அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 77
கட்டபொம்மன் மரபில் வந்த கலைக்களஞ்சியம் ஜெகவீரபாண்டியனார்
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
இளங்கலை தமிழிலக்கியம் மாநிலக் கல்லூரியில் (1985-88) பயிலும் பொழுது தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் உயர்திரு அரசு செயலாளராக அப்பா பெரும் புகழோடு அணி செய்து வந்தார்.
நாள்தோறும் கூட்டம்,
சிந்தனை மன்றம்,
அறிஞர்களைக் கண்டு உரையாடுதல்,
புலவர்களோடு பழகுதல், நண்பர்களோடு கூடுதல்,
பட்டிமன்ற நடுவராக, ஆயிரக்கணக்கான மக்கள் நடுவில் பேசுதல்,
அங்கிங்கெனாதபடி ஆங்கில / தமிழ் நூல்களை அடிக்கோடிட்டு படித்தல்,
வரிவிடாமல் நாளிதழ் / வார இதழ் கூர்ந்து படித்தல்
என்ற கட்டமைப்போடு அப்பா அறிவின் ஆழத்தில் மிளிர்ந்தார்.
பலருக்குத் தெரியாத ஒன்று:
ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு மேல் கைப்பட எழுதிக் குவித்தார் என்ற செய்தியாகும்!
(சான்றாக இதுகாறும் தட்டச்சு மட்டுமே செய்யப்பட்டு நூலாக்கம் பெறாத நிலையிலுள்ள அவரின் அணிந்துரைகள் 769, ஆற்றிய உரைகள் 98, வரைந்த கட்டுரைகள் 385)
அலுவலகத்தில் அப்பா வரைந்த கோப்புகளையும், மாண்புமிகு முதலமைச்சர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கான உரை வரைவுகள் எண்ணற்றவையாகும்.
அப்பாவிடமிருந்து கோப்பு வருகிறது என்றால் செம்மையாய்த் தட்டச்சு செய்திருந்தாலும் அவருடைய கையொப்பத்திற்கு மேலாக அவர் எழுத்தால் அடித்துத் திருத்தியும், ஒற்றுப் பிழைகளைக் களைந்தும், கூடுதலாகத் தாம் எழுதிய சில வரிகளும் இருந்தால்தான் அது அப்பா பார்த்துப் படித்த கோப்பாகும்.
ஒருமுறை அப்பாவின் தனிச்செயலர் நினைவில் வாழும் துளசிராமன் என்னிடம் சொன்னது உன் அப்பா மோசம் என்றார்,
ஏன் என்றதும் திருக்குறளையும் திருத்துகிறார் உன் அப்பா என்றார் வேடிக்கையாக…
எவ்வளவு திருத்தமாக எழுதிக்காட்டினாலும் அப்பாவின் எழுதுகோல் பல தொடர்களை நீக்கி எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்குப் புத்தம் புதிய தொடர்களை எழுதி மலைக்க வைப்பார்.
அதனால் தான் என்னவோ பல பதிப்பாளர்கள் அப்பாவை ஒரு நூல் கூட எழுத வைக்க முடியாமல் திணறி வெளியுலகில் அப்பா எழுதுவதே இல்லை என்றும் அலர் பேசினார்கள்.
கல்லூரிக்காலத்தில் அவரோடு கூட்டங்கள் செல்வது சிற்றுலா செல்வதற்கு நிகராகும்.
1986 – 1987 ஆம் ஆண்டில் செந்தமிழ்ப் புலமை வாய்ந்த கல்விக்கடல் ஜெகவீரபாண்டியனாரின் நூற்றாண்டு விழாவின் போது இராயப்பேட்டை அருகில் உள்ள பள்ளியில் அப்பாவின் உரையை கேட்டு மலைத்துப் போனேன்.
“விரிவாக எழுதல் என்பது சில பேருக்குக் கை வந்த கலை.
கவிராசர், பண்டிதர் களஞ்சியம், புலவர் சகவீரபாண்டியனாரைச் சான்றாகக் கூறலாம்.
கவிராசருக்கு அரசு நூற்றாண்டு நினைவைப் போற்றி விழாவெடுப்பது தமிழுலகத்திற்குப் பொன்னாளாகும்.
‘தரும தீபிகை’,
‘திருக்குறட் குமரேச வெண்பா’, ‘கம்பன் கலைநிலை’
இவை மட்டும் ஐம்பது தொகுதிகளாக அமையும்.
ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒரு புராண பழங்கதையை அடிப்படையாக கொண்டு, குமரேசா என விளித்து, வெண்பாக்களை இயற்றியுள்ளது பெருஞ்செயலாகும்.
‘கம்பன் கலைநிலை’ மாபெரும் நிலைக்கண்ணாடியாகும்.
மாநிலக்கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் அன்பு, பேராசிரியர் சகவீர பாண்டியாரின் குடும்ப உறவினராவார்.
பாண்டியனாரின் ‘கம்பன் கலைநிலை’ நூல் கம்பரைப் பற்றிய பிற திறனாய்வு நூல்களில் இருந்து வேறுபட்டு நிற்பதாகும்.
கம்பன் உளக் கருத்தைக் கண்ணாடிபோல் விளக்கி செம்பாகமாகத் தெளிவாக்கி
எம் போன்றோருக்கு இன்னமுதாய் ஈந்தளித்த இக்கவி மாணிக்கத்தை என்னென்று போற்றுவேன் ஈங்கு!”
என்று அப்பா பேசிய வரிகளை என் கண்ணும் காதும் குறித்த கருத்துக் கோவையில் குறித்திருந்ததை எண்ணி மகிழ்கிறேன்.
அவ்வுரை கேட்பதற்கு முன் இல்லத்தின் நூலகத்திலிருந்து அவர் படித்த குறிப்புகளும், தகவல்களும் எண்ணற்றவை ஆகும்.
ஜெகவீரபாண்டியனாரின் தாய்மொழி தெலுங்கு;
உழைப்பால் உயர்ந்து பக்தி, அறம், தேசியம் போன்ற பல பொருட்கள் பற்றி எழுதிக்குவித்து அவற்றுள் பலவற்றைத் தமது சொந்த முயற்சியால் 17086 பக்கங்களில் அச்சேற்றித் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த ஏற்றமிகு எழுத்தாளராக ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு போன்ற பிறமொழி அறிவாலும் தமிழுக்குப் புகழ் சேர்த்த பன்மொழிப் புலவராக 45 ஆண்டுகளாக எழுத்துப்பணி ஒன்றையே தொழிலாகக் கொண்டு (வணிக நோக்கின்றி) தமது வாழ்நாட்களை தமிழ் மொழிக்கு என்றே வழங்கிய தன்னலமற்ற இலக்கியத் திருவினராக வாழ்ந்தவர்.
5188 பக்கங்களுடன் 15 தொகுதிகளைக் கொண்ட கம்பராமாயணம் பற்றிய ‘கம்பன் கலை நிலை’ நூலின் முதல் தொகுதி வெளிவந்த ஆண்டு 1941.
கம்பன் கலைநிலையில் 2365 இடங்களில் பிற நூல்களை கையாண்டுள்ளார்.
அவற்றுள் புராணம், நீதி, இறைமை ஆகிய மூன்று வகை இலக்கியங்கள் மட்டும் 1314 இடங்களில் எழுத்தாள்கின்றார்.
கம்பர் காவியத்தின் கவித்திறனை முன்பே பலகாறு பயின்று தெளிந்து சுவைத்தின்புற்றிருந்தார்.
கேள்வி அறிவால் பெற்ற அனுபவத்தைக் கொண்டு பாடல்களை இராகத்தோடு பாடுவதும் சொற்பொழிவை இசையுடன் சொல்வதும் இயல்பாக அமைந்த மாபெருங் கலையாகும்.
தசரதனின் தகைமை, இராமனின் மேன்மை, காவிய நிலைமை நீர்மை இவற்றை எல்லாம் கேட்போர் மயங்க எடுத்து மொழிந்தார்.
கவிராசர் பதிப்பித்த நூல்களுள் அளவால் மிகப்பெரிய நூல் திருக்குறட் குமரேச வெண்பாவாகும் (5990 பக்கங்கள்)
இந்நூலை பதினான்கு ஆண்டுகள் இடைவிடாது செய்த முயற்சியால் முடித்துள்ளார்.
நூல்கள் முழுவதும் அச்சாகிக் கட்டமைப்புப் பணியைப் பார்த்துக் கவினுடை மகவைக் கவானிடைக் கண்டபொழுது உயாவும் வருத்தமும் மறந்து அயாவுயிர்த்து மகிழும் தாய்போல நூல்களின் எழில் வடிவத்தைக் கண்டு பூரித்தார்.
திருவள்ளுவரின் வாய்மொழியைப் புலவர்கள் விந்தையாக எடுத்து மடுத்து வெண்பாலைத் தொடுத்து முடித்திருக்கும் பான்மையை உவந்து திருக்குறளை ஈற்றடிகளாக அமைத்துத் திருக்குறட் குமரேச வெண்பா படைக்க மூல வித்தாய் மூண்டு நின்றது.
இதற்கு முதலில் குமரேசம் அல்லது குமரேச போதம் என்று பெயரிடலாம் என்ற கருத்து நிலவிய போது முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் திருக்குறட் குமரேச வெண்பா என்னும் பெயரை முன்மொழிந்தார்.
இந்நூல் முழுவதும் நேரிசை வெண்பாவால் நிறைந்துள்ளது.
தெய்வ வணக்கமும், அவையடக்கமும் சேர்த்து 1332 வெண்பாக்கள் அடங்கிய நூலாக வெளிவந்தது.
அவ்வண்ணமே 1005 நேரிசை வெண்பாக்களைக் கொண்டு தரும் தீபிகை என்னும் பெயரில் தருமங்களின் நிலைமைகளை ஓதி வருதலாகும்.
இந்நூலிலிருந்து 108 வெண்பாக்களைத் தேர்ந்தெடுத்து நியூமென் என்ற ஆங்கில அறிஞர் ‘Light of Virtue’ என்னும் மொழிபெயர்ப்பு நூலை 1933 ஆம் ஆண்டில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அவருடைய ‘அகத்திய முனிவர்’ நூலின் முன்னுரையில் ‘எமர்சன்’ என்னும் அமெரிக்க நுண்ணறிவாளர் சொன்ன ‘What we love that we have’ என்னும் கருத்து சிறப்பு வாய்ந்தது.
அதேபோல், வித்தக விவேகங்களை உலகத்துக்குப் போதிக்க வேண்டுமானால், கவிஞர்கள் எத்தகைய உத்தம நிலையில் உயர்ந்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில்,
‘கவிஞன் உயிர், ஞானம், நீதி, நன்மைகள் எல்லாம் பூரண உருவமாய்ப் பொலிந்திருக்க வேண்டும்’ என்ற அகஸ்டினின் ஆங்கில மேற்கோளான,
‘A Poet’s soul must contain the perfect shape of all things good, wise, and just’
மற்றும் ‘வாழ்வின் அனுபவம் வண்கவி; ஆதலால் சூழ்பரிவு நல்கும் தொடர்ந்து’ என்பதன் ஆங்கில மேற்கோளான
‘Poetry is practical because it fosters sympathy’
என்பதையும் நுட்பமாகத் தன்னுடைய ‘வீரகாவியத்’தின் நூன்முகத்தில் தமிழும் ஆங்கிலமுமாக விரவி எழுதிக் காட்டியது படிப்பவர் நெஞ்சைக் கொள்ளைக் கொள்ளும்.
அடிமை விலங்கிட்டு நம்மை ஆட்டிப் படைத்த ஆங்கிலேயனை எதிர்த்து முதல் முழக்கமிட்ட வீர பாண்டிய கட்டபொம்மன் மரபில் வந்த ஜெகவீரபாண்டியனார் வீர பாண்டிய மன்னனுடைய மாட்சிமைகளை விளக்கி 3811 கவிதைகளாக வீரபாண்டியம் என்ற காவியத்தை 9.3.1937-இல் படைத்தார்.
வாழ்நாள் முழுவதும் அவருக்குத் திருவள்ளுவர் நெருங்கிய பாட்டனாராய் நேரே தெரிய வந்ததும் கம்பர் அன்புக்குரிமையான மாமனாராய் யாண்டும் அணுகி நின்றார் என்று நயம்படக் கூறுவது எண்ணத்தக்கதாகும்.
நிகராரு மில்லாச் செகவீரனார் புகழெல்லை வாழ்த்துவோர் நாவெல்லையை மிஞ்சும்.
தனியொருவராய்த் தரணி புகழ இவருக்கு நிகர் எவருமில்லை என்றே தமிழுலகம் கைகுவித்தது.
———————————————————
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (1)
1950-ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைகழகத் தமிழ் ஆராய்ச்சித் துறையின் மும்மூர்த்திகள் அமர்ந்திருக்கிறார்கள்.
காலை பத்தரை மணி; ‘பெரியப்பா, வணக்கம்; சித்தப்பா, வணக்கம்; ஐயா, வணக்கம்’ என்று வணங்கியவனை, ‘சிவா, வா! வா வா’ என்று முகமலர்ச்சியோடு வரவேற்கிறார்கள்.
தமிழ் தந்த உறவால் எனக்குப் பெரியப்பா, உரைவேந்தர் சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமியார்;
சிற்றப்பா, திருமுறைச்செல்வர் வெள்ளைவாரணர்;
ஐயா, ஆராய்ச்சிப் பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் ஆவர்.
அன்றுதான் நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இடைநிலை வகுப்பு மாணவனாகச் சேர்ந்திருந்தேன்.
மூவரும் என்னை வாழ்த்தினார்கள்; அதற்குப் பின்னர், அடிக்கடி அவர்களைச் சந்தித்திருக்கிறேன்.
ஒருமுறை பெரியப்பா அவர்கள், திருப்பனந்தாள் காசிமடம் பதிப்பித்த திருத்தொண்டர் புராணம் நூலில், ‘Avvai.S.Doraiswamy Pillai, (6.9.1950)’ என அழகாகக் கையொப்பமிட்டு எனக்குக் கொடுத்தார்கள்.
மதுரைத் தியகராசர் கலைக்கல்லூரிப் பேராசிரியராக அவர்கள் பதவியேற்கும் வரை எத்தனையோ சந்திப்புக்கள்; ஐயங்கள், விளக்கங்கள், அவ்வகையில் நானும் அவர்களுக்கு மாணவனே! அறிவுறவால் தலைமகனே!
1954-அண்ணாமலை நகரில் மாநிலத் தமிழாசிரியர் கழக மாநாடு.
அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள் சிறப்புரை;
வரவேற்புக்குழுத் தலைவராகிய எங்கள் பெரும் பேராசிரியர் அ. சிதம்பரநாதன் அவர்கள்,
அதில் பங்கேற்றுப் பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் படம் திறக்க வந்து, விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த பெரியப்பா ஒளவையவர்களிடம் “என்ன தேவை” என வினவிய போது, “இதோ, தம்பி சிவமணி இருக்கான், அவன் என்னைக் கவனிச்சுக்குவான்” என உரிமையுடன் கூறிய அந்த மொழி இன்றும் என் செவிகளில் ஒலிக்கின்றது.
1958 – முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் உருவாக்கிய தமிழகப் புலவர் குழுவின் இரண்டாவது கூட்டம் தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பாவேந்தர் பாரதிதாசனார் தலைமையில் நடைபெற்றது.
தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், பேராசிரியர்கள் அ.சிதம்பரநாதனார், சி.இலக்குவனார், மு.வரதராசனார், மா.இராசமாணிக்கனார். வ.சுப.மாணிக்கனார், ஒளவை சு.துரைசாமியார், க.வெள்ளை வாரணனார் ஆர்வலர்கள் பலரும் திரண்டிருந்தனர்.
அப்போது நான் கரந்தைப் புலவர் கல்லூரித் தலைவனாய் வாரணர் உள்ளிட்ட நாற்பத்தொன்பதின்மர், அறிஞர்கள், புலவர் கல்லூரி முதல்வர்; புலவர் குழுவினரை வரவேற்று விருந்தோம்பியதில் பெரும்பங்களிப்பு எனக்கும் உண்டு.
தலைவர்; வெள்ளைவாரணர் முதல் ஆசிரியர்; இன்று நீ கல்லூரித் தலைவர் என்னை அன்போடு அழைத்து என் அருந்துணைவர், சிவ. குப்புசாமி கரந்தைக்கல்லூரியின் தலைவர், வாழையடி வாழை; மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
என்று பாராட்டி, அருகிருந்த புலவர் பெருமக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள்;
அவர்கள் கரந்தையில் காலடித் தடம்பதித்த அடிநாளில், தமிழ் மாணவராகவும் ஆசிரியராகவும் வாழ்ந்த அந்தநாள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
1968-‘நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன் காண்’ எனத் திருநாவுக்கரசரால் பாடப்பெற்றது திருப்பத்தூர்.
அத்திருப்பத்தூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் அருள்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்;
நான் துணைத் தலைவர்;
உரைவேந்தர், திருமுறைச்செல்வர் முதலாய தமிழ்ப் பேரறிஞர்கள் சிறப்பு உறுப்பினர்கள்.
அச்சங்கத்தின் அரையாண்டுச் சிறப்புக் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.
அதில் எதிர்பாராததோர் இக்கட்டு எழுந்தது – திருக்குறள் உரைவளம் ச. தண்டபாணி தேசிகர் அவர்கள் ‘ தமிழ் காட்டுமிராண்டி மொழி ‘ என்று எழுதிய தந்தை பெரியாரை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்;
அதனைப் பேராசிரியர் வெள்ளைவாரணர் வழிமொழிந்தார்.
கூட்டத்தில் சிறு சலசலப்பு;
அருள்திரு அடிகளாருக்கும் தந்தை பெரியாருக்கும் இருந்த நட்புணர்வை நாடே நன்கு அறியும்.
அடிகளார் அவர்கள் என்ன சொல்லப்போகிறாரோ என்று அவையோர் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
இது போன்ற அமையங்களில் விரும்பினாலும் இல்லையென்றாலும், அருள்திரு அடிகளார் அவர்கள் அத்தகைய சொற்பூசலில் என்னையும் இழுத்துவிடுவது என்பது அதற்கு முன் பலமுறை நிகழ்ந்திருக்கிறது.
துணைத்தலைவர், கரந்தைக்கல்லூரி முதல்வர் சிவமணி இத்தீர்மானம் பற்றிக் கருத்துரைப்பார் என்று அறிவித்து விட்டார்கள்.
நான் அந்தக் கண்டனத் தீர்மானத்தை எதிர்த்து முக்கால் மணிநேரம் உரையாற்றினேன்.
இது அறிவரங்கம்; அரசியல் அரங்கம் அன்று; தந்தை பெரியாரின் அறிக்கையை அறிவு நோக்கில் அணுகி, இந்த இந்தக் காரணங்களால் தமிழ்காட்டுமிராண்டி மொழி அன்று; அது ஒரு செம்மொழி என நீங்கள் மறுக்க வேண்டும்.
அப்படிச் செய்யாமல் நீங்கள் கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதாயிருந்தால், அதற்கு முன்பு, ‘தீக்குறளைச் சென்றோதோம்’ எனும் ஆண்டாள் பாசுரத்திற்குத் ‘தீமை செய்யும் திருக்குறளைப் படிக்கமாட்டோம்’ என்று திரித்துரைத்த சங்கராச்சாரியார் மீது ஒரு கண்டனத் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்’ என்றதுமே, அவையோர் மிகப்பெரிய ஆரவாரம் செய்து அதை வரவேற்றனர்.
எதிரே இருந்த பெரியப்பா ஒளவையைப் பார்த்து நீங்களுமா’ என்று கேட்டேன்; இல்லை எனக் கையசைத்தார்கள்.
அவர்கள் பெரியார்பால் பெருமதிப்பு வைத்திருந்தார்கள்.
1938 – இந்தி எதிப்புக் காலத்தில் பெரியார் படத்தைத் தமது வீட்டில் அலங்கரித்திருந்தார்கள்.
சிற்றப்பா வெள்ளைவாரணரைச் சற்றே உரிமையுடன் நோக்கி (கரந்தையில் நான்தான் அவர்களுக்குத் தலைப்பிள்ளை) ‘என்ன’ என்று கேட்டேன்.
அவர்கள் 1938 இல் தந்தை பெரியார் அவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த போது இராசாசி அவர்களுக்கே பாந்தளூர் வெண்கோழியார் காக்கை விடு தூது எழுதியவர்கள்.
அதற்குள் உரைவளம் தேசிகர் ஐயா ஒலிபெருக்கி முன்வந்து, ‘தம்பி சிவமணி சொன்னதை நான் ஏற்கிறேன்; எனக்கு எவ்வளவு அரசியல் தெரியுமோ அவ்வளவு தமிழ்தான் பெரியாருக்குத் தெரியும். தம்பி சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கின்றது; ஆகவே எனது தீர்மானத்தைப் பின்வாங்கிக் கொள்கிறேன்’ என்று நயமாகத் தெரிவித்தார்கள்.
அதன் பின்னரே அடிகளார் அவர்கள் புன்னகையுடன் என்னை நோக்கி அமைதிப் பெருமூச்சுவிட்டனர்.
பெரியப்பா ஒளவையவர்கள் ‘வழக்கறிஞர் போல வாதம் செய்தே, மிகு சிறப்புப் பெற்று வாழ்க’ என்று என்னை வாழ்த்தினார்கள்.
அருகிருந்த வாரணர் சிற்றப்பா, ‘சிவாக்குட்டி, உன்னோட வீச்சுப் பேச்சை இன்னைக்குத்தான் கேட்டேன்.
‘எம்முளும் உளன் ஒரு பொருநன்’, நல்லாயிருந்தது என்று பாராட்டினார்கள்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment