POST: 2021-07-15T09:29:23+05:30

இந்நாள் உனக்குப் பிறந்த நாள் !

கடந்த ஆண்டு எனக்காக நீ அணிந்த புதுச்சேலை புரள நின்றாய் .

அருள் – வழக்கம் போல – ஆதிரையோடு பிறந்தநாள் கேக் கொண்டு வந்தனர் .

அப்போது சொன்ன சொல் அம்பாய்த் துளைக்கிறது !.

எப்படி உங்களால் என்னை விட்டு இருக்க முடிகிறது என்று மீண்டும் கேட்டாய் ! .”

WE HAVE LIVED TOO LONG , I LIVED MORE ” என்று திருத்திச் சொன்னாய் .

இன்று நான் உறங்கியபோது நீ எழுதியதாக மனத்தில் ஒரு கடிதம் வந்தது .

இந்நாள் நீ பிறந்த நன்னாள் – எனக்கு உயிர் தவிக்கும் துயர நாள் !

எங்கேயிருக்கிறாய் எங்களோடு இருப்பதாகக் கண்ணன் – அருள் – பரதன் அவ்வப்போது சொல்கிறார்களே!

எங்கேயிருக்கிறாய் தாரா என்று அலறினேன் .

சாந்தி – நிஷா – வாணி அம்மாவைப் பார்த்ததாகக் கூறினார்கள் .

எங்கே இருக்கிறாய் ! எவருக்கும் தெரியாமல் மறைந்து விட்டாயே !

நீ பேசிய சொற்கள் இன்றும் காதில் விழுகின்றன .

இன்னும் எப்படி இருக்கிறீர்கள் ?

மூச்சுக்குழல் நிற்க மூன்று வினாடிகள் தான் எனக்கு இருக்கின்றன. (14.8.2020)

இந்த நேரத்தில் என்னுடைய முனகல் உங்களுக்கு எப்படி வந்து சேரும் என்று தெரியவில்லை.

தாரகைக்குத் தனி உரிமை கொண்ட நாயகரே !

எனக்கு எத்தனையோ நினைவுகள் புரள்கின்றன.

புதுவையில் கம்பர் கழகத்தில்(1995) நீங்கள் பேசி முடித்த பிறகு மூச்சுத் திணறல் ஏற்பட்டது .

உங்களை ஜிப்மர் மருத்துவமனையில் ஐசியூ ( ICU ) வில் சேர்த்திருந்தார்கள்.

நான் இந்தச் செய்தியைக் கேட்டவுடனேயே துடிதுடித்துக் கண்ணனை அழைத்துக்கொண்டு காரில் பறந்து புதுவை வந்தேன்.

“தன்னந்தனியாக நீங்கள் இருப்பதை என்னால் நினைத்தும் பார்க்க முடியாது .

நான் அப்பாவை அழைத்துக்கொண்டு போகிறேன்” என்று கண்ணனிடம் கலங்கிய படிச் சொன்னேன் .

உடனே அருகில் இருந்த அருள் அனுப்பிய பெரிய காரில் விடியற்காலை நாம் வந்துவிட்டு கே.எஸ் மருத்துவமனையில் நான் உங்களைச் சேர்த்துக் கூடவே இருந்தேன்.
கண்ணன் தான் ஆறுதல் .

பிறகு, சில நாள் கழித்து, அப்பல்லோவில் உங்களைச் சேர்த்தார்கள்.

அப்போதும் நான் கூட இருந்தேன்.

பிறகு திடுமென்று ஒருநாள் பேஸ்மேக்கர் (அலை விரைவி) வைக்கவேண்டும் என்று சொன்னார்கள் (2010)

நான் உடனே வைக்கச் சொன்னேன் ; பேஸ்மேக்கர் வைத்தார்கள்.

அதுமட்டுமில்லாமல், எத்தனையோ முறை நீங்கள் மருத்துவமனைக்குச் சென்ற போதெல்லாம் நான் உடன் வருவேன் .

இப்போது என்னை நீங்கள் தனியாக ஐசியூவில் (9.8.2020)விட்டுவிட்டு வேறு ஓர் அறையில் நீங்கள் இருக்கிறீர்கள்.அது எப்படி .

என் அருமை மக்கள் அன்றாடம் பேசுகிறார்கள் .

அருளும் உடல் நலமில்லாமல் அடுத்த அறையில் இருக்கிறான் .

என்னைச் சுற்றிப் பார்க்கிறேன்; எவரும் இல்லை.

உங்களால் கை நீட்டிப் பார்க்கிற அளவுக்குக் கூட எனக்குக் கண்ணுமில்லை; கையுமில்லை.

நீங்களும் அங்கே தனியாக, மூச்சுக்குழல் சரியாக இயங்காமல் தவிப்பதாகச் சொன்னபோது கேட்டுத் துடித்தேன்.

என் வாழ்வு முடிந்துவிட்டது , நாமிருவரும் ஒருவரையொருவர் காணாமல்
இப்போது என்னைக் கிடங்கிற்கு எடுத்துப் போவார்கள்.

யார் இருந்தும் நீங்கள் இல்லை என்ற எண்ணம்தான்.

ஆமாம். பிள்ளைகள் என்ன செய்வார்கள் ?

கடல் கடந்து தவிக்கிறார்கள் .கண்ணாடியில் பார்த்துக் கதறினார்கள்.

அருள் மட்டும் பக்கத்திலிருந்து எட்டிப்பார்த்தான். பிறகு அவன் தொட்டுத் தூக்கிக் கொண்டு போய் விடுவான்.

உங்களுக்கு நடக்க முடியவில்லை என்றும், சிறுநீர் வடிகுழாயால் வலி தாங்க முடியாமல் தவிக்கிறீர்கள் என்றும் கூறினார்கள் ,

என் கடமை முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

உங்களுக்கு இன்னும் கடமை முடியவில்லையா ?

நான் காத்துக் கொண்டு இருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியவில்லையா ?

இப்படி உயிரோடு இருந்தபோது நான் தவித்தது போதாதா ?

உயிர் முடிந்த பிறகாவது உடன் வந்து சேரக் கூடாதா ?

இந்தக் கடிதம் உங்களுக்குக் காற்றில் வந்து காதில் கேட்கும் என்று நம்புகிறேன்.

இது செய்தியல்ல என் படுக்கைப் பிதற்றல் !

இன்று உனக்குப் பிறந்த நாள் .

எப்படி எங்களால் ஆறுதல் பெற முடியும் .

நாளை எண்ணி எண்ணி நகர்த்துகிறேன் .

என்றும் உன் நாயகன்
ஒளவை நடராசன்
15 07 2021

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *