அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 69
மராட்டிய பாரதிதாசன்
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
‘திராவிட நாடு’ இதழில் (21.07.1946) பேரறிஞர் அண்ணாவின் புகழ்மாலை (II)…
“வாழ்க்கை, ஏழை மக்களுக்கு, பாட்டாளிக் குடும்பங்களுக்கு, எப்படி இனிப்பாக இருக்க முடியும்?
சுகம் எது?
சுபீட்சம் எது?
நெஞ்சுருக்கும் அந்த நிலைமையைக் காண்டேகர் படம் பிடிக்கும் திறமையைப் பாருங்கள்.
ஒரு குடிசை வாசலில் காலியான மண்ணெண்ணெய்ப் புட்டியை வைத்துக் கொண்டு ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள், விளக்கு ஏரிப்பதற்குக்கூட அவளிடம் எண்ணெய் இல்லை.
மற்றொரு மண் வீட்டின் அசுத்தமான முற்றத்தில் ஒரு குழந்தை தட்டிலிருந்த ரொட்டித் துண்டொன்றைக் கடித்துக் கொண்டிருந்தது.
அதைச் சாப்பிட்ட பின்பு தாய் அதற்குத் தண்ணீர் கொடுத்தாள்.
தட்டில் வேறு ஒன்றும் மிச்சமில்லை.
தாய் தண்ணீரைக் குடித்துத் தன் வயிற்றை நிரப்பினாள்.
மூன்றாவது இடத்தில் பாதையில் விழுந்து கிடந்த வாழைத் தோலுக்காக இரண்டு குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
கடைசியில் பெரிய மனிதர்களும் வந்து சண்டையில் கலந்து கொண்டனர்.
அந்தச் சண்டையைத் தீர்ப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.
மற்றொரு வீட்டில் ஒரு குழந்தைக்குக் கொதிக்கும் காய்ச்சல்.
அதன் பெற்றோர்கள் ஆண்டவனை நோக்கிக் கைதொழுது கொண்டும், கலகலவென்று கண்ணீர் வடித்துக் கொண்டும் இருந்தனர்.
ஒருநாய் ஓர் எச்சிலையை வாயில் கவ்விக் கொண்டு போயிற்று. ஒரு பிச்சைக்காரன் அதைத்துரத்திக் கொண்டு ஓடினான்.
அந்த நாய் பாவம், இலையைப் போட்டுத் தாவி ஓடியது.
பிச்சைக்காரன் அந்த இலையிலிருந்த எச்சிற் பருக்கையை வாயில் போட்டுக் கொண்டான்.
இவை சுதேசி சினிமா! நாம் நித்தம் காண்பது இவைகளுக்குக் காரணம் என்ன?
கலாவாணர்கள் ரோஜா, மலர்வதற்குக் காரணம் கண்டுபிடிக்க முனைந்தனர்,
அந்திவானமே! உனக்கு அழகு தந்தது யார், என்று கேட்க முனைந்தனர்.
எச்சில் இலை நாயோடு போராடும் மனிதனே!
நீ இந்தக் கதிக்கு ஆளானது ஏன் என்று கேட்க மறுத்தனர்.
கேட்கக் கூடாதாம், கேட்டுவிட்டால் கலைகெட்டு விடுமாம், கேவலம், பிரச்சாரமாகி விடுமாம்!
இந்தக் கலைவாணர்களுக்குக் காண்டேகர், சரியாகக் கசையடி தருகிறார்.
அப்பா கலைவாணா! இப்படி வா! உன் கலை இருக்கிறதே, அது எங்கே இருந்து வந்தது?
என்று கேட்டுப் பதிலும் கூறுகிறார்.
கலை, கலை என்று கூவுபவர்கள் நாணும்படி.
“தொழிலாளிகளின் வாழ்க்கையில் பாலியம், இளமை, மூப்பு என்ற படிகளே இல்லை.
கை, கால்களை அசைக்கத் தெரிந்ததோ இல்லையோ உடனே ஒவ்வொரு ஜீவனும் வேலை செய்ய ஆரம்பித்துவிட வேண்டும், இந்த வேலை கைகால்களில் அசைவு நிற்கும் வரையில் நடக்க வேண்டியது, செக்கைப்போல உழைக்க வேண்டியது.
இந்தச் செருக்கிலே எருதுகள் உழைப்பதோடு போவதில்லை.
இட்டும் கொப்பரைக்கும் எருதுகளைப் போலவே இரத்தமும் மாமிசமும் உண்டு.
இதிலிருந்து இடி எடுத்த எண்ணெய் எதற்குத் தெரியுமா?
கலை என்ன, சாஸ்திரம் என்ன, தர்மம் என்ன, கலைப்பண்பு என்ன – இவற்றை எல்லாம் பற்றிச் சிந்தனைகள் செய்து செய்து கொதித்துப்போன உயர் வகுப்பாரின் மூளையைச் சாந்தமாக்குவதற்கு அந்த எண்ணெய் வேண்டும்.
கூழுக்கே தாளம்போடும் இடத்திலே கலை எது?
கல்வி எது?
குழந்தைகள் முதல் கிழவர்கள் வரையில் வேலை செய்துங்கூடச் சாப்பாட்டு நேரத்துக்குத் தகராறுதான்.
ஆகவே, பணம் செலவழித்துக் கல்வி கற்கும் சக்தி எத்தனை பேரிடம் இருக்கும்?
இப்படிக் கோடிக்கணக்கான மனங்கள் மிருகங்களைப் போலக் காலம் தள்ளுவதால்தான் உயர் வகுப்பினரின் கலையும் சுகபோகங்களும் நடக்கின்றன.
சில நோய்களால் நோயாளியைப் பிழைக்க வைப்பதற்காக ஜனங்கள் தம் ரத்தத்தைக் கொடுப்பது உண்டு.
தொழிலாளி வர்க்கம் தலைமுறை தலைமுறைகளாக உயர் வகுப்பாருக்கு இந்த இரத்தத்தை வேண்டிய மட்டும் கொடுத்து வந்திருக்கிறது.
ஆனால் அப்படி இரத்தத்தைக் கொடுத்துக் கொடுத்து இப்போது இதுவே சாவை நீட்டிவிட்டது அல்லவா?
பாட்டாளிகளின் இரத்தமப்பா, உன் காவியம், சிற்பம், ஓவியம் என்பன போன்றவை!
கலையின் நிலைபற்றிக் களிப்புடன் பேசுகிறாயே, அந்தக் கலைக்குத் தண்ணீர், பாட்டாளியின் பச்சை இரத்தம், பரம்பரை பரம்பரையாக அந்த இனம் கொட்டிய குருதியிலே உன் கலை, முளைத்தது, தெரிந்து கொள் என்று எச்சரிக்கிறார்.
கலாரசிகர்களுக்கு, ஆதவன் உதயம், நிலவின் எழில், மலரின் அழகு போன்றவைகளில் தானே பிரேமை. அதே, காட்சிகளையே காண்டேகர் காட்டுகிறார், அவர்களுக்குப் பாடம் கற்பிக்க, சுகந்த மலர்களைக் காட்டிக் கூறுகிறார்.
“தொழிலாளிகள் யாவருமே இந்தச் சாரங்கி மொட்டுக்களைப் போன்றவர்களே அல்லவா?
உலகில் பிறப்பதும் யாருக்காவது தன் உடலிலுள்ள இரத்தத்தைக் கொடுத்துவிட்டுச் சாவதுமே அவர்கள் வாழ்க்கை பூவின் வாழ்விலுள்ள ஆனந்தம் இந்த மொட்டுக்களுக்குக் கணநேரமாயினும் கிடைத்திருக்கமா?
படி ஓரணா விலைக்கு இந்த மொட்டுகள் யார் மடியிலும் போய்விழும்.
நாளைக்கு இவற்றிலிருந்து அத்தர் இறங்கியதும், அதை வாங்குபவன்! அத்தரின் மணம் எவ்வளவு நேர்த்தி! என்று போற்றுவான்.
அவனுடைய அந்தப் போற்றுதலினால், பலியான இந்த மொட்டுக்களுக்கு என்ன உபயோகம்?
பிறருக்குப் பயன்பட்ட பரம்பரையில் உதித்த பாட்டாளிகளுக்குத் தங்கள் சக்தி தங்களுக்கே தெரியவில்லை அல்லவா?
காண்டேகர் கூறும் இந்த வாசகங்கள், அவர்களை விழிப்பும் எழுச்சியும் பெறச் செய்யுமல்லவா!
புரட்சி வாடை வீசும் செற்கள், காண்டேகரின் ஏடுகளிலே ஏராளம். அவை பாட்டாளிகளின் வெற்றிக்குத் தேவையான புது முறுக்குத் தரும் சக்தி வாய்ந்தவை.
உயர் வகுப்பினரின் வாழ்க்கை நிலவுபோலத்தானே இருக்கிறது?
இந்த நிலவு பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக, எவ்வளவு சாந்தமாக இருக்கிறது ஆனால், சூரியனே இல்லாவிட்டால் சந்திரனுக்கு ஒளி எங்கிருந்து கிடைக்கும்?
இரத்தத்தை நீராக்கும் தொழிலாளிகள் இல்லாமற் போனால் உயர் வர்க்கத்தினரின் சுகபோகங்கள் நடக்குமா?
கலை சௌந்தர்யம், கலைப்பண்பு இந்த பொற்கலசம் பார்ப்பதற்கு அழகுதான் ஆனால் கீழே கோயில் முழுவதும் உறுதியும் கரடு முரடுமான கற்களாலேயே கட்டவேண்டி இருக்கிறது.
அந்தப் பொன்னைப் போலவே – இன்னும் கேட்டால் அதையும்விட அதிகமாக – இந்தக் கற்களையும் கவனிக்க வேண்டியதுதான், என்று கூறுகிறார், பாட்டாளிகளின் உழைப்பின்மீதே உன்னதமானது என்று பலரும் போற்றும் கலை கட்டப்பட்டிருக்கும், உண்மையை புரட்சிக் கவிஞரின், கவிதை மணம், காண்டேகரின் உரைநடையிலே தவழ்கிறது என்று கூறலாம்.
தொழிலாளி என்றால் உயிருள்ள ஒரு எந்திரம்!
இந்த உயிருள்ள எந்திரத்துக்கு உயிரில்லாத எந்திரத்துக்குப்படும் அவ்வளவு அக்கரைகூட யாரும் எடுத்துக் கொள்வதில்லை
அவனுடைய சாப்பாடு துணிமணிகள் வைத்தியம் மருந்துகள் எல்லாம் எவ்வளவு மோசமானவை.
ஏழ்மை பரம்பரையாகத் தொடர்ந்து வரும் நோய்.
இந்த ஒரு நோயிலிருந்து துர்ப்பழக்கம், திருட்டு, துர்ப்புத்தி முதலிய 72 வகையான நோய்கள் உண்டாகின்றன.
பணம் இல்லாதவன் மிருகம் – பணம் படைத்தவன் இராட்சசன் உலகத்தில் உண்மையான மனிதன் கண்ணுக்குத் தென்படுவதுதான் அரிதாக இருக்கிறது.
குடி, கூத்தி, பந்தயம், போட்டி, இவ்வெல்லாத் துர்ப்பழக்கங்களுக்கும் வேர் இந்தப் பணவிசனமே.
வேறுபாட்டுக்குக் காரணம் பணம், தன்னலத்துக்குக் காரணம் பணம், உலகத்திலுள்ள எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பேர்களின் கையில் உருளும் பணந்தான்.
இன்றைய உலகத்திலுள்ள பணம் சிறு குட்டையில் தேங்கிய நீரைப்போலல்லவா இருக்கிறது?
குடிப்பதற்கு இந்த நீர் உபயோகம் இல்லை.
மாடுகளுக்கு உபயோகம் இல்லை, ஊர் வந்து செல்லும் சதுசதுப்பான விஷக் கிருமிகளின் முட்டைகள் மட்டுமே இதில் நன்றாக வளர்கின்றன.
இந்தக் கிருமிகள் பரவிய உடனே, இதன் அக்கம்பக்த்திலுள்ள ஜனங்கள் நொடி நேரத்தில் பொட்டுப் பொட்டென்று சாவது எதனால் என்று கேட்கிறார் காண்டேகர்.
மனிதனல்ல, எந்திரம் பிறருக்குப் பயன்படும் எந்திரம் என்று பாட்டாளி உலகுக்கு அறிவித்து, அவர்களைப் புரட்சி உருவாக்கும் பணியினை அருமையாகச் செய்கிறார்.
வாழ்வு பொய்யல்ல, நிஜம்! வாழ்வு மாயையல்ல, நல்லது பெறச் சந்தர்ப்பம், வாழ்வுக்கு இரு நரம்புகள், ஒன்று தொண்டு மற்றொன்று அன்பு, இவை இரண்டும் மீட்டப்படுவதால் வாழ்க்கைக்கீதம் கிளம்பும்.
ஆனால், அதை அனுபவிக்க முடியாதபடி, சமூகத்திலே இரு பரம்பரைகள், இருதுருவங்களிலே இருப்பதால், வாழ்வு வெறுங் கோயிலாகி, களிப்பு கருகிய மொட்டாகி விடுகிறது, மக்கள் சுகம் எங்கே? என்று தேடி அலைகிறார்கள், எங்கும் ஏரிநட்சத்திரமே காண்கின்றனர், புயலும் படகும் போல, சுயநலமும் இலட்சியமும் போதுவது காண்கின்றனர் – இதுவே காண்டேகரின் கருத்து.
உஷா, ஆனந்தன், முத்தண்ணா, கருப்பன் என்று பலப்பல கதாப்பாத்திரங்களை நம்முன் கொண்டுவந்து நிறுத்தி வைத்து அவர்களைக் கொண்டு கூற வைக்கும் கருத்து, இவைகளே கதாப்பாத்திரங்கள் அவ்வளவும், காண்டேகர் அமைக்கும், மேடைமீது ஏறி நின்று, புரட்சி முழக்கம் செய்யும் பிரச்சாரகர்கள்!
இவ்வளவு கொடுமைகள் இருந்தும், ஏன் இந்த மக்கள், பிறரால் சுரண்டப்பட்டு, சுருண்டுபோகிறார்கள்?
ஏன் புரட்சி உணர்ச்சி தோன்றவில்லை?
இதே கேள்விகள் நமக்குப் பல தடவை தோன்றுகின்றதல்லவா?
இதுவரைக் கலைத் துறையின் காவலர்களாக இருந்தவர்கள், இதெல்லாம் கர்மம் என்றனர்,
சிலர், வெறும் மனப்பிராந்தி என்றனர், புரட்சிக்கவி பாடினார் பாரதிதாசன் அவ்விதமே உரைநடையில் கூறுகிறார் காண்டேகர்.
புரட்சி செய்ய வேண்டியதுதான், கொடுமைகள் பொடிபட, புது உலகு தழைக்க ஆனால், அவர்களால் முடியாது என்று காண்டேகர் உள்ளம் உருகும் முறையிலே எடுத்துக்கூறி அவர்களால் முடியாது என்பதனால், கைக்கட்டிக் கொண்டு வாய்பொத்திக் கொண்டு நீ இராதே!
இந்தப் பணி உன்னுடையது, மகத்தான வேலை உன்முன் இருக்கிறது, என்று நமக்கெல்லாம் அறிவுறுத்தும் முறையில் கூறுகிறார்.
புரட்சி செய்வதற்கும், போரும் சச்சரவும் நிகழ்த்தி அதில் வெற்றி பெறுவதற்கும் வேண்டிய தைரியம் இவர்களிடம் எது?
தம் வேலைக்காரர்கள் பயங்கொள்ளிகளாக இருப்பதற்கு வேண்டிய முயற்சிகளையே எஜமானர்கள் எப்போதும் செய்து வருகிறார்ள்.
கஷ்டப்பட்டு வாழும இந்த மனிதர்களுக்கு எழுதப்படிக்கத் தெரிவதில்லை.
மனிதனின் விதி அவனுடைய தலை எழுத்தில் இல்லை.
அவனுடைய மனோபலத்தில்தான் இருக்கிறது என்ற விஷயம் இவர்களுக்குப் புரிவதில்லை.
ஆண்டவனுக்கு எப்போதாவது நம்மீது இரக்கம் பிறக்கும் என்ற பைத்தியக்கார ஆசையும் இவர்களை விட்டு விலகுவதில்லை.
அப்படி இருக்க, எந்தச் சமூகத்துக்காக நாம் செத்துச் சுண்ணாம்பு ஆகிறோமோ அந்தச் சமூகம் நாம் உயிர் வாழ்வதற்குரிய சாதாரணமான சுகங்களைக் கூட நமக்கு அளிப்பதில்லை, என்பதைப் பற்றிக் கிளர்ச்சி செய்யும் அறிவு எங்கிருந்து வரும்?
மிதிப்பட்ட ஜனங்களை விழிக்கச் செய்வது, மனிதர்கள் என்ற முறையில் அவர்கள் தமக்கு உரிமையானவற்றைப் பெறுவதற்காகச் சச்சரவும், நெருக்கடியும் போரும் விளைவிக்கவும், சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தாற்போல், அப்போர்களிலே, தங்கள் உலகங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் அவர்களைத் தயார் செய்வது, எவ்வளவு பெரிய வேலைகள், நம் தலைமுறைக்கு இருக்கின்றன என்று கூறுகிறார்.
இவ்வளவு விளக்கமாகக் கூறினாலும், நம் நாட்டு மேதைகள் கல்வி பரவினால், எல்லாப்பிணியும் ஆகலும், என்று கூறுகிறார்களல்லவா!
காண்டேகர் அவர்களையும் விடவில்லை, கல்வி வரட்டும் என்று காத்திருந்து பயனில்லை, கல்வி வராதபடி ஒரு தடை இருக்கிறது என்று காட்டுகிறார்.
கல்வி என்பது தண்ணீர்! அதைச் சமூக விருட்சத்தின் வேரில் ஊற்றினால் நம்வேலை ஆகிவிட்டது என்று நினைத்தேன்.
ஆனால் இந்த மரத்தின் வேரிலுள்ள ஜாதித் துவேஷமும், பேதபுத்தியும் பணத்துக்கு அடிமைத்தனமுமாகிய புழுக்களா அதை வளரவிடப் போகின்றன?
இந்தப் புழுக்கள் சாகவேண்டும். அவற்றைக் கொல்ல வேண்டும் என்று கூறுகிறார்.
இனி என்ன வேண்டும், காண்டேகர் மராட்டிய பாரதிதாசன், உரைநடைப் பாரதிதாசன் என்று உவகையுடன் கூறலாம்.”
காண்டேகரின் தமிழாக்கங்களைப் படித்து வாசகராக இருந்த பேரறிஞர் அண்ணா 75 ஆண்டுகளுக்கு முன் நீண்ட திறனாய்வுக் கட்டுரையைத் தன் தம்பிகளுக்கு எழுதிய காவிய வரிகளைத்தான் நாம் படித்து மகிழ்ந்தோம்.
இப்படிப்பட்ட படைப்பாற்றலை அறிஞர்கள் படித்துச் சுவைக்கும் வாய்ப்பை வழங்கிய பெருமை கா.ஸ்ரீ.ஸ்ரீ-யைச் சாரும்.
பேரறிஞர் அண்ணா தனது சொற்பொழிவுகளில்கூட காண்டேகரின் கருத்துகளை, உவமைகளை மேற்கோளிட்டுப் பேசினார்.
1961-ஆம் ஆண்டின் செங்கற்பட்டு தி.மு.க. இலக்கிய மாநாட்டில் கா.ஸ்ரீ.ஸ்ரீ-க்கு அண்ணா கேடயம் வழங்கிப் பாராட்டினார்.
காண்டேகர் என்றால் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும், கா.ஸ்ரீ.ஸ்ரீ. என்றால் காண்டேகரும் நினைவுக்கு வருவார்கள்.
இருவரையும் பிரித்துப் பார்க்கவே முடியாது.
மொழிபெயர்ப்பின் சிகரமிது!
காண்டேகரின் படைப்புகள் வருமாறு:-
தொ. எண்.
புதினத்தின் பெயர்
இயற்றப்பட்ட ஆண்டு
தமிழில் வெளிவந்த ஆண்டு
1
வெறுங்கோயில்
1939
1942
2
சுகம் எங்கே
1939
1943
3
கருகிய மொட்டு
1941
1943
4
புயலும் படகும்
1940
1943
5
எரி நட்சத்திரம்
1934
1944
6
இரு துருவங்கள்
1934
1945
7
மனோரஞ்சிதம்
1939
1950
8
இரு மனம்
1938
1951
9
கிரௌஞ்சவதம்
1942
1952
10
வெண்முகில்
1939
1953
11
அமுதக்கொடி
1967
1968
12
யயாதி
1959
1990
13
கண்ணீர்
1953
1991
மொழிபெயர்க்கப்படாத காண்டேகரின் புதினங்கள்
14
தங்கமான்
1930
15
இதயக்குரல்
1931
—–
பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
பொருநராற்றுப்படை (தொடர்ச்சி…)
“குளம்பு வழியன்ன கவடுபடு பத்தல்” (ச). யாழின் கரிய தண்டு பாம்பு தலையெடுத்தாற் போன்று உளது. அதனைப் “பாம்பணந் தன்ன ஓங்கிரு மருப்பு,” (க) என்கிறார்.
யாழ்த்துளையும் அதிலமைந்த ஆணியும் வளை யிடத்துள்ள நண்டின் கண்போன்று உள்ளன. “அளை வாழ் அலவன் கண்கண்டன்ன, துளைவாய் தூர்ந்த துரப்பமை ஆணி,” என்கின்றார். யாழைத் தோல் இட்டுப் போர்த்தியிருக்கிறார்கள்; அது விளக்கு அழல் போன்ற சிவந்த நிறமுடையது ; இரண்டு பக்கமும் கூட்டித் தைக்கப் பெற்றது; தைக்கப்பட்டு விளங்கும் அத்தோற்றம் எப்படியிருக்கிறது?
நன்றாக அறியப்படாத இளைய சூலினையுடைய சிவந்த நிறத்தாள் ஒருத்தியின் அழகிய வயிற்றிலே நுட்பமாக மயிரொழுங்கு காணப்படுவதுபோல் இருக்கின்றதாம்.
அதனை ‘எய்யா இளஞ்சூல் செய்யோள் அவ்வயிற்று, ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல,” என்ற தொடரால் உணர்கிறோம்.
இன்னும் பாடினியின் காதுக்குக் கத்திரிக்கோலின் பிடிக்குமிடத்தையும், நகங்களுக்குக் கிளி மூக்கையும், மென்மையான அடிகளுக்கு வருந்திய நாயின் நாக்கையும் உவமை கூறியிருப்பது படிப்போர்க்கின்பம் பயப்பதாம்.
பொருநன் சோழனது விருந்தினனாக இருந்து இராப் பகலாக ஊன் தின்று அவன் பற்கள் மழுங்கலுற்றனவாம். எப்படி?
புன்செய் நிலத்தை உழுத கலப்பையின் கொழுவைப்போல.
“கொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்லே
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி.”
அட என்பது நகைச்சுவைப்பட அமைந்துள்ளது.
இப்பாட்டால் அக்கால வழக்குகள் பலவும் மக்களியல்புகள் பலவும் அறியக் கிடக்கின்றன.
ஏறக்குறைய ஆயிரஞ் சொற்களைக் கொண்ட இந்தப் பொருநராற்றுப்படையில்,
தவம், பயம், மனம், உருவம், தேகம், மாலை, பலி, அவை, கலவம் முதலியவாகப் பத்துப்பன்னிரண்டு வட சொற்களே வந்துள்ளன.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment