நினைவில் வாழும் கலைஞர்
மூன்றாம் ஆண்டு நினைவு மலர் – 2021
முரசொலி வெளியீடு
7 8 2021
நூற்றாண்டைக் கடந்த நுண்ணறிவு !
ஒளவை நடராசன்
அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி வெள்ளை மாளிகையில் ஒருமுறை விருந்தளித்தார்.
இலக்கியப் படைப்புக்களிலும் பல்வேறு அறிவியல் துறைகளிலும் ஆற்றிய சீரிய பணிகளுக்காக நோபல் பரிசு பெற்ற விருதாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது விருந்துக்கு முன் ஒரு செய்தியை அதிபர் குறிப்பிட்டார்,
‘‘ இதுவரை வெள்ளை மாளிகையில் வந்து திரண்ட திறமிக்க, மனித அறிவாக்கத்தின் ஆளுமைமிக்க சான்றோருள் இங்கு குழுமியுள்ளோரே பெரிதும் தனித்தன்மையும் – தகைமையும் வாய்ந்தோராக இருக்கக் கூடும் என்று கருதுகிறேன்.
ஒரு விதிவிலக்காகச் சொல்வதென்றால் தாமஸ் ஜெபர்சன் இங்கே தனியே உணவருந்திய தருணத்தைக் தான் குறிப்பிட வேண்டும் .
” நூறு நோபல் பரிசு பெற்றவர்களின் அறிவுத்திரட்சி தாமஸ் ஜெபர்சன் ஒருவருக்கு ஈடாகாது என்று அமெரிக்கத் தலைவரைப் பற்றி ஜான் கென்னடி போகிற போக்கில் உரைத்த இந்த மேற்கோள் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது ” .
எங்கே எந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டாலும் தாமஸ் ஜெபர்சனை நினைவு கூர்வாராம் .
இதே நினைவு அன்மையில் முதலீட்டாளர் பேரவையில் – முதலீட்டின் முதல் முகவரி என்று குறிப்பிட்டு தமிழகத்தைத் தலை நிமரச் செய்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சரின் தொடக்க உரையை இங்கே ஒப்பிட நினைத்தேன் .
குடியரசுத் தலைவரின் மாளிகையானாலும் ,கொரோனாத் தொற்று நோயால் வருந்தும் நோயரின் மருத்துவ மாடமானாலும் , ஆட்சிக் கொள்கையை விளக்கும் அரங்கமானாலும் அங்கிங்கெனாதபடி எங்கும் இது நம் கலைஞர் அரசு என்பதில் களிப்பிருந்தாலும் , மிகுந்த கவனத்தோடு கடமைப் பொறுப்பைத் தோளில் சுமந்து கொண்டு தான் எந்த நேரமும் நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று கூறுவதைக் கேட்கும் போதெல்லாம் நம் நெஞ்சம் கரைகிறது .
இந்த நூற்றாண்டின் வளர்ச்சிக்கு ஒரு தலைவரின் பேச்சில் ஐந்து அடையாளங்களைக் காணலாம் என்பர் ,
நம்பிக்கை,
துணிவு ,
நல்லுறவு ,
சிந்தனை
,புதுமை .
மாண்புமிகு முதல்வரின் உரையில் இந்த ஐந்தும் மின்னி மிளிர்ந்தன .
நூற்றாண்டைத் தாண்டியும் தமிழ்நாட்டின் செழிப்பை ஒவ்வொரு கணமும் சிந்தித்த முத்தமிழறிஞர் கலைஞரின் செயல்கள் தொட்ட இடமெல்லாம் தட்டுப்படுகின்றன .
” யாணர் நாட் செல்லுகினும் நின்றலர்ந்து
தேன் பிலிற்றும் விந்தை மலராக ”
நம் கலைஞர் தமிழ் நெஞ்சங்களில் என்றும் நீங்காத நிலை பெற்றுள்ளார் .
அறிவாலயத்தில் அமர்ந்திருந்த கோலமும் – மேடையில் நின்று முழங்கிய தோற்றமும் , ஆட்சி மண்டபத்தில் மக்கள் குறை தீர்க்க முன் வந்த எழிலும் ,காவியக் கலை வடிவங்களைப் புனைந்த கரமும் , எழுதுகோலோடு நிமிர்ந்து பார்த்த பெருமிதமும் , என் உயிரினும் மேலான என்று பல கோடித் தொண்டர்களை அழைத்த குரலும் ,நம் மொழி செம்மொழியாயிற்று என்று வெற்றி பெற்ற மகிழ்ச்சிப் பெருக்கும் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன .
கருத்தில் நிலையாக நிற்கும் முத்தமிழறிஞரை எப்படி எல்லாம் நினைத்துப் பார்ப்பது !
அறிவாலயத்தில் அமர்ந்திருந்த கோலத்திலா ,
அரசாட்சியில் வீற்றிருந்த வெற்றி மாட்சியிலா ,
மேடையில் நின்று முழங்கிய தேனருவியாகவா ,
காவியக்கலை வடிவங்கள் புனைந்து கையில் எழுதுகோலோடு நிமிர்ந்து பார்த்த பெருமிதத்திலா ,
தொட்டில் பருவத்திலிருந்து எங்கள் செவி கேட்கத் திரைத்தமிழை எழுதி வழங்கிய ஏற்றத்திலா ,
என் உயிரினும் மேலான என்று பல கோடித் தொண்டர்களை என்று அழைக்கும் இடிக்குரலிலா ,
துளிர்த்த நறுந் தேனென்று சொல்லும் சொல்லைத் தோழர்களிடம் பேசிய அரவணைப்பிலா ,
நீங்கள் உறங்காதிருந்த காலம் உண்டு ,உடன்பிறப்புக்குக் கடிதம் எழுதாத காலமில்லை .
நீங்கள் உண்ணாத பொழுதுண்டு ஆனால் பழந்தமிழ்ப் பனுவலை எண்ணாத கணமில்லை .
” தோள்களால் மலைகளை இடித்துத்
தூள் தூளாக்கும் மானமறவர்கள் ”
என்று வெடித்த குரலில் புறநானூற்றுக்குப் புதுப்பொலிவு ஊட்டினீர்கள் .
சிலப்பதிகாரத்தை எங்கள் கண்முன்னால் பூம்புகாராகப் புனைந்து காட்டினீர்கள் .
திருவள்ளுவரைத் தேரில் அமர்த்தினீர்கள் .
தென் குமரியில் தமிழகத்தை நோக்கியபடியே திருவள்ளுவரை நிலைநிறுத்தி உலகப்பெருமை சேர்த்தீர்கள் .
தாங்கள் விடைபெற்றபோது ஆற்றிய தொடர்கள் , ”
என்னைக் கடலில் வீசினும் கட்டுமரம் ஆவேன் , நீங்கள் பயணம் செய்யலாம் –
நெருப்பில் எரித்தாலும் விறகாவேன் ,நீங்கள் மகிழ்ச்சியோடு குளிர் காயலாம் .
பாறையில் மோதினால் சிதறு தேங்காய் ஆவேன் .நீங்கள் என்னை எடுத்து உண்ணலாம் ”
என்ற போது , அந்தத் தேன் தொடர்கள் இப்போது நினைத்தாலும் நம் விழிகளை நீர்த்திரையாக்குகின்றன .
” எழுகின்றபோது இளங்கதிர் போல எழுந்தான் ,
விழுகின்ற போது விதையைப் போல விழுந்தான் ,
அழுகின்ற போது கார்மழை போல அழுதான் ,
தொழுகின்ற போது பகுத்தறிவையே தொழுதான் ”
என்ற கவிக்கோவின் சொற்கள் நம் கண்முன்னே உயிரோவியமாகத் தெரிகின்றன .
இன்று உங்கள் நினைவு ஒவ்வொரு கணத்திலும் செயல்வடிவத்தில் சிறகசைக்கின்றது .
அதியமானைத் தொடர்ந்து பொகுட்டெழினி புதிய வரலாற்றைப் பொன்னெழுத்துக்களால் பொறித்து வருகிறார் .
தமிழகம் கட்டளையை ஏற்கக் காத்து நிற்கிறது .
நூலறிவும் – நூல் வழங்கும் நுண்ணறிவும் பண்பாட்டின் மேம்பாட்டுக்கு ஆலவட்டம் இடுகின்றன .
கலைஞர் நூலகம் மாட மதுரையில் மலைவிளக்காகச் சுடர் விடுகின்றது .
நூற்றாண்டுகளைத் தாண்டி நினைவுகள் அலைகளாகப் பரவுகின்றன .
நாடன் என்கோ ?
ஊரன் என்கோ ?
பாடு இமிழ் பனிக் கடல் சேர்ப்பன் என்கோ ?
யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாள் கோதையை ?
– புறநானூறு 49 ..

Add a Comment