தி இந்து – ஆங்கில நாளிதழில் – சித்தாந்த கலாநிதி ஒளவை துரைசாமி அவர்கள் நூற்றாண்டை முன்னிட்டு செப்டம்பர் 5 – 2004 , அன்று வெளியான கட்டுரை –
பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உங்களின் மீள் பார்வைக்காக
ஆங்கிலம் : திருமதி கௌரி ராம்நாராயன்
தமிழில் மொழியாக்கம் : திருமதி இளவேனில் முல்லை
சங்கமும் சைவ மதமும் அவரைக் கவர்ந்தன
திரு.ஒளவை துரைசாமி அய்யா அவர்களின் புதல்வர் திரு.நடராசன் அய்யா அவர்களுடன் கலந்துரையாடியபோது, திரு.கெளரி இராமநாராயணன் அவர்களுக்குத் தெரிய வந்ததுபோல், பண்டைய தமிழர்களின் அரிய செல்வங்களை (படைப்புகளை) மீண்டும் கண்டறிய வேண்டுமென்ற எழுச்சிமிகு ஆர்வத்துடன் திரு.ஒளவை துரைசாமி அவர்கள் அதற்கான பணிகளில் உற்சாகத்துடன் களமிறங்கினார்.
திரு.ஒளவை. துரைசாமி எனும் அந்த மாமனிதார், விடியற்காலைப் பொழுதில், தன் பூஜை அறையிலிருந்து வெளிப்படுகிறார், அவர் விழிகள் எதையோ ஆழ்ந்து சிந்தித்திக் கொண்டிருந்தன.
நெற்றியில் அவர் பூசியிருந்த திருநீறு அவர் உடுத்தியுள்ள வேட்டிக்கு பொருத்தமாகக் காட்சியளித்தன.
அங்கிருந்த சிறு மேசையின் முன்பு சம்மணமிட்டு அமர்ந்து பெருநூல் ஒன்றை திறக்கிறார் – தேவாரத் தொகுப்புகள், சிவஞானபோதம், தொல்காப்பியம், திருக்குறள்… சில நேரங்களில், அது சட்டம், வரலாறு அல்லது கல்வெட்டியல் சார்ந்த ஆங்கில நூலாகவும் அல்லது சமசுகிருதத்திலுள்ள ஆன்மிகம் சார்ந்த நூலாகவும் அல்லது ஓலைச்சுவடிகளாகவும் இருக்கும்
எழுதுவதற்காகத் தான் பயன்படுத்தும் இறகை ஒரு பழைய மை புட்டியில் நனைத்து அவர் எழுதத் தொடங்கும் போது, எழில்நிறைந்த மிக நேர்த்தியான எழுத்துக்கள் நிச்சயம் பாய்ந்தோடுகின்றன.
எதுவாக இருப்பினும்,காலை நேர ‘வழிபாட்டின் போது ’ அவரை எவரும் அமைதிகுலையச்செய்ய இயலாது என்பதை அவரின் பத்துக் குழந்தைகளும் அறிந்திருந்தனர்.
வாழ்க்கை நடைமுறைத் தேவைகள் மீது சிறிதும் ஆர்வமின்றி, ஆய்விற்காகவே வாழ்ந்து வருகின்ற தன் கணவரிடமிருந்து யாதொரு உதவியையும் எதிர்ப்பார்க்காமல், மிகப்பெரிய குடும்பத்தை நிருவகிக்கும் தன் கடமைமைய அவர் மனைவி திருமதி.லோகாம்பாள் தொடர்ந்து மேற்கொள்கிறார்.
தமிழ் இலக்கிய நூல்களுக்கு திரு.ஒளவை துரைசாமி அய்யா (1903-81) எழுதிய விளக்கவுரைகளுக்காக அவருக்கு உரைவேந்தர் பட்டம் அளித்துப் பாராட்டப்பட்டதிலும் சைவ சித்தாந்த நூல்கள் குறித்த அவரின் படைப்புகளுக்காகச் சித்தாந்த கலாநிதி பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டதிலும் வியப்பேதுமில்லை.
செப்டம்பர்த் திங்கள் 25ஆம் நாளன்று இராணி சீதை அரங்கில் நடந்த அவரின் நூற்றாண்டு விழாவில் துணை வேந்தர்களும், கல்வியாளர்களும் அவருக்கு மரியாதை செலுத்தத் திரண்டிருந்தனர்.
அரசியல் முழக்கங்களோ, அரசியல் சார்ந்த நிகழ்வுகளோ அவ்விழாவில் இல்லாதது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அரசியல் சார்ந்த அத்தகையை செயற்பாடுகளிலிருந்து எப்பொழும் விலகியே இருக்கும் அற்புத மனிதர் ஒளவை என்று உறுதியாகக் கூறலாம் .
சைவ மதத்தின் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்தபோதிலும், மணிமேகலை, சூளாமணி யசோதர காவியத்திலுள்ள நுண்ணிய கருத்துக்களை அறிந்து கொளவதற்காக புத்த அல்லது சமண (கிருதம் மற்றும் பாலி) மதம் குறித்தும் அவர் கற்றார்.
மத்த விலாச பிரகசனத்தை மொழிபெயர்ப்பதற்கு சமசுகிருத அறிஞர்களின் உதவியை அவர் நாடினார்.
மேலும் திவ்யபிரப்ந்தம் குறித்த தனது அறிவை மேலும் வளர்த்துக்கொள்வதற்காக, வைணவச் சான்றோர்களின் உதவியையும் அவர் நாடினார்.
இவற்றுடன், தனது தனித்திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகக் , குறிப்பாகச் சட்ட நூல்களிலிருந்தும் நீதிமன்றத் தீர்ப்புகளிலிருந்தும் மேற்கத்திய முறைகளை அறிந்து கொள்வதற்கும் அவர் தயங்கவில்லை.
அவரின் பெயர் முன்பு அறிவு மூதாட்டியார் ஒளவையின் பெயரை அடைமொழியாகக் கொண்டது எப்படி?
இது குறித்து அவரின் புதல்வரான,தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஒளவை நடராசன் அவர்கள் கூறுகையில்,
தென் ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள அவர்களின் சொந்த ஊரான அவ்வையார் குப்பம் எனும் ஊர் பெயரில் இருந்து வந்தது தான் அப்பெயர் என சிரித்துக் கொண்டே விளக்கமளித்தார்.
ஒரே வகுப்பில் பயின்று வந்த இரு துரைசாமிகளை வேறுபடுத்திக் காட்டுவதற்காகத் திண்டிவனம் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் அவ்வை எனும் ஊர்ப்பெயரை அய்யா அவர்களின் பெயருடன் இணைத்தார்.
எனினும், இந்த அடைமொழி அவர் வாழ்க்கையின் இலக்கைத் தேர்ந்தெடுப்பதில் அவருக்கு ஊக்கமளித்தது.
தனது 21ஆவது அகவையில், கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் வித்துவான் பாடத்தில் அவர் இணைந்தார்.
சமகால இலக்கியத்தில் அம்மாணவருக்கு எவ்வித ஈர்ப்பும் இல்லை.
சங்க காலப் பாடல்கள் மற்றும் இடைக்கால பக்தி தொகுப்புகளால் கவரப்பட்ட அவர் மிகவும் பழமை வாய்ந்த தம் தாய்மொழியில் புதையுண்டுள்ள அரிய களஞசியங்களை மீண்டும் அறிய முயன்ற டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் பாதையைப் பின் தொடர்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்.
மேலும், கவிதை நயம் வாய்ந்த, இலக்கண நியதி மாறாத மற்றும் பக்தி நூல்களால் அவர் கவரப்பட்டார்.
இந்த மூன்று பிரிவுகளையும் ஆராய்வதிலேயே அவர் தம் வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.
பழம்பெரும் நூல்கள் (ஐங்குறுநூறு, புறநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து)
மற்றும் சைவ சித்தாந்த (ஞானாமிர்தம், சிவஞானபோதம்) நூல்களின் உரைகளும் அவரின் படைப்புகளுள் அடங்கும்.
சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி மற்றும் மணிமேகலை போன்ற தலைச்சிறந்த காப்பியங்கள் உட்பட பல்வேறு படைப்புகளுக்கு சுருக்க உரைகளையும் ,தனி வரைவு நூல்களையும் அவர் இயற்றியுள்ளார்.
அவரின் இத்தகைய ஆய்வுகள் வரலாறு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளத் தூண்டியபோது சேரர்களின் வரலாறு குறித்தும் சைவ இலக்கியங்கள் குறித்தும் அவர் எழுதத் தொடங்கினார்.
ஐந்து ஆண்டுக்கால ஓய்வில்லா உழைப்பின் விளைவாக, இராமலிங்க அடிகளாரின் 6000 அருட்பாக்கள் மீதான 20,000 வார்த்தைகள் கொண்ட விளக்கவுரை உருவானது.
இது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் 10 தொகுப்புகளாக வெளியிடப்பட்டது.
“தமிழ் மொழியில் விளக்கவுரை எழுதும் மரபு பொதுவாகப் பழைய சொற்களிச் சார்ந்த நடையிலேயே
அமைந்திருக்கும்.
என் தந்தை தனக்கென ஒரு நடையை உருவாக்கக் கருதினார்.
அதனை நீங்கள் ஏற்புடைய எண்ணமுறை என அழைக்கலாம்.” என ஒளவை நடராசன் அய்யா அவர்கள் கூறுகிறார்.
ஒரு எளிய எடுத்துக்காட்டு இதோ:
‘பொன்முடியார்’ எனும் சொல்லுக்கு பொதுவாகத் ‘தங்க முடியை உடைய நபர்’ என்று பொருள்.
இது இளம் பொன்னிறம் அல்லது தங்க மகுடம் உடைய நபரைக் குறிக்கின்றது என்று உ .வே .சாமிநாத ஐயர் கூறினார்.
ஆனால், பொன்முடி என்பது அந்த நபரின் சொந்த ஊரின் பெயர் எனக்கூறி துரைசாமி அய்யா அவர்கள் இதனை நிறைவு செய்தார்.
பல நூறு ஆண்டுகளாக நிலவி வந்த பிழைகளையும் அவர் மிக விரைவாகக் கண்டறிந்து அனுமானம், உய்த்துணர்தல் மற்றும் ஆழ்ந்த கல்வெட்டு ஆய்வுகளின் வாயிலாக அதற்கான உண்மையான பொருளையும் கண்டறிய முயன்றார்.
ஒளவை துரைசாமி அவர்கள், கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த தனது குருவான திரு. உமாமகேசுவரனார் அவர்களிடம் மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டிருந்தார்.
அவரின் நினைவாக ஒவ்வொரு வாரமும் உமாமகேசுவர விரதம் மேற்கொண்டு வந்தார்.
அவருக்கான வாய்ப்பு வந்தபோது, கரந்தைத் தமிழ்ச் சங்கம், செய்யாறு ,போளூர் ,செங்கம் ,
திருப்பதி ,அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரியில் மாணவர்கள் மீது அதிக அக்கறையுள்ள ஆசிரியராக அவர் திகழ்ந்தார்.
தேவைப்படுபவர்களுக்குத் தன்னிடம் உள்ள தகவல்களை எவ்வித ஒளிவு மறைவுமின்றி, மிக தாராளமாகப் பகிர்ந்துகொண்டார்.
ஒரு முறை, அவரின் மாணவர் ஒருவர், மேற்கொண்டு ஒராண்டு படிப்பதற்குத் தனக்கு வழியேதுமில்லை என தெரிவித்தபோது,
ஒளவை துரைசாமி அவர்கள், நேரடியாக தேர்வும் எழுதும் வகையில் அம்மாணவருக்குப் போதிய பயிற்சியளித்ததோடு மாநில அளவில் அவரை வெற்றி பெறவும் செய்தார்.
ஒவ்வொரு பாடத்திற்கும் அவர் அளிக்கும் எழுச்சிமிகு முன்னுரையையும் எளிதில் புரிந்து கொள்ளவியலாத கோட்பாடுகளையும் மிகத் தெளிவாகப் புரிய வைக்கும் அவரின் தனித்திறனையும் மாணவர்கள் என்றும் நினைவில் கொண்டிருந்தனர்.
அவர் வகுப்பில் கம்ப இராமாயணம் நடத்தும்போது, அதிலுள்ள கதாப்பாத்திரங்கள் நம் கண் முன்னே வந்து நடிப்பது போல் இருக்கும்.
மதிநுட்பம் நிறைந்த பெரும் பேராசிரியருக்கு மறு பக்கம் ஒன்றும் இருந்தது.
அந்திமாலைப் பொழுதிற்கு பின்னர், எர்லி ஸ்டான்லி கார்ட்னர் மற்றும் பெர்ரி மாசனுடனும் ( Perry Mason, as Erle Stanley Gardner )
ஷேக்ஸ்பியர் மற்றும் அகதா கிறிஸ்டி நாவல்களுடனும் தன் ஓய்வு நேரத்தைச் செலவிட்டார்.
துரைசாமி அய்யா அவர்கள் புத்தக வடிவிலான தன் வெள்ளி மூக்குப்பொடி பெட்டியைத் திறந்தாரெனில், அப்பெட்டிக்கூட ஆனந்த மனநிலையில் கூத்தாடும்.”
தனது சொந்தப் படைப்புகளை மறுபதிப்புச் செய்ய வேண்டுமென என் தந்தை ஒருபோதும் கூறியதில்லை”,
என்று தன் தந்தை குறித்து ஒளவை நடராசன் அய்யா அவர்கள் நினைவுகூர்கிறார்.
அவரது எழுத்துக்களுக்கு ஒரு முழுமையான மற்றும் நிறைவான வடிவம் அளிக்கத் தன்னால் இயலவில்லையென்று அவர் எப்பொழுதும் கூறுவார்.
இளைய தலைமுறையினர் இன்னும் பல தகவல்களைக் கண்டறிந்தும் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றும் புதிய அத்தியாயங்களைத் தன் படைப்புகளுடன் இணைப்பர் என அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.”
பண்டைய உலக நடைமுறைகளில் மூழ்கியிருந்தாலும், எதிர்காலத் தலைமுறையினரிடம் நமது கடந்த காலம் குறித்தத் தரவுகள் நிலைத்திருந்தால்தான் அந்தக் கடந்த காலம் ஒப்பற்ற குறிப்பிடத்தக்கதொரு காலமாக இருக்கும் என்பதை ஒளவை துரைசாமி அய்யா அவர்கள் ஒருபொழுதும் மறக்கவில்லை.

Add a Comment