POST: 2021-10-18T09:51:28+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !

.
பகுதி – 23

அவ்வை நடராசன்

சிந்தனைக் கருத்தரங்கம்

மாந்தர்க்கு உறுதிப்பொருள்கள் நான்கு .

அறம் ,பொருள் ,இன்பம் ,வீடு என்றும் வீடுபேறு சிந்தையும் மொழியும் செல்லா நிலமைத்து என்று கூறி மூன்று பொருள் மட்டும் முழுமுதற்பொருள் என்றனர் .

பின்னர் அரசும் , அரசின் நாகரிக நல்வளர்ச்சியாக மக்களாட்சியும் மலர்ந்தது .

வாழ்வின் தேவைகள் உணவு ,உடை ,உறையுள் ,உழைப்பு ,
உரிமை ,மின்சாரம் ,ஊர்திகள் . பொருளாதாரம் என்று பலவாக விரிந்தன .

கல்வியே மக்களுக்குக் கண்ணாகவும் தனி முதன்மை பெற்றதாகவும் அமைந்தன .

கல்வி செழித்த நாட்டில் வாழ்வின் தேவைகளைக் கல்வியே பெற்றுத் தருவதாகவும் காண்கிறோம் .

கல்வி விரிந்த பார்வையையும் பரந்த மனப் போக்கையும் உருவாக்க வேண்டும் .

கல்வி கற்கும் மாணவப் பருவம் பல்வேறு அடுக்குகளைக்கொண்டது .

கற்றல் ,பழகுதல் ,பரிவோடு அனைவரையும் அரவணைத்தல் ,நாளும் புதியனவற்றை எண்ணுதல் ,கண்டுபிடித்த மறு கணமே அதனை வையகத்துக்கு உரிமையாக்குதல் ,என்று குறிப்பிடுகின்றனர் .

கல்வியின் பயனாக அமைந்ததே கேள்விச்செல்வம் .

இந்தக் கேள்விச்செல்வமே கருத்தரங்கத்திற்கு அடித்தளமாகும் .

கல்விக்கு எப்போதுமே நமது தமிழகம் முதன்மை அளிப்பது , கல்வி சிறந்த தமிழ்நாடு என்பது பாரதியாரின் தொடர் .

கல்விமுறை ஆசிரியருக்கும் – மாணவருக்கும் இடையில் ஓர் உறவை வளர்த்தது.

கல்விமுறை ஆசிரியர்களுக்கும் – மாணவர்களுக்கும் இடையில் நல்லுறவை வளர்த்தது .

அது ஆசிரியரை ஒரு முறையாகவும் , மாணவர்களை மிகக் கடுமையான ஒழுக்க விதிமுறைகளுக்கு உட்படுத்துவதாகவும் இருந்தது.

கி.மு. 700-ஆம் ஆண்டில் தட்சசீலத்தில் உலகின் முதல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

நாளந்தா பல்கலைக்கழகம் .கி.மு.4-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டு, உலகில் முதலில் உருவான சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது.

அந்நாளில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் நாளந்தா பல்கலைக்கழகம் 10,000 மாணவர்களையும், 2,000 ஆசிரியர்களையும் கொண்டிருந்தது. ,

நாளந்தா பல்கலைக்கழகம் சீனா,இந்தோனேசியா, கொரியா, ஜப்பான், பெர்சியா, துருக்கி போன்ற நாடுகளிலிருந்தும்
மாணவர்களையும் வல்லுநர்களையும் கவர்ந்திருந்தது.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், அறுவைச்சிகிச்சை , நுண்கலைகள், பொறியியல், உற்பத்தித் தொழில்நுட்பம், கட்டிடவியலும் கட்டிடக்கலையும், கப்பல் கட்டுதலும் கப்பலைச் செலுத்துதலும், போட்டிகளும்,விளையாட்டுகளும் ஆன பல்வேறு துறைகளுக்கும் உலகளாவிய அறிவுப் பங்களிப்பைச் செய்தனர் .

தமிழகத்தில் செழுங்கலை நியமம் என்ற சொல் இருந்தது .

அது காஞ்சியில் நடந்ததாகவும் ,அந்நாளிலேயே காஞ்சியில் பதினெண் மொழிகள் பேசுபவர்கள் இருந்தார்கள் என்று மணிமேகலை கூறுகிறது .

கலைஞர் ஒய் எம் சி ஏ வில் நடந்த மாணவர் கருத்தரங்கில் ஆற்றிய உரை உருவாக்கியது .

இனி கருத்தரங்க உரையைக் காணலாம் .

விடுதலை பெற்ற காலம் தொடங்கி இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் கல்வி மேம்பாட்டை முதன்மை நிலையில் வைத்தே செயற்பட்டு வருகின்றன.

கல்வி பெறுவதற்கு உள்ள வழிகளை ஏற்படுத்தவும், கல்வி தொடர்பான செயல்களில் பங்கேற்கவும், கல்வித் தரத்தை மேம்படுத்த உதவும் கல்விக் கொள்களையும், செயல்திட்டங்களையும் வகுக்கும் வகையில் அவ்வப்போது இந்திய அரசு பல குழுக்களை நியமித்தது.

அவற்றுள் முக்கியத்துவம் வாய்ந்த சில குழுக்களுள் பல்கலைக் கழக கல்விக்குழு (1948-49)
உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு (1952-53),
கல்விக்குழு (1964-66), ஆசிரியர்களுக்கான தேசியக் குழு I, II (1983-84) ஆகியவை அடங்கும்.

கல்விக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வரையப்பட்ட கல்வியின்பாற்பட்ட தேசிய கல்விக் கொள்கை ( 1968) எல்லா நிலைகளிலும் கல்வித் தரத்தை மேம்படுத்துதல், அறிவியல்,தொழில்நுட்ப வளர்ச்சி, அற, சமூக விழுமியங்களைப் பயன்படுத்துதல், கல்விக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் இடையில் உள்ள தொடர்பை மேலும் நெருங்கி வரச்செய்தல் ஆகியவைகளுக்கு தலைமையளித்தும் கல்விமுறையின் அடிப்படைக் கூறுகளில் சீர்திருத்தம் அவ்வப்போது தேவையான கருத்தை அனைவரும் முன்மொழிந்தனர் .

1986 /92 – இல் தேசிய கல்விக் கொள்கை வரையப்பட்ட காலத்திலிருந்து இந்தியாவிலும், உலகில் பெருமளவிலும் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

வலுவான, முன்னோக்குக் கொண்ட ஒரு கல்வி முறை தேவைப்படுகிற காலத்தை இந்திய அரசியல், சமூக,பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

தீர்மானிக்கிற விதத்தின்படி, சட்டரீதியான அடிப்படை உரிமையாக்குவதைக் கருதியேயாகும்.

இந்திய அரசியலமைப்பு விதி 21-A எதிர்நோக்கியதை நடைமுறைப்படுத்தியதான இலவச ,
கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் ( RTE) சட்டம், 2009, 6 வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையும், தன்னுடைய தொடக்கக் கல்வி நிறைவு பெறும் வரை அருகில் உள்ள பள்ளியில் இலவச, கட்டாயக் கல்வி பெறுவதற்கு உரிமை வழங்கியுள்ளது.

கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கல்விச் செயல்பாடுகளும், கற்றல் முறையும் வகுப்பறைகளுக்குள் மட்டுமே இனி நிகழ்வன அல்ல.

எனவே கல்வியின் பரப்பு முறைசார்ந்த பள்ளிக்கல்வி அல்லது உயர்கல்வி என்ற வரையறைக்குள் அடங்கா.

கல்விமுறை வகுப்பறையை அடிப்படையாகக் கொண்ட கலைத்திட்டம் வாயிலாக நடப்பது என்றில்லாமல், மின்னனு, அச்சு ஊடகங்கள் மூலமாகவும், தகவல் தொடர்புத் தொழில் நுட்பங்கள், நூல்கள்,பத்திரிகைகள் போன்றவற்றின் மூலமாகவும் நடக்கும்.

கற்போர் இன்று நிறுவனங்கள் அல்லாத வழிமுறைகளின் மூலம் நடப்பு அறிவைப் பெற வாய்ப்பு கொண்டுள்ளனர்,

அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள விரைவான புத்தறிவின் உருவாக்கமும் பயனாக்கமும், அதன் விளைவாக மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தாக்கமும்
விரைந்து மாறிவரும்

அறிவுலகைக் கற்போருக்கு அறிமுகப்படுத்த வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்துகிறது.

வளர்ந்துவரும் அறிவுப் பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றின் தேவைகளை எதிர்கொள்ளும், வாழ்க்கைத் திறன்களை உள்ளடக்கியதான, மானுடத் திறன்களை வளர்க்க வேண்டிய தகு நிலைக்கு மாறிவரும் திறன்களின் தேவைக்குத் தக்கவாறு திறன்களையும் , அறிவையும் கற்போர் வாழ்க்கை முழுவதுக்கும் தங்களைத் தகவமைத்துக் கொள்ளுகிறதான திறன்களைக் கற்றலை ஊக்குவிக்க வேண்டியிருப்பதை
மாணாக்கர்களையும் பட்டம் பெற்றவர்களையும் உருவாக்குகிறதாகவும், நாட்டின் வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டும் விரைந்து மாற்றம் கொள்ளும் உலகமயமாகிக் கொண்டிருக்கும் அறிவை அடித்தளமாகக் கொண்ட சமூகங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும் வெவ்வேறு பண்பாடுகளைக் கொண்ட இந்தியப் பரம்பரையின் மரபுகளையும், வரலாறுகளையும் மதிக்கும் வண்ணமும், சமூக ஒற்றுமையையும், சமய நல்லிணக்கத்தையும் கொண்டு பொறுப்பான குடிமக்களை உருவாக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.

மகாத்மா காந்தி,

“சரியான கல்வி என்பது என்ன என்று மக்கள் அறியாது இருப்பதுதான் உண்மையான இடர்பாடு,

நாம் நிலத்தை மதிப்பிடுவது போலவும், பங்குச் சந்தையில் உள்ள பங்குகளைக் கணக்கிடுவது போலவும்தான் கல்வியையும் மதிப்பிடுகிறோம்.

மாணவன் கூடுதலாகப் பொருளீட்டக் கூடிய ஒரு வகைக் கல்வியை மட்டும்தான் கொடுக்க விரும்புகிறோம்.

கற்றவர்களின் நடத்தையை உயர்த்தும் வகையை நாம் ஒருபோதும் சிந்திப்பது இல்லை” என்று கூறியுள்ளார்.

நம் தேசப் பிதாவின் கருத்துகளால் தூண்டப்பட்டு, இக் கொள்கை விழுமியங்கள், திறன்கள், ஆற்றல் ஆகியவற்றைப் பயிற்றுவித்து அதன் மூலம் நாட்டின் நலத்திற்குப் பங்காற்றுபவர்களாகக் குடிமக்களைப் பரிணமிக்கச் செய்யும்.

நாட்டின் நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சியும், முன்னேற்றமும் கல்விமுறையின் பயனாக வரும் தரமான மாணவர்கள் மேலேயே பெரிதும் சார்ந்துள்ளன.

அதனால், சமூக-பொருளாதாரத்தை வளர்க்கவும், ஒப்புரவு கொண்ட அறம்சார் மானுடச் சமுதாயத்தைக் கட்டவும் ஆகச் சிறந்த ஆற்றல் வாய்ந்த ஒரு கருவியாக தரமான, சமமான தளத்தின்மேல் உருவாக்கப்படும் கல்வியை இக்கொள்கை அங்கீகரிக்கிறது.

சமுதாயத்தை ஒருங்கிணைப்பதற்கு ஒரு வலுவான ஆற்றலாகவும், நாட்டு நலனில் அக்கறைகாட்டி விழுமியங்களை விதைத்துச் சமூக ஒருங்கிணைப்பை வளர்க்கும் கருவியாகவும் கல்வியை அடையாளம் காட்டுகிறது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் வாக்கிற்கிணங்க இந்தியக் குழந்தைகள் உலகளாவிய சிந்தனையும், இந்தியப் பண்பாடு, மரபுகளில் வேர் ஊன்றினவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையும் கொண்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை, 2016, எதிர்கால இந்தியக் கல்வி முன்னேற்றத்தைத் கருத்தில் கொண்டு ஒரு உருவம் பெற்றுள்ளது .

” தண்ணீரை விட்டு எடுத்தவுடன் எரிகின்ற பாஸ்பரசு போலவோ, காயவைத்த பின்னரே எரிகின்ற நனைந்த விறகைப் போலவோ இல்லாமல் எரித்தவுடன் எரிந்து உதவும் கற்பூரத்தைப் போல இந்நாட்டு இளைஞர்கள் இருக்க வேண்டும் . ”
– கலைஞர்
சென்னையில் நடந்த ஒய்.எம்.சி.ஏ. மாணவர் கருத்தரங்கில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை:

வேலையில்லாத் திண்டாட்ட ஒழிப்பே அரசின் முதற் கடமை

இரண்டாயிரம் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கென்று ஒரு திட்டத்தினைத் தீட்டி அது செயற்படுத்தப்படுகிறது.

அதற்காக இதுவரை ஆறாயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அவற்றில் இரண்டாயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு – கிராமப்புறங்களில் கிராமப் பணிகளில் ஈடுபடுத்தப்படவிருக்கிறார்கள்.

கிராம மக்களில் புறநகர்களில் வாழ்கின்ற பொது மக்களுக்குக் கல்விப்பணி, பொது நலப்பணி போன்ற பணிகளில் தொண்டாற்ற முன் வந்துள்ளனர் .

அவர்களுக்காக அரசு மாதம் ஒன்றுக்கு ஒருவருக்கு 175 வெண் பொற்காசுகள் அளிக்கவிருக்கிறது.

இப்பணம் அவர்கள் படித்த பட்டத்திற்குத் தகுதிக்குப் போதாது என்றாலும், படித்துப் பட்டம் பெற்று வீட்டில் வெறுமையாக அமர்ந்திருப்பதைவிட இதுபோன்ற பணிகளில் ஒரு கணிசமான ஊதியம் அளித்து அவர்களைப் பணிகளில் ஈடுபடுத்தி நாட்டுக்கும் வீட்டுக்கும் தனக்கும் நிறைவு அளிக்கக்கூடிய வகையில் இம்மூன்றுக்கும் பயன் தரக்கூடிய வகையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இது அரசின் சாதனைகளில் சேரா விட்டாலும் வேலையில்லாத திண்டாட்டத்தைப் போக்குவதில் காட்டும் ஆர்வத்திற்கு அடையாளமாக அமைகிறது .

அதுபோன்றே பள்ளியிறுதி வகுப்புவரை படித்த மாணவர்களுக்கென்று காவல் துறையில் ஒரு தனிப் பிரிவை உருவாக்கி அதில் அவர்களைச் சேரச் செய்த அவர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

அதுபோன்ற தொழில்நுட்பக் கல்வி படித்தவர்களுக்குக் கிராமங்களில் தொழில்நுட்ப நிலையங்கள் திறந்து கிராம மக்களுக்குப் பணியாற்றுவோருக்கு ரூ.3 ஆயிரம் வரை கடன் வழங்க வசதி செய்யப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற பணிகளை அரசு செய்வதால் அதன் சாதனைகள் பட்டியல் போட்டுக் காட்டுகிறது.

வேலையில்லாத திண்டாட்டத்தைப் போக்குவதில் அரசுக்கும் பொறுப்பு உண்டு என்றும் அரசின் கடமை என்றும் இதனைச் செய்கின்றது.

இளைஞர்களே ! நீங்கள் கற்பூரமாக எழவேண்டும் .

இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் மூன்று வகையாகச் சொல்லலாம்.

1. பாஸ்பரசு போன்று இருக்கலாம்.
2. கற்பூரம் போன்று இருக்கலாம்.
3. நனைந்த விறகு போன்று இருக்கலாம்.

இதில் பாஸ்பரசு தண்ணீரை விட்டு எடுத்தவுடன் தீப்பற்றிக் கொள்ளும்.

அதுபோல், தண்ணீரை விட்டு எடுத்த உடன் – கல்லூரியை விட்டு வெளிவந்தவுடன் பயன்படக்கூடியவர்கள்.

இவர்கள் பாஸ்பரஸ் வகையைச் சார்ந்தவர்களானால் சிலர் தண்ணீரில் இருக்கும்போதே – கல்லூரியில் இருக்கும் போதே – அளவுக்கு மீறிய உணர்ச்சியுடையவர்களாகக் காண்கிறோம்இவ்வாறு மாணவர்கள் இருப்பது நல்லதா ?

அடுத்து மூன்றாவதாக உள்ள நனைந்த விறகு போன்று காய வைத்துப் பின் எரிய வைத்தால் எரியும் தன்மையுடன் அதுவும் புகை நிரம்ப விட்டு எரியும் தன்மை உள்ள மாணவர்கள் இருப்பது நல்லதா ?
இரண்டுக்கும் மத்தியில் உள்ள கற்பூரம் போல் இருப்பதுதான் நல்லது !

எரிய வைத்தால் – நன்கு எரிந்து தெய்வத்துக்கு ஆராதனை செய்யக்கூடியவர்களாகச் சமுதாயத்திற்குப் பயன் கூடியவர்களாக இருக்க வேண்டுமா ? – என்று இம்மூன்றில் எது சிறந்தது என்று கேட்டால் கற்பூரமாக இளைஞர்கள் இருக்கவேண்டும்.

இவ்வாறு இளைஞர்கள் விளங்குவதை அமைதியை விரும்பும் எல்லாத் தலைவர்கள் கட்சிக்காரர்களும் விரும்புவர்.

மாநிலங்களின் அதிகாரத் தேவை பிரிவினை நோக்கமல்ல
இங்கு நடைபெறவிருக்கின்ற கருத்தரங்கில் கொடுக்கப் பட்டிருக்கிற தலைப்புகள் – மாநிலத்துக்கு அதிகாரங்கள். மொழிப்பிரச்சினை-மாணவர்களும் சமுதாயமும்-மாணவர்களும் அரசியலும் என்று நல்ல பல தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஆளுங்கட்சி கூறுகிறது.

நான் தேசிய வளர்ச்சிக் குழு மாநாட்டில் கலந்து கொள்வதற்காகத் தில்லி சென்றபோது, அங்கு என்னிடம் மாநிலத்துக்கு அதிக அதிகாரம் பற்றிச் சிலர் கேள்விகள் விடுத்தார்கள்.

மாநிலத்துக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்கிறீர்களே அதிக அதிகாரம் தேவை என்று ஆசைப்படுகிறீர்களா !

என்று என்னிடம் கேள்வி கேட்கப்பட்டது நான் சொன்னேன் ? தில்லி அதிக அதிகாரங்களைச் சுமந்துகொண்டிருக்கிறது.

அந்த அதிகாரச் சுமைகளை மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பரிவில்தான் கேட்கிறேன் என்று அங்குப் பதில் சொன்னேன்.

அப்படி என்னென்ன அதிகாரங்கள் வேண்டும் என்கிறீர்கள் ? என்று கேட்டார்கள் – அதற்கு நான் சொன்னேன்- பாதுகாப்பு, போக்குவரத்து, அந்நியச் செலாவணி போன்றவற்றைத் தில்லி வைத்துக் கொள்ளட்டும்.

மீதியை மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கட்டும் என்று கூறி அங்கேயே நான் அமைத்த இராஜமன்னார் குழு பற்றிய அமைப்பையும் விளக்கினேன்.

அதற்கென அமைக்கப்பட்ட இராஜமன்னார் குழு ஆய்ந்து தனது அறிக்கையைச் சென்ற 4,5 மாதங்களுக்கு முன்பு அளித்தது.

அவ்வறிக்கையை அறிஞர்கள், பல தலைவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் – பலர் படித்து அறிந்து, ஆய்ந்து தங்கள் கருத்தினைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இன்னும் பலரது கருத்துகள் வரவேண்டுமென்று நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்பது நாட்டில் பிரிவினைக்கு வித்திடுவதுதான் என்று சிலா கருதுவார்களேயானால், அது தவறு என்று கூறிக் கொள்ளக கடமைப்பட்டிருக்கிறேன்.

எங்களையெல்லாம் ஆளாக்கிய தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையைச் சீன ஆக்கிரமிப்பின்போது இந்திய மண்ணைச் சீனர் கொஞ்சம் கொஞ்சமாக மிரட்டிச் சுரண்ட கைப்பற்ற எண்ணும்போது – நாட்டின் பாதுகாப்பைக் கருதி இக்கொள்கையை விட்டு விடுகிறோம் என்று அதனை விட்டார்.

அன்றே நாங்கள் அந்தப் பிரிவினை வாதத்தை எடுத்து வைத்துவிட்டோம்.

ஆகவே, நாங்கள் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் கேட்பது- பிரிவினை நோக்கோடு என்று யாரும் கருதத் தேவையில்லை !

அடுத்து மொழிப் பிரச்சினையை எடுத்துக்கொண்டால்-நமது நாட்டுக்குப் பொது மொழி-இணைப்பு மொழி தேசிய மொழி எது என்பது பிரச்சினையாக இருந்து வருகிறது.

அது பற்றியும் நீங்கள் இங்கு இந்தி அல்லது ஆங்கிலமா என்று விவாதிக்க இருக்கிறீர்கள்.

1937-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக 67 வரையிலே இங்கு நடந்து வந்த மொழிப்போர் நிகழ்ச்சிகள் மறந்து விடுவதற்கில்லை.

அதற்காகத் தேக்கு மரத் தேகத்தைத் தீ நாக்குக்காகச் சொந்தமாக்கியவர்கள் – காராக்கிருகத்தில் நுழைந் தவர்கள் – சித்திரவதையை ஏற்றவர்கள் ஏராளம் என்று மொழிப்போர் வரலாறு தெரிவிக்கிறது.

இதனை நன்குணர்ந்து அதுபற்றி – மொழிப்பிரச்சினை பற்றி நீங்கள் நன்கு ஆராய வேண்டும்.

தமிழன் தாய்மொழியில் படித்தவன்-ஆங்கிலத்தின் துணையில் கல்வி பயின்றவன்.

இந்தி இந்நாட்டின் பொது மொழி என்றால் அவனுக்குக் கிடைக்கிற வாய்ப்பு-வசதி-பெருமை குறைய ஏதுவாகிறது – அல்லது கிடைக்காமலேயே போய்விடும் ஆனால், இந்தி படிக்காதவனுக்குத்தான் அவற்றின் வாய்ப்பு பெருமைகள் கிடைப்பதில் முதலிடம் தரப்படும்.

இதனை நீங்கள் இந்தக் கருத்தரங்கில் ஆய்வு செய்ய வேண்டும்.

அடுத்ததாக மாணவர்களுக்கு அரசியல் தேவையா ஆராயப் போகிறீர்கள் பல்லாண்டுக் காலமாக அறிஞர்கள், மாணவர்கள் அரசியலைத் தெரிந்து கொள்ளலாம் அதில் முழுமையாக ஈடுபடக்கூடாது என்கிறார்கள்.

இங்கே பேசிய டாக்டர் மெ.சுந்தரம் அவர்கள் கூறியது போல் மாணவர்கள் அரசியலைத் தெரிந்து கொள்ளலாம்.

அதில் ஈடுபடக்கூடாது என்ற கருத்தே மேலோங்கியிருக்கிறது.

இருந்தும் அரசியல் கட்சிகளில் மாணவர்கள் பங்கு பெறாமல் இல்லை .

இதற்காகத்தான் நாங்கள் சொல்கிறோம்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூடிப் பேசி இதுபற்றி நல்ல முடிவெடுக்கலாம் என்று! -இதை இன்று சொல்லவில்லை.

அன்றே 1958-ஆம் ஆண்டு சட்டமன்றத்திலே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது – அப்போது கல்வி அமைச்சராக சி.சுப்பிரமணியம் அவர்கள் இருந்தபோது – அண்ணா அவர்கள் – மாணவர்கள் அரசியலில் ஈடுபடவேண்டாம் என்பது பற்றி அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூடி முடிவெடுப்போம், அந்த முடிவினை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

அதைவிட்டுத் தம்மைத் தவிர மற்றவர்கள் மாணவர்களைப் பயன்படுத்துவது நல்லதல்ல – என்று சொல்வது சரியல்ல என்றார்கள் – அதனால் அப்போது அது நடைபெறாமல் போய்விட்டது.

இன்றும் நாங்கள் சொல்கிறோம் – அனைத்துக் கட்சிகளும் கூடிப் பேசத் தயாரானால் அது பற்றி நல்ல ஒரு முடிவினை எடுக்கலாம்.

எனவே, மாணவர்கள் அரசியலை உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆனால், தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டாம், என்று கூறுகிறோம்.

மாணவர்கள் சமுதாயத் தொண்டில் தம்மை ஆளாக்கிக் கொள்ளவேண்டும்.

சமுதாயம் அவர்களிடத்தில் மிகவும் எதிர்பார்க்கிறது.

மாணவர்கள் சமுதாயத்தைத் திருத்தி அமைத்திடப் பாடுபட வேண்டும்.

அவர்கள் அதற்குத் தக்கபடி தங்கள் பாடங்களைப் படித்து அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பண்டைய காலத்தில் குருகுலம் என்ற முறையிலிருந்தது அதுபோல் குரு இருக்கும் இடத்திற்கே சென்று காலையிலிருந்து மாலைவரை – தன் குருவுக்குக் கால் பிடித்து, உடம்பு பிடித்துவிட்டுத் துணி வெளுத்துப் படிப்பதிலேயே கல்விக் காலம் கழிந்தது.

அது மட்டுமின்றித் தனக்கு ஏற்ற மாணவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கல்வி புகட்டுவதாகவும் அன்றைய கல்வி இருந்தது.

துரோணாச்சாரியாரிடம், ஏகலைவன் கல்வி பயில விரும்பி கற்க வில்வித்தை பயில விரும்பி அவரைக் கல்வி புகட்டுங்கள் என்று விரும்பி வேண்ட அவர் மறுத்தார்.

பின் ஏகலைவன் அவரைப்போல் சிலை செய்து வைத்து அதன் முன் வில்வித்தையைக் கற்றுத் தேர்ந்தான்.

அதற்கும் துரோணாச்சாரியார் காணிக்கை கேட்டார். ஏகலைவன் என்ன காணிக்கை வேண்டும்.

எதையும் தரத் தயாராக இருக்கிறேன் என்றதும்-வில்லிலே நாணை வைத்து நாணை ஏற்றி விடுவதற்கு மிகவும் துணைபுரியும் கட்டை விரலை அவர் காணிக்கையாகக் கேட்டார்.

அவன் அதனை அவர் கேட்டபடியே கட்டை விரலைத் தந்தான் என்று புராணம் கூறுகிறது.

இது புராணக் காலத்துக் கல்வி – பழங்காலத்துக் கல்வி மாணவர்கள் ஆசிரியரோடு தோழமையோடு கற்கும் உயரிய புதுமுறைக்கல்வி இப்போது நடைமுறையில் உள்ளது .

ஒரு காலத்தில் மாணவர்கள் நின்றபடி இருந்தார் .ஆசிரியரும் நின்றபடியே பாடம் நடத்தினார் .

பிறகு மாணவர்கள் அமர்ந்திருந்தனர் .ஆசிரியர் நின்றபடி பாடம் நடத்தினர் .

மாணவர்கள் சமுதாயத்திற்குப் பயன்படத்தக்க விதத்தில் கல்வி பயின்று சிறப்புற வேண்டும்.

அதற்கு இதுபோன்ற கருத்தரங்குகள் பயன்பட வேண்டும்.

நன்றி :

முரசொலி, 7.9.1971

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *