அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 79
உணர்ச்சிக் கவியரசர் காசி ஆனந்தன்!
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
1983-ஆம் ஆண்டில் சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து, நீண்ட விடுமுறைக்குப் பிறகு, பூரித்த உடலும் எழுச்சிமிகு உள்ளமும் கொண்டு பதினோறாம் வகுப்பில் M3 பிரிவில் (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கில்) சேர்ந்த பொழுது, வகுப்பில் பல புதுமுக நண்பர்களுடன் ஈழத் தமிழ் முகங்களான, தவகுணன், பழனியப்பன், அமலன், தயாபரம், அசலாம், இராஜீவ், விக்னராஜா, முரளீதரன், கெரால்டு, கராளசிங்கம், தினேஷ்குமார், சுந்தரலிங்கம் ஆகிய நண்பர்கள் அறிமுகமாயினர். அவர்கள் வாயிலாக ஈழக் கலவரத் துயரங்களைக் கண்ணீர் மல்கப் பல நேரங்களில் அவர்கள் சொல்வதைக் கேட்டு மனம் கலங்கியதுண்டு. மாநிலக் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் 1985-ஆம் ஆண்டு சேர்ந்தபொழுது வகுப்பில் அறிமுகமானவர்கள் பகீரதன், கருணாநிதி ஆவர். அப்பாவின் ஈழ நண்பர்களான அறிஞர் இராஜசிங்கம், திருமுறை மாமணி சிவபாலன், மருத்துவர் சிலோன் பாலு, இலண்டன் வாழ் நித்தியானந்தம், அறிஞர் சிறீகந்தராஜா, கவிஞர் கருணானந்த ராஜா, விக்டர் செரூபிம், எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலா, ஜெர்மனியைச் சேர்ந்த திரு. நித்தியானந்தம், கனடா பேரம்பலம், ஆஸ்திரேலியா பேராசிரியர் கந்தையா, அறிஞர் பாலேந்திரா, தொழிலதிபர் செல்வேந்திரா, தமிழறிஞர் நந்தகுமார், பொறியாளர் ஜனநாயகம், மலேசியா தத்தா சாந்தகுமார், தத்தோ குணா, கவிஞர் ஈழவேந்தன், மறவன்புலவு சச்சிதானந்தம் போன்றோர் அறிமுகமாயினர். அப்பா அடிக்கடி சொல்லும் வரி:- “ஈழத் தமிழர்களின் உணர்வு எனக்குப் பிடிக்கும். ஆனால், நான் பிறவிச் சைவமாக இருப்பதனால் அவர்கள் படைக்கும் உணவு மட்டும் உண்பதில் தயக்கமிருக்கும்” என்பதாகும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை பார்த்திபன் சண்முகம் வாயிலாக ஈழ விடுதலை இயக்கத் தலைவர் திரு பத்மநாபாவைச் சில நிமிடங்கள் சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைக்கப் பெற்றது. ஈழத் தந்தை செல்வாவின் திருமகனார் வழக்கறிஞர் சந்திரஹாசனின் ஆங்கில உரையைக் கேட்டு வியந்திருக்கிறேன். இச்சூழலில் ஈழத் தமிழர்களின் எழுச்சிக் கவிஞர் காசி ஆனந்தனைப் பற்றியும் அவரின் தீப்பொறிக் கவிதைகளையும் என் மாமா மருத்துவர் நலங்கிள்ளி மனப்பாடமாகச் சொல்லும் வரிகளைக் கேட்டு மயங்கி உணர்ச்சிக் கவிஞரின் கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு கல்லூரிக் காலத்திலேயே வாய்த்ததாகும்.
காத்தமுத்து சிவானந்தன் என்ற இயற்பெயருடைய உணர்ச்சிக் கவிஞர், ‘கனல் அருவி’ காசி ஆனந்தன் (1938), ஆற்றல் நிறைந்த தனது உணர்ச்சிமிகு நெருப்புக் கவிதைகளின் வாயிலாக ஈழத் தமிழர்கள் விடுதலைக்காகப் போராடி வரும் ஈழத்து எழுச்சிக் கவிஞர் ஆவார். இளமைக் காலம் முதலே, சிங்கள ஆதிக்க வெறியர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட்டம் செய்தவர். இலங்கை அரசின் ஈழத்தமிழர்களை ஒடுக்கும் செயல்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர். தமிழீழத்தின் மிக உயரிய விருதான “மாமனிதர்” விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட பெருந்தகையாளர். பச்சையப்பர் கல்லூரியில் தமிழிலக்கியம் பயின்றவர். இலங்கை அரசு மொழித் திணைக் களத்தில் மொழிபெயர்ப்பாளராக மிளிர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதினைந்தாம் அகவையிலேயே தமிழீழ விடுதலைக் களத்தில் வீரச்சுடராக விளங்கினார். தந்தை திரு.செல்வாவின் கூட்டங்களில் சிறுவனாகக் கலந்து கொண்டு ஈழத்து விடுதலைக்காக முழங்கியவர். கடந்த 65 ஆண்டுகளாகத் ‘தமிழீழ விடுதலை’ ஒன்றையே மூச்சாகக்கொண்டு இயங்கி வரும் உறுதியான மனம் படைத்த பண்பாளர். அவரின் தந்தை திரு.செல்வா அவர்களின் தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைமைச் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றிப் பின், ஈழத்து மக்களால் பெரிதும் போற்றப்படுகிற தலைவர் மாவீரர் திரு.பிரபாகரன் அவர்களின் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைமைச் செயற்குழுவிலும் உறுப்பினராக விளங்கியவர். எளிய நடையில் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய வலிமைமிகு கவிதைகள் பலவற்றைப் புனைந்த புகழ் வாய்ந்த ஆற்றல் பொங்கும் கவிஞராக கவியரசர் காசி ஆனந்தன் வாழ்கிறார்.
விடுதலைப் போராளி இயக்கங்களின் துப்பாக்கி முனைகளுக்கு நிகராக, காசி ஆனந்தனின் பேனா முனையும் தங்களை வீழ்த்துவதாக என்றென்றும் ஒரு கொதிப்பு இலங்கை இராணுவத்துக்கு உண்டு. அதனாலோ என்னவோ, துப்பாக்கிப் பயிற்சிக்கு இலக்காக இவரது முழு உருவப்படங்களை நிற்க வைத்து, சிங்களப் படையினர் சுட்டுப் பழகியதாகவும் ஒருகாலத்தில் தகவல்கள் வந்ததுண்டு.
“மண்” எனும் தலைப்பிலான இவரின் குறுங்கவிதை உழவர்களின் வாழ்க்கை நிலையை இரண்டே வரிகளில் மிக அழகாய் எடுத்துரைக்கிறது:
“மண்ணில் உழவனின் வாழ்க்கை அறுவடைக்கு முன்
உழவனின் வாழ்க்கையில் மண் அறுவடைக்குப் பின்”
தெருப்புலவர், உயிர் தமிழுக்கு, தமிழன் கனவு, காசி ஆனந்தன் கவிதைகள் சுவர்க்கவிகள் உட்படப் பல கவிதைத் தொகுப்புகளை இவர் நமக்குத் தந்துள்ளார். கவிச்சுடர் காசி ஆனந்தன் கதைகள், நறுக்குகள் ஆகியன இவரது சிறுகதைகளாகும். அவர் கவிதைகள் பலவும் புகழ் பெற்றவை என்றாலும், ‘காசி ஆனந்தன் நறுக்குகள்’ என்ற கவிதை நூல் தனிப்பெருமை நிறைந்தது என்றே கூறலாம்.
சிறுகதை, புதுக்கவிதை போன்றவை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு வந்தவை என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதை அவரின் ஒரு நூலுக்கு அவர் அளித்த முன்னுரையில் ஆய்வு நுணுக்கத்தோடு நிறுவியுள்ளார். ஆங்கிலம் என்ற மொழி தோன்றுவதற்கு முன்பே, தமிழில் கவிதைகள் மலர்ந்து விட்டன எனக்கூறி அதற்கான ஆதாரங்களை முன் வைத்த தமிழ்ப் பற்றாளர்.
“அலுவலகத்தில்
இருக்கிறவனுக்கு
இது –
குப்பைத் தொட்டி
குப்பைப் பொறுக்கி
வாழ்கிறவனுக்கு
இது –
அலுவலகம்”.
என்று குப்பைத் தொட்டி குறித்து அவர் வரைந்த கவிதை அவர்தம் மாறுபட்ட புதிய சிந்தனையின் வெளிப்பாடு.
“பட்டினி கிடந்தது பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் – எந்தன்
கட்டுடல் வளைந்து கைகால் மெலிந்து
கவலை மிகுந்தாலும் – வாழ்வு
கெட்டு நடுத்தெருவோடு கிடந்தே
கீழ்நிலை உற்றாலும் – நமைத்
தொட்டு வளர்த்த தமிழ்மகளின்
துயர் துடைக்க மறப்பேனா?”
தமிழகத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் போட்டிகளில் வாய்திறந்தால் சொல்லும் அவருடைய தலைசிறந்த கவிதை வரிகளான,
“தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்’மம்மி’ என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை ‘பேபி’ என்றழைத்தாய்…
என்னடா, தந்தையை ‘டாடி’ என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்…
உறவை ‘லவ்’ என்றாய் உதவாத சேர்க்கை…
‘ஒய்ப்’ என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை…
இரவை ‘நைட்’ என்றாய் விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை ‘ஸ்வீட்’ என்றாய் அறுத்தெறி நாக்கை…
வண்டிக்காரன் கேட்டான் ‘லெப்ட்டா? ரைட்டா?’
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி ‘பைட்டா?’
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் ‘லேட்டா?’
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?
கொண்ட நண்பனை ‘பிரண்டு’ என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் ‘சார்’ என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?
பாட்டன் கையில ‘வாக்கிங் ஸ்டிக்கா’
பாட்டி உதட்டுல என்ன ‘லிப்ஸ்டிக்கா?’
வீட்டில பெண்ணின் தலையில் ‘ரிப்பனா?’
வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?”
இவ்வரிகளால்தான் இவர் உணர்ச்சிக் கவிஞர் என அழைக்கப்பட்டார்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும், காலத்தால் அழியாத கவிதைகளைத் தந்தவர்களைத் தமிழர்கள் என்றும் போற்றுவர். அத்தகைய தகுதி பெற்ற தன்மானக் கவிஞர் வரிசையிலே திரு. காசி ஆனந்தன் அவர்களுக்குத் தலைமையான இடமுண்டு.
இவர்தம் “புயல் கால இராகங்ள்” எனும் பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்களைக் கேட்கும்போதெல்லாம், நாடி நரம்புகளிலே பாய்ந்தோடும் குருதியிலே விடுதலை உணர்ச்சி ஊற்றெடுப்பதுடன், நெஞ்சினிலே கவலையும், விழிகளிலே கண்ணீரும் நம்மை அறியாமலேயே எட்டிப்பார்க்கும். அவரின் ஒவ்வொரு கவியிலும் உணர்ச்சி பொங்கும், வீரம் அதிரும்.
மாந்தளைச் சிறையிலே, மட்டக்களப்புச் சிறையிலே, கண்டிச் சிறையிலே என ஏறத்தாழ ஐந்து ஆண்டுக் காலம் சிறைக்கொட்டடியிலே கவிஞர் வாடியபோது, மின்மினியின் வெளிச்சத்தைப் போன்று எப்பொழுதாவது கசிந்து தலைகாட்டும் வெளிச்சத்தைப் பற்றியும் அவர் தன் கவிதையிலே பாடியுள்ளார். அவ்வண்ணமே சிலிர்க்க வைக்கும் கவிதையான,
ஏடா! தமிழ் வீரா! உனை
எலிபோல் நினைத்தாரா?
வாடா படை யூடே அற
வலியின் துணை யோடே!
நாடா பிணைக் காடா என
நால்வர் மடிந்தாலும்
போடா அவர் வழியே! நகை
புரிவாள் தமிழ் மொழியே!
குண்டாந்தடி கொண்டே அடி
தந்தார் வெறியாளர்
என்றால் அது நன்றே! எமை
ஈன்றாள் புகழுண்டே!
பண்டை மொழி என்பார் தமிழ்
பார்ப்போம் அதை வீணர்
வென்றா விடுவார்கள்? மற
வேங்கை விடுவானோ?
‘முத்தே! முழு நிலவே! விடை
மொழிவாய்!’ என இல்லாள்
பத்தே விரல் பற்றி அவள்
பதிலின் வெறி பெற்று…
‘சொத்தே! மொழி வித்தே! தமிழ்ச்
சொல்லே! உனக்காச்
செத்தே மடிகின்றேன்!’ எனச்
செல்வாய் தமிழ் ஏறே!
என்று ஈழத் தமிழர்களுக்கு உரமேற்றினார்.
சிங்களக் கொடியவர்கள் வீடு புகுந்து இவருடைய கவிதைகளைக் கவர்ந்து சென்றதை இவரை விட வேறு எவராலும் இவ்வளவு அழகாகக் கூறவியலாது என்றே தோன்றுகிறது.
“குருவி படைத்த குஞ்சுதனைக்
காகம் கொத்திப் பறந்தது போல்
எருவிட்டு உழவன் வளர்த்த பயிர்தனை
எருமை அழித்தது போல
கருவிலே கருத்திலே விளைந்த என்
கண்மணிப்பாடலை
எடுத்துப்போனானே
நான் அறம் பாடுகிறேன்
என் தமிழ் தீண்டிய கை அழுகும்
அவன் தலையிலே இடி இறங்கும்
ஆயிரம் ஆண்டுகளுக்கு நெருப்பு எழும்.”
தாய் மண்ணைத் தொலைத்து, ஈழத்தின் நினைவுகளுடன் உலகெங்கும் பரந்திருக்கும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான போர்க்கலனாகத் திகழும் உணர்ச்சி நிறைந்த இவர்தம் கவிதைகள், நீங்காப் புகழுடன் என்றென்றும் தமிழ் மண்ணில் நிலைத்து ஒலித்துக்கொண்டிருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
———————————————————
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (3)
ஒளவையவர்களின் பிறந்த ஊர் தென்னார்க்காடு. மாவட்டத்துத் திண்டிவனம் அருகிலுள்ள ஒளவையார் குப்பம் எனும் சிற்றூர். அவருடைய பெற்றோர்கள் திருநிறை சுந்தரம் பிள்ளை – சந்திரமதி அம்மையார்;. இவர்தம் மனைமங்கலமாக மயிலாசலம் முத்துக்குமரசாமி, சுப்பிரமணியம் ஆகியோர்க்குப் பின், தம் தமக்கை பூமாதேவியுடன் இரட்டையராக ஐந்தாம் குழந்தையாகத் துரைசாமியார் 1902 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 5ஆம் நாள் பிறந்தார்.
சுந்தரர் ஊர்க் கணக்கராகப் பணியாற்றிய போதிலும் “அருணதள பாதபத்மம் அனு தினமுமே துதிக்க, அரிய தமிழ் தானளிக்கும் மயில்வீரனாகிய’ முருகன் மீது, குறிப்பாக மயிலம் குமரனைப் பற்றிப் பல பாடல்களைப் புனைத்தும், மக்களுக்கு மயிலாசலம், முத்துக்குமரசாமி, சுப்பிரமணியம் எனும் பெயர்களைச் குட்டியும் தாம் முருகனடியார் என்பதைப் புலப்படுத்தினர்.
சுந்தர துரைசாமியார் உள்ளூர்த் தொடக்கப்பள்ளியிலும், திண்டிவனம் அமெரிக்கன் ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியிலும் சுற்றுத்தேர்ந்த பின்னர் வேலூர் ஊரிசு கல்லூரியில் இடைநிலை வகுப்புவரையிலும் பயின்றார். அவர் தந்தையார் சுந்தரனார் இயற்கையெய்திய நிலையில், தமையனார் மயிலாசலம் குடும்பப் பொறுப்பை ஏற்றார். குடும்பச்சுமையில் துரைசாமியாரும் பங்ககேற்க விரும்பியதால் அவரால் மேற்கொண்டும் கல்வியைத் தொடர இயலவில்லை. வருவாய் தேடவேண்டிய நிலையில், சிலகாலம் நலத்தூய்மை ஆய்வாளராகப் பணியாற்றினாலும், அதில் அவர் மனம் பற்றவில்லை.
தமிழையே பற்றுக்கோடாகக் கொண்டிருந்த சுந்தர துரைசாமியார் தமது 24 ஆம் அகவையில் ஔவையார் குப்பத்திலிருந்து, தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நோக்கித் தமது தமிழ்ப் பயணத்தைத் தொடங்கினார்.
கரந்தையில் அவர் சந்தித்த முதலாமவர், கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரித் தலைமையாசிரியர் சிவ.குப்புசாமி. அவர் துரைசாமியாரைச் சங்கத்தலைவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரனாரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். ஒருவரைப் பார்த்த அளவில் அவரின் திறமையை அளந்தறியும் ஆற்றல்மிக்க தமிழவேள், சுந்தர துரைசாமியாரின் நோக்கையும் போக்கையும் உரையாடி உணர்ந்த பின்பு, அவரைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் பணியமர்த்தினர். தெய்வச்சிலையார் உரையுள்ள ஓலைச்சுவடியைப் படிப்பதும் அதனைப் பெயர்த்தெழுதுவதும் முதன்மைப் பணிகள், அத்துடன் சங்கத்தின் நூலகப்பொறுப்பு, இவ்விரண்டும் ஒளவைக்கு மனம் விரும்பிய பணிகளாக அமைந்தன.
கரந்தையில் தமிழ்ப்புலமையும் தஞ்சை சிவகங்கைப் பூங்கா அரசினர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியத்தகுதியும் பெற்றுத் துரைசாமியார் தமிழாசிரியர் பணிக்குத் தம்மை முற்றிலும் தகுதியாக்கிக் கொண்டார். ஆசிரியப்பணி 1929 முதல் 1941 வரை வடவார்க்காடு மாவட்ட உயர்நிலைப் பள்ளிகள் பலவற்றில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். ஒளவை திருவத்திபுரத்தில் பணியாற்றிய போது ஒளவைத் தமிழகம் என்ற அமைப்பை நிறுவி, தனிமுறையில் தமிழ்பயிலும் மாணவருக்கு முறையாக இலக்கிய இலக்கணங்களைக் கற்பித்தார். அவர்களும் புகழ்பூத்த வித்துவான்கள் ஆயினர்.
1942 இல் திருப்பதி திருவேங்கடவன் கீழைக்கலைக் கல்லூரியிலும், 1943 முதல் 1951 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துறையிலும் தமிழ் – ஆராய்ச்சித் ஆராய்ச்சியாளராக அரும்பணியாற்றினார். 1951 சூலைத் திங்கள் முதல் மதுரைத் தியாகராசர் கலைக் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்து ஓய்வுபெறும் வரை அங்கேயே பணிபுரிந்தார் ஓய்வுபெற்ற பின்னரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஒளவையின் பணியைப் போற்றிக் கொண்டது.
பேராசிரியர் ஒளவைக்கு வாழ்க்கைத்துணையாக அமைந்தவர் திருமதி உலோகாம்பாள் அம்மையார். இவர்தம் மனைமாட்சி நன்கலமாக, திருவாளர்கள் ஒளவை நடராசன் திருநாவுக்கரசு, ஞானசம்பந்தம், மெய்கண்டான், நெடுமாறன் ஆகிய ஆண்மக்கள் ஐவரும், திருமதி பாலகுசம், மணிமேகலை திலகவதி, தமிழரசி ஆகிய பெண்மக்கள் நால்வரும் வாய்த்தனர். மக்கள் அவரவர் மேற்கொண்ட துறைகளில் சிறந்தனர்.
இவர்களுள், தாமரைத்திரு ஒளவை நடராசன் அவர்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் தமிழக அரசு உருவாக்கிய தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையின் முதல் செயலாளர், நாநலமிக்க பேருரையாளர் போன்ற பல்வேறு சீர்மைபெற்றவர் என்பதைத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறியும். நூலாசிரியர் தமிழ் மொழியின் உயர்நிலையில் உள்ள குறையை நிறைசெய்யவும் அதன் நூல் வளம் பெருகவும் நூல் இயற்றுவோர் ஒரு சிலரே அவ்வொரு சிலருள் பிள்ளை அவர்களும் ஒருவராவார். கதைகள், பாடநூல்கள், எளிய இலக்கியத் திறனாய்வுகள், புதினங்கள் போன்றவற்றை எழுதுவதில் அவர் பொழுதைப் போக்கவில்லை – அருந்தமிழ்ப்புலவர்களும் தனித்தமிழ் மாணவர்களும் படித்துப் பயன்கொள்ளத்தக்க இலக்கிய, சமய, வரலாற்று ஆராய்ச்சி நூல்களை ஆக்குவதே நோக்கமாகக் கொண்டார்.
ஒளவை அவர்கள் கரந்தைத் தமிழ் சங்கத்தில் ஆசிரியர் பணி ஏற்ற நாள் முதலே பல்வேறு தலைப்புக்களில் தமிழ்ப்பொழில், செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி முதலிய இதழ்களின் வழியே தமது கருத்தை வெளியிட்டு வந்தார். இதழ்களில் அவர்தம் ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றன. அந்தக் கட்டுரைகளை – சங்க இலக்கிய / இலக்க அறிமுகம், ஆராய்ச்சி / சங்கப்புலவர் / தமிழ் வேந்தர் / தமிழ்நாடு உரை விளக்கம் / ஆராய்ச்சி, பொதுக்கட்டுரை, சமயம் ஊர்ப்பெயர்வரலாறு / ஆராய்ச்சி / காப்பிய அறிமுகம் / ஆராய்ச்சி மொழிபெயர்ப்பு , அறிவுரைகள் என்னும் தலைப்புகளில் அடக்கலாம்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள், தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment