பெருமிதத் தந்தை மருத்துவர் காமேசுவரன்….(31.7.1923 -26.6.2021)
மருத்துவத் திலகம்,பேராசிரியர் டாக்டர்,பத்மஸ்ரீ சண்முகம் காமேசுவரன் முதிர்ந்து கனிந்த நிலையில் மறைந்தார் .
உலகப் புகழ் பெற்றவர் .
தமிழுணர்வும் – தன்மானப் பாங்கும் ததும்ப வாழ்ந்தார் .
அன்னையார் இலலிதா காமேசுவரன் எங்கள் குடும்பத்துக்குப் பெரிதும் வேண்டியவர் .
டாக்டர் தாராவையும் என் மக்கட் செல்வங்களையும் எப்போதும் பாராட்டிப் பேசுவார் .
நாவலர் சோமசுந்தர பாரதியார் நூற்றாண்டு விழாவில் நான் பேசியதைக் கேட்டு இருவரும் கண்ணீர் மல்கப் போற்றினர் .
டாக்டர் இலலிதா காமேசுவரன் திருமணம் என் தந்தையார்,உரைவேந்தர் தலைமையில் நடந்ததை ஆயிரம் முறையாவது சொல்லி மகிழ்ந்தார் .
திடுமென என்னிடத்தில் திங்களுக்கு ஒரு முறை பேசி நலம் வினவுவார் .
அதென்ன மோகனைப் பார்த்துப் போய் விட்டார்களாமே .உங்களைப் பார்க்க நான் வரட்டுமா ஒளவை என்றார் .
சவுதி ,போர்னியோ ,மஸ்கட் அரச குடும்பத்தினர் , நம் முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர் வி இவரிடம் வந்து மருத்துவம் பெற்றனர் .
இன்றைய மாண்புமிகு முதலமைச்சர் நெகிழ்ச்சியாக இரங்கலுரை கூறியதோடு விரைந்து சென்று வினவியதைக் கண்ட போது முத்தமிழ்க்கலைஞர் சென்றதைப் போலவே இருந்தது .
பேராசிரியர் டாக்டர் மோகன் குடும்பத்தார் -டாக்டர் ஜெயந்தி குடும்பத்தார் ஆகியோருக்கு என் ஆழ்ந்த மனத்துயரத்தை எழுதுகிறேன் .
ஓங்கிய புகழோடு ஒளிர்ந்து உயர்ந்த தனிப்பெரும் தமிழ்க்குடும்பத்தின் அண்ணல் மறைந்தார் .
நாவலர் சோமசுந்தர பாரதியார் குலக்கொடியும் – கொழுகொம்பும் ,வாழ்ந்து வரலாறு படைத்து மறைந்தார்கள் .
டாக்டர் மோகன் தன் புகழோடு தந்தை – தாய் நினைவையும் சுமந்து புகழ் பூத்து மிளிர்வது நெஞ்சுக்குப் பெரிய நிறைவு .
ஒளவை நடராசன்

Add a Comment