POST: 2021-08-15T09:11:05+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 71

பந்தயப்புறா பாலகுமாரன்

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

பாரதிய வித்யா பவன் அரங்கில் 1984-85 ஆம் ஆண்டில் அப்பா, கலைஞானி கமல்ஹாசன் பங்குகொண்ட கூட்டம் எழுத்தாளர் பாலகுமாரன் (05.07.1946 – 15.05.2018) எழுதிய இரும்புக்குதிரைகள் நூல் வெளியீட்டு விழாவாகும்.

அந்நிகழ்விற்குப் பார்வையாளராகக் கலந்து கொண்டேன்.

அவ்விழாவில் அப்பா தன்னுரையில், ஏன் இரும்புக்குதிரையில் “க்” விடுபட்டது என்று கூட்டத்தில் வினவிய பொழுது கலைஞானி கமல்ஹாசன் தமிழ்ப்புலவர்கள் குற்றம் காண்பதே தலையாய பணியாக வைத்துள்ளார்கள் என்றார்.

அதற்கு எழுத்தாளர் பாலகுமாரன் மிகப் பணிவாக அரங்கில்,

“நான் ஔவையின் மாணவர்; அவரின் பேச்சைக் கேட்டுத் தமிழில் சொக்கிப் போனவன்;

அவர் விடுத்த இவ்வினாவை இப்புதின நாயகி தாரிணியும் தன் கணவர் விசுவநாதனிடம் வினவுகிறாள்;”

இரும்பு குதிரைகள் நன்றாக இருக்கு, இரும்பு குதிரைகளுக்கு ‘க்’ உண்டா? என்ற போது விசுவநாதன் யோசித்து, பலமுறை சொல்லிப்பார்த்து ‘க்’ இல்லை, உண்டு என்றாலும், ஒற்று வரும் என்றாலும், வேண்டாம் நம் தலைப்பில்.

காரணம் ‘க்’ போட்டால் நடுவிலேயே குதிரை நிற்பது போலவும், வழுக்கிண்டு பூமி மாதிரி போகவில்லை என்றும்; வார்த்தைகளில் வேகம் இல்லை என்றவுடன்; யாராவது தப்பு சொல்லுவார்களே?

என இந்நூலை வெளியிடும்போது தமிழறிஞர்கள் குறை சொன்னாலும் குறை சொல்லட்டும்.

அதன் பொருள் உன்னையும், என்னையும் போல நெருக்கமாக இருப்பவர்களுக்குக் குறையாக இருக்காது என்று அமைதி கூறினார்” எழுத்தாளர் பாலகுமாரன்.

அக்கூட்டத்தில் இளங்கலை மாணவனாக நான் மேடையிலேயே இருந்து கேட்டுப் பகிர்ந்த வரிகளாகும்.

அவர் எழுதிய ஆனந்த வயல், பந்தயப் புறா, என்றென்றும் அன்புடன், பச்சை வயல் மனது, மெர்குரிப் பூக்கள் போன்ற பல புதினங்களை இளங்கலை பயிலும் போது வேகமாகப் படித்துள்ளேன்.

உண்மையாகக் குதிரையில் சவாரி செய்யுமளவுக்கு அவர் எழுத்துக்கள் விரைந்தோடும்.

அவருடைய புதினங்களைப் படிக்கும் பொழுது என் அம்மாவின் மாணவியும், இராயப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவராக இருந்த திருமதி கிருபாகிரி அவர்களும் அவ்வேளையில் அம்மாவிடம் உரிமையாக,

‘நம் அருளை, பாலகுமாரனின் புதினங்களைப் படிக்க வேண்டாம்’ என்று சொல்லி புதினங்களைத் தன் இல்லத்திற்கே எடுத்துச் சென்றுவிட்டார்.

அவர் அம்மாவிடம் சொன்ன காரணம் திருமணமாகாத இளைஞர்கள் பாலகுமாரனுடைய புதினங்கள் படிக்கக்கூடாது என்பதாகும்.

அப்பொழுது அம்மா என்னிடம் இதைச் சொன்னபோது நான் உடனே சொன்னேன்,

பந்தயப்புறா புதினத்திற்கு எழுத்தாளர் பாலகுமாரனின் தாயார் தான் முன்னுரை வழங்கியுள்ளார்; அவர்களின் வரிகளில்;

குமாரா, உன் எழுத்துகள், கதைகள், கூறும் தத்துவங்கள் இனிவரும் தலைமுறைக்கு முக்கியமாகப் பெண்களுக்கு மிக்க ஊக்கத்தையும், தைரியத்தையும், மனோதிடத்தையும் கொடுக்கும் என்பது என் நம்பிக்கையாகும்.

உன் பளிச்சிடும் தத்துவங்களைப் படித்து உள்ளம் குளிர உன்னை வாழ்த்துகிறேன் என்று சொன்னவுடன்

என் அம்மா, அப்படியா மேலும் படி, எதைப்பற்றியும் கவலைப்படாமல் படி என்று ஊக்கம் தந்தார்கள்.

அதேபோல அவருடைய நாவல்கள் அனைத்துமே ஒரு நல்ல செய்தியைச் சுமந்து வரும்.

கூடவே தன்னம்பிக்கையை வளர்க்கவும், ஆணவத்தை அழிக்கவும் வலிமை தரும்.

எழுத்துச்சுடர் பாலகுமாரன் தனக்கு நேர்ந்த சூழ்நிலையை, அனுபவத்தை எழுதும் வலிமை வாய்ந்தவராவார்.

அவர் திரட்டிய 40% தகவல்களைத் தான் புதினத்தில் சாரம் பிடிக்கமுடியும் என்பதில் தெளிவாக வரையறுத்தவர்.

அவருடைய ஒவ்வொரு வரியும் மணியாக இலங்கும்.

பாலகுமாரனுடைய எழுத்து நடை “எதிரே நம்முடன் அமர்ந்து பேசுகிற கலந்துரையாடல் போல இருக்கும்.”

தாம்பரத்தில் ஏறி கிண்டியில் இறங்குகிற வேக நடை பாலகுமாரனுடைய எழுத்து நடை என்று எழுத்தாளர் மாலன் புகழ்வதுண்டு.

இரும்புக்குதிரை நெடுக விசுவநாதன் பலவிடங்களில் கவிதை எழுதி வந்தது வியப்பாக இருந்தது.

“வீட்டிற்கு ஒரு குதிரை வளர்க்க வேண்டும்
குதிரைகள் தேசத்தின் பொக்கிஷங்கள்
எவ்வளவு தின்றாலும் குழிவிழுந்த வயிறு
எப்போதும் எப்போதும் துடித்த உணர்வு”

என்று கவிதை வரிகள் நீளும்.

புதினத்தின் ஓரிடத்தில்,

“விளையாட்டு வீரர்களுக்கு அரசு / தனியார் அலுவலகங்களில் மரியாதை உண்டு.

விளையாட்டிற்கு வேலை தரப்படுகிறது.

விளையாட்டில் வல்லவன் என்பதற்காகவே வேலை தரப்படும்.

ஆனால் கவிஞனுக்கு யாராவது கவிதைக்காக வேலை தருவது உண்டா?

எழுதுகிறவனை எந்த அலுவலகமாவது போற்றி வைத்துக்கொண்டிருக்கிறதா?

என்று தன் இரும்புக்குதிரை புதினத்தில் குறித்திருந்ததை நூல் வெளியீட்டு விழாவில் என் அப்பா பெரிதும் பாராட்டினார்.

அதன் விளைவாகச் சில ஆண்டுகள் கழித்து ஸ்ரீராம் நிதி நிறுவனம் கவிஞர்களுக்கு வேலை தந்தார்கள்.

எழுத்தாளர் விக்கிரமன் மகனுக்குத் தந்ததாக நினைவு.

சொல்வேந்தர் நாகை முகுந்தன் தன் வங்கிப் பணியில் பெருமைப்பட்டதைப் பல நிகழ்வுகளில் சொன்னதும் நினைவில் உண்டு.

குதிரைகள் வாயிலாக வேதத்தின் முதல் முதல் ஏழாம் பாடம் வரை கவிமழையாகப் பொழிவார்

அதே போல, கவிப்பேரரசு வைரமுத்துவின் பளிங்கு வரிகளையும், சென்னைத் தமிழையும் வெள்ளமாகத் தன் நடையில் சேர்த்து புதுமை கண்டவர் பாலகுமாரன்.

அப்படித் துடித்த உணர்வோடு எழுத்தாளர் பாலகுமாரன் புதினங்களில் வந்த சில குறிப்புகளைக் கண்ணும் காதும் பதித்த 29.10.1986 கருத்துக்கோவையில் எழுதி வைத்திருந்தேன்.

∙ வாரா வாரம் தொடராய்ப் படிப்பது சொம்பில் மொண்டு குளிக்கிற வகையாகும்; அதனையே தொடரான நாவலாகப் படிப்பது அருவியில் திளைப்பது போலாகும்.

∙ மலையைக் குடைந்தால் தான் தங்கம்!
சேற்றிலே இறங்கினால் தான் சோறு!
அழுகிய பழத்தை பிழிந்தால் தான் மது”
அதுபோல பயப்படாமல் வேலையைச் செய்ய வேண்டும்.

∙ மனிதன் கண்டுபிடித்த ஆயுதங்களில் மிகக் கொடூரமான ஆயுதம் வார்த்தைகள் தான்.

உடலுக்கு ஊறு செய்வதும், உயிரைப்பறிப்பதுமான துன்பத்தை விட மோசமானது மனித நம்பிக்கையைக் குலைத்தல்.

வலியைவிடப் பயம் பெரிய வேதனை.

ஜெயித்தலோடு எந்த யுத்தமும் முடிவதேயில்லை.

வெற்றிக்குப் பிறகே யுத்தம் கடுமையாகிறது.

எதிரி மூர்க்கமாகிறான். கூர்மையாகிறான்.

பலப்பரீட்சை முடிந்து போய்ப் பழிவாங்குதல் வந்து விடுகிறது.

வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போகிறது.

தோல்வியை விட வெற்றிதான் பெரிய வேதனை என்பது பலருக்குப் புரியவில்லை.

பணிவாகவும், தெளிவாகவும் பேசுக, சின்ன வாக்கியங்களால் நிதானமாய் பேசு,

இளைஞர்கள் நிறைய பேருக்குப் பேசத்தெரியாது.

காரணம் உச்சரிப்பு சரியில்லை.

இதற்கு; காரணம் மொழியோடு பரிச்சயமில்லை.

இதற்குக் காரணம் புத்தகங்களோடு தொடர்பின்மை.

தினம் 40 திருக்குறள்களைச் சத்தம் போட்டுச் சொல்; அந்த்த் திருக்குறளின் அர்த்தத்தை உள்வாங்கு.

உன்னால் தெளிவாகப் பேசமுடியும்.

அந்த திருக்குறளில் சொல்லி இருப்பதைப் போல நடக்க முற்படு.

நிதானமாகப் பேச முடியும்.

உன் மொழியில் உள்ள நல்ல நூல்களோடு உனக்குப் பரிச்சயம் உண்டெனில், உன் வாழ்க்கை சுகமாக ஆரம்பிக்கும்.

விருப்பமாய் வேலை செய்.

விருப்பமாக வேலை செய்கிறபோது, வேலைகள் நிறையச் சேரும்.

வேலைகள் நிறையச் சேர்ந்தால் வீண் பேச்சு குறையும்.

வீண் பேச்சு குறைவான இடத்தில் சச்சரவே எழாது.

திரைப்பட இயக்குநர் சங்கர் பாலகுமாரனின் நாவல்களை உருகிப் படித்து,

அவர் எழுதிய கடலோரக்குருவிகள் புதினத்தின் 31, 32, 33-ஆம் அத்தியாயங்களை மட்டும் முழுமையாக எடுத்துத் தன்னுடைய மேசையிலேயே ஒட்டி வைக்கலாம் என்றும் சோர்வடையும் பொழுதெல்லாம் எவ்வித டானிக்கோ, குளுகோஸோ, மருந்தோ தேவையில்லை.

பாலகுமாரனின் எழுத்தே போதும் சோர்வு நீங்க என்பதும், உங்கள் எழுத்து ஒரு சொத்து என்று பாராட்டிய வரிகள் நம் நெஞ்சை நெகிழ வைக்கும்.

எழுத்தாளர் பாலகுமாரனுக்குத் தமிழக அரசின் திரு.வி.க. விருதுபெற வந்த போது நான் என்னை அறிமுகம் செய்து கொண்டபோது என்னை ஆரத்தழுவி,

“உன் அப்பா மீது எனக்குப் பேரன்பு, அவரைப் பல ஆண்டுகளாகச் சந்திக்கவில்லை.

பாதை பல கடந்து விட்டேன், அவரை மிகக் கேட்டதாகச் சொல் அருள்” என்றார் நெகிழ்வாக.

வாழ்க்கையில் பல மாற்றங்களைப் பெற்று, தாடிவைத்த துறவியாக வாழ நினைத்து முடித்தார்.
—–
பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

பெரும்பாணாற்றுப்படை

தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது.

எட்டுத்தொகையுள், குறுந்தொகை 352ஆம் பாடலையும், அகநானூற்றில் 167ஆம் பாடலையும் இவர் பாடியுள்ளார்.

இளந்திரையன், காஞ்சியை ஆண்டவன்;

குறுநில மன்னன்.

இவனிடம் பரிசில்பெற்ற பெரும்பாணன், தன்னை எதிர்ப்பட்ட ஒரு பெரும்பாணனை நோக்கி,

‘நாங்கள் தொண்டைமானிடம் சென்று, அளப்பரிய செல்வத்தையும், யானைகளையும், குதிரைகளையும் பெற்று வருகின்றோம்.

நீங்களும் சென்றால், உங்கள் வறுமை நீங்க, எல்லாச் செல்வங்களையும் பெற்றுவரலாம் என்று, சொல்லியனுப்புகிறான்.

‘மன்னர் மன்ன!
மறவர் மறவ!
செல்வர் செல்வ!
செருமேம் படுந!’

-455,456 அடிகள்
‘தண்டா வீகைநின்
பெரும்பெய ரேத்தி
வந்தேன் பெரும!

வாழிய நெடிதென,’

-460,461 அடிகள்

‘புகையிருங் கதுப்பகம் பொலியப் பொன்னின்
தொடையமை மாலை விறலியர் மலைய,
நூலோர் புகழ்ந்த மாட்சிய, மான்கடல்
வளைகண் டன்ன வாலுளைப் புரவி,
துணைபுணைர் தொழில, நால்குடன் பூட்டி,
அரித்தோர் நல்கியும் அமையான், செருத்தொலைத்து
ஒன்னாத் தெவ்வ ருலைவிடத் தொழித்த
விசும்புசெல் லிவுளியோடு பசும்படை தரீஇ,
அன்றெ விடுக்குமவன் பரிசில்…….’

-485-493 அடிகள்.

‘இளைஞருக்கு இளைஞனே! வீரருக்கு வீரனே!
செல்வருக்குச் செல்வனே!
போரில் புகழ்வாய்ந்தவனே! வரையாமல் வாரி வழங்குவதில் பெரும்பெர் பெற்ற உன்னைப் புகழ்ந்து பாட வந்தேன்.

பெருமிதம் வாய்ந்தவனே!

நீடு வாழ்வாயாக! ’

எனப் பாணன் வாழ்த்திப் பாடினான். இரண்டு கன்னங்களையும் அழகுபடுத்திக் கொண்டு மிளிருமாறு பொன்னாலான மாலையைப் பாணப்பெண்டிர் சூடிட, சான்றோர் புகழ்ந்த சிறப்புடைய பெருங்கடல் முத்தினைப் போன்ற, வெண்பிடரி மயிர்கொண்ட குதிரைகள் நான்கினையும் பிணைத்த, அழகிய தேரினைப் பாணனுக்குக் கொடுத்தான்.

அத்துடன், அவன் அமையவில்லை.

பொருந்தாப் பகைவர் போர்களில் தோல்வியுற்று, அதனால் அவர் தொலைத்த விரைந்து செல்லும் குதிரைகளுடன் பல்வேறு பொருள்களையும் சற்றும் தாமதமின்றி வழங்கி மகிழ்வான்.

முல்லைப்பாட்டு

இதன் ஆசிரியர், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்.

முல்லைத் திணை என்ற பொருளில், முல்லையொழுக்கமாகிய ஆற்றியிருத்தலாகும்.

பத்துப்பாட்டில், ‘பாட்டு’ என்ற தலைப்பில், இரண்டு பாடல்கள். ஒன்று முல்லைப்பாட்டு, மற்றுமொன்று குறிஞ்சிப்பாட்டு.

தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், தான் சொல்லிச் சென்ற கார்காலத்தில் வரவியலவில்லை.

இருப்பினும் தலைவி ஆற்றியிருத்தலாகும்.

‘சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுய ரலமரல் நோக்கி யாய்மகள்,
நடுங்குசுவ லளசத்த கையன் கைய
கொடுங்கோல் கோவலர் பின்னின் றுய்த்தர,
இன்னே வருகுவர் தாய ரென்போள்,
நன்னர் நன்மொழி கேட்டன மதனால்,
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்,
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து,
வருதல் தலைவர் வாய்வது நீநின்
பருவர லெவ்வங் கனைமா யோயெனச்
காட்டவுங் காட்டவுங் காணாள் கலுழ்சிறந்து,
பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்ப !’

சிறுகயிற்றினால் கட்டப்பட்ட இளங்கன்றுகளின் துன்பத் தடுமாற்றங்கண்டு, இடைக்குலப்பெண் அந்தக் கன்றுகளிடம், ‘

உங்கள் தாயர் வெகுவிரைவில் வந்துவிடுவர்’ என்று கூறினாள்.

அவ்வாறு அவள் கூறிய நற்சொல்லைக் கேட்ட இடைக்குல முதுபெண்டிர், ஆற்றியிருக்கும் தலைவியிடம் சென்று, ‘பிரிந்துசென்ற தலைவனும் வெகுவிரைவில் வந்துவிடுவான்’ என்று கூறுகின்றனர்.

எனினும், தலைவி, பிரிவைத் தாங்காது வருந்துகின்றாள்.

தலைவன் பகைவரை வென்று, அவர் தம் திறைப்பொருள்களுடனும், கவர்பொருள்களுடனும் திரும்பி வருகிறான்.

அவன் வரும் தேரில் பிணைத்திருந்த குதிரைகள் கனைக்கும் குரலைத் தலைவி செவிமடுத்தாள்.

எனவே, தலைவன் வருவதறிந்து, தலைவி மகிழ்வுற்றாள்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *