மலைக்கோட்டை சரிந்தது !
அறுபதாண்டுகளாக நான் அறிந்து பழகிய அருவிச் சொல்லாளர் பேராசிரியர் சத்தியசீலன் முதுமை கனிந்த நிலையில் தான் இருந்தார் .
திங்களுக்கு ஒருமுறை என்னோடு பேசி உங்கள் உடல்நலம் எனக்கு ஊக்கம் தருவது .வேளா வேளைக்குத் தவறாமல் மருந்தெடுத்துக் கொள்கிறீர்களா என்று உரிமையோடு பேசினார் .
அவர் சொல்லித்தான் என்சூர் ஊட்டச்சத்து மாவினைக் கலந்து இரு வேளை அருந்துகிறேன் .
புலவர் கீரனும், நானும் பங்குபெற்ற மேடையில் அப்போதுதான் முதன்முதலில் நல்லிளைஞராகப் பட்டிமண்டபத்தில் பேசினார் .
பிறகு சிகரம் தொட்டார் .
என் ஒளவை என்று நெகிழ்ந்து போற்றினார் .
தூய உள்ளம் – துளியும் பிறருக்கு எதிர்ப்பாக இல்லாத தண்மை ,வள்ளலார் உருக்கம் அவர் வாழ்விலும் நிரம்பி வழிந்தது .
பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களின் மறைவு அவரை அதிர வைத்தது .
செல்வன் மாதுவைக் கேட்டால் அழுது உருகி சத்திய அண்ணா என்றால் போதும் நீராய் நிற்பார் .
பேராசிரியருக்கு அப்படிச் சீலம் நிறைந்த சீடராகத் திகழ்ந்தார் .
எங்கள் இருவருக்கும்
நேர்ந்த இடியாக விழுந்தது .
அறிவொளியின் மறைவு .
நான் அடிக்கடி சொல்வேன் .
எனக்கும் பேராசிரியர்
தெ ஞா வுக்கும் வாய்க்காத பேறாக சத்யாவுக்குத் திருமகள் சித்ரா திருவள்ளுவன் வாய்த்தது பெரும்பேறு
மகத்தான மருத்துவப்பணி – அப்பாவைக் கண்ணாகக் காத்தார் .
பெண்னாகப் பேசும் தெய்வமாக அமைந்தார் என்று உருகியுரைப்பார் .
தாராவின் மறைவைக் கேட்டுத் தொலைபேசியிலேயே அலறித் துடித்ததைக் காண முடிந்தது
.நலிவு வரலாம் .நாளை வெல்ல முடியாததைப் பார்த்து விட்டேன் .
நாளெனக் காட்டி உயிரீறும் வாளாக முடிகிறது .
சத்தியசீலன் ஒரு வரலாறு !
சன்மார்க்க சீலராக நேற்றிருந்தார் .
இன்று உறவினரும் – சுற்றத்தாரும் பாற்றெளிக்கச் சென்றுள்ளார்கள் .
மலைக்கோட்டை சரிந்துவிட்டது !
ஆற்றொணாத் துயரத்தோடு
ஒளவை நடராசன்

Add a Comment