“வாழ்க பல்லாண்டு”
அவை பல வென்ற. ஒளவை நடராசன்-
சுகி சிவம் –
செப்டம்பர் 5 – 2020.
சொல்லின் செல்வரின் தேன் சொட்டுக்கள்…1
வாழ்வில் நாம் மதிக்கும் மிகச் சிறந்த மனிதர்களை அவர்கள் வாழும் போதே வணங்குவது, வாழ்த்துவது, பாராட்டுவது நம்முடைய அடிப்படையான கடமை.
இன்றைக்கு மேடைகளில் நான் பேசும் பொழுது தெளிவாக, வரிசையாக, கோர்வையாக அல்லது வெவ்வேறு எதிரெதிரான கருத்துக்களைக் கூட ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பேசுவதாகப் பலர் என்னிடத்தில் தங்களுடைய பாராட்டுக்களைத் தெரிவித்து இருக்கிறார்கள்.
அந்த சமயங்களிலெல்லாம் நான் ஒருவருக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்.
யார் எனக்கு இந்த மாதிரி பேசுவதற்கு ஒரு வழிகாட்டி என்று கேட்டால் நான் மிக மதிக்கிற ‘பத்மஸ்ரீ’ ”. டாக்டர் ஒளவை நடராசன் அவர்கள் தான் .
ஒரு மனிதரைப் பற்றி நாம் புகழ்ந்து பேசுவது என்பது ஏதோ ஒரு காரியம் சாதிப்பதற்காக என்று இந்த உலகம் கொச்சையாக ஆக்கிவிட்டது.
ஆனால், சில பேருக்கு நாம் வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்லிக் கொண்டே இருந்தாலும் கூட போதாது.
நான் பார்த்து இளம் வயதிலேயே இருந்து வியந்து கொண்டாடிக் கொண்டிருக்கின்ற ஒரு பேச்சாளர் ஒளவை நடராசன் அவர்கள்.
அவர்கள் நூறு ஆண்டு வாழ வேண்டும் என்ற என்னுடைய பிரார்த்தனையை அதற்கு மேலும் வாழ்ந்து தமிழ் உலகத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்கிற என்னுடைய மிகப் பணிவான பிரார்த்தனையை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதற்காகத்தான் இந்த சொற்பொழிவை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
அவருடைய நுட்பமான அறிவு சங்க இலக்கியம் தொடங்கிப் பழம்பெரும் இலக்கியங்கள் தொடங்கி புராண, இதிகாச இலக்கியங்களுக்கு வந்து அதன் பிறகு புதுக்கவிதை, கவிக்கோ அப்துல் ரகுமான், சிற்பி , முருகுசுந்தரம் அவர்கள் இன்னும் பின்னால் வந்த நா.காமராசன், மு.மேத்தா இப்படி ஒரு மிகப்பெரிய ஆற்றொழுக்கான தமிழ் இலக்கிய வரலாறு என்று நாம் எதைப் படிக்கிறோமோ அந்தத் தமிழ் இலக்கிய வரலாறுக்கு கை, கால் முளைத்தால் அது தான் அறிஞர் ஒளவை நடராசன் அவர்கள்.
அதாவது சங்க இலக்கியம், சமய இலக்கியம் அதன் பிறகு வந்த புத்திலக்கியம், நாவல், சிறுகதை என்று எதைப் பற்றி வேண்டுமானாலும் சரி, இன்னொன்று நான் மனம் திறந்து சொல்லிவிடவேண்டும்; கொஞ்சம் கஷ்டமாக இருக்கும், ஆனாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
நிறைய தமிழ்ப் படித்தவர்கள் தமிழுக்குள் மட்டுமே இருப்பார்கள். ஒரு சிமிழுக்குள் மட்டுமே இருப்பார்கள்.
குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போலத் தமிழைத் தாண்டி வேறு எதையும் அவர்களால் சிந்திக்க இயலாது.
ஆனால்,மிக ஆழமான வாசிப்பு ஆங்கில இலக்கியங்களிலே, ஆங்கிலப்புத்தகங்களில், அதைவிட மொழி ஆளுமை ஆங்கிலப் பேச்சிலே மொழியாளுமை எல்லாம் உடையவராக வாழ்கிறவர் தான் நம்முடைய டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்.
நான் அவர்களைப் பற்றி நூற்றுக்கணக்கான தகவல்கள் என்னுடைய பேச்சுக்கு இடையிடையே கூறியிருக்கிறேன்.
இருந்தாலும் இந்த முறை அவர்களுக்கு நான் என்னுடைய வணக்கத்தைத் தெரிவிப்பதற்காக ஒன்றிரண்டு செய்திகளைச் சொல்ல விரும்புகிறேன்.
அவர் தொல்காப்பியம், இலக்கணம், இலக்கியம் எல்லாம் நன்கு படித்தவர்.
ஆனால், எந்த மேடையில், யாரிடத்தில், எப்படி அதைச் சொல்ல வேண்டும் என்பதற்கு அவர்தான் சான்று.
இந்தச் செய்தியை எப்படிச் சொல்ல வேண்டும், நாம் இப்பொழுது எப்படி சொல்லிக் கொண்டிருக்கிறோம், எப்படிச் சொல்ல வேண்டும் என்ற அவருடைய கூர்ந்த மதிக்கு ஓர் உதாரணம் கூறுகிறேன்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கிறார்கள்.
அப்பொழுது ஒரு உத்தரவு அவருடைய கையெழுத்திட்டு வருகிறது.
அதாவது கார் ஓட்டுனர்களுக்கு சம்பளம் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்று எழுதி வைத்து “கார் ஓட்டிகளுக்கு சம்பளம் கூடக் கொடுக்கலாம்”என்று முதல்வருடைய உத்தரவு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கையெழுத்திட்டு அனுப்புகிறார்கள்.
“கார் ஓட்டிகளுக்கு”என்று போட்டு எழுதி அனுப்புகிறார்கள் .
இந்த உத்தரவை அனுப்புகிற போது ஒளவை நடராசன் “காரோட்டி”என்று திருத்தம் செய்கிறார்கள்.
ஏனென்றால் தமிழில் புணர்ச்சி விதிப்படி அவ்வாறு தான் எழுத வேண்டும்.
அதனால் “காரோட்டிகளுக்குச் சம்பளம் கூடுதலாக வழங்கலாம்” என்று முதல்வர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள் என்று தகவல் அனுப்புகிறார்.
எம்ஜிஆர் அவர்களுடைய பார்வைக்கு இவர் திருத்திய காகிதம் செல்கிறது.
இவர் உத்தரவு போடும்போது “கார் ஓட்டி” என்று இருக்கும் பொழுது “காரோட்டி” என்று திருத்தி இவர் போட்டுள்ளார் என்று கூறினால் புரட்சித்தலைவர் எம் ஜி ஆரை விட தான் பெரிய தமிழறிஞர் என்பதைக் காட்டிக் கொள்ள விரும்புகிறாரா என்று யாரோ தவறாகச் சொல்லிவிட்டார்கள்.
எம்ஜிஆர் அவர்களும் “என்ன? என்னை விடப் பெரிய தமிழறிஞர் என்பதை நீங்கள் நிரூபிக்கிறீர்களா?” என்று ஒரு கோபத்தில் கேட்கிறார்.
என்ன பதில் கூறுவது?
இலக்கண விதி சொல்லலாம், சூத்திரம் சொல்லலாம், இலக்கணம் என்ன சொல்லுகிறது என்கிற புணர்ச்சி விதியை விளக்கலாம்.
ஆனால் அவர் என்ன பள்ளி மாணவரா அவருக்கு விளக்கிக் கொண்டிருக்க?
அவர் யார்?
முதலமைச்சர்.
இவர் யார்?
இயக்குநர் அவ்வளவுதான்.
அல்லது செய்தித் துறையினுடைய செயலாளர் என்ற நிலையில் இருக்கிறார்.
முதல் கேள்வி கேட்கிறார்
“நீங்கள் என்னைவிடப் பெரிய தமிழறிஞர் என்பதை நிரூபிக்கிறீர்களா?
நான் “கார் ஓட்டி” என்று போட்டதை “காரோட்டி” என்று திருத்தி போடுகிறீர்களா?”
என்று கேட்கிறார்.
ஒரே வார்த்தை பதில் சொல்கிறார்
“நாங்கள் எங்கே தமிழ்ப் படித்தோம். படித்ததெல்லாம் புத்தகத்தைப் பார்த்தா படித்தோம்?
படகோட்டி படம் பார்த்துத் தானே தமிழே படித்தோம் என்றார்.”
அதிலுள்ள “படகோட்டி” என்பது எம்ஜிஆர் நடித்த படம்.
அதில் “படகு +ஓட்டி” என்று பிரித்தா போட்டிருந்தது? ”
படகோட்டி” என்று தானே அந்தப்படம் வந்தது.
. உடனே சிரித்து விட்டார் எம்ஜிஆர். “படகோட்டி” என்கிற சொல் எப்படி இலக்கணப்படி சரியோ அப்படி “காரோட்டி” என்பதை அவரிடம் எப்படிக் கூற வேண்டும் என்கிற சூழல்சார் சொல்நயம்
ஒளவையுடையது.
ஒரு மிகப் பெரிய ஆளுமைத் திறன் உடையவர்கள் நம்முடைய ஔவை நடராசன்.
நான் எனது இளமைக் காலத்து நினைவுகளை கூறுவது என்று சொன்னால், அவர் இருக்கிற இடத்தில் எப்பொழுதும் குறைந்தபட்சம் ஒரு பத்து நபர்கள் இருப்பார்கள்.
ஒரு காபி என்றாலும் சரி, ஒரு பக்கோடா என்றாலும் சரி ஒரு பத்து முதல் பதினைந்து நபர்கள் அவரைச் சுற்றி இருப்பார்கள்.
எல்லோருடனும் கலகல கலகலவெனச் சிரித்துக் கொண்டே இருப்பார்.
எரிச்சல் பட்டு, கோபப்பட்டு,
படபடப்படைந்து அதெல்லாம் எதுவும் அவரிடம் கிடையாது.
அது எப்படி அந்த மனிதரால் அவ்வாறு இருக்க முடிந்தது?
நான் என்பது இல்லை எனக்குப் பின்னால் வந்த இளைய பேச்சாளர்கள் வழக்கறிஞர் சுமதி, பாரதி பாஸ்கர், இலக்கியச் சுடர் த இராமலிங்கம், தற்போதைய உச்ச நீதிமன்ற நீதியரசராக இருக்கும் அருமைச் சகோதரர் இராமசுப்பிரமணியம் அவர்கள் ஆகிய இவர்கள் எங்களுக்கு அடுத்த தலைமுறை.
வலம்புரிஜான் இவர்கள் போன்றோர் எங்களுக்கு முந்தைய தலைமுறை.
இலக்கிய மேடைகளில் மேடை ஆளுமைகளில் யாராக இருந்தாலும் சரி அப்படி வளர்ந்தவர்களில் ஔவை நடராசனின் இலக்கியப் பண்ணைக்குள் வராமல் போயிருக்க முடியாது.
ஒரு காலத்தில் பொள்ளாச்சி அருட்செல்வர் அவர்கள் இராமலிங்கர் பணி மன்றம் என்ற ஓர் அமைப்பில் “வள்ளலார் காந்தி விழா”வில் ஏவிஎம் இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் பத்து நாள் நடக்கும்.
காலையில் தொடங்கி மாலை வரையில் இலக்கிய விழாவில் நாங்கள் பணிவிடை செய்வதற்காகச் செல்வோம்.
அந்தக் காலை முதல் மாலை வரை நாங்கள் கற்றுக்கொண்ட செய்தி இருக்கிறதே அது –
கல்லூரிக்குச் சென்றாலும் கற்றுக் கொண்டு இருக்க முடியாது.
மனிதர்களை எப்படி படிக்க வேண்டும் ?
எதைப் போன்ற புத்தகங்களைப் படிக்கவேண்டும் ?
அதைவிட ஒரு ஆச்சரியமான செய்தியைச் சொல்கிறேன்.
அந்த இராமலிங்கர் பணி மன்றத்திற்கு எப்படிப்பட்டவர்கள் எல்லாம் வந்து தங்கி இருப்பார்கள் என்றால் மிகுந்த சமய இலக்கியங்களில் ஆழம் உடையவர்கள்,
தினமும் பூஜை செய்பவர்கள், வள்ளலாருடைய இலக்கியங்களில் ஆழமான படிப்பு உடையவர்கள்;
இது மாதிரி ஒரு குழுவினர் தங்கியிருப்பார்கள்.
மேலும் அதைத் தவிர எல்லா இடத்திலும் போலிகளும் உண்டு;
அவ்வகையில் சாமியார் என்று சொல்லிக்கொண்டு ஒன்றிரண்டு பேர் தங்கியிருப்பார்கள்.
அந்தப் பத்து நாள் விழாவில் பேசுவார்கள்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் போன்றவர்கள், நா.கிரிதாரி பிரசாத் போன்றவர்கள், நம் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் கவிக்கோ அப்துல் ரகுமான் போன்றவர்கள் புலவர் புலமைப்பித்தன் அவர்களைப் போன்றவர்கள் என்று அப்படி ஒரு குழுவினர் இருப்பர்.
https://www.youtube.com/watch?
v=mGUsGcPYWfo&list=RDCMUCxkxeVb5nCDcBJK43dW8sMw&start_radio=1&rv=mGUsGcPYWfo&t=89

Add a Comment