அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 73
எழுத்து மின்னல் இவர்தான் சுஜாதா
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
இளங்கலைத் தமிழிலக்கியம் இரண்டாமாண்டில் பயின்று கொண்டிருந்த போது அப்பா என்னைப் பார்த்து,
“இவருடைய நடை எனக்கு மாறுபட்ட தமிழ் நடையாகத் தெரிகிறது அருள். எதையும் புதிய நோக்காகக் கொண்டே எழுதுகிறார்.
புத்தாக்கத் தகவல்களை ஏராளமாகத் தாராளமாக வழங்குகிறார்.
நான் இதுவரை ‘மாருதி’ என்றால் சீருந்து என்றுதான் இருக்கும் என அறிந்திருந்தேன்.
ஆனால், ‘சுசிக்கி’ என்ற நிறுவனத் தயாரிப்பு என்று எழுத்தாளர் சுஜாதா (03.05.1935 – 27.02.2008) எழுதிக்காட்டிய பிறகுதான் நான் வியந்தேன்” என்று அப்பா பாராட்டினார்.
மாநிலக் கல்லூரியில் என் நண்பர் சிவகுமார் வாயிலாக எழுத்தாளர் சுஜாதா எழுதிய ,
விவாதங்கள் விமர்சனங்கள், நிறமற்ற வானவில்,
அடுத்த நூற்றாண்டு,
நடனமலர்,
வடிவங்கள்,
இருள் வரும் நேரம் ஓடாதே,
கனவுத் தொழிற்சாலை,
என் இனிய இயந்திரா,
மீண்டும் ஜூனோ,
விரும்பிச் சொன்ன பொய்கள், போன்ற பல புதினங்கள் / கட்டுரைகள் எனக்கு அறிமுகம் செய்து படிக்கச் சொன்னதால், அவர் எழுத்தின் விருப்ப வலையில் விழுந்தேன்.
எழுத்தாளர் சுஜாதாவின் கதை மாந்தர்களான வசந்த், கணேஷ் மீது அளவற்ற ஈடுபாடு கொண்டு அவர்களின் விவாதங்கள் உண்மையாகவே நம்மெதரில் நடப்பது போலக் கல்லூரிக் காலங்களில் பேசிக் காட்டியே மகிழ்ந்தேன்.
அந்நாட்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு வசந்த், கணேஷ் என்று பெயர் சூட்டுவது ஒரு மரபுத் தொடர்ச்சியாகவே இருந்ததைக் குறிப்பிட வேண்டும்.
எழுத்தாளர் சுஜாதாவின் புறநானூறு பொது உரையைப் படித்து அப்பாவும் இப்படி எழுதுவது புதுமை என்றும், புதிய சிந்தனைகள் இப்படித்தான் மலரவேண்டும் என்றும் பாராட்டியது குறிப்பிடத்தகுந்தது.
கணினிப் பொறிஞர் தமிழிலக்கியத்தில் இத்தகைய ஈடுபாட்டைக் கண்டு தமிழறிஞர்கள் பலர் அந்நாட்களில் எழுத்தாளர் சுஜாதாவை நேரில் பாராட்டவில்லை என்றாலும் அவருடைய நடையைப் பெரிதும் விரும்பிப் போற்றினார்கள்.
எழுத்தாளர் சுஜாதா தொடாத துறைகள் எதுவுமில்லை,
தொட்டது அனைத்தையும் பொன்னாகவே மிளிர வைத்த பெருமை அவரையே சாரும்.
அவருடைய எழுத்தாண்மை இலக்கியம், அறிவியல், நாடகம், திரைப்படம், விளையாட்டு, திறனாய்வு என அங்கிங்கெனாதபடி எங்கும் பொறி பறக்கச் செய்த வல்லமையை என்னென்று சொல்லி வியப்பது!
இயற்கையாகப் பிறரைப் பற்றி நுணுகித் தெரிவது என்பது பலருக்கு ஒரு பெரிய கனவாகும்.
அப்படிப்பட்ட கனவாக தெரிய விழைந்தது என்னவென்றால், இவர் எங்கும் எப்படி இவ்வளவு எளிமையாக விரைவாக எழுதி வெற்றி காண்கிறார் என்பதுதான் கேள்வியாகும்.
அதற்கு எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை சொன்னது மிக நுணுக்கமான செய்தியாகும்.
நான் எப்படி எழுதுகிறேன் என்பது பற்றிய விவரங்கள் எல்லாம் தேவையற்றவை என்றும், எழுதும் பொருள்களுக்குத் திட்டவட்டமாக எந்தக் கருத்தும் என்னிடம் இல்லையென்றும், எழுத்தாளர்கள் அனைவரும் நல்லவர்கள் என்றும் மிகத் தெளிவாக மனத்தில் பட்டதைச் சொன்ன பெருந்தகையாவார்.
எழுத்தாளர் சுஜாதா சரளமாகத் தன்னுடைய கட்டுரைகளையும், கதைகளையும் எழுதி வெற்றி கண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் தமிழில் எளிதாகப் படிக்க முடிவதற்கு வழிகாட்டியவர் ஆவார்.
அவர் எழுத்தைப் படித்த பிறகுதான் பல பெரியவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு ஏன் சுஜாதா மீது இவ்வளவு உந்து சக்தி ஏற்பட்டது என்று பாராட்டி அவருடைய அறிவாற்றலைப் புகழ்வார்கள்.
கணினி உலகிற்குச் சிவப்புக் கம்பள விரிப்பை முதன்முதலில் விரித்த பெருமையும் எழுத்தாளர் சுஜாதாவைத்தான் சாரும்.
கலைஞானி கமலஹாசன் முதல் காஞ்சியிலுள்ள குப்பன் வரை என்ன செய்கிறார்கள்?
என்ன படிக்கிறார்கள்?
எவ்வளவு புரிந்துள்ளார்கள்?
என்று தன்னுடைய வெற்றித் தொடர்கதைகளில் படம்போல விளக்கிக் காட்டிய பாங்கு பளபளப்பான தமிழ் நடையாகும்.
அவர் எழுத்தால் சாதிச் சண்டைகள் உருவாகி (கருப்பு வெள்ளை சிவப்பு, இரத்தம் ஒரே நிறம்) சில கதைகள் நிறுத்தப்பட வேண்டுமென்று இதழாசிரியர்கள் வலியுறுத்தினார்கள்.
ஒருமுறை அவரை நேரில் சந்தித்து நான் கேட்டேன்,
“எப்படி உங்களால் நடு இரவிலும் எழுத முடிகிறது?” என்று.
அதற்கு அவர் என்னை முதுகில் தட்டியபடி சொன்னார்.
“நான் படுத்திருக்கும் மெத்தைக்கு அருகிலேயே கணினி உள்ளது.
நான் கண்களை அதிகம் திறக்காமல் எழுந்துக் கணினியில் என் கதைகளைத் தட்டச்ச செய்வேன்.
நான் மீண்டும் வியந்து கேட்டேன், ‘அது எப்படி சாத்தியம்’ என்று.
பழக்கத்தினால் அது வழக்கமாகிவிட்டது.
கண்களை மூடியபடியே எவராலும் தட்டச்ச செய்ய முடியும். காரணம் அது ஒரு Blind Man Machine.
நம்மால் பொறிகளை அடக்க முடியும். பொறிகளால் மனிதனை அடக்க முடியாது என்பது என் கருத்தாகும்’ என்றார்.
1986-87-இல் சொன்ன அக்கருத்து மலைப்பாக என் நெஞ்சில் உறைந்தது.
எழுத்தாளர் சாவி அவர்களின் 75-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவின்போது தமிழில் கலைச்சொற்கள் வெளியிடுவது குறித்தும்,
தமிழகத்தில் வங்கி அமைப்பது தொடர்பாகவும்
நாட்டுப்புறப்பாடல்கள் திருட்டு தொடர்பாகவும்
உரையாற்றியதைப் பாராட்டி முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுத்தாளர் சுஜாதாவைப் பாராட்டி, அவரின் உரையின் நுணுக்கங்களைப் போற்றியது வரலாறாகும்.
அவருடைய எழுத்து நடை தனியான ஒருபாங்கில் எப்படி அமைந்துள்ளது என்பதை இத்தொடரில் பார்க்கலாம்.
மேலாளருக்கு அலுவலர் எழுதும் கடிதம் இக்கடிதத்தின் வாயிலாக நான் என் வேலையை ராஜினாமா செய்கிறேன்.
எனக்குச் சேர வேண்டிய சம்பளப் பாக்கியை, உங்களுக்குத் தெரிந்து யாராவது ஒருவர் உண்மை பேசி இருந்தால் அவருக்குக் கொடுக்கவும்.
அப்படி யாரும் இல்லையென்றால், அந்தப் பணத்தை மயிலாப்பூர் சாஸ்திரி ஹாலுக்கோ
அல்லது ஈழத் தமிழர்கள் நல்வாழ்வுக்கோ தந்துவிடுங்கள்’
என்று மிகத் துணிவாக வேறுபட்ட கோணத்தில் எழுதும் வல்லமை எழுத்தாளர் சுஜாதா மட்டுமே சாரும்.
எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய அறிவியல் நடையில் தான் மருத்துவமனையில் இருந்ததை விவரிக்கும் இவ்வரிகள் நமக்கு வலியை ஏற்படுத்தினாலும், அவ்வலியை எளிமையாக மறக்கக்கூடிய அளவுக்கு மருந்தாக அவரின் தொடர்கள் மின்னுகின்றன.
“எழுத்தாளர் சுஜாதாவின் சிறுநீரகம் பழுதடைந்தபோது இரவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
மேல்மூச்சு வாங்கும்போது ஏறக்குறைய சொர்க்கத்தில் கின்னரர் கிம்புருடர்கள், திருக்கண்டேன்;
பொன்மேனி கண்டேன்;
திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்
என்று பாடும் ஆழ்வார்கள் தெரிந்தார்கள்”
என்று நகைச்சுவையாக முடிந்தது.
குழந்தைத் தனமான இயல்புகள், மென்மையான சுபாவம், கூட்டங்களில் பேசக் கூச்சம், நாவல்கள் எழுதுவதற்காகவே பொருண்மைகளைத் தேடித் திரட்டி, பலரைச் சந்தித்து தகவல்களை உறுதிப்பட எழுத முற்பட்டது அவரின் எழுத்தின் பேரிலக்கணங்களாகும்.
எழுத்தாளர் சுஜாதாவின் புதினத்தைப் படித்துக் கொண்டிருந்த பொழுது போட்டியாக வகுப்பு மாணவர்கள் மத்தியில் எவ்வளவு ஆங்கிலச் சொற்களை அவர் கையாண்டிருக்கிறார் என்று பட்டியலிட்ட பொழுது, மலைப்பாகவே இருந்தது.
எழுத்தாளர் சுஜாதா ஒருவர் மட்டுமே ஆங்கிலம், தமிழ், அறிவியல், பக்திப் பாசுரம், நகைச்சுவை, அறிவுத்தேடல் உள்ளிட்ட அனைத்தையும் சாரமாக வடித்துக் காட்டும் பேராற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார்.
அவரால் தான் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு ‘கணையாழி’ இலக்கிய இதழ் அக்காலங்களில் அறிமுகமானது.
அவருடைய ‘கடைசிப் பக்கம்’ என்றென்றும் என் உள்ளத்தின் அழியாப் பக்கமாகும்.
தலைமைச் செயலகம் என்று அவர் தொடங்கிய மூளை இயல்பு நூல் நம் அருமைத் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு அவர்கள் தன் வழியில் எழுதிய, ‘மூளைக்குச் சுற்றுலா’ தமிழில் வெளிவந்த ஒப்பரிய கருவூலமாகும்.
அந்த நூல் வெளியிடப்பட்ட நாளிலேயே வரிசையில் நின்று ஆயிரம் பேருக்கு மேல் வாங்கியது ஒரு வரலாறாகும்.
——
பத்துப்பாட்டில் மனம் பற்றுக!
நெடுநல்வாடை
பாண்டியன் நெடுஞ்செழியனை, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
நெடுநல்வாடை என்பதற்கு, நெடிய நல்ல வாடைக்காற்று என்பது பொருள்.
வடக்கிலிருந்து வீசும் காற்று, வாடைக்காற்று,
இக்காற்று, மிக்கவே தண்மையானது.
பிரிந்த தலைவிக்குத் தீய வாடை, பிரிந்திருந்த தலைவனுக்கோ, போர்க்களத்தில் வெல்லும் நோக்குடைமையால், அவனுக்கு நல்ல வாடை.
நரைவிரா புற்ற நறுமென் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழிஇக்
குறியவு நெடியவு முரைபல பயிற்றி,
இன்னே வருகுவ ரின்றுணை யோரென,
உகந்தவை மொழியவு மொல்லாள் மிகக்கலுழ்ந்து,
நுண்சேறு வழித்த நோன்நிலைத் திரள்கால்
ஊறா வறுமுலை கொளீஇய கால்திருத்திப்
புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பி னாடுதலை யாக,
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய,
உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிதுயிரா
மாவித ழேந்திய மலிந்துவீ ழரிப்பனி
செவ்விரற் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப்
புலப்பொடு வதியு நலங்கிள ரரிவைக்கு,
இன்னா வரும்படர் தீர, விறல்தந்து,
இன்னே முடிகதி லம்ம!
தலைவனைப் பிரிந்த தலைவி, தனித்துயர் கொண்டுள்ளாள்.
அவளைச் சூழ்ந்துள்ள செவிலித்தாயர், சிறியனவும் பெரியளவுமான ஆறுதல் மொழிகளைக் கூறுகின்றனர்.
‘உன்னைப் பிரிந்து சென்ற தலைவர், நீ உள்ளம் மகிழுமாறு உடனே திரும்பிவிடுவார்’ என்றெல்லாம் கூறவும், தலைவி ஆறுதலடையாமல், மேலும் கலக்கமடைந்தாள்!
அவளின் அழகிய தோழியர், அவளை அமைதிப்படுத்த அவளின் வண்ணச் சீறடியை மெதுவாகத் தடவிக்கொடுத்தனர்.
விதானத்தில் தீட்டப்பட்டிருந்த பன்னிரண்டு இராசிகளில், சந்திரனோடுள்ள உரோகிணியைக் கண்டு, தானும் தலைவியைப் போலத் தன் தலைவனோடு உடனிருக்க இயலாமையை எண்ணிப் பெருமூச்சு விட்டு, துன்பக்கண்ணீர் விட்டுத் துடைத்துக்கொண்டதாகக் கூறினாள் ஒருத்தி.
அத்தகைய தலைவன், பாசறைப் பணியை முடித்துக்கொண்டு, விரைவில் திரும்பவேண்டும்.
‘மிகவாகிய துன்பம் நீங்கத் தலைவிக்கு ஆற்றலைத் தந்து, நலமாக முடிய வேண்டும் அம்மையே! எனத் துர்க்கையை வேண்டிக்கொண்டனர்.
8.குறிஞ்சிப்பாட்டு
ஆரிய மன்னன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்ததற்குக் கபிலர் பாடியது.
ஐவகை நிலங்களும், மலரும் பூக்களால் பெயர் பெற்றன.
அவை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன. இறுதியிலுள்ள பாலை என்பது, நிரந்தரப் பிரிவன்று, குறிஞ்சியும் முல்லையும் முதுவேனிற் பருவத்தில் வறண்டு, ‘பாலை’ எனப் பெயர் பெறும்.
குறிஞ்சி- மலையும் மலைசார்ந்த இடமும்
முல்லை- காடும் காடு சார்ந்த இடமும்
மருதம்- வயலும் வயல்சார்ந்த இடமும்
நெய்தல்-கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை-மணலும் மணல் சார்ந்த இடமும்
ஒவ்வொரு நிலத்துக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனவுண்டு.
குறிஞ்சிக்கு உரிப்பொருள், புணர்தலும், புணர்தல் நிமித்தமும். தமிழ் அறிவித்தல் என்பது,நிலவளத்தையும், மக்கள் நலத்தையும் கூறுவதாகும்.
குறிஞ்சித் திணைப் பாடல், தோழி, அறத்தொடு நிற்றல் துறை.
‘குறிஞ்சிக்குக் கபிலர்’ என்னும் சிறப்புண்டு.
சங்கத் தொகைநூல்களில், மிகுபாடல்களைப் பாடியவர் கபிலர்.
இந்நூலில் 99 வகையான மலர்களைப் பட்டியலிட்டுள்ளார் கபிலர்.
தோழி, செவிலித்தாயிடம் பேசுதல், தோழியின் சொல்வன்மை, தலைவி கூற்று, தலைவி தேம்புதல் ஆகியன எடுத்துக்கொண்ட பகுதி.
‘அன்னாய் வாழிவேண்டு அன்னை! ஒண்ணுதல்
ஒலிமென் கூந்தலென் தோழி மேனி
விறலிழை நெகிழ்ந்த வீருங் கடுநோய்
அகலு லாங்க ணறியுநர் வினாயும்,
பரவியுந் தொழுதும் விரவுமலர் தூயும்,
வேறுபல் லுருவின் கடவுட் பேணி,
நறையும் விரையு மோச்சியு மலவுற்று,
எய்யா மையலை நீயும் வருந்துதி!
நல்கவின் தொலையவும், நறுந்தோள் நெகிழவும்,
புள்பிற ரறியவும் புலம்புவந் தலைப்பவும்,
உள்கரந் துறையு முய்யா வரும்படர்
செப்பல் வன்மையின் செறித்துயான் கடவலின்,
முத்தினும் மணியினும் பொன்னிறு மத்துணை
நேர்வருங் குறைய கலங்கெடின் புணரும்
சால்பும் வியப்பு மியல்புங் குன்றின்,
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி யைவர்க்கு மந்நிலை
எளிய வென்னார் தொல்மருங் கறிஞர்,
மாதரும் மடனு மோராங்குத் தணப்ப,
நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி,
இருவே மாய்ந்த மன்ற லிதுவென
நாமறி வுறாலின் பழியுமுண்டோ?
ஆற்றின் வாரா ராயினு மாற்ற
ஏனை யுலகத்து மியைவதால் நமக்கென்ன
மானமர் நோக்கம் கலங்கிக் கையற்று,
ஆனாச் சிறுமைய ளிவளுந் தேம்பும்.’
தாயே வாழ்க! சொல்கிறேன் தாயே! கேட்பாயாக!
ஒளிவீசும் நெற்றியையும், கறுத்த மெல்லிய கூந்தலையும் என் தோழியின் உடலில் ஏற்பட்ட வேறுபாட்டையும், வளை கழன்றதால் உண்டான கைகளின் மெலிவையும் எண்ணினால், அவள் கடுமையான மனநோய்க்கு ஆளாகிவிட்டான் எனக் கருதலாம்.
அவளின் நிலையை நீயும் உற்றுநோக்கத் தொடங்கிவிட்டாய்.
அவள் அடைந்த நோயினை அறியக் குறி சொல்பவளையும், வெறியாடும் வேலனையும் கேட்டறியத் தொடங்கினாய்.
ஊரார் சிலர், தெய்வக்குற்றமாக இருக்கலாம் என்று சொன்னதற்காகவும் கடவுளைப் பாடியும், தொழுதும், மலர் தூவியும், அருச்சனை செய்தும், தூப தீபம் காட்டியும் வழிபட்டாய்.
அப்படியும் அவளின் நோயை அறிய முடியாமல் துன்புறுகிறாய்.
எனக்கும் காரணம் என்னவென்று தெரியவில்லை.
பின்னர் நெருங்கிக் கேட்டதும், அவர் சொன்ன சில செய்திகளைக் கூறுகிறேன்.
தாயே! கேட்பாயாக! முத்தும் மணியும் உள்ளிட்ட நவமணிகளையும் கொண்டு செய்த அணிகலன் பழுதானால், அதைச் சரிப்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால், பெற்ற பெருமையையும் , உற்ற நற்பண்பையும், கற்ற நல்லொழுக்கத்தையும் ஒரு சிறிது இழப்பினும், ஏற்படும் பழியைத் துடைத்து, முன்னிருந்து பெற்றதையும், உற்றதையும், கற்றதையும் மீளவும் பெறவியலா.
இந்நிலையானது ஏனையோர்க்கன்றி, அறவோராகிய அந்தணர்க்கும் அரிதாகும். இதுவோ சான்றோர் கூற்றாகும்.
என்னிடம் தலைவி கூறினாள்,
‘என் தந்தையின் காவலை மீறி, தலைவனொடு ஆராய்ந்து மேற்கொண்ட மணம் இதுவெனத் தாயுள்ளிட்ட ஏனையோர்க்கும் சொல்வதால், ஏதேனும் தவறுமுண்டோ?
அப்படிச் செய்தல், பண்பாடு கெடாமல் காப்பதுமாகும். அவ்வாறு சொன்னபிறகு, தலைவர் நம்மோடு பொருந்தவாராராயின், இவ்வருத்தத்தைப் பொறுத்திருப்போம், மறுமையிலாவது இணைவோம்’ என்று சொல்லித் தலைவி, செய்வதறியாமல் ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment