POST: 2021-07-11T10:45:11+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 66

கலைவானின் நிலவு – கண்ணதாசன்

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

சென்னை மாநிலக் கல்லூரியில், இளங்கலை தமிழிலக்கியம் முதலாமாண்டு மாணவரான நான் சேர்ந்த சில திங்களிலேயே நெருக்கமான நண்பராக சிவகுமார் என்னோடு இருந்தார்.

அவர் அப்போது அதே கல்லூரியில் ஆங்கில இலக்கிய முதுகலை மாணவர் என்பது தான் பலருக்கும் வியப்பு.

அவர் வாயிலாகத்தான் எனக்கு கவியரசர் கண்ணதாசனின் (24.06.1927 – 17.10.1981) திரைக்கதை / திரைப்பாடல் வரிகள், தைப்பாவை, சேரமான் காதலி, வனவாசம், ஆட்டனத்தி ஆதிமந்தி, அதேபோல இளங்கலை வகுப்பில் இயேசு காவியமும் அறிமுகமானது.

சிவகுமார் வாய் திறந்தால் கண்ணதாசன் வரிகளைத் தான் சொல்லி மகிழ்வார்.

சான்றாக மூர் அங்காடி தீக்கிரையான பொழுது (1985) உடனே சிவகுமார் என்னிடம் சொன்ன ‘நாடோடி மன்னன்’ திரை வசன வரிகள்,
“தீயிடுவோம் தீமைக்கு;
கொள்ளையடிப்போம் மக்களின் உள்ளங்களை;
குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவுப் பொருட்களை”.

அப்பாவிடம் கவிஞரைக் குறித்து வினவிய போது, அவர் மூலம் நான் அறிந்த செய்திகள் என் விழிகளை வியப்பில் விரியச் செய்தன.

ஒருமுறை புதுவையிலுள்ள மருத்துவமனையில் கவிஞர் இருந்தபோது அப்பா அவரைச் சந்தித்து அண்ணா, “விழிப்பாக உடல்நலனைப் பேண வேண்டும் , நீங்கள் எங்கள் வாழ்வின் வேர் ” என்றபோது

கவிஞர் சொன்ன வரி,
“சுட்டபின் நெருப்பென்றும்,
தொட்டப் பின் பாம்பென்றும்
உணர்வதே என் பழக்கம்”

ஔவை என்றாராம்.

புரட்சித்தலைவர் முதலமைச்சராக இருந்தபோது கவிஞர் கண்ணதாசனை அரசவைக் கவிஞராக நியமித்தாராம்.

அதற்கு அரசாணையாக, அப்பா அந்நாளைய மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராக இருந்தபோது தகுதியுரை எழுதித் தருமாறு கூறியவுடன், அப்பா எழுதிய அத்தகுதியுரை தான் கவியரசருக்கு வழங்கப்பட்டது.

தகுதியுரை

“திரு.கண்ணதாசன் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த திருப்பத்தூர் வட்டத்தில் சிறுகூடற்பட்டி என்னும் சிற்றூரில் 24.6.1927-இல் பிறந்தார்.

இயற்பெயர் முத்தையா. தந்தையார் திரு.சாத்தப்பர். தாயார் திருமதி விசாலாட்சி.

இளமை முதலே தமிழ் இலக்கியங்களை ஆர்வத்தோடு கற்ற புலமை வாய்ந்த திரு.கண்ணதாசன், கவிதை படைப்பததில் பேராற்றல் வாய்ந்தவராய்த் திகழ்ந்தார்.

பழைய மரபைப் போற்றியும், புதிய எழுச்சிக்கு வழி காட்டியும் தமிழ்க் கவிதை உலகிற்கு வளம் ஊட்டினார்.

புலவர்கள், பொதுமக்கள் என்ற இரு சாராரின் உள்ளங்களையும் தன் கவிதைத் திறனால் கவர்ந்து வருகிறார்.

கவியரசரைப் பின் தொடாதவர் என எவருமே இல்லை. எல்லோருடைய எழுத்திலும் அவர் பொன்முகம் மின்னியது .

கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், தெய்வீகம், வரலாறு ஆகிய துறைகளில் எல்லாம் கவியரசரின் தமிழ் எண்ணங்கள் வண்ணங்களாகி வனப்பூட்டுகின்றன.

உரைநடைக்குக் கவிதையின் ஒளிவீச்சைக் காட்டியும் கவிதைக்கு எளிமையின் இனிமையைக் கூட்டியும் கவியரசர் கண்ணதாசன் தமிழ் இலக்கியத்திற்கு ஏற்றம் தந்திருக்கிறார்.

இவரது தமிழ் இலக்கியத் தொண்டினையும், சிறப்பான கவிதை எழுச்சியையும் பாராட்டித் தமிழக அரசு கவியரசர் கண்ணதாசனை 1-4-1978 முதல் வாழ்நாள் முழுவதும் அரசவைக் கவிஞராக்கிச் சிறப்பிக்கின்றது.”

உலகக் கவிஞர்கள் மாநாட்டிற்கு அப்பா அரசு சார்பாளராக அமெரிக்கா சென்றபோது அங்கு வந்த கவிஞர் கண்ணதாசனுடன் பல மணிநேரம் உரையாடியதும் அங்கேயே கவிஞர் மறைந்ததும் கண்ணீரைக் குளமாக்கும் வரலாறாகும்.

கல்லூரிக் காலங்களில்
இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் கவியரசர் கண்ணதாசனை குறித்து பேசும் உரைவீச்சில் திளைப்பேன்.

அதில் குறிப்பாக,

“அவனை எழுப்பாதீர்,
அப்படியே தூங்கட்டும்,
ஆழ்ந்த துயிலினிலே அமைதியினைக் காணட்டும்,
அன்பு குழந்தை அவன்.
அரையாண்டுச் செல்வனவன்.
இந்த வயதினிலே
இப்போதே தூங்குவதே
சுகமான தூக்கம்,
அவன் சுகமாகத் தூங்கட்டும்”

என்று நீண்டு செல்கிற கவிதை வரிகளைச் சொல் மழையாய் இலக்கியச் சுடர் சொல்ல கேட்டுக் கிறுகிறுத்துப் போனேன்.

இலக்கியச் சுடர் எங்கே பேசினாலும் கவியரசரின் கவிதை வருவதும் , அவை கைதட்டிக் களிப்பதும் வாடிக்கை .

கவிதை வானில் ஒரே நிலவாகச் சுடர் விட்டார்.

தான் இறந்து விட்டதை வாழும்போது எழுதிக் காட்டிய பெருங்கவிஞர் கண்ணதாசன்.

வைகை தொடங்கி வால்கா வரை கண்ணதாசன் கவிதைகள் அங்குமிங்குமாக என் கருத்துக் கருவூலத்தில் 24.9.1986-இல் குறித்திருந்த வரிகள்,

“ஊருக்கு உழைச்சாலே – ஏழை
உரிமையை மதித்தாலே !
பெருமைகள் தேடிவரும் – தானே
பதவிகள் நாடி வரும்.” –
(நம்நாடு)

“அறிவில் தெளிவிருக்கு – நம்
உடம்பில் வலுவிருக்கு
மனதில் துணி விருக்கு – தன்
மானமும் துணையிருக்கு”

“நடந்ததை மறப்போம் நடப்பதை நினைப்போம்
நேர்வழி சென்றால் பயமேது?
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
காலத்தினால் அழியாது!

சூரியன் உதிச்சதுங்க – இங்கே
காரிருள் மறைஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க -இனிமே சரியாப் போகுமுங்க”

“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
சரித்திரம் இருக்குது தம்பி !

தவறு என்பது தவறிச்செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தியாகணும்
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டுமிருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
கருணையிருந்தால் வள்ளலாகலாம்
கடமை இருந்தால் வீரனாகலாம்
பொறுமையிருந்தால் மனிதனாகலாம்
இந்த – மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்!

அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப் போல
அன்புக்கு வணங்கு வள்ளலாரைப் போல
கவிதைகள் வழங்கு பாரதியைப் போல
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்” –
(பெற்றால்தான் பிள்ளையா?)

“ஏன் என்ற கேள்வி- இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை!
நான் என்ற எண்ணம் – கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை!
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே!
உரிமைகளைப் பெறுவதெல்லாம்
வளர்ச்சிகள் உள்ளதனாலே!
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும்
விளங்கட்டுமே!
வருங்காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே!” –
(ஆயிரத்தில் ஒருவன்)

“வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள்
மனித சாதி – பிறர் வயிறெரியச் சிரிப்பவர்கள் மிருக சாதி !
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது – ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ
ஆனந்தச் சிரிப்பு!
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும்
நாள் வரும்போது – அன்று
சிரிப்பது யார் அழுவது யார்
தெரியும் அப்போது!” –
(ரிக்ஷாகாரன்)

“கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் – இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர மறுத்திடுமோ?
மாலை நிலா ஏழை என்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமோ” – (படகோட்டி)

“தோட்டத்துப் பூக்களைப் போல்
புன்னகை வீசிடுங்கள்
வாட்டத்தைப் போக்குகிற
வார்த்தையைப் பேசிடுங்கள்” – (வெள்ளை ரோஜா)

“மண்ணில் மறைவாக என்ன விதை போட்டாலும்
போட்ட விதை என்னவென்று மரம் வளர்ந்து காட்டாதோ?” –
(சிரித்து வாழ வேண்டும்)

“உயிரைத் தமிழுக்கும் உடலை மண்ணுக்கும்
உதவும் நாள் கண்டு துடிப்பான்” – (பணம் படைத்தவன்)

“வெற்றியை நாளைச் சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்!

கூட்டிய வரைக்கும் லாபம் என்றால் குனிவோமா?
குனிந்தவர் நாங்கள் நிமிர்ந்தால் உன்னை விடுவோமா?
மானைப்போல் மானம் என்றாய்
வேங்கைபோல் வீரம் என்றாய்
அறிவில் உயர்வாய்ச் சொல்லிக் கொண்டாய்
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்” –
(உலகம் சுற்றும் வாலிபன்)

“கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
பொய்யான சில போக்கு புது நாகரீகம்
புரியாத பலபேர்க்கு அது நாகரீகம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்

கடவுளை உலகில் கற்பித்தவன் தான்
முட்டாள் மனிதனடா
கடவுள் பெயரைப் பரப்புகிறவன்
யோக்கியன் இல்லையடா – இது நான்
சொன்னதில்லை – இந்த நாடறிந்த உண்மை!
கல்லாயிருக்கும் கடவுளுக்கேண்டா
பாலால் அபிஷேகம் ?
இல்லாதிருக்கும் பிள்ளைக்கு தந்தா
ஏழையின் பசியாறும்
பக்தி என்பது தனிச் சொத்தாகும்
நமக்கது தேவையில்லை
ஒழுக்கம் என்பது பொதுச்சொத்தாகும்
காப்பது நம் வேலை – இது
நான் சொன்னதில்லை – இந்த
நாடறிந்த உண்மை!” –
(பணம் படைத்தவன்)

“உலகின் தூக்கம் கலையாதோ?
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ?
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ?
ஒரு நாள் பொழுதும் புலராதோ?” – (படகோட்டி)

“நாமெல்லாம் ஒன்று நம்பெயர் தமிழர்
தேனுலாம் காடு செந்தமிழ் நாடு”

“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடி விடாது” – (சுமைதாங்கி)

“கொடுமையைக் கண்டு யார் தான் பயப்படமாட்டார்கள்.
உச்சி வெயிலின் கொடுமை
தாங்காமல் மனிதனின்
நிழல்கூட அவன் காலடிக்குள் ஒட்டிக்கொள்கிறது.”

இதே நிலையில் இறை உணர்வுக்கு இலக்கணம் வகுத்த,
பூஜ்யத்துக்குள்,
ஆறு மனமே ஆறு,
ஏன் பிறந்தாய் மகனே,
சட்டி சுட்டதடா,
போனால் போகட்டும் போடா
போன்ற பாடல்கள் எவர் மனத்தையும் உருக்கும்.

‘இல்லற ஜோதி’ திரைப்படத்தில்,

‘உனக்கும் எனக்கும் உறவு காட்டி
உலகம் சொன்னது கதையா?’

என்ற கவியரசரின் பாடல் வரிகள், எந்தக் குழந்தை மனத்தையும் குமுறிக் குமுறி அழ வைக்கும்.

கவியரசரின் கவிதைகளைப் படித்து முடித்ததும்
அறிவினில் வேகமும்,
ஆழநீர் அசைவதையும்,
சமதளத்தில் சலசலக்கும் சங்கீதமும், கடலைச் சேரும் கலகலப்பும், கவிதைகளில் காணலாம்.

அவர் காலந்தோறும் கண்சிமிட்டும் கவிதையரசர் என்றால் மிகையாகாது.

இலக்கிய கருத்துக்களாயினும் சரி, அரசியல் கருத்துக்களாயினும் சரி அதில் தனது போர்க்குணத்தை கவிஞர் கண்ணதாசன் வெளிப்படுத்தினார்.

மணிக்கொடி காலம், சரசுவதி காலம் என்று சொல்வதைப்போல தென்றல் இதழில் ஒரு வற்றாத வரலாற்றை உண்டாக்கிப் பல கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உருவாக்கியது போற்றத் தகுந்ததாகும்.

யார் வெற்றி பெற வேண்டுமென்றாலும் அவர்கள் மீது விமர்சனங்களும், தேவையில்லாத விவாதங்களும் எழுந்தாலும், பொருட்படுத்தாமல் பீடுநடை போட வேண்டும் என்ற கவியரசரின் பிரகடன வரிகள்:-

“போற்றுபவர் போற்றட்டும்
புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்
தொடர்ந்து செல்வேன்,
ஏற்றதொரு கருத்தை
எனதுள்ளம் எடுத்துரைப்பேன்.
எவர்வரினும் நில்லேன்
அஞ்சேன்!”

22.06.1954-ல் தென்றல் இதழ் பிறந்தபோது,

“தென்றல் உங்களைத் தீண்ட வருகிறது.
ஆம் தென்றல் தான் மனிதனை தீண்டுகிறது.
தீண்டலில் நயம் இருந்தால், நளினம் இருந்தால் வாரம் இரண்டனா கொடுங்கள், இல்லையேல் வேண்டாம்”

என்று முடிப்பு வரிகள் எவரையும் ஈர்க்கும்.

கம்பர் பாடல்களில் என்னை முதன்முதலாக ஈர்த்தவர் ரசிகணி டிகேசி. பட்டப்படிப்பில் குகப்படலம் முழுவதையும் பாடம் செய்தேன். ஆனந்த விகடனில் பி.ஸ்ரீ எழுதிய இராமாயண விளக்கமும் அண்ணாவின் கம்பரசம் கம்பர் விழாக்களும் தான் என்று சொன்ன உண்மை வரிகள் கவிஞரின் தெளிவான மனம் புரியும்.

அதேபோல என் மாமா மருத்துவர் திலகம் நலங்கிள்ளி தன் மகன் குமணன் பிறந்தபோது, தாலாட்டுப் பாடலாகக் கண்ணதாசன் அவர்கள் பாடிய வரிகளைப்பாடி தன் பிள்ளையை மகிழ்விப்பதைக் கேட்டு நான் பூரித்தேன்.

“உன்னை அறிந்தால்…நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்”

(வேட்டைக்காரன்)

கால நதி வெள்ளத்தில் மிகப் பெரிய கவிதை மாமரமாகவும், காலங்களை வென்ற பாட்டுத்தலைவனாகவும் கவியரசர் கண்ணதாசன் திகழ்வது தமிழ் உலகத்தின் பெரும் பேறாகும்.

பாரதிக்குப் பிறகு பாரதிதாசனில் தமிழ் மேதையாகத் தெரிந்தார்.

கவிஞர் கண்ணதாசன் ஊட்டிய தமிழ்ப் போதை எவரையும் மயங்க வைத்தது.

கம்பனுக்கு பிறகு சந்தம் இவரிடம் அடைக்கலமானது.

அள்ளிக் குவிக்க முடியாத அளவுக்குப் பொன்னாகவும் – மணியாகவும் பொலபொலவென உதிர்த்த பேரறிவுப்பெருக்கு என்று கூறிப் பெருமையடையலாம் .
—–

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

பொருநராற்றுப்படை தொடர்ச்சி…

யாழின் அமைப்பு வனப்பையும் – பாடினியின் பேரழகையும் கண்டோம் !

இனிப் பரிசில் பெற்றவன் கூறும் செய்தி :-

பொருநனே !

யாழையுடைய கூத்தர்க்குத் தலைவனே !

மற்றவர் புகழை அரசவைகளிற் பரப்ப வல்லவனே!

கேட்பாயாக!

யானும் பழுத்த மரத்தை நாடிச் செல்லும் பறவை போலப் பரிசு தருபவர்களை நாடிச் சென்றேன்.

ஒருநாள் கரிகாலன் அரண்மனை வாயிலை அடைந்தேன்.

அவ்வாயில் அரசனை விரும்பி வந்தவர்களை தடுப்பாரற்றது.

அதனுட் புகுந்தேன். மகிழ்ச்சியால் என் அலுப்புத் தீர்ந்தது.

என் கையிலிருந்த தழும்பு பட்ட உடுக்கையைத் தட்டி பாடத் தொடங்கினேன்.

வெள்ளி முளைத்த நேரம்; நன்றாகப் பொழுது புலரவில்லை.

அரசன் கரிகாலன் புறப்பட்டு வந்து நெடு நாட் பழகிய நண்பனைப்போல என்னிடம் உறவு கொண்டு பரிவுரப் பேசினார்;

தனக்கு அருகிலே என்னை இருத்திக் கொண்டான்;

தன் கண்ணாற் பருகுவதுபோல் என்னைப் பார்த்தான்.

அவனுடைய மொழிகள் யான் இரந்து நிற்கும் தொழிலையே எப்போதும் விரும்பும்படி அவ்வளவு இனிமையாக இருந்தன.

அவனது பார்வை என் என்பையும் மெழுகுபோல் இளகச்செய்து குளிர்ச்சியைப் படர வைத்தது.

என் இடுப்பிலுள்ள கந்தை, வேர்வையாலே நனைந்திருந்தது;

ஈரும் பேனும் கூடியிருந்தன; தையல்கள் பல பொருந்தியது.

அதனை அவன் போக்கினான்; வேறு ஆடை நல்கினான்.

அவ்வாடை, இழை போனவழியை அறிய முடியாதபடி அத்துணை மெல்லியது ;

பூத்தொழில் பொருந்தியது; பாம்புச் சட்டை போன்றது.

“ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த
துன்னற் சிதா அர் துவர நீக்கி
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி யன்ன அறுவை நல்கி.”

(பொருந . 71)

அணியணிந்து பாட்டாலும் கூத்தாலும் அரசனை மகிழ்விக்கும் மகளிர் சிலர் வந்தனர் ;

பொற்கிண்ணத்தில் கள்ளை வார்த்து வார்த்துத் தந்தனர்.

யான் வழிநடை வருத்தந்தீர நிறையவுண்டேன்.

பின்னர் மாலைக்காலம் வந்தது.

மன்னன் கோயிலின் ஒருபுறம் தங்கித் துயின்று எழுந்தேன்.

வேந்தனைக் காண்பதற்கு முன்னால் என்பால் இருந்த சொல்ல முடியாத வறுமையையும் இப்போதிருக்கின்ற மகிழ்ச்சியையும் கண்டு, கனவோ என்று மயங்கித் தெளிந்தேன்.

பல நறுமணப் – பொருள்களை மெய் முழுவதும் பூசியிருந்த என்னைக் கான்டோர் இவன் நேற்று வந்தவனல்லன் என்று மருளும் அளவுக்கு என்னை வண்டுகள் சூழ்ந்தன.

என்னுடன் வந்த சுற்றம்: மகிழ்ச்சியுற்றது.

அறுகம் புல்லால் திரித்த பழுதையையுண்ட செம் மறிக் கடாவின் வேகவைத்த துடையின் தசையை யாங்கள் தின்றோம்; இருப்புக் கம்பியிற் கோத்து நெருப்பில் வாட்டிய இறைச்சியையும் உண்டோம்.

இங்ஙனம் வேக வைத்ததும் சுடவைத்ததுமாகிய புலாலைத் தின்று வெறுத்த பின், பலவகையான பணியாரங்களையும் எங்களுக்கு அவன் அளித்தான் .

விறலியர், யாழினது ஒலிக்கும் மத்தளத்தினது ஓசைக்குப் பொருந்தப் பாடி ஆடினர்.

கள்ளுண்டலிலியே பல நாள் போக்கினோம்.

ஒருநாள் அரசன் சோறு உண்ணவேண்டுமெனக் கேட்டுக்கொண்டான.

முல்லை அரும்பு போன்ற முறியாத அரிசியாலமைந்த சோற்றைப் பொரிக்கறியுடன் கழுத்தில் வந்து நிரம்புமாறு உண்டோம்.

இங்ஙனமெல்லாம் இராப்பகலாய்ப் புலால் தின்று எம் பற்கள் புன்செய் நிலத்தையுழுத கலப்பையின் கொழுப் போல முனை மழுங்கிவிட்டன.

இளைப்பாறவும் இடமின்றித் தின்றமையால் உணவில் வெறுப்புண்டாயிற்று.

ஊர் திரும்ப எண்ணினோம்.

ஒருநாள் அரசனை நோக்கிச்
“செல்வ! எம் ஊருக்குச் செல்வேம்”

என்று மெதுவாகத் தெரிவித்தேன்.

உடனே வளவன் கோபித்தான் போல நாங்கள் வருந்துமாறு பார்த்து,

“எம்மை விட்டுப் போகின்றீரோ” என்றான்.

பின்னர் இணங்கிக் களிறுகளையும் பிடிகளையும் கன்றுகளுடன் தந்தான் ;

இன்னும் பல ஊர்திகள், ஆடைகள், அணிகலன்களையும் மேலும் மேலும் அளித்தான்.

யானும் அளவுடன் வேண்டியவற்றை வாரிக்கொண்டேன்;

இனி வறுமை எக்காலமும் இல்லை என்னுமாறு வந்தேன்.

ஆற்றுப்படுத்தியவன் உரை அப்படியே நிகழ்ந்தது.

நான்கு வெண்புரவிகள் பூட்டிய பெரிய தேரிலே உம்மை யேற்றி ஏழடி பின்னே வந்து வழிவிட்டான் .

இங்ஙனம் பாணர்க்குக் கொடுக்கும் முறையிற் கொடுத்த பின்னர், நல்ல பல ஊர்களையும் யானைகளையும் நீங்கள் பிறர்க்கும் அளித்துச் செல்லுமாறு அளித்து மகிழ்ந்தான்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *