அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 65
இமயப் புலமை மூதறிஞர் வ.சுப. மாணிக்கம்
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
எந்தையார் பெரிதும் மதித்துப் போற்றிய பெரும் பேராசிரியர் பேரறிஞர் வ.சுப. மாணிக்கம் (17.04.1917 – 25.04.1989) ஆவார்
சென்னை வரும்போதெல்லாம் அப்பாவைத் தவறாமல் தலைமைச் செயலகத்திலும், அண்ணாநகர் இல்லத்திலும் சந்தித்துப் பேசுவார்.
1986 ஆம் ஆண்டில் ஓடியாடிக் கொண்டிருந்த என்னிடம் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் தமிழிலக்கியம் பயில்கிறாய் நீ எவ்வளவு பாடல்கள் உனக்கு மனனமாகத் தெரியும் என்றார்.
திகைத்து நின்றேன். நூறு பாடல் தெரியும் என்றேன்;
அதற்கு உடனே என்னப்பா, அருள் ! திருக்குறளே ஆயிரத்துக்கு மேல, கம்பராமாயணமோ பத்தாயிரத்திற்கு மேல்; நீ என்ன நூறு என்று சொல்கிறாய்?
என்றவுடன் அறிவார்ந்த அறிஞரிடம் எப்படி பேசக்கூடாது என்று பின்னர் தெளிந்தேன்.
மூதறிஞரின்
வள்ளுவம்,
இரட்டைக்காப்பியங்கள்,
கம்பர்,
காப்பியப் பார்வை,
தலைவர்களுக்கு,
தமிழ்க்காதல்,
தொல்காப்பியத்திறம்
தொடர்பான நூல்கள்
நெல்லிக்கனி, மாணிக்கக்குறல் எப்போதும் அப்பாவின் மேசையில் முதன்மையாக அணி நிற்கும்.
ஒருநொடியில் மூதறிஞரின் பல நூல்களை எழுதிக் கோடிட்டு அப்பா படிப்பதும் பல கருத்துகளை மீளவும் அடிக்கோடிட்டிருப்பதும் பல நிலைகளில் கண்டுள்ளேன்.
அவரின் அழகான முத்து முத்தாக கைப்பட எழுதிய கடிதங்கள் அப்பாவிற்கு வந்தமையையும் கண்டுள்ளேன்.
பிறகு மெதுவாக அவரின் நூல்களைப் புரட்டத் தொடங்கியபோது மூதறிஞரின் செம்மாந்த நடையைக்கண்டு வியந்து மகிழ்ந்தேன்.
மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்களின் நடையைப்பற்றி என் கருத்துக் கோவையில் ( 04.10.1986 ) நான் குறித்த வரிகள்:
“என் எழுத்துகள் கட்டளைச் சொற்களால் கட்டளை நடையால் அமைந்தவை;
சொற் பல்குதல் என்ற மிகைக்கு இடமில்லாதவை;
செறிவு மிகுந்தவை; வேண்டுங்கால் புதிய சொல்லாக்கங்களும், புதிய சொல் வரவுகளும், புதிய தொடராட்சிகளும் உடையவை.
நீண்ட செந்தமிழுக்கு எதனையும் நிறைவாகத் தூய்மையாகச் சொல்லவல்ல தற்கிழமைத் திறமுண்டு;
மொழித்திறத்தைப் பயன்படுத்தும் பயில்திறம் எழுத்தாண்மையர்க்கு வேண்டும்.
தூய செந்தமிழால் ஒருவர் எழுதவில்லையெனின், அது தமிழ்க் குறைபாடன்று;
தெளிவும் உறுதியும் பயில்வும் இல்லா எழுதுகையர் குறைபாடு, என்று உணர்வதே மெய்யுணர்வு”
என்று எழுதிய வரிகள் எந்நாளும் மின்னும் பொன் வரிகளாகும்.
அதே போல மாணவர்களுக்கே உரித்தான ஒரு கேள்வி வரும் அப்படியென்றால் செவ்விய உரைநடை எது என்று கேட்கத் தூண்டும்;
எங்களையெல்லாம் கருத்திற் கொண்டு அதற்கும் விளக்கம் வந்ததைக் கண்டு திகைத்தேன்;
அவ்வரிகளையும் என் அந்நாளைய குறிப்பில் எழுதியிருந்தேன்.
“செவ்விய உரைநடைக்குத் தொடர் இரத்தமாகும்;
சொற்கள் எலும்பாகும்.
நல்ல தமிழ்ச் சொல்லும் பொருந்திய தொடர்பாகும் பெருவரவாக அமைந்தால் தான் வருங்காலத் தமிழ் உரைநடை பின் வாங்காது சீர்மையும், நீர்மையும், நேர்மையும் பொலிந்து வானுயர் தோற்றமாக வளரும் என்ற அவரின் அழுத்தமான கருத்தாக மிளிர்ந்தது.
அவரின் செந்தமிழ் நடைக்குப் பல சான்றுகள் உள்ளன.
என்னைக் கவர்ந்த மற்றொரு சான்று;”
எப்பருவத்தினரும் எந்நிலையினரும் செய்யக்கூடிய பொது நலன்கள் ஏராளமாக உள்ளன.
இவற்றைச் செய்வதற்கு பணம் தேவையில்லை, மனமே தேவை.
அழைப்புத் தேவையில்லை; உழைப்பே தேவை.
அறிவு கூடத் தேவையில்லை; அன்பு கூடத் தேவை.
என்ற வரிகளை நான் அரிமாக்குருளையர் கூட்டங்களில் அவ்வப்போது சொல்லிக் காட்டி அறப்பணிகளை செவ்வனே செய்ய ஊக்கமூட்டும் அறவுரை என்றேன்.
அப்பா அடிக்கடி அவரின் வள்ளுவத்தைத் தொடர்ந்து படிப்பார்;
திருக்குறள். வினையின் நீங்கி விளங்கிய அறிவன் கண்ட தலை நூல் என்று பேரறிஞர் வ.சுப.மா எழுதுவதைப் படித்துக்காட்டி அந்நூலை நடைமுறைக் கண்ணோடு தான் நாளும் பார்க்க வேண்டும்.
வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு கூராய வேண்டும்;
காலப்போக்கோடு ஒத்திட்டுக் காண வேண்டும் என்ற கருத்தை வழிமொழிவார் அப்பா.
அவ்வண்ணம் 02.02.1993 ஆம் நாளன்று மூதறிஞர் செம்மல் வ சுப மாணிக்கனார் பற்றி அப்பா எழுதிய குறிப்பு வருமாறு :-
“மூதறிஞர் செம்மல் வ சுப மாணிக்கனார் தமிழறிஞர் மூலம் போற்றி வழிபடத் தக்கதோர் பொன் விளக்கு .
நகரத்தார் மட்டுமின்றி நாட்டாரெல்லாம் அறிந்து புகழ்ந்த முழு நிலவு .
நன்குளம் ,தமிழ்க்காதல் ,சிந்தனை களங்கம், கம்பர் ஆகிய நூல்கள் இவர்தம் ஆராய்ச்சி திறனை தமிழ் உலகிற்கு அறிவித்த அரிய நூல்கள்.
மரபு வழி சிந்தனை, இலக்கணம், புதுமை கண்டுரைக்கும் புலமை நுட்பம் ,தமிழ் நெறி பாதுகாப்பு உணர்வு, மொழிப்பற்று எனப்பல செம்மாந்த சிறப்புகளை உடையவர் எங்கள் வ.சுப.மா..
தமிழன்னையின் ஈடு இணை உற்று நேர்காணர் வ சுப அவர்களின் சாயலே எனக்கு தோற்றம் .
பல்லாண்டுகள் பேராசிரியராக பணியாற்றி புலமை மிக்க மாலை பிறக்கடைகளை உருவாக்கிய பீடுசால் பெருந்தகை;
மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தராயமர்ந்து விழுமிய கல்வி பணிபுரிந்த வித்தகர்.
தமிழ்வழி கல்வி இயக்ககம் கண்டு உடல் சலியாது உரைத்த உறவோர்
என பல வகையில் நாம் போற்றத்தக்கவர் மூதறிஞர் செம்மல் மாணிக்கனார்.
நான் நழுவிய போதெல்லாம் என்னை எடுத்தெடுத்த தழுவிய தந்தை.
மாணிக்கனாரின் நினைவைப் போற்றும் வகையான் தமிழ் மொழிக்குத் துறைதோறும் தொண்டு செய்து வாழ்வதே நமக்கு கடனாகும் .
மூதறிஞர் வ.சுப. என்னுடைய பாட்டனார், உரை வேந்தர் ஒளவை துரைசாமி குறித்து எழுதிய பகுதி :
பேருரை கண்ட பெருஞ்செல்வர்
மூதறிஞர் டாக்டர் வ.சுப.மாணிக்கம்
“பல்வேறு காலத்தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஔவை துரைசாமி அவர்கள்.
தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும், சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித்தமிழ்ப் பண்பு இவர்பால் காணலாகும்.
எட்டுத்தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரை விளக்கம் செய்தவர்.
இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக்குறிப்பும், கல்வெட்டுக்குறிப்பும் மண்டிக்கிடக்கின்றன.
ஐங்குறு நூற்றுச்செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல், விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறனைக் காண்கின்றோம்.
உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெளிந்து வரம்பு செய்து கோடல் இவர்தம் உரையொழுங்காகும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரை கண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஔவை துரைசாமி ஆவார்.
இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப்பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று.
பரந்த சமயவறிவும், நுண்ணிய சைவ சித்தாந்த தெளிவும் உடையவராதலின் சிவஞான போதத்துக்கும், ஞானாமிர்தத்துக்கும், மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார்.
சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி சித்தாந்த கலாநிதி என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர்.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச்செய்தவர்.
மதுரை குமரனார், சேர மன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஔவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.
கடவுட் பற்றும், சைவத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர் முதுமை மறப்பிக்கும் இளையவீறு பெற்று இராமலிங்க வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம்
தமிழ்ப்பேழைக்குத்தாங்கொணாச் செல்வமாகும்.
நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க்கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஔவை துரைசாமி நெடும் புகழ் என்றும் நிலுவுவதாக!
வளம் படைத்த தமிழ்மொழிக்குச் சொல்லாக்கிகள் மிகத்தேவை.
அவ்வப்போது சொல்லை வடித்துக் கொடுக்காதவன், வடித்துக்கொள்ளாதவன் மொழிக்கடன் ஆற்றாதவன் ஆகின்றான்;
வேற்றுச்சொல் வரவுக்கு இடங்கொடுப்பவன் ஆகின்றான் என்பது வ.சுப.மாவின் உயிர்க் கருத்தாகும்.
1962 ஆம் ஆண்டிலேயே இளைஞியர் என்றும்,
திறனாய்வாளர் என்பதைத் திறனி என்றும்,
புதின ஆசிரியர் என்பதைப் புதினர் ,
கற்புடைய பெண்ணை கற்பி,
உறுப்பினரை உறுப்பி என்றும்,
வளர்வு,
ஆயுரை,
இன்பி,
வினைச்சி,
வேந்தி,
அல்லெண்ணம்,
இலக்கியல்,
இல்லாட்சி,
குழமை,
விதிக்காட்டி,
வீழ்வுகள்,
நிறைபாடு,
சொல்லாளர்,
கேள்வியாளர்,
எழுத்தாளி,
எழுத்துழவர்,
எழுதுகுலத்தோர்
,இழுக்கும்,
நாளை நீக்கி,
குளிரகம் (Fridge)
ஒலிப்பான் (Mike)
அடக்கி (Break)
முகமா (Powder)
செல்லுரிமை (License)
பல்லுரசி (Tooth brush)
மேலாள் (Manager) சொற்மொழிந்தேன்,
நன்றியன்,
விருப்பன்,
ஈடுபாடன்,
இலக்கியர்,
காப்பியர்,
இலக்கணர்,
தமிழ்மை,
அணிய நாடுகள்,
அரச மரியாதை என்பதைப் படையணி வணக்கத்தோடு என்றெழுதியதும் நினைக்கத் தக்கது.
சால்பியம்,
புரட்சியம்,
பொதுவியம்,
மக்களியம்,
ஒப்பியம்,
தமிழியம்,
உயிரியம்,
பண்டிதமணியம்,
கண்ணதாசம்,
இளங்கோவம்
எண்ணற்ற புதிய சொல்லாக்கங்களை மூதறிஞர் படைத்துள்ளார் .
இவைபோலும் பல தமிழர்களுக்கு அவர் வழங்கிய பெருங்கொடையாகும்.
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் ஆரம் படைத்த தமிழ்நாடு என்ற வாக்கினைப் பின்பற்றி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புதிய உரைநடைச் சிலப்பதிகாரத்தை நெஞ்சை வெல்லும் சிலப்பதிகாரம் என்று ஓர் நேர்மை படைத்த தமிழ்நாடு என்ற வ.சு.மா பாராட்டு வரிகள் வரலாற்று வரிகளாகப் பொலிந்தன.
அருந்தமிழின் அழகையும் ஆற்றலையும், வண்ணத்தையும், வனப்பையும் வகை வகையாக வளமார் தமிழ்,
அருந்தமிழ்,
பெருந்தமிழ்,
முறைத்தமிழ்,
வெண்தமிழ்,
செந்தமிழ்,
பெரிய தமிழ்,
நந்தமிழ்,
எந்தமிழ்,
தீந்தமிழ்,
கோல்தமிழ்,
தன்னிந் சிறந்த தமிழ்,
நெடுந்தமிழ்,
விளிவில் தமிழ்,
சொற்றமிழ்,
செய்தமிழ்,
வளர்தமிழ்,
செல்தமிழ்,
தொழுதமிழ்,
படிதமிழ்,
உரிமைத் தமிழ்
ஐம்பதுக்கு மேற்பட்ட நயமான அடைமொழிகளை நிரல்பட தன்னுடைய மாணிக்கக்குறளில் அடுக்கிப் பேசுவதைக் கேட்பதற்கு ஆணிவேராக இருந்தவர் பேராசிரியர் வ.சுப.மா.
இந்தியத் தமிழன் தன் அன்புத் தலைவர்களுக்கு எழுதிய 25 கடிதங்களின் வடிவமாக தலைவர்களுக்கு என்ற உயர்ந்த நூலைப் படைத்துள்ளார் .
தமிழர்களுக்கு அது பெரும்பேறாகும்.
இந்நூலை என் நாட்டுத் தொண்டு என்ற ஒரே வரி முகவுரையும்
என் கடன் இந்தியப் பணி செய்து கிடப்பதே என்ற முத்தாய்ப்பும் பெருஞ்சான்றாகும்.
துணைவேந்தரின் மூத்த மகனார் பொறிஞர் தொல்காப்பியனும், அமெரிக்க வாழ் திருமகளார் தென்றலும் எங்கள் குடும்பத்தோடு நெருங்கிய தொடர்பில் உள்ளனர்
இது எங்கள் குடும்பத்திற்குக் கிடைத்த பெரும்பேறு.
தமிழ்நாடு மின்வாரியம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் முதலிய பயின்ற வழக்குகளுக்கு புதிய இலக்கண நூற்பாக்களை வழங்கிய திறமை மூதறிஞரின் பெருமைக்குக் கட்டளைக் கல்.
தமிழ்நாடு என்னும் தண்ணார் தொகைச்சொல்
பொதுநிலம் குறிக்கும் பொருண்மைத் தாயின்
இருவழி யானும் இரட்டும் ஒற்றே .
அரசினை அதன்மேல் ஆட்சியைக் குறிப்பின்
இரட்டல் வேண்டா இயல்பா கும்மே!
——
பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
பொருநராற்றுப்படை தொடர்ச்சி…
26. கொலைவிற் புருவத்து
கொலைவில் – கொலைத்தொழிலையுடைய வில்லைப் போன்ற, புருவத்து. புருவத்தினையும்.
கொழுங்கடை மழைக்கண்
கொழு கடை – அழகிய ஓரத்தினையுடைய, மழைக் கண் – குளிர்ச்சியையுடைய கண்ணினையும்,
27. இலவிதழ் புரையு மின்மொழித் துவர்வாய்
இலவு இதழ் புரையும் – இலவினது இதழையொத் திருக்கின்ற, இன்மொழி துவர் வாய் – இனிய சொல்லையடைய செந்நிறத்தையுடைய வாயினையம்,
28. பலவுறு முத்தின் பழிதீர் வெண்பல்
பல உறு – பலவுஞ்சேர்ந்த, முத்தின் – முத்துக்கள் போல, பழி தீர் – குற்றந் தீர்ந்த, வெள் பல் – வெள்ளிய பல்லினையும்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
பூங்குழை ஊசற் பொறைசால் காதின்
(29) மயிர்குறை கருவி மாண் கடை அன்ன-மயிரை வெட்டுகின்ற கத்தரிகையினுடைய மாட்சிமைப்பட்ட குழைச்சை யொத்தனவாகி,
(30) பூங்குழை ஊசல் பொறை சால் – பொலிவினைக்கொண்ட (மகரக்) குழையின் அசைவினைப்பொறுத்த லமைந்த, காதின் – கா துகளையும்,-(எ.று.) கத்தரிகையின்குழைச்சு, காதுக்கு வடிவுவமமாம்.
31. நாணடச் சாய்ந்த நலங்கிளர் எருத்தின்
நாண் அட – நாணம் வருத்து தலால், சாய்ந்த. (பிறரை நோக்காது) கவிழ்ந்த, நலம் கிளர்-நன்மை விளங்குகின்ற, எருத்தின் – கழுத்தினையும், நாணந்தோன்றக் கவிழ்ந்த எருத்துடனிருத் தல், இயல்பு.
32. ஆடமைப் பணைத்தோள் அரிமயிர் முன்கை
ஆடு – அசைகின்ற, அமை – மூங்கில்போலும், பணை – பெருத்தலையுடைய, தோள் – தோளினையும்,–அரி மயிர் – மெல்லிய மயிரினையுடைய, முன் கை – முன்னங் கையினையும்,
33. நெடுவரை மிசைஇய காந்தன் மெல்விரல்
நெடு வரை மிசை இய – நெடிய மலையின் உச்சியிடத் துள்ளன வான, காந்தள் – காந்தள் போலும், மெல் விரல் – மெல் லிய விரலினையும்,
34. கிளிவாய் ஓப்பின் வெளிவிடு வள்ளுகிர்
கிளிவாய் ஒப்பின் . கிளியின்வாயோடு ஒத்திருத் தலையுடைய, ஒளி விடு – ஒளிவிடுகின்ற, வள் உகிர் – பெருமையையுடைத்தாகிய உகிரினையும்,
35. அணங்கென உருத்த சுணங்கணி யாகத்து
ஈர்க்கிடை போகா ஏரிள வனமுலை
அணங்கு என உருத்த – (பிறர்க்கு) வருத்த மெனத் தோன்றின, சுணங்கு அணி ஆகத்து – சுணங்கையணிந்த மார்பினிடத்துள்ள, ஈர்க்கு இடை போகா ஏர் இள வனம் முலை – ஈர்க்கும் நடுவேபோகாத எழுச்சியையுடைய இளைய அழ கினையுடைய முலையினையும்,
36 நீர்ப்பெயர்ச் சுழியி நிறைந்த கொப்பூழ் (இ – ள்.) நீர் பெயர் சுழியின் – நீரினிடத்துப் பெயர் தலை யுடைய சுழிபோல, நிறைந்த – நிரம்பின, கொப்பூழ் – கொப்பூழினையும்,-)
37 உண்டென வுணரா உயவு நடுவின்
உண்டு என உணரா – உள்ளதென்று ( பிறரால் ) உணரப்படாத (மிகவும் நுண்ணிய), உயவும் வருந்துகின்ற, நடு வின் – இடையினையும், மிகவும் நுண்ணி தாயிருத்தலால், பிறவுறுப்பின் சுமையைத் தாங்கமாட்டாது இடை வருந்தும்.
38 வண்டிருப் பன்ன பல்கா ழல்குல்
வண்டு இருப்பு அன்ன – பலவண்டுகளின் இருப்பை யொத்த, பல் காழ்பலமணிகோத்தவடங்களை யுடைய மேகலையை அணிந்த, அல்குல் – இடைக் கீழமைவு. மேகலை- ஏழுவடங்களை யுடையதென்பர். எண்கோவை மேகலை என்றுரைப்பதும் உண்டு .
39 இரும்பிடித் தடக்க கயிற் செறிந்து திரள் குறங்கின் இரு பிடி 5 – கையின் – பெரிய பெண்யானையின் பெருமையையுடைய கைபோல, செறிந்து திரள் – (நீள வந்து மெல்லி தாபத தம்மில்) நெருங்கியொன்றித் திரட , குறங்கின் – துடையினையும்,
40-41 பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
(42) பொருந்து- (கணைக்காற்கு இலக்கணமென்பதற்குப்) பொருந்தின, மயிர் ஒழுகியமயிரொழுங்குபட்ட, திருந்து – (ஏனை இலக்கணங்கள்) திருந்தின, தாட்குகணைக்காலுக்கு, ஒப்பபொருந்த,
(43) வருந்து நாய் நாவின்-ஓடியிளைத்த நாயினது நாவினைப் போல, சிறு சிறிய, பெரு தகு-பெருமை தக்கிருக்கின்ற, அடி-அடி யினையுமுடைய, மயிரொழுகிய தாள், திருந்து தாள் . தாளுக்குஒப்பச் சிறு அடி என வந்தது .
பெரு என்னும் முதனிலை, பெருமையையுணர்த்தியது.
சிறுமை + அடி = சீறடி: நாயின் நாவைப் போன்ற சீறடி என்ற உவமை நுட்பமான அருமையுடையது .
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment