செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !
பகுதி – 21
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
அறிவும் ஆராய்ச்சியும்
எந்தக் கல்வி நிறுவனத்தில் உரையாற்றினாலும் கல்வி ,மொழி .பகுத்தறிவு ,
அறிவியல் ,ஆராயும் மனம் இவற்றை வலியுறுத்தாமல் முத்தமிழறிஞர் கலைஞர் பேசியதே இல்லை .
அறிவியல் வளர்ச்சியில் பேரார்வம் காட்டி இளைஞர்களை அறிவியல் சிந்தனைச் செம்மல்களாக வளர வேண்டும் என்று உருக்கமோடு கூறுவார்
மதுரைத் தியாகராசர் பொறியியற் கல்லூரி விழாவில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை :
கலைத்தந்தை என்று போற்றப்படும் தியாகராசர் பெயரால் மிகச் சிறப்புடன் விளங்கி வருகின்ற பொறியியற் கல்லூரியின் நிறுவனர் நாள் விழாவிலே கலந்து கொள்வதில் நான் பெருமையடைகின்றேன் .
கருமுத்து தியாகராசர் அவர்களை நான் மிக நன்றாக அறிவேன் .
நெருங்கிப் பழகியும் அறிவேன் .
தியாகராசர் அவர்கள் தன்னுடைய பொது வாழ்கையை இலங்கையிலேயே தொழிலாளர்களுக்காக அவர்களுடைய உரிமைக்காகப் போராடியதன் வாயிலாகத் தொடங்கினார் .
அதன் பின்னர் தாயகத்துக்குத் திரும்பி இந்திய நாட்டின் விடுதலை இயக்கத்திலே தன்னை இணைத்துக் கொண்டார் .
நாட்டு விடுதலைக்காகப் போராடிய உத்தமர் காந்தியடிகள் வந்த பொழுது கருமுத்து தியாகராசர் இல்லத்தில் விருந்தினராக வந்து தங்கினார்.
அத்தகைய அழுத்தம் திருத்தமாக நாட்டினுடைய விடுதலைப் போராட்டத்திலே தன்னை இணைத்துக் கொண்ட தியாகவுணர்வு இன்றும் தேவை ,அதே நேரத்தில் விடுதலையடைந்த இந்தியாவில் மொழி அடிமைத்தனத்திற்கு நாம் உட்பட்டுவிடக்கூடாதென்று கருதினார் .
அந்தக் கருத்து மேலோங்கிய காரணத்தினால் தமிழ் வாழவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தயாரானார்.
மதுரை நிலத்திற்கு அந்த வகையிலே பெருமை உண்டு.
இந்திய நாட்டின் தேசிய இயக்கத்திலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தன்னுடைய குடும்பத்தார் அனைவருமே நாட்டு விடுதலைக்காகச் சிறைக் கோட்டத்தில் அடைபடுகின்ற அளவிற்குத் தியாகம் புரிந்த நாவலர் சோமசுந்தர பாரதியார். மதுரையில் பசுமலையைச் சேர்ந்தவர் .
அவர் இந்தியினால் தமிழ் கெடும், இந்தி ஆதிக்கம் நுழையுமேயானால் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகி விடுவார்கள் என்றார்கள்.
ஆக்கப்பட்டு விடுவார்கள் என்பதை உணர்ந்து 1938 – ஆம் ஆண்டிலேயே அந்த ஒரு காரணத்திற்காக மொழியை எப்படியும் காக்க வேண்டுமென்ற ஒரு குறிக்கோளுக்காக அந்த இயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தமிழ் காக்கும் போராட்டத்தில் அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்களோடு, பேரறிஞர் அண்ணா அவர்களோடு தமிழ் காக்கும் தளநாயகர்களோடு தன்னை இணைத்துக் கொண்டார்.
நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களைப் போல கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் அவர்கள் தேசிய இயக்கத்திலே ஈடுபாடு கொண்டவர்.
உத்தமர் காந்தியடிகள் உள்ளத்திலே இடம் பெற்றவர்.
அவை அனைத்திற்கும் ” மேலாகத் தான் ஒரு தமிழன் தன்னுடைய மொழியைக் காக்க வேண்டுமென்கின்ற உணர்வின் காரணமாகத் தமிழ் வளர்ச்சியைக் கருதிப் போராடினார் .
‘தமிழ்நாடு’ என்ற நாளிதழைத் தொடங்கியதன் வாயிலாக அவர் தமிழின்பால், தமிழ்நாடு என்ற பெயரின் ஆர்வத்தைப் புலப்படுத்தினார் என்பது மாத்திரமல்ல !
1965 – ஆம் ஆண்டில் மொழிப் புரட்சி தமிழகத்தில் நடைபெற்ற பொழுது பல்லாயிரக்கணக்கானவர் சிறையிலே அடைக்கப்பட்டார்கள்.
பிறகு நூற்றுக்கணக்கானவர்கள் துப்பாக்கி குண்டுகளைத் தங்கள் மார்பகங்களில் மலர்ச்செண்டாக மரணப் பள்ளத்தாக்குகளை மானமிகு தொட்டிலாக ஆக்கிக்கொண்டார்கள் .
தன்னந்தனியாக நான் பாளைச் சிறைச் சாலையில் நான் அடைக்கப்பட்டிருந்தேன் எனக்கு ஒரு செய்தி கிட்டியது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ் காக்க ஈடுபட்ட காரணத்தால் கருமுத்து தியாகராசர் அவர்களும் அதே தேசியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி தனிமைச் சிறையில் பாளையங்கோட்டையிலே இருந்த எனக்குக் கிடைத்தது.
எனக்கொரு மகிழ்ச்சி ! பரவாயில்லை பக்கத்திலே ஒரு துணை கிடைக்க இருக்கிறதென்று எண்ணிக்கொண்டிருந்தேன்.
ஆனால் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்ட கருமுத்து தியாகராசர் அவர்கள் சில நாள்களிலேயே விடுதலை செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியும் பிறகு கேள்விப்பட்டேன்.
அது மாத்திரமன்று !
1965-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு அவர் தலைமை வகிப்பதாக இருந்தது.
அந்த மாநாட்டில் அன்றிருந்த அரசு அவருக்குச் செய்தியனுப்பியது.
அரசு ஓர் மடலை அனுப்புகிறதென்றால் அதற்குப் பெயர்தான் செய்தி !
அதற்குப் பின்னால் ஒளிந்து கிடப்பது ஆணை !
ஆனால், இந்த ஆணை பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் நான் அன்னைத் தமிழுக்காகப் கவலைப்படுகிறேன் என்று உரைத்துவிட்டு அந்த மாநாட்டில் தலைமையேற்று அவர் ஆற்றிய சொற்பொழிவு நம்முடைய பேராசிரியர் அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போலத் தமிழுக்கு வாழ்வு கொடுக்கத் ,தமிழர்களுக்கு உயிரைக் கொடுக்க நாம் உயிரைக் கொடுக்கலாமென்ற வகையிலே அமைந்த உணர்ச்சி உரையாகும் .
மொழிப் புரட்சியைத் தமிழகத்திலே அன்றைக்கு மாணவர்கள் உருவாக்கிக் காட்டினார்கள்.
அதற்குப் பின்னணியிலே இருந்து பலமாக இருந்து உதவி செய்த ஆர்வம் படைத்த தலைவர்களிலே ஒருவராகக் கருமுத்து தியாகராசர் அவர்கள் இருந்தார்கள்.
அந்த இரகசியத்தை இப்பொழுது நான் சொல்வதால் அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை .
அவரும் இன்று இல்லை .
அது மாத்திரமன்று அவரைத் தண்டிக்கக்கூடிய அரசும் இன்றைக்கு இல்லை.
அதற்காகப் பாராட்டக்கூடிய அரசும் அந்த அரசின் தலைவனாக நானும் இருக்கிற காரணத்தினால் அந்த ஆபத்து அவருக்கு ஏற்பட எந்த வழிவகையும் அறவே இல்லை .
தியாகராசர் இலங்கையிலே நடத்திய தொழிலாளர் போராட்டம்;
அதன் பின்னர் விடுதலை இயக்கத்திலே சேர்ந்து ஆற்றிய பணி;
பிறகு மொழிக்கு அவர்கள் ஆற்றிய தொண்டு
இவற்றையொட்டித் தான் அவர் இந்த மாநிலம் வளம் பெற வேண்டுமென்பதற்காகப் பல தொழில்களைத் தொடங்கினார்.
தொழில்களைத் தொடங்கும் பொழுது அவரவர்களுடைய சொந்த ஆதாயங்களும் பின்னணியிலே இருக்கும் என்பதை நான் மறுக்கத் தேவையில்லை.
ஆனாலும் கூட அந்தச் சொந்த ஆதாயத்தோடு நாட்டின் நலமும் பின்னிப் பிணைந்து கிடக்கிற காரணத்தாலேதான் அவரால் தொடங்கப்பட்ட தொழில்கள் வளர வளர அது பல்கிப் பெருகிடப் பெருகிடத் தொழிலாளர் பலர் நல்வாழ்வு பெற்றிட முடிந்தது.
தொழில்களை வளர்த்தது மாத்திரமல்ல இத்தகைய ‘கல்லூரிகளையும் அமைத்தார்கள்.
அப்படி அமைக்கப்பட்ட கல்லூரிகளில் இன்றைக்குத் தமிழ்நாட்டில் சிறந்து விளங்குகின்ற கல்லூரிகளிலே ஒன்றாகத் தியாகராசர் பொறியியற் கல்லூரி திகழ்கிறது.
இங்கே பேசும் பொழுது பெருமிதத்தோடு ஒன்றைச் சொன்னார்கள்.
நன்கொடை வாங்காமல் நடைபெறும் கல்லூரி என்று சொன்னார்.
Capitation Fee என்று மறைப்பதற்காக, நன்கொடை என்று தமிழிலும் கூறினார்கள்.
குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் அவர்கள் கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வருகை தந்து சில நிகழ்ச்சிகளிலே பேசும் பொழுது மெத்த வேதனையோடு சற்று ஆத்திரத்தோடு ஒரு கருத்தைச் சொன்னார்.
கல்விக்குக் குறிப்பாக மருத்துவம் பொறியியல் துறை போன்ற இந்த தொழில் கல்வியில் நன்கொடை என்று ஐம்பதாயிரம், அறுபதாயிரம், இலட்சம் என பணம் வாங்கப்படுகிற இந்த நிலை வேதனையானது என அவ்வாறு சொல்லிவிட்டு ‘நான் மாத்திரம் இந்த நாட்டு சர்வாதிகாரியாக இருந்தால் அவர்களையெல்லாம் பிடித்துச் சிறையில் போடுவேன்.
அந்தக் கல்லூரிகளையெல்லாம் உடனடியாக மூடுவேன்’ என்றும் சொன்னார்.
நான் எண்ணிப்பார்க்கிறேன்.
சர்வாதிகாரியாக இருந்துதான் இதைச் செய்ய வேண்டுமா ?
ஜனநாயகவாதியாக இருந்து இதைச் செய்ய முடியாதா ?
என்று நான் எண்ணிப் பார்க்கிறேன்.
அது பற்றிக் கல்வி அமைச்சர் பேராசிரியர் அவர்களொடு பேசிக்கொண்டிருக்கிறேன்.
நன்கொடை என்ற பெயரால் Capitation Fee வாங்குகின்ற கல்லூரி – நடத்துகின்ற கல்லூரிகளை ஒரு வியாபாரக் கூடமாக ஆக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த விழாவில் நான் விடுக்கின்ற எச்சரிக்கை இது என்பதை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன்.
இந்தச் சூழலில் தான் டாக்டர் குழந்தைசாமி குழு என் சார்பில் அமைந்து அதனை ஆராயச் செய்து பல்கலைக்கழகம் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.
அந்த நடவடிக்கைகள் இன்றைக்கு அறைகூவலாகச் வென்றிருக்கிறது .
எனக்குத் தெரியும் எத்தனை பேர் நிலத்தை விற்று தனக்கு இருக்கின்ற ஓரே வீட்டை விற்றுத் தன்னுடைய பையனோ ,பெண்ணோ எப்படியாவது ஒரு எம்.பி.பி.எஸ். படித்தால் போதும். ஒரு என்ஜீனியராகவோ வந்தால்
போதும் என்பதற்காக ஆண்டாண்டுக் காலமாகப் பரம்பரை பரம்பரையாக அவர்களுடைய குடும்பத்திலே படித்தவர்களே இல்லையே என்று மனம் வருந்துகின்றனர்.
மனம் நொந்து இந்த ஒரு பிள்ளையாவது டாக்டராக
வும், என்ஜினியராகவும் வரட்டும் என்பதற்காகத் தோட்டம் துரவுகளை விற்று, நிலங்களை விற்று, வீடு வாசல்களை விற்று. ஐம்பதாயிரம், அறுபதாயிரம், இலட்சம் என்று பணத்தைக் கட்டுகிறார்கள்.
அவற்றை உறிஞ்சிக் கொழுத்துக் கொண்டிருக்கிற திமிங்கலங்களைக் கல்வி ஓடையிலே நீந்த விடலாமா என்பதுதான்
இந்த நல்லவருடைய நாளில் நான் கேட்கின்ற கேள்வியாகும்.
பாறைகளிலும், சரிவுகளிலும் கட்டடங்களைக் கட்டுவதில் தயக்கம் காட்டிய பொறியாளர்களிடையே ‘எண்ணிய, எண்ணியாங்க முடிக்கும் திண்ணம் கொண்ட கலைத் தந்தையவர்கள் தானே முன் நின்று கட்டடங்களுக்கான வரைபடங்களை வரைந்தார்.
இப்பணியினை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டு தொடங்கி நிறைவேற்றினார் என்று தம்பி கண்ணன் கட்டுரையிலே குறிப்பிட்டிருக்கிறார்.
‘கல்லும், முள்ளும் கற்பாறைகளும் மேடு பள்ளங்களும் நிறைந்திருந்த இடம் இன்று நன்னிலமாக மாறியிருக்கிறதோ அதைப் போல நாடும் மாறி இருப்பதாக நானில்லை;
என்று கல்லூரியின் ஆட்சிகுழுத் தலைவர் டாக்டர் திருமதி
இராதா தியாகராசன் அவர்களுடைய வரவேற்புரையிலே கூறினார் .
மின்னணுவியல் கட்டடத்தைத் திறந்து வைக்கின்ற வாய்ப்பினையும் பெற்றிருக்கின்றேன்.
இன்று மின்னணுயுகம் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.
ஆனால், ஒரே ஒரு ஐயப்பாடு !
இந்தியா போன்ற ஏழை மக்கள் அதிகமாக இருக்கின்ற நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் பின்தங்கிவிட நேரிடுமோ என்ற அச்சமும் விளைகிறது .
அந்த ஐயப்பாட்டை நீக்கும் அளவிற்கு இந்த மின்னணுயுகம் உதவிட வேண்டும் .
அதற்கேற்ற வகையிலே மத்திய அரசானாலும், மாநில அரசானாலும் பல முறை சிந்தித்து அதற்கான திட்டங்களைத் தீட்டி உலகத்திலே இன்றைக்கு ஓங்கி வளர்ந்து வருகின்ற அறிவியல் யுகத்தோடு நாம் போட்டி போடத்தான் வேண்டும்.
அறிவியல் சிந்தனை ,மனப்போக்கு நம்மிடையே தொடர்ந்து நாளுக்கு நாள் ஓங்கி வளர வேண்டும் .
அறிவியல் ஆற்றலும் – ஆராயும் மேம்பாடும் அமைய வேண்டும் .
எதையும் ஏன் என்று கேட்டுத் துருவித்துருவியறியும் உழைப்பும் முயற்சியும் உருவாக வேண்டும் .
ஒருமுறை அறிஞர் குழந்தைசாமி என்னிடம் கூறினார் .
என்ஜினீயர் என்ற சொல் இன்ஜீனியஸ் நுண்ணறிவு என்ற பொருள்படும் .
நுண்ணறிவியைத் தான் நாம் பொறியியல் என்று சொல்லிப் பழகிவிட்டோம் .
இந்நிலையில் நேற்று நான் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை படித்தேன் .
அறிவியல் அறிஞர் நெல்லை சு முத்து எழுதியிருந்தார் .
இஸ்ரோ விஞ்ஞானி அறிவியல் நோன்மையும் – நுண்ணிய தெளிவும் வாய்ந்த நண்பர் நெல்லை முத்து அவர்கள் நூற்றுக்கு மேலான நூல்களையும் , நாளிதழ்களில் எண்ணற்ற கட்டுரைகளையும் படைத்துள்ளார் .
அறிவியல் தலைமை கொண்ட மேன்மையாளர் அப்துல்கலாமின் நெஞ்சில் இடம் பிடித்தவர் .
எங்கும் எதிலும் அவரை வாழ்த்தாமல் பேசுவதும் – எழுதுவதும் இல்லை .
அறிஞர் நெல்லை முத்துவின் கட்டுரையின் ஒரு பகுதியை பொருத்தமாக இருந்ததால் இணைத்துக் காணலாம் .
கற்று அறிதல் வேறு,
கற்றவற்றை ஆராய்ந்து அறிதல் வேறு.
எதிலும் உண்மை கண்டறிதல் தான் அறிவியலின் அடிப்படை.
தரவுகளின் பகுப்பாய்வு மிக முக்கியம்.
உள்நாட்டுப் பொருள்களையே புதிதாக வாங்குவது என்றால் குறைந்த அளவு முறையான தரக் கட்டுப்பாட்டு ஆய்வுகளுக்குப் பிறகு தான் ஏற்றுக் கொள்கிறோம்.
அதிலும் வெளிநாட்டிலிருந்து வரும் உணவுப் பண்டங்கள், மருந்துகளில் கூடுதல் பரிசோதனைகள் இடம் பெற வேண்டும் .
சோதனைக்கான மாதிரிகளை ஒரே ஆய்வாளரிடம் ஒப்படைத்தல் நல்லதல்ல.
அவர்தம் முந்திய ஆய்வில் தெரிவித்ததையே – அது சரியோ, தவறோ – (முன் கருதலோடு) அறிவித்தால் ஆபத்து.
அதனால் ஆய்வு மாதிரிகளை ஒன்றுக்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் சோதிக்க வேண்டும்.
அதனால் இன்னொரு ஆய்வகத்திலும் அதே சோதனை மாதிரியைத் தந்து அங்கு ஒரு முடிவைப் பெறவேண்டும்.
ஒருமுறை இந்திய விண்வெளி ஆய்வகத்தில் திட உந்து பொறிக்கான பாகுநிலை மூலப்பொருள் (பாலிமர்) ஒன்று அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
ஒப்பந்த முன்பணமும் தாலர்களில் செலுத்தப்பட்டுவிட்டது.
200 லிட்டர் பீப்பாய்களாக 10 டன்கள் அளவுக்கு வந்து இறங்கியது சரக்கு.
அதிலிருந்து உரிய புள்ளிவிவரவியல் முறையில் மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பகுப்பாய்வு செய்ததில் அந்தப் பாலிமரில் செயல்படு சிறப்பு வேதிக்கூறு இடம்பெறவில்லை என்பது தெரிய வந்தது.
மீண்டும் மாதிரிகள் எடுத்து ஆராய்ந்த பின்னரும் அதே கதை.
வேறு ஆய்வாளரிடம் கொடுத்தும், வேறு ஆய்வுக்கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தியும் எதிர்மறை முடிவே கிடைத்தது.
இறுதியில் இறக்குமதியான அன்னியச் சரக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இங்கும், தடுப்பூசி மருந்துகள் என்றாலும், அகழ்வாய்வில் கண்டு எடுக்கப்பட்ட தொல்பொருள்கள் என்றாலும் ஒரே ஆய்வகம் அன்றி, வேறு நாடுகளிலும் ஒன்றிரண்டு ஆய்வகங்களிலும் மிக மந்தணமாகச் சோதிக்க நேரும்.
ஏறத்தாழ நூறு கோடி மக்களைக் கொண்ட இந்தியா போன்ற இந்தப் பெரிய நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகம் தரக்கூடிய தொழில்கள் ஒரு பகுதியிலே வளர வேன்டும் .
அதே நேரத்தில் விஞ்ஞான யுகத்திலே போட்டி போடுகின்ற அளவிற்கு இங்கே கால்கோள் விழா நடத்தப்பட்ட கணிம விரிவாக்க மையமானாலும், மின்னணுவியல் ஆனாலும் இவையெல்லாம் இருந்திடல் வேண்டும்.
அவையும் தேவை. ஆனால், ஒரு கட்டுப்பாட்டுடன் தேவை.” – –
முரசொலி, 17.8.1989
தொடர்புக்கு
thamizhavvai@gmail .com

Add a Comment