POST: 2021-10-02T10:59:03+05:30

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

மொழிபெயர்ப்பு நாள் – 30-09-2021,வியாழக்கிழமை முற்பகல் 12.30 மணி

மொழிபெயர்ப்பு இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்களின் நோக்குரை:-

“இளமைக்கு இளமையும், திறமைக்குத் திறமையும் புலமைக்குப் புலமையும்
வாய்ந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பெருந்தகை அவர்களே!

நிறுவனத்தைச் சார்ந்த பேராசிரியப் பெருமக்களே!

மாணவச் செல்வங்களே!

வணக்கம்.

நிறுவனத்தின் உதவி இயக்குநர் கோபி என்னை அழைத்து மொழிபெயர்ப்பு நாளன்று (30.09.2021) என்ன தலைப்பில் பேசுவீர்கள் என்று வினவியபோது

, ‘மொழியாக்க வானம்’ என்ற தலைப்பில் பேசலாம் என்று சொன்னவுடன் அவர் ஒரு நிமிடம் அமைதியாக இருந்து விட்டுத் தலைப்பை வேண்டுமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? என்று கேட்டபோது,

‘வேண்டாம் கோபி, மொழியாக்க வானம் என்பதே சரியான தலைப்பு’ என்றேன்.

தமிழ் வளர்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் திரு சரவணன் இ.ஆ.ப , ‘விமான விண்வெளிப் பொறியாளர்’ என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

அவர் தலைமை தாங்கும்போது மொழியாக்க வானம் என்ற தலைப்பு பொருத்தம்தானே!

‘நிலம் அளவில் பெரியது.
நீர் தண்மையானது,
தீ உடனே படர்வது,
வளி நிலையில்லாது வீசுவது,
வான் எல்லையில்லாதது.

வானத்தின் அமைப்பு முறை எல்லையில்லாத ஆய்வுக்குரியது.

வானத்தின் நீளத்தை வட்டிலில் கொண்டு வர முயல்வது தான் மொழிபெயர்ப்பாகும்.

இன்று, உலக மொழிபெயர்ப்பு நன்னாளாகும்.

மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பொன்னாளாகும்.

விவிலிய மொழிபெயர்ப்பாளர் அருட்தந்தை ஜெரோம் நினைவாகப் பன்னாட்டு மொழிபெயர்ப்பு அமைப்பால் உலக மொழிபெயர்ப்பு நன்னாள் 1953-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பு நன்னாளினை 2013-ஆம் ஆண்டு முதல் தவறாமல், நடத்தி வருவது பாராட்டுக்குரிய செயலாகும்.

மொழிபெயர்ப்புத் தான் எந்த மொழியின் இலக்கிய வளர்ச்சிக்குத் தூண்டுகோல் -உலகப் பண்பாட்டு ஒருமைக்கு ஊன்றுகோல் எனலாம்.

மொழிபெயர்ப்பின் வரையறையும் அளவில்லாதது.

Nothing moves without translation, அவனின்றி அணுவும் அசையாது என்பது போல அறிஞர் Bates கூறினார்.

எதையும் மொழிபெயர்க்க முடியாது என்று எழுதத் தொடங்கிய பின்னர், எதனையும் மொழிபெயர்க்கலாம் என்று அவரே முடிவில் கூறினார்.

ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாறி வருவதை ஆங்கிலத்தில் approximation is translation என்று கூறுவார்கள்.

அன்றாடச் செய்தி மொழிபெயர்ப்பு, தொழில் நுணுக்கப் பாடநூல் மொழிபெயர்ப்பு,
காவிய மொழிபெயர்ப்பு
என்று மூன்று பிரிவுகள் உள்ளன.

இருமொழிப் பயிற்சி எளிதானது இல்லை.

மூல மொழியில் தேர்ச்சி 40 விழுக்காடு என்றும் – பெயர்ப்பு மொழியில் தேர்ச்சி 60 விழுக்காடு என்று வேண்டுமானால் ஒரு கணக்கிடலாம்.

நாங்களெல்லாம் விரைவு மொழிபெயர்ப்பாளர்களாவோம்.

தலைமைச் செயலகத்தைச் சார்ந்த பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்படும் அரசாணை, அறிவிக்கை, சுற்றோட்டக்குறிப்பு, கடிதங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் உடனுக்குடன் மொழியாக்கம் செய்து வருகிறோம்.

தலைமைச் செயலாளரின் அறிவுரைக்கிணங்க, தலைமைச் செயலகத்தில் வெளியிடப்படும் அரசாணைகள் அனைத்தும் தமிழிலேயே அமைவதை உறுதி செய்யும் வகையில் மொழிபெயர்ப்புப்பணி நிகழ்கிறது.

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 16 உதவிப் பிரிவு அலுவலர்கள் தேர்வு 2013-ஆம் ஆண்டு நடைபெற்று அதில் தேர்ச்சிப் பெற்று தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றுபவர்களில் ஒருவர்கூட இளங்கலை தமிழிலக்கியம் பயின்றவர்கள் இல்லை.

இதே நிலை தான் 2020-இல் தேர்விலும் நீடித்தது.

பெரும்பாலும், அறிவியல் மாணவர்கள்தான் மொழிபெயர்ப்பில் தேறியுள்ளனர்.

ஆக, இருமொழிப் பாடங்களில் இணைந்த மொழிபெயர்ப்பு இளங்கலை, முதுகலை பட்டமாக தமிழ் முதுகலை போல மொழிபெயர்ப்பு முதுகலை என்று அமைக்கலாம்.

13-ஆம் நூற்றாண்டு வரை வந்த உலக இலக்கியங்களை மொழிபெயர்த்ததால் தான் பிரெஞ்சு மொழி வளமடைந்தது என்பர்.

எழுத்தாளர் பாமா எழுதிய ‘கருக்கு’ 1991-இல் வெளியிடப்பட்டது.

2000 ஆண்டுக்குப் பிறகுதான் இலட்சுமி ஆம்ஸ்ட்ரோம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிறகுதான், அப்படைப்புக்கு பல விருதுகள் கிடைக்கப்பெற்றன.

சென்னையைச் சார்ந்த கல்வி நிறுவனம் ஒன்று, 1992-ஆம் ஆண்டில் 50 இலட்ச ரூபாய் மதிப்பிற்கு 50 புதினங்களை மொழியாக்கம் செய்யத் திட்டமிட்டு, 8 ஆண்டுகளில் 37 புதினங்கள் பல்வேறு இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன.

2003-ஆம் ஆண்டில் கவிப்பேரரசு வைரமுத்து படைத்த ‘கள்ளிக்காட்டு இதிகாசத்’தை சாகித்ய அகாதெமி 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கவிருக்கிறோம் என்று அறிவித்து இதுகாறும் நான்கு இந்திய மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது.

திருக்குறளைச் சீன மொழியில் கவிஞர் யூஷி மொழிபெயர்த்த பொழுது,

அவரிடம் கள்ளுண்ணாமை,
புலால் மறுத்தல், சூது
போன்ற அதிகாரங்களிலுள்ள திருக்குறட்பாக்களைப் பற்றி தாய்வான் நாட்டில் நான் விளக்கிய பொழுது,

அவர் அக்குறட்பாக்களையெல்லாம் சீனமொழியில் மொழிபெயர்த்தாலும் அதன் கருப்பொருளை அவர் ஏற்க மறுத்தார்.

காரணம் புலால் நாள்தோறும் உண்பதும், மது அருந்துவதும் எங்களுக்கு அன்றாடப் பழக்கம் என்ற சொல்லி, சீனர்கள் செல்வப் பெருக்கில் சூதாட்டத்தில் தான் விஞ்சி நிற்பதும், உலகமெல்லாமுள்ள பல casinos (களியாட்டங்களில்) உரிமையாளர்கள் சீனர்கள்தான் என்று சொல்லி விளக்கினார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, கவிஞர் யூஷி, சைவ உணவை மட்டுமே உட்கொள்பவராக மாறிய போது,

திருக்குறளை மொழிபெயர்த்த சிறப்பால் மாறி விட்டீர்களா என்ற நான் வினவியபொழுது சிரித்துக் கொண்டே,

‘பௌத்த கொள்கையின் முதிர்ச்சியால்தான் மாறினேன்’ என்று பதிலுரைத்தார்.

ஆக நண்பர்களே !

மொழியாக்கம் என்பது மொழி இலக்கியங்களை மட்டும் மொழிபெயர்ப்பதல்ல.

மொழிபெயர்ப்பாளர்கள் அந்தந்த நாட்டின் பண்பாட்டை ,புவியியல் அமைப்பை, இயற்கை வளக் காட்சியமைப்பை அறிந்து தெரிந்து, புரிந்து மொழியாக்கம் செய்ய முற்பட வேண்டும்.

இல்லையென்றால், பாவேந்தர் எழுதிய ‘மாந்தோப்பில் மணம்’ என்ற கவிதையினை மாந்தோப்பில் நடந்த காதல் திருமணம் என்ற பொருள் புரியாமல், the fragrance in the mango-grove என்று பொருள் மாறி மொழிபெயர்த்து விட்டோம்.

அதே போல ‘முட்டுவன் கொல்’ என்ற சங்க இலக்கியப் பாடலை மொழியாக்கம் செய்யும் பொழுது, தலைவி தலைவன் வரவில்லையே என்ன செய்வேன், ஆ, ஓ, என்று கதறிய நிலையை ‘shall I charge like a bull’ என்று அந்த தலைவியின் ஏக்கம் புரியாமல் பிழையாக மொழியாக்கம் செய்யப்பட்டது.

அது ‘Shall I strike my head’ என்று அமைத்திருக்க வேண்டும்.

தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் பேராசிரியர் இலக்குவனார் மொழிபெயர்த்தபொழுது

பேரறிஞர் அண்ணா, ஆங்கிலத்தில் முன்னுரை வழங்கினார்.

அந்த முன்னுரையில் ஓரிடத்திலும், மொழிபெயர்த்த ஆங்கில நூற்பா ஒன்றைக்கூட மேற்கோளாக எழுதாமல்,

It is not for me to enumerate the various aspects to be found in this work, nor is it possible to express fully our feelings of appreciation in a cursory way

என்று எழுதிக் காட்டியதன் வாயிலாக அவ்வளவு எளிதில்லை ஒருபெயர்ப்பினைப் பாராட்டுவது என்று உணர்த்தினார்.

இயக்குநர் பெருந்தகை அவர்களே,

மொழியாக்கம் செய்யும் ஒரு பக்கத்திற்கு ரூ.30 மொழியாக்கக் கட்டணம் என்று தமிழ் வளர்ச்சித் துறை வரையறுத்துள்ளது.

உங்கள் சீரிய தலைமையில் இக்கட்டணத்தை மாற்றி மொழிபெயர்ப்பாளர்களுக்கு மேலும் ஏற்றம் தர வேண்டும் என்பது மொழிபெயர்ப்பாளர்களின் விழைவாகும்.

அதனை இந்நன்னாளில் நீங்கள் கனிவுடன் கருத வேண்டும் என வேண்டுகிறேன்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சீரும் சிறப்பும் வாய்ந்த நிறுவனம் ஆகும்.

தங்கள் நிறுவனம் வாயிலாக பதிணென்கீழ்க்கணக்கு நூல்களை பிரெஞ்சு, செருமானியம், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்.

அப்போது மொழிபெயர்ப்பாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையைத்தான் ‘கீழடி’ தகவல் ஏட்டினை உலகமொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யும் போது தொல்லியல் துறையினர் அளவுகோலாக அமைத்துக் கொண்டார்கள்.

என் எதிரில் அமர்ந்திருக்கும் பேராசிரியர் மணவழகன் நிறுவனத்தில் அமைந்துள்ள சங்க இலக்கியக் காட்சிக் கூடத்தை அமைப்பதற்கு ஒருங்கிணைத்திருந்த புலமைச் செம்மலாவார்.

சங்க இலக்கியப் பாடலில் எனக்கு ஏதாவது ஐயமென்றால் தொலைபேசியில் மணவழகனை அழைத்துத்தான் என்றும் கேட்பேன்.

உடனுக்குடன் முழுப் பாடலையும் சொல்லும் தகுதி மிகுதி வாய்ந்தவராவார்.

அவரைப்போலவே திருக்குறள் காட்சிக் கூடத்தை அமைப்பதற்கு ஒருங்கிணைத்த பேராசிரியர் ஜானகி அவர்களையும்,

முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளினைப் பெருமிதமாக நடத்திக் காட்டிய பேராசிரியர் சுலோசனா அவர்களையும் வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளேன்.

மாணவச் செல்வங்களே!

இறுதி வரிசையில் அமர்ந்திருக்கும் பெரியவர் இராஜகோபாலன் வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

தலைமைச் செயலகத்தில் குறுங்காலிகமாக மொழிபெயர்ப்பாளராகத் தன்னுடைய எழுபதாம் அகவையில் பணியாற்றிய சிறப்பு வாய்ந்தவர்.

இன்றைக்குத் தன்னுடைய 76ஆம் வயதில் அரசு சார் தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி, எறும்பு தோற்கும் சுறுசுறுப்பின் சொந்தக்காரராகத் திகழ்வதை நீங்கள் அறிய வேண்டும்”

மொழியாக்க நாளில் பேச வாய்ப்பு நல்கிய நிறுவனத்தின் இயக்குநர்க்கு நன்றி கலந்த வணக்கம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *