POST: 2021-09-19T12:39:07+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 76

நூல்களால் உலகளந்த நுண்மை

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

மாநிலக் கல்லூரியில் இளங்கலை பயின்ற போது, பல நூல்களையும், நூலாசிரியர்களையும் அப்பா அறிமுகம் செய்த வண்ணமிருந்தார்.

இட்லரின் ஆங்கில நூலான “மெயின் கேம்ப்” படிக்குமாறு நண்பர் சிவகுமார் தூண்டிப் படிக்க வைத்தார்.

அந்நூல் மிகப் பெரிய நூலாகவும், கையாண்ட ஆங்கிலச் சொற்கள் இனிமையாகவும் ,சில சொற்கள் பொருள் புரியாத நிலையில் அவற்றையெல்லாம் குறித்து வைத்து

அப்பாவிடம் ஐயம் கேட்டபொழுது அகராதியை எப்படிக் கையாள்வது என்ற நுணுக்கத்தைச் சொல்லிக் காட்டினார்.

எந்த நூல் படித்தாலும் பேனா, அகராதி, குறிப்பேடு அப்பாவின் அருகில் இருக்கும்.

நூலில் பல இடங்களில் அப்பா கோடு கிழிப்பதும், புரியாத சொல்லைச் சுழித்து வைத்து அகராதியின் துணைக்கொண்டு பொருள் பார்ப்பதும், கையேடுகளில் பல குறிப்புகளை எழுதி வைப்பதும் நீண்ட நிதியமாக வளர்த்திருந்தார்.

பல்லாண்டுகளுக்கு முன்பு அப்பா எழுதிய அருங்குறிப்பு கையேடுகளை முன்னாள் அமைச்சரும், அப்பாவின் நெருங்கிய மாணவருமான டாக்டர் கா. காளிமுத்து தனக்கு வேண்டும் என்று உரிமையாக எடுத்துச் சென்றது என் நினைவில் உள்ளது.

நூல்கள் மட்டுமல்ல அப்பா தான் படிக்கும் ஆங்கில இதழ்களான இந்து, ரீடர்ஸ் டைஜஸ்டு போன்றவற்றிலும் பேனாவில் அடிக்கோடிட்டு இருப்பதை நானறிவேன்.

இட்லரின் ஆங்கில நூலுக்குப் பிறகு என்னிடம் அப்பா அறிஞர் வெ. சாமிநாத சர்மா எழுதிக்குவித்த ஆங்கில நூல்களின் மொழியாக்கங்களைப் படித்துப்பார், எவ்வளவு எளிமையாக உலக அறிஞர்களின் கருத்துகளைத் துண்டுத் தொடர்களாகத் தமிழில் எழுதியுள்ளதைப் படிக்கச் சொன்னார்.

அறிஞர் சாமிநாத சர்மா எழுதிய இட்லர், ரூசோ, காரல்மார்க்ஸ், முசோலினி, மாஜினி, சன்யாட்சென் நூல்கள் மட்டுமன்றி உலக நாடுகளான பாலஸ்தீனம், செக்கோஸ்லோவேகியா பற்றிய அரிய குறிப்புகளான நூல்களும் எங்கள் இல்ல நூலகத்தில் சிறப்பிடம் பெற்றிருந்தது கண்டு மலைத்தேன்.

தன்னுடைய 83 ஆண்டு வாழ்க்கையில் அரிய எண்பது நூல்களுக்கு மேல் எழுதிக் குவித்த பெருமை அறிஞர் சாமிநாத சர்மா அவர்களைச் சாரும்.

அவர் எழுதுவது நாவல்களைப் போன்றதல்ல; அவரது படைப்புகள் ஏராளமான வரலாற்று அறிவியல் நூல்களைத் தமிழுக்குத் தந்தது தான் அவருடைய பெருஞ் சிறப்பாகும்.

சார்லஸ் டார்வின், ஐசக் நியூட்டன், தாமஸ் எடிசன், ஜகதீச சந்திரபோஸ், சர்.சி.வி.இராமன் என்ற நுட்பமான நூல்களும் குறிப்பிடத் தக்கன.

எழுத்தாளர், பேராசிரியர் கல்கி அடிக்கடி குறிப்பிடுவது

“நான் எழுதும் பேனா கட்டையில் ஸ்டீல் நிப்பைப் பொருத்தி நூல் கயிறு போட்டுக் கட்டி மையில் தோய்த்து எழுதும் கலையை அறிஞர் சாமிநாத சர்மாவிடம் தான் கற்றேன் என்பார்.

03.09.1986 ஆம் ஆண்டு என்னுடைய கண்ணும் காதும் பதித்த கருத்துக்கோவையில் குறித்த பகுதிகளுள் சாமிநாத சர்மா கூறியதை எழுதி வைத்தேன்.

சாக்ரடீஸ் எதைப் பற்றியும் ஒன்றும் எழுதிவைத்துவிட்டுப் போகவில்லை; ஆனால் அவர் ஒரு சிந்தனை உலைக் களம்.

அதிலிருந்து மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பொருண்மைகளும் உருவாயின.

அவர் மேடைப் பேச்சாளரன்று; ஆனால் அவரின் பேச்சைக் கேட்க எப்பொழுதும் மக்கள் கூடுவார்கள்.

அவர் அரசியல்வாதியல்ல; ஆனால் பண்பட்ட திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளார்.

அவருடைய வாழ்க்கையின் பெரும்பகுதி வாதம் செய்தே உண்மை காணும் முயற்சியில் ஈடுபடுவதாகும்.

வரலாற்று நாயகர்களைப் படர்க்கை ஒருமையில் அழைப்பதற்கு வ.வே.சு. ஐயரைப் பின்பற்றியதாகவும், இப்படி அழைப்பதே கம்பீரமாகவும் சரித்திர நாயகனுக்குப் பெருமையைத் தருவதாகவும் இருக்கிறதென்பது என் கருத்து என்றார் சாமிநாத சர்மா.

அதேபோல காரல்மார்க்ஸ் வெளிப்பார்வைக்குக் கருணையற்றவராகக் காணப்பட்டாலும் அவர் வகுத்த சமதர்மத் தத்துவம் மானிடச் சமுதாயத்தின் மீது அவருக்கிருந்த அபாரக் கருணையை அடிநாதமாகக் கொண்டது;

அவர் வெறும் அறிவினால் மட்டும் சமுதாய சேவை செய்ய முன்வரவில்லை;

அவர் தன் அறிவை உணர்ச்சியோடு மிதக்க விடாமல் உழைப்போடு ஒன்றுபடுத்தினார்.

அவருடைய பேச்சு சொல்லடுக்கல்ல, எண்ணத்தின் ஓசை;

அதில் அழகு இராது; ஆழமிருக்கும். அது யாருக்கும் உற்சாகத்தினை உண்டு பண்ணாது;
ஆனால் யாருடைய சிந்தனையையும் தூண்டிவிடும்.

இங்ஙனமே காரல் மார்க்சின் எழுத்துக்களும் பொருள் புதைந்த சுரங்கமாகும்.

அறிஞர் சாமிநாத சர்மாவின் தமிழ் நடையை முதன்முறையாகத் தமிழ் உரைநடை வரலாற்றில் ஆய்வு செய்தவர் அறிஞர் மு. அருணாசலம் அவர்களாவார்.

1945 இல் வெளிவந்த அவருடைய இன்றைய தமிழ் வசன நடையில் உள்ள சாமிநாத சர்மாவின் தமிழ் நடையைப் பற்றிய மதிப்புரை போற்றத்தக்கது.

ஆசிரியர் சர்மா சுற்றி வளைத்துப் பேசாமல் எடுத்த எடுப்பில் நேராக மூலப்பொருண்மைக்கு போய்விடுகிறார்.

இவருடைய நடை எளிய நடை.

ஆனால் ஆசிரியர் கொஞ்சம் அழகுபடுத்துவதால் நடையில் ஒரு தனிக் கவர்ச்சி இருக்கிறது.

சோர்வின்றித் தொடர்ந்து படிக்க இயலும்.

இவர் எழுதும் பாணியை எழுத்தாளர்கள் கற்றுக் கொண்டால் எவ்வளவோ நன்மை உண்டு.

அவருடைய தோற்றத்தில் காணப்பெறும் மென்மை, இனிமை, ஆரவாரமின்மை, எளிமை, சிந்தனை, ஆழம் முதலானவையும் அவருடைய தமிழ் நடையிலும் காணப்படும்.

அவருடைய தெள்ளிய தமிழ் நடையே ஓர் இலக்கியத் தொண்டு.

1939-இல் தத்துவ மேதை டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் காந்தியடிகளைப் பற்றிய அறுபத்து மூன்று உலக அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஆங்கில நூலை வெளியிட்டார்.

அந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் சாமிநாத சர்மா.

மொழிபெயர்த்த வாய்ப்பைப் பின்வருமாறு வரைந்த குறிப்பைக் காணலாம்.

இவ்வாய்ப்பு என் அறிவின் ஒரு முத்திரை,
என் ஆத்மாவின் ஓர் அசைவு,
என் வளர்ச்சியில் ஒரு படி,
மேலும் காந்தி அடிகள்
பழமையின் பிரதிநிதி; புதுமையின் சங்க நாதம்; இயற்கையின் தொண்டர்; செயற்கையின் எஜமானர்; தாழ்ந்தவர்களுக்குச் சுமைதாங்கி; வாழ்கிறவர்களுக்குக் கலங்கரை விளக்கம்.

”பிளேட்டோவின் அரசியல்” என்னும் நூல் அறிஞர் சாமிநாத சர்மாவின் (17.09.1895 – 07.01.1978) மொழிபெயர்ப்பு நூல்களுள் சிகரமாகும்.

———————————————————
‘கரந்தை தமிழ்ச்சங்கம் தோற்றுவித்த உமாமகேசுவரன் பிள்ளை’
தன்னலங் கருதாப் பொதுநலத் தொண்டராய்த்
தமிழ்ப்புல வோர்கள் தம்பெருங் தோழராய்
எண்ணில் சிறார்க்குக் கண்ணருள் அன்னையாய்
உடல்பொருள் உயிரெலாம் உரிமை யாக்கித்
தமிழ்த்தொண் டாற்றிய கரந்தை சங்கத் தலைவர்

செந்தமிழ்ப் புரவலர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் 07.05.1883 அன்று, தஞ்சை மாவட்டம் கருந்திட்டகுடி என்று அழைக்கப்படும் கரந்தையில் வேம்பப்பிள்ளை, காமாட்சி இணையருக்குப் பிறந்தவர்.

12 ஆவது வயதில் தனது அன்னையை இழந்தார்.

சிற்றன்னை பெரியநாயகத்தம்மையார் வளர்ப்புப் பிள்ளையானார்.

தனது 25-ஆம் வயதில் 07.02.1907 அன்று உலகநாயகி என்னும் அம்மையாரை மணந்தார்.

தஞ்சையில் இளங்கலைப் பட்டம், சென்னையில் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார்.

தஞ்சை மாவட்டக் கழகத்தில் முதல் அலுவல் சாராத தலைவரானார்.

அப்போது ஆலங்குடியில் 50 சிறு மேம்பாலம், ஆலங்குடி, கண்டியூர் சாலைகளைப் புதியதாக அமைத்தார்.

170 புதிய பள்ளிகளை உருவாக்கினார்.

1911-ஆம் ஆண்டு ‘மே’ திங்கள் 14-ஆம் நாளில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்து அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார்.

1919-ஆம் ஆண்டு தமிழ் மொழியைச் செம்மொழியாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதன்முதலில் கொண்டு வந்தார்.

1922-ஆம் ஆண்டு தமிழுக்குத் தனியாகப் பல்கலைக்கழக வேண்டும் என்ற தீர்மானத்தை முதன்முதலில் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

1937 ஆம் ஆண்டு இராஜாஜி அவர்களால் இந்தியைக் கட்டாயமாகத் திணித்த போது கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் முதன்முதலில் கண்டனத் தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியவர்.

அதன் பிறகு தான் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி கண்டது.

பிறகு பல இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன.

1915-ஆம் ஆண்டு முதன்முதலில் கட்டணமில்லா நூலகம் கொண்டு வந்தார்.

இன்றும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் அங்கே இருக்கின்றன.

06.10.1916-ஆம் நாளன்று கரந்தைத்தமிழ்ச்சங்கத்தின் சார்பில் செந்தமிழ் கைத்தொழில் கல்லூரியை முதன்முதலில் தொடங்கினார்.

நீராரும் கடலுடுத்த என்று தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதன்முதலில் இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர்.

அரசு கோப்புகளில் தமிழில் பதிவு செய்யவேண்டும் என்ற கொள்கையை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியவர்.

அரசு கோப்புகளில் பெயருக்கு முன்னால் திரு./திருவாட்டி என்ற சொல்லைக் கொண்டு வந்து நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியவர்.

தென்னிந்திய நல உரிமைக்கழகம் (நீதிக் கட்சி) ஆரம்பித்த போது தென் மாவட்டங்களில் முதல் தலைவர்.

உமா மகேசுவரன், துணைத்தலைவர்
சர்.எ.டி பன்னீர் செல்வம்.

சர்.எ.டி.பன்னீர் செல்வமும்,உமா மகேசுவரன் அவர்களும் இணை பிரியா நண்பர்கள்.

எல்லோரும் இவர்கள் இருவரையும் இரட்டையர்கள் என்றே அழைத்து வந்தார்கள்.

தமிழ் இலக்கியத்திற்கு அளப்பரிய தொண்டு செய்தனர்.

இரவீந்திரநாத் தாகூர் உருவாக்கிய சாந்திநிகேதனைப் போல் கரந்தை தமிழ்ச்சங்கத்தை உருவாக்க முயற்சிகள் செய்தார்.

நாம் அன்றாடம் பேசும் மொழி தானே தமிழ் என்ற நினைப்பு தவறாகப் படிந்துவிட்டன.

அது மட்டுமில்லாமல் வட்டார வழக்கு, கொச்சை வழக்கு பிழையான சொல்லாட்சி இவையும் தமிழில் தானே அடங்குகிறது.

“தமிழா நீ பேசுவது தமிழா” என்று மனம் வெந்து கவிஞர் காசி ஆனந்தன் பாடியதும் நினைப்பதற்குரியது.

தாய் மொழியில் கற்கலாம்.

எப்படியோ அரைகுறை ஆங்கிலத்தில் பிறகு உயர் அலுவல்கள் பெற்று விடுகிறார்கள்.

இலங்கை என்று ஒருமுறை எழுதியிருந்த போது ‘ஸ்ரீலங்கா தான் தமிழ்’ என்று பெரிய அலுவலர் கூறினாராம்.

அப்படியே வேதாசலம் என்ற பெயரை மாற்றிக் கொண்டதைப் பழித்து மரஞ்செடி கோடி என்று ஏளனம் செய்தனர்.

அதற்கு நேர் எதிராக வெள்ளியங்கிரி என்ற பெயரை இரசிதாசலம் என்று ஒருவர் மாற்றினார்!

ஏன் என்று கேட்க யாரும் இல்லாத நிலையில்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோள்தட்டி வடிவம் பெற்றது.

திருச்சி வானொலி நிலையத்தில் 1941 ஆம் ஆண்டு “எது தமிழ்” என்ற தலைப்பில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. பேச்சு ஒளிபரப்பானது.

இந்தப் பேச்சுக்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் கண்டனம் தெரிவித்தார்.

“சோறு தின்றாயா” என்பது தமிழல்லவென்றும் ‘போஜனம்’, ‘நிவேதனம்’, ‘பிக்ஷை’ ஆயிற்றா? என்பதே தமிழ் மரபு என்று ஐயர் சொல்வது பெருவியப்பைத் தருகிறது.

இக்கூற்றிலிருந்து தமிழ் மொழியில் ஐயருக்குப் பற்று இல்லை என்பதும் வடமொழியில் பற்று மிக்குளதென்பதும் வெளிப்படையாகப் புலப்படுகின்றன.

வடமொழி சொற்களைத் தமிழ் என்று சொல்வதால் பதறிப்போனேன்.

வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் பட்டியலிட்டு இது வயது மூப்பால் வந்த நினைவு மறதி ஐயருக்கு என்று அழுத்தமாகக் கூறினார் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.

தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தையின் தன்நேரில்லாத தமிழ்த்தலைவராகத் திகழ்ந்தவர்.

கரந்தையைத் தோற்றுவித்து வளர்த்த தலைவரிடம் சேர்ந்த போது என்னுடைய பாட்டனார் ஒளவை துரைசாமி இருபது வயது இளைஞராய் இருந்தபோதே தென்னார்காட்டிலிந்து வந்த சிறுவன் என்று அரவணைத்துத் தமிழ்ப்புலமை பெறத் துணை நின்றவர் ஆவார்.

கரந்தை கவியரசுப் புலவர் சிவ குப்புசாமி, சாமி சிதம்பரனார் உடனிருந்து வித்துவான் பட்டம் எய்தி, சங்க நூல்களுக்கு உரை எழுதும் ஊக்கம் தாத்தா பெற்றார்.

இப்புலமை வளமே, அகநானூற்றுக்கு உரையெழுதிய கரந்தை கவியரசுக்குத் துணை நின்று முதலில் ஐங்குறு நூற்றுக்கு உரை எழுதத் தொடங்கினார்.

தமிழவேள் உமாமகேசுவரனார், சர். ஏ.டி. பன்னீர் செல்வமும் தூண்களாக நின்று ஐங்குறுநூற்று உரை எழுதும் உரிமைக்கு டாக்டர். உ.வே.சா. தடை வழக்கிட்டப்போது, அதனைத் தகர்த்த பெருமையும் இவர்கள் இருவரையே சாரும்!

சரயு ஆற்றங்கரையில் தமிழவேள் தண்டமிழாசானாகிய தம் வாழ்வை (09.05.1941) முடித்துக்கொண்டார்.

அந்நாள் ஒரு வெள்ளிக் கிழமையாகும்.

அந்நாள் முதல் என் பாட்டனார் ஒளவை துரைசாமி உயிர் நீங்கும் வரை (03.04.1981) உணவை நீத்து உண்ணா நோன்பு ஏற்றதாக என் பாட்டியார் உலகாம்பாள் கூடல் மாநகரில் நினைந்து நெகிழ்ந்து கூறினார்கள்.

ஆக இதனை நாற்பதாண்டு விரதம் எனலாம்!

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

Dr.n.arul@gmail. Com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *