் தூர்ந்த துரப்பமையாணி என்றார் பிறரும்’ என்று கூறியிருத்தற்கு ஏற்ப, இங்கு உள்ள ஆணியென்பதனை மேலடியோடும் இயைத்து, ‘ஆணி, திங்களின் வடிவிற்றாகியிருப்ப’ என்று உரைத்தார்.

11-12. எண்ணாள் திங்கள்
வடிவிற்றாகி

அண்ணா வில்லா வமைவரு வறுவாய்

(11) எண் நாள் திங்கள் வளர்பிறை எட்டாம் நாளில் தோன்றுஞ் நிலவின், வடிவிற்று ஆகி வடிவையுடைய தாய்,

(13), அள் நா இல்லா-உள் நாக்கு இல்லாத, அமைவருபொருந்துதல் வந்த, வறு வாய் வறிய வாயினையும்,

13. பாம்பணந் தன்ன வோங்கிரு மருப்பின்

பாம்பு அணந்து அன்ன – பாம்பு தலையெடுத்தால் போன்ற, ஓங்கு – ஓங்கின, இரு மருப்பின் – கரிய தண்டினையும்,யாழின் நீண்ட தண்டம், பாம்பு தலையெடுத்திருந்தாற்போலு மென்க. தண்டிற்கு மரம், கொன்றையுங் கருங்காலியுமாம்.

14 மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்

கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவின்

(14) மாயோள் – கரியநிறத்தையுடையோளுடைய, முன்கை-முன்னங்கையிலேயணிந்த, ஆய் தொடி – அழகிய தொடி யை, கடுக்கும் ஒத்திருப்பதும்,–

(15) கண் கூடு இருக்கை திண் பிணி – ஒன்றோடொன்று நெருங்கின இருப்பையுடைத்தாகிய திண்ணிய பிணிப்பினையும் உடைய, திவவின் – வார்க்கட்டினையும்,யாழின் வார்க்கட்டு, மாயோள் முன்கை ஆய்தொடிகடுக்குமென்க.

‘மடந்தைமுன்கைக், குறுந் தொடி யேய்க்கு மெலிந்து வீங்குதிவவு” என்ற பெரும்பாணாற்றுப் படை, இங்கு ஒப்புநோக்கத்தக்கது. ‘

தொடித் திரி வன்ன தொண்டு படுதிவவின்’ என்றது மலைபடுகடாம்.

16-18. ஆய்தினை யரிசி யவைய லன்ன

வேய்வை போகிய விரலுளர் நரம்பின்

கேள்வி போகிய நீள்விசித் தொடையல்

(16) ஆய் தினை அரிசி-ஆராய்ந்தெடுத்த தினையரிசியின், அவையல் அன்ன – குத்தலரிசியையொத்த,

(17) வேய்வை போகிய குற்றம்போகிய, விரல் உளர்-விரலாலசைக்கும், நரம்பின்நரம்பினுடைய,

(18)கேள்வி போகிய- இசைச்சுருதிமுற்றுப்பெற்ற, நீள் விசி – நீண்ட விசித்தலையுடைய, தொடையல் – தொடர்ச்சியினையும்,-தினையின்குத்தலரிசி யாழ்நரம்பிற்கு உவமையாதலை “ஆய் தினையவையலனையவா நரம்பு” என்றும் கூறினார்.

19 மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன

அணங்கு மெய்ந்நின்ற வமைவரு காட்சி

(19) மணம் கமழ் மாதரை – திருமணம் செய்தமை தோன்றுகின்ற மாதரை, மண்ணி அன்ன. அலங்கரித்தாலொத்த,

(20) அணங்கு மெய் நின்ற-( யாழிற்கு உரிய ) தெய்வம் தன்னிடத்தே நின்ற, அமை வரு-அமைதல் வருகின்ற, காட்சி-அழகினையும், “மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்தி… குற்றம் நீங்கிய யாழ்” என்ற சிலப்பதிகாரம் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

யாழிற்கு உரிய தெய்வம் மாதங்கி எனப்படுவார்.

21-22. ஆறலை கள்வர் படைவிடல் அருளின்

மாறுதலை பெயர்க்கு மருவின் பாலை

(21) ஆறு அலை கள்வர் -வழியையலைக்கின்ற கள்வர், படைவிட- (தம் கையிற்) படைக்கலங்களை விடும்படி, அருளின்

(22) மாறு. அருளுக்கு மாறாகிய மறத்தினை, தலை பெயர்க்கும் – ( அந்தக்கள்வருடைய ) இடத்தினின்று போக்குகின்ற, மருவு இன்-மருவுதலினிய, பாலை-பாலையாழை.

பாலையாழின் இசையைக் கேட்ட ஆறலை கள்வர் தமது கையிற் படை நெகிழ்ந்து விழத் தமக்கு இயற்கையான மறக்குணத்தினின்று நீங்குவரென, அவ்யாழின் சிறப்பைக் கூறினார்.

23-24. வாரியும் வடித்து உந்தியு முறழ்த்தும்

சீருடை நன்மொழி நீரொடு சிதறி

(23) வாரியும் – ( நரம்புகளைக் ) கூடத்தழுவியும், வடித்தும்-உருவியும், உந்தியும் – தெறித்தும், உறழ்ந்தும் – ஒன்றைவிட்டு ஒன்றைத் தெறித்தும்,

(24) சீர் உடை நல் மொழி நீரொடு சிதறி-சீரையுடைத்தாகிய தேவபாணிகளை நீர்மையுடன் பரக்கப்பாடி.

யாழ் மீட்டலைக் காட்டும் நுணுக்கம் வியப்பைத் தருகிறது

.பாலையாழை வார்தல் முதலியன செய்து நன்மொழியைப் பரக்கப்பாடினர் . ‘வார் தெலென்பது – சுட்டுவிரற் செய்தொழில்: வடித்தல் என்பது சுட்டுவிரலும் – பெருவிரலும் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல்.

உந்தலென்றது நரம்புகளைத் தெறித்து வலிவிற்பட்டதும் மெலிவிற்பட்டதும் நிரல்பட்டதும் நிரலிழி பட்டதுமென்று அறிதல்.

உறழ்தலென்பது – ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல்’ என்று, சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் எழுதினார்.

சீர்’ எனவே, பாணியும் தூக்கும் உள்ளனவாம்.

சீர்முதலியன தாளவிசேடங்கள்: ‘சீர்-முடியுங்காலத்தைத் தன்னிடத்தேயுடையது; பாணி-எடுக்குங்காலத்தைத் தன்னிடத்தேயுடையது: தூக்கு-நிகழுங் காலத்தைத் தன்னிடத்தேயுடையது’ என்று
கலித் தொகையுரையில் நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.

தேவபாணியென்பது-தேவரைப்பரவுதல்: அது பெருந்தேவபாணி சிறுதேவபாணியென இருவகைப்படுமென்றும், அவை முத்தமிழ்க்கும் பொதுவென்றும், இசைத் தமிழில் வருங்கால் செந்துறை முதலிய இசைப்பாக்கள் பத்தின் பாற்படுமென்றும் கூறுவர்.

பொருநன் செல்லும்போது உடன் செல்லும் பாடினியின் உருவத்தைக் கூந்தல் முதல் அடிவரையில்

25 – முதல் 47 – வரையிலுமுள்ள இருபத்துமூன்று அடிகளால் புனைந்துள்ளார்.

25. அறல்போற் கூந்தல்

அறல் போல் கூந்தல் – (ஆற்றின்) கருமணல் போன்ற கூந்தலினையும்,-பிறைபோல் திருதுதல் பிறை போல்-பிறைநிலாப்போல், திரு-அழகினையுடைய, நுதல் – நெற்றியினையும்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *