POST: 2021-08-22T10:27:32+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 72

ஒளிச்சுடர் எம்.எஸ். உதயமூர்த்தி

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு

இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்ற பொழுது நூலாசிரியர்கள் பலரை அப்பா அறிமுகம் செய்து வந்த போது

தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த பேரறிஞராக டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி (08.04.1928 – 21.01.2013) தன்னுடைய அருமையான கட்டுரைகளைத்

தமிழில் அமெரிக்காவிலிருந்து எடுப்பாகப் பலவிதழ்களில் எழுதிக்கொண்டும், தன்னுடைய நூல்களை வெளியிட்டுக் கொண்டு வந்த சூழலில் அப்பாவின் நெருக்கமான நண்பராகவும், பல நிகழ்வுகளில் அப்பாவுடன் மேடையில் பேசுவதும் சில நேரஙகளில் எங்கள் அண்ணாநகர் இல்லத்திற்கும் வருகை புரிந்தும் பேராற்றல் கொண்ட பெருந்தகையாகத் திகழ்ந்தார்.

மக்கள் சக்தி இயக்கம் என்று ஓர் அமைப்பைத் தொடங்கிய பொழுது தமிழ்நாட்டின் பல இளைஞர்கள் அவ்வியக்கத்தில் பங்குகொண்டு சமூகப் பணியில் ஆர்வம் காட்டியதையும், இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் அவருக்காகவே “உன்னால் முடியும் தம்பி” திரைப்படம் எடுத்ததும் யாரும் எளிதில் மறக்க இயலாது.

பேரறிஞர் அண்ணாவின் நெருங்கிய பேராசிரிய நண்பராகவும், தமிழகத்தில் தடம் பதித்த நம்பிக்கைப் பேரொளியாக அவர் மிளிர்ந்தார்.

அவருடைய குணவியல்புகள் அளவிட்டால்,

அவருடைய உள்ளம் எண்ணிப் பார்க்க முடியாத பேருள்ளம்;

எந்த நிலையிலும் தன்னிலை மறவாதவர்;

துல்லியமான துலாக்கோல் போல எவரையும் எளிதில் கணிக்கும் மனப்பக்குவம்;

தொலைநோக்கு மிக்க அறிவுவீச்சு; இனிமைமாறாச் சொல் நயம்;
அதற்குமேல் அவரின் கனிந்த எளிய உருவம்.

அவர் அடிக்கடி குறிப்பிடுவது, “நம் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்பதெல்லாம் நமது மனோபாவம் தான்.

இருளடைந்த நாடு இதுவென்று எவரோ சொன்னார், இருளும் ஒரு பெருமை என எண்ணி வாழ்ந்தோம் என்று பாராட்டுகிறோம்;

இருளை இருள் என்று அறிந்தும் பெருமையென எண்ணி வியப்பதா? அல்லது அதை விளம்பரப்படுத்திக் கொள்ளும் மனோபாவத்தைக் கண்டு அயர்வதா? பின் நம்மிடம் இயலாதது எது? என்று பலமுறை வினவுவார்.

பேராசிரியர் உதயமூர்த்தி மனவளர்ச்சித் தொடர்பான நூற்றுக்கு மேற்பட்ட ஆங்கில நூல்களைப் படித்து அதீத மனம் பற்றியும் உள சிகிச்சை நூல்களை நுண்ணாய்ந்து, எப்படி விஞ்ஞானிகள் ஒரு எண்ணத்தைச் செயலாக்க மகத்தான கண்டுபிடிப்புகளை செய்கிறார்களோ அவ்வாறு தன்னுடைய நூல்களை, கட்டுரைகளை வடிவமைத்துக் கொண்டார்.

அமெரிக்காவின் நார்மன் வின்சென்ட் பீல், நெப்போலியன் ஹில், டேல் கார்னிஜி போன்ற உளவியல் ஆசிரியர்களை விஞ்சுகிற அளவிற்குத் தமிழில் அவர் எழுதிய ‘தமிழகத்தின் கனிமவளம்’, ‘
உலகு சூழ பெருங்கடல்’, ‘
தமிழ் நாடு எங்கே செல்கிறது?’,
‘நீ தான் தம்பி அடுத்த முதலமைச்சர்!’, ‘உலகால் அறியப்படாத ரகசியம்!’, ‘பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?’,
‘வெற்றி மனோபாவம்’, ‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’,
‘மனம்’, ‘பிரார்த்தனை’, ‘மந்திரம்’, ‘ஆத்மதரிசனம்’, ‘
தட்டுங்கள் திறக்கப்படும்’, ‘
நாடு எங்கே செல்கிறது?’,
‘நெஞ்சமே அஞ்சாதே நீ!’, ‘எண்ணங்கள்’
மற்றும் ‘தலைவன்’

போன்ற 14 நூல்கள் அமைந்தன.

குறிப்பாக ‘எண்ணங்கள்’ என்னும் நூல் மட்டுமே 5 இலட்சம் படிகளுக்கும் மேல் அந்நாட்களில் விற்பனையானது என்பது வரலாறாகும்.

அதேபோல அவருடைய நூல் சென்னைப் பல்கலைக்கழகப் பாடநூலாகவே பரிந்துரைக்கபட்டது.

கல்லூரிக் காலத்தில் அவருடைய நூல்களைப் படிக்குமாறு அறிவுத்தீயினை அப்பா ஏற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய நூல்கள் எளிமையான தமிழ் நடையில் என் சிந்தனையில் புதுமையாக மாறியது.

பல பட்டிமன்றங்களிலும், கருத்தரங்குகளிலும் அப்பா அவருடைய நூற் கருத்துகளை மேற்கோளாகவே சொல்லி வந்தார்.

அங்ஙனம் 01.03.1989 அன்று என் கண்ணும், காதும் குறித்த கருத்துக் கோவையில் இடம்பெற்ற கருத்துக்கள் வருமாறு:-

“குறிக்கோள் என்பது வெறும் ஆசையல்ல; ஆசைக்கு மேல் அதில் நமக்கு ஈடுபாடு இருக்க வேண்டும்.

நம் குறிக்கோளை நாம் வடிவ ரூபத்தில் காண வேண்டும்.

உடலால் உணர வேண்டும். சுவைக்க வேண்டும். நுகர வேண்டும். நாம் அதனுடன் வாழவேண்டும்.

நீருக்குள் அழுத்தியவன் வெளியே வர எப்படித் துடிக்கின்றானோ அத்தகைய வேகம் நமக்கு வேண்டும். அத்தகைய துடிப்பைக் குறிக்கோள் அடையும்போது, எண்ணங்கள் சித்தியாக சாதனைகளாக மலர்கின்றன”.

அதே போல இன்னொரு இடத்தில்

“குடிப்பது கூழானாலும், பெருக்குவது தெருவானாலும் நாம் நமது எண்ணங்களால், மனோ நிலையால் நாம் அரசனாக உணரவேண்டும்.

நம் எண்ணம் மாறும் போது சூழ்நிலை மாறுகிறது.

நம் எண்ணம் உயரும் போது நம் சூழ்நிலை உயர்கிறது.

நாம் உயர்கிறோம்.

ஆகவே, இராஜ வேடம் போடுங்கள் – உங்களுக்குப் பிடித்த லட்சிய மனிதனை லட்சியத்தலைவனை மனத்தில் கொள்ளுங்கள்.

அதனால் வாழ்க்கையும் சூழ்நிலையும் நீங்கள் நினைப்பதுபோல் மாறுவதை உணர்வீர்கள்”.

“உலகிலுள்ள பல கவிஞர்களையும், ஓவியர்களையும், தத்துவ ஞானிகளையும் எடுத்துக்கொண்டால் கட்டுப்பாடு குறைந்தும், மனிதத்தன்மை மிகுந்தும், இளகிய மனோபாவம் நிறைந்தும் அதிகார மனோபாவம் குறைந்தும், புதிய உத்திகளில் அதிக ஈடுபாடு கொண்டும் எதைப் பற்றிப் பேசும் போதும் மாறுபட்ட கருத்துக்களுக்கு வரவேற்பளிக்கும் நிலையிலும் இவர்கள் நடந்து கொள்வார்கள்”.

“சொந்த பொருண்மையாயிருந்தால், நெருங்கிய நண்பர்களுடனும், பொதுத் தலைப்பானாலும் சிறந்த அறிஞர்களையும் கலந்து ஆலோசிப்பது நல்லது.

ஆங்கிலத்தின் இதைத்தான் Brainstorming என்பார்கள்”.

“மனநூலார் சொல்வது சில பொருண்மைகளை, இரண்டு நாளோ அல்லது இரண்டு வாரங்களோ ஊறப்போட்டுப் பிறகு அணுகுங்கள், ஆராயுங்கள் என்று”

“நல்ல புத்தகங்களின் கருத்துக்களில் மனத்தைத் தினந்தோறும் ஈடுபடுத்துவது நல்ல பழக்கம் என்னும் விதைகளை விதைப்பதற்கு ஒப்பாகும்”

“அழுகுரல் மனிதர்களைத் தவிர்ப்பது நலமாகும்; அவர்கள் நம் சக்தியை வடித்து விடுவார்கள்.

கிடைப்பதை விட்டு விட்டுக் கிடைக்காததை எண்ணிப் பொருமும் மனநிலை, காரியங்களை முடிக்காமல் பாதியில் விட்டுவிடும் அவ நம்பிக்கை, தாழ்வு மனப்பான்மை, கையாலாகாத்தனம், பிறர் என்ன சொல்வார்களோ என்று எதற்கும் அஞ்சும் பேதைமை, சென்றதை எண்ணிக்குமையும் சீரழிவு தன்னைத்தானே எதற்கும் நொந்துகொண்டு, தாழ்த்தும் எண்ணமாய், நம்பிக்கையாய், பழக்கமாய்ப் போய்விடும் மனிதர்களைத் தவிருங்கள்”.

“நூறாவது அடியில் தான் பாறை பிளந்தது.

ஆனால் எனக்குத் தெரியும்;

அதற்கு முன் அடித்த 99 சம்மட்டி அடிகள் தான் பாறை பிளப்பதற்குக் காரணமாக இருந்தது”

“மனிதனின் எதிரிகள் இரண்டு. ஒன்று பயம், மற்றது கவலை.

பயம் வலுப்படைந்த வியாதி.

கவலை மெல்ல அரிக்கும் நோய்”

“கவலைப்படுபவர்கள் பிறரது கவனத்திற்காக, பாதுகாப்புக்காக, அரவணைப்புக்காக ஏங்குகிறவர்கள்.

அமெரிக்காவில் 10,000 டன் ஆஸ்பிரின் தலைவலி மாத்திரை தயார் செய்வது என்றால், மனிதனின் கவலைகளின் அளவைப் புரிந்துகொள்ளலாம்.”

எந்தையார் அடிக்கடி சொல்வார், எனக்குப் பாராட்டுவது இயல்பான ஒரு செயலாகும்.

அதனை டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி,

“பாராட்டுவது ஒரு வளர்ந்த மனப் பண்பாகும், பிறரைப் பாராட்டும் போது நாம் உயர்கிறோம்.

பாராட்டப்படுபவர் உற்சாகத்தால் தன்னம்பிக்கை பெற்று மேலும் உயர்கிறார்”

என்று சொல்வது பெருமிதமான வரிகளாகும்.

எண்ணம்,
ஒரு விதை,
எண்ணங்களின் வலிமை, ஞானிகளின் எண்ண நிலை, எண்ணமும் இயங்கும் சக்தியும்,
நமது எண்ணங்கள் நமது கதிர்வீச்சு, இலட்சிய தீபம்,
எண்ணம் பெரும் வடிவம், சளைக்காத மனம்,

போன்ற எழிலார்ந்த தலைப்புகளில் பல நுட்பமான கட்டுரைகளை வடித்தவர்.

அவருடைய மக்கள் சக்தி இயக்கக் கூட்டங்களுக்கு திருமதி சாவித்திரி இராகவேந்திரா வாயிலாகச் சென்றுள்ளேன்.

என் மீதும், என் வளர்ச்சி மீதும் பரிவு காட்டிய பெருந்தகையாவார்.

தன் கடிதங்களில் சகபயணி என்றுதான் எழுதுவார்.

மக்கள் சக்தி கூட்டங்களில் யாருக்கும் மாலையிடும் வழக்கமில்லை.

யாரும் யாரையும் புகழ்ந்து அடைமொழிகள் கொண்டு பேசுவதில்லை.

‘நம்பு தம்பி நம்மால் முடியும்’ என்ற தன்முன்னேற்ற மாத இதழும் வந்தது.

அவரின் இலட்சிய வரிகளாக இம்மூன்று கட்டளைகள் மிளிர்ந்தன.

நாம் இந்த மண்ணிலே பிறந்ததிற்கு இந்த மண்ணிற்கு நல்லது செய்ய வேண்டும்.

நாம் இந்த மண்ணை விட்டுச் செல்லும் போது நல்ல அடையாளங்களை விட்டுச் செல்ல வேண்டும்.

நமக்கும், பிறருக்கும் இந்தச் சமுதாயத்திற்கு ஆன வாழ்க்கையை முழுமையான வாழ்க்கையாகும்.

அப்பா தொடங்கிய ‘செயல்’ அமைப்பு போலவே எனக்குத் தென்பட்டது.

ஆனாலும் மக்கள் வாக்கால் நிலைபெறவில்லை.

ஆனால் மக்களுக்குப் புதிய எண்ணங்களை அறிமுகப்படுத்திய மாபெரும் அறிஞராவார்.

விறுவிறுப்பான நடை,
எளிமையான தமிழ்,
தனிமனித, சமுதாய ஒழுக்கத்திற்கான தனித்த அடையாளம்,
நல் மாணவராக, அறிவியலில் முனைவர் பட்டம் பெற்று, உயர் கல்வியில் ஓங்கி சிறந்து,
தமிழகம் – அமெரிக்காவில் பேராசிரியராக,
தொழில் நிறுவனராக, எழுத்தாளராக,
மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனராக
வாழ்க்கை என்னும் வட்டத்தை மிகச் சரியாக வாழ்ந்து இலட்சக்கணக்கானோரைத் தொழில் நிறுவனர்களாக தன்னம்பிக்கையும், சமூக ஈடுபாடும் கொண்ட குடிமக்களாக மாற்றிச் செதுக்கிய பெருமகன் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியாவார்.

தமிழகத்தில் பல தொழிலதிபர்கள் இன்றும் தங்கள் தொழிலில் மானசீகமான ஒரு பங்குதாரர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி என்கிறார்கள்.

அதனால் தான் அவர் இன்றும் ஒளிச்சுடர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி என்று சொல்லி அவருடைய புகழ் ஓங்கி உயர்ந்து வளர்ந்து கலங்கரை விளக்கமாய் ஒளிர்கின்றது.

—–

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

மதுரைக்காஞ்சி

தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை, மாங்குடி மருதனார் பாடியது.

மதுரையின் பாடப்பெற்ற காஞ்சி என விரியும். ‘காஞ்சித்தினை’ என்பது, நிலையாமையைப் பற்றிக் கூறுவதுடன், நிலைபேற்றுச் செயல்கரளச் செய்யுமாறும் கூறுவது.

மதுரைக்காஞ்சியில் பாடப்பெற்ற அரசன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

இவன், புலமை மிக்கவனவாகவும் இருந்துள்ளான்.

புறநானூற்றில், 72ஆம் பாடலைப் பாடியவன் இவனே! இன்னொருவன், ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன்.

இவன், சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றவன், காலத்தால் முந்தையவன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே. இவனுடைய பண்புநலன்கள், கொடைச்சிறப்புகள் அனைத்தையும் மதுரைக்காஞ்சியின் மூலம் அறியலாம்.

பத்துப்பாட்டில், மதுரைக்காஞ்சியே நீண்டதாகும்.

இது, 782 அடிகளைக் கொண்டதென, முன்னுரையில் கண்டுள்ளோம்.

அதற்கேற்றவாறே, 24 அடிகளைக் கொண்ட இறுதிப்பகுதியைக் காண்போம்.

‘பல்சாலை முதுகுடுமியன்

நல்வேள்வித் துறைபோகிய

தொல்லாணை நல்லாசிரியர்

புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன் போல,

வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்

பலர்வாய்ப் புகரறு சிறப்பின் தோன்றி,

அரிய தந்து குடியகற்றி,

பெரியகற்று இசைவிளக்கி,

முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்,

பன்மீன் நடுவண் திங்கள் போலவும்,

பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கிப்

பொய்யா நல்லிசை நிறுத்த, புனைதார்ப்

பெரும்பெயர் மாறன் தலைவ னாகக்

கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்

இயல்நெறி மரபின்நின் வாய்மொழி கேட்பப்

பொலம்பூ ணைவ ருட்படப் புகழ்ந்த,

மறமிகு சிறப்பின் குறுநில மன்னர்

அவரும் பிறரும் துவன்றிப்

பொற்புவிளங்கு புகழவை நின்புகழ்ந் தேத்த,

இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய,

மணங்கமழ் தேறல் மடுப்ப, நாளும்

மகிழ்ந்தின் துறைமதி பெரும!

விரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே!

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போலவும், அவனைப் போலவே வேள்விகளில் கரைகண்ட, பழைய மரபின் சான்றோர் நட்புக்கொண்ட புகழ்மிகு சிறப்புடைய நிலந்தரு திருவில் பாண்டியனைப் போலவும், ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோரால் புகழப்பெற்றுச் சிறப்போடு விளங்குவாயாக!

அரும்பெரும் பொருள்களை எல்லாம் வேற்று நாடுகளிலிருந்து கொண்டுவந்து, நின் குடிமக்களுக்குத் தந்து, குடிகளை வளப்படுத்தி வாழ்வாயாக!

மழைநீர், ஊற்றுநீர், ஆற்றுநீராகிய முந்நீரின் நடுவினின்றும் தோன்றும் ஞாயிறு போலவும், விண்மீன் கூட்டத்து நடுவில் விளங்கும் நிறைமதி போலவும், பெருகிய சுற்றத்தாருடனும், சான்றோருடனும் இனிது விளங்கிப் புகழை நிலைநிறுத்தி வாழ்வாயாக!

மாலையணிந்தவனும், பெரும்பெயர் பெற்றவனுமாகிய மாறன் தலைவனாக, கோசர் முதலாக மற்றையோரும் நின் கட்டளைக்குக் கீழ்ப்படியவும், குறுநில மன்னர் நின்னைப் புகழ்ந்து துதிக்கவும், ஆபரணமணிந்த மகளிரெல்லாம், பொற்கலத்தில் ஏந்திய நறுந்தேனைச் சுவைக்கவும் நீ நாள்தோறும் மகிழ்ந்தினிது வாழ்வாயாக!

உனக்கென்று வரையறுத்துள்ள உலக முடிவுக்காலம் வரையிலும் வாழ்வாயாக!

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *