செம்மனச் சீராளன் !
மணிமேகலை கண்ணன் மாமகன் இவனே !
எழிலில் உருவில் எவரையும் கவர்வான்
கவிஞன் – கட்டுரையாளன்
வித்தக அரசியல் வெற்றி நோக்கி
முத்திரை முயற்சி செய்பவன் !
பாட்டு நடையில் எவற்றையும் படைப்பவன்
கண்மணி மைந்தன் கலைமனம் கொண்ட
ஸ்ரீகாந்தன் என்ற சீர் புகழ் கொண்டவன்
வாழ்க பல்லாண்டு !
வளர்க பல்லாண்டு !
முத்தமிழ்க் காவலர்
நற்றிறப் பேரன்
நாளும் வாழ்கவே !
அன்போடு
ஒளவை நடராசன்
13 8 2021
மேனாள் துணைவேந்தர் முனைவர். தாமரைத்திரு ஒளவை நடராசன்
அவர்கள் குறித்து ஸ்ரீகாந்த் 31.7.2021 எழுதிய கவிதை …..
பட்டை தீட்டத் தேவையில்லாத் தங்கத்தமிழ்
சட்டை போட்டு வாழ்ந்திருக்கும் சங்கத் தமிழ்
ஆங்கிலத்தில் புலமை மிக்க சேக்கிழார்
சொக்கவைக்கும் தமிழ் பேசும் சேக்ஸ்பியர்
என்னவாக இருந்தாலும் தலைப்பு – இவர்
பேசிய பின் நமக்கு வரும் மலைப்பு
உலகமெல்லாம் இவருக்கு அழைப்பு – தமிழ்
உயரும்வரை ஓயாது இவர் உழைப்பு
மேடைப் பேச்சு கொட்டிசைக்கும் மேளம் – ரசித்து
கை தட்டும் கர ஓசையெல்லாம் தாளம்
இவர் கையாளும் சொற்கள் கனகப் பாளம்,
கேட்டால் ……………
தமிழ் பாய்ந்துயரும் நமது இரத்த நாளம்
எழுத்தாணி பிடிக்காத ஞானி
வெள்ளை வேட்டி கட்டி வந்த வாணி – தன்
கருத்துச் சுரங்கத்தைப் பேனா முள்ளால்
சுரண்ட முடியாதென்பதால்
அச்சடிப்பை விடுத்து உச்சரிப்பை எடுத்தார் ………..
ஆம் !
அச்சில் பட்டு வரும் தமிழைவிட இவர்
எச்சில் பட்டு வரும் தமிழே இனிக்கும்
இவர் புத்தகம் போட்டிருந்தால் செல்லரிக்குமென
போடவில்லையோ? அதனாலென்ன…… இவர்
பேசும் முத்தமிழைக் கேட்டாலே புல்லரிக்கும்.
கடந்து வந்தார் அரசுப் பணி அலுவல்
அதில் அரசியலைக் கண்டுவிட்டால் நழுவல் – அன்று
நடந்து சமைத்தார் பல உலகத் தமிழ் மாநாடுகள்
புகழ்ந்து பெற்றார் தமிழக முதல்வரின் பாராட்டுகள்
மதுரை வாழ் தமிழ்க்கடல் ஒளவை உரைவேந்தர் பெற்ற
முது பெரும் முனைவர் ஒளவை நடராசனார்
தமிழமுது நாம் சுவைத்து தரணியில் வெற்றிபெற
வாராது வந்துதித்த நல் மாமணி –
வாழிய வாழிய வாழிய பல்லாண்டு !!!
கண்மணி மைந்தன்
கவிஞர் க. ஸ்ரீகாந்த்

Add a Comment