POST: 2021-10-24T10:38:06+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 80

கவிக்கோவின் கவிதை மகுடம்

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர்,
மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

எந்தையார் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை முடித்துத் தஞ்சை, தில்லி சென்று விட்டுத் தமிழ் உரையாளராகச் சேர்ந்து மதுரை கருமுத்து தியாகராசர் கல்லூரியை படைவீடாக – பாசறையாகப் – பாடும் பறவைகளின் கூடாகப் – பகுத்தறிவுச் சிந்தனை மாடமாகத் தகத்தகாயமிடச் செய்து கொண்டிருந்தார்.

அப்பாவின் நண்பர்களான இலக்கியக் கேணி இ.சு.பாலசுந்தரம், அலுவலில் இருந்தாலும் அந்தி வந்தால் சேர்ந்துகொள்ளும் நண்பர் அந்தோணிசாமி மற்றும் அப்பாவின் மாணவர்களான
கவிக்கோ அப்துல் ரகுமான் (09.11.1937 – 02.06.2017),
கவியரசர் மீரா இணைந்த ‘ஐவருலா’ மதுரையில் பெயர் பெற்ற இலக்கிய, கவிஊர்வலமாகும் என்று என் சித்தப்பா மருத்துவத் திலகம் மெய்கண்டார் அடிக்கடி என்னிடம் சொல்லி மகிழ்வார்.

அதுவும் சிறப்பாக
ஆற்றங்கரையில், அரசமரத்தடியில், திலகர் திடலில், திரையரங்குகளில் எப்போதும் கனவுகளிலும் கவிதைகளிலும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் போக,

அடுத்த அணிவகுப்பாகக்
கவியரசர் நா. காமராசன், கலைமின்னல் டாக்டர். கா. காளிமுத்து, கவியரசர்கள் மேத்தா, அபிபுல்லா, சாகுல் அமீது ( இன்குலாப்) தொடர்ந்தார்கள்.

அப்பாவின் அறைக்கதவில் (பச்சையப்பர் கல்லூரி விடுதி (1955-1958) வரிகள் வரலாற்றுப் பொன்வரிகளாகும்.

கனவுகளே வாழ்க்கை !
கவிதைகளே வேட்கை !

நான் இளங்கலை தமிழிலக்கியம் (1985 – 1988) மாநிலக் கல்லூரியில் பயிலும் முன்னரே கவிக்கோவின் அறிமுகம் வாய்த்தது புதுமையன்று;

எங்கள் உறவினர் போல என் மீது பரிவு காட்டிய பெருந்தகையாவார்.

கவிக்கோவின் புலமை ஆழமானது, திறமை விரிவானது. கற்பனையீர்ப்புத் திறம் கூர்மையானது.

இயைபுத் தொடையை அடுக்கிக்காட்டும் அழகு அவருக்கு அற்புதமான வரமாகும்.

கவிக்கோவின் தந்தையர் தத்துவக் கவிஞராவார்.

கலீல் கிப்ரானும், இராபர்ட் பிராஸ்டும் கைகுலுக்கிக் கொள்ளுகிற கவிக்கோவின் எழுத்துச் சமவெளிகளில் அவர் சொன்னவற்றை விடச் சொல்லாமல் விட்டவைகளில் அவர் அதிகமாகக் காணப்படுவதே கவிக்கோவின் மகுட வெற்றியாகும்.

கவிக்கோவைப் பற்றி ஒவ்வொரு கூட்டத்திலும் ஞானபாரதி வலம்புரி ஜான் சொன்ன வரிகளை நான் மனப்பாடமாகப் பலவிடங்களிலும் நண்பர்களிடமும் சொல்லி கைதட்டல் பெறுவேன்.

வானமே !
உனது எல்லைகளை அகலமாக்கு !
எங்கள் காலப்பறவையின் ஒளிச் சிறகுகளில்
உன் சூரியப் பொட்டை ஒரு முறை சரி பார்த்துக்கொள்!

“அப்துல் ரகுமான் வருகிறார்! எல்லோரும் எழுந்து நில்லுங்கள்;
இல்லாவிட்டால் உங்களைக் கண்டு கொள்ளாமலேயே நடந்து விடப் போகிறார்”

03.07.1986-இல் என் கண்ணும் காதும் பதித்த கருத்துக் கோவையில்

ஒரு நாள் எனக்கும் வானத்திற்கும் போட்டி நடந்தது.

நான் புன்னகையை எடுத்து வைத்தேன்

அது வைகறையை எடுத்து வைத்தது

நான் கண்ணீரை எடுத்து வைத்தேன்

அது மழையை எடுத்து வைத்தது

நான் வியர்வைத் துளிகளை எடுத்து வைத்தேன்

அது நட்சத்திரங்களை எடுத்து வைத்தது

நான் கோபத்தை எடுத்து வைத்தேன்

அது வெயிலை எடுத்து வைத்தது

நான் காதலை எடுத்து வைத்தேன்

அது நிலவை எடுத்து வைத்தது

நான் எண்ணங்களை எடுத்து வைத்தேன்

அது மேகங்களை எடுத்து வைத்தது

நான் எழுத்தை எடுத்து வைத்தேன்

அது மின்னலை எடுத்து வைத்தது

இறுதியில் நான் புதுப்புது இலட்சியங்களை நோக்கி நடக்கும்
என் பாதங்களை எடுத்து வைத்தேன்

வானம் தோற்றது

இவருடைய கவிதைகளைப் படித்தால் மீண்டும் படிக்க வேண்டும் என்ற உணர்வை தீரா வேட்கையை உருவாக்கும்.

நான் பள்ளி இறுதி வகுப்புக் காலத்திலிருந்து ஜூனியர் விகடன் இதழில் 1983 முதல் பல வாரங்கள் அவர் எழுதிய பகுதிகளைக் கத்தரித்துத் தனியாக தொகுப்பாகக் கட்டமைத்து வைத்திருந்தேன்.

கவிக்கோவின் வார்த்தைக் கொள்கை:

“உலகத்தில் நான் மிகவும் பயப்படுவது சொற்களுக்குத் தான். அதிகமாக காதலிப்பதும் அவைகளைத் தான்.

சொற்களைப் பொறுத்தவரையில் நான் ஒரு கருமி”

கவிக்கோ பலரைக் கலைஞராக உருவாக்கியிருக்கிறார்.

அவரே சொல்வார் “

கவிதைகளை உருவாக்குவதை விடக் கவிஞர்களையே உருவாக்குவது எவ்வளவு இனிமையான அனுபவம்.”

அவருடைய மாணவர் அரங்கநாதனாலே ஆக்கப்பட்ட கவிதைதான்,

“சுதந்திரம் இரவிலே வாங்கினோம்.
விடியவே இல்லை”
என்பதாகும்.

“என் வாழ்க்கை, என் உணர்வுகள், என் எண்ணங்கள் இவைகள் தாம் நான்.

இவைகளை இந்த உலகத்திலிருந்து தான் நான் எனக்குப் பெற்றேன்.

பெற்றதை நான் திருப்பித் தந்துவிட விரும்புகிறேன்.

ஏனென்றால் நான் கடனாளியாக இருக்க விரும்பவில்லை.

என்னைச் சில்லறையாக மாற்றி, என் கவிதைகளில் கொஞ்சம் கொஞ்சமாகத் தந்து கொண்டிருக்கிறேன்.

அவருடைய நுட்பமான கவிதை வரி

தமிழிடம் அதன் முகவரி கேட்டேன்.

மேற்பார்வை கலைஞர் மு. கருணாநிதி என்றது.

ஒருமுறை அறிஞர் பா.செயப்பிரகாசத்தை மாணவராக என் அப்பாவிடம் பயின்றபோது கவிக்கோவிடம் தம்பியைத் தெரியாதா?

கல்லூரியை தூள் பரப்பிக் கொண்டிருக்கிற இளஞ்சிறுத்தையாவார்.

பச்சைத் தீக்குச்சிகள் என்று நினைக்காதீர்கள்.

பற்றி எரியும் அக்கினிக் குஞ்சுகள் என்ற அறிமுக வரிகள் தனக்கு அமுத வரிகள் என்று நெகிழ்ந்து புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

மதுரைக்கிழக்கு எல்லையில் தியாகராசர் கல்லூரிக்கு, நாள்தோறும் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடையாய், பழனி பாதயாத்திரை பக்தர்களை விட கல்லூரி வகுப்புகளில் நடந்தது தான் அதிகமாகும்.

அப்பா அன்றன்று புதிது புதிதாய் நகைச்சுவை வெடிகளும், கவிதை மத்தாப்புக் கொளுத்துவதை வீதியில் போவோர் வருவோர் வேடிக்கை பார்க்கும் விதத்தில் நண்பர் படை விழுந்து விழுந்து சிரிப்பார்களாம்.

கல்லூரியில் அப்பா ஏதாவது சொல்ல அதற்கு எதிரும் புதிருமாய் இரகுமான் கவிதை மணங்கமழும் பதில் சொல்வாராம்.

பக்கத்தில் சுலைமானென்று ஒரு ஊர். அதைச் சிற்பி செதுக்காத சிலைமான்

என்று சுவையாகச் சொல்லிக்காட்டுவது அப்பாவின் இயல்பாகும்.

அப்போது சொன்ன ஊர்கள் சில

என் ஊர், யாரும் எடுத்து விளையாடாத ‘கம்பம்’,

யாரும் கலக்காத ‘பெரிய குளம்’,

ஈ மொய்க்காத ‘கருப்பட்டி’,

பசிக்குதவாத ‘பன்ரொட்டி’,

பாடாத ‘தேவாரம்’,

கொட்டாத ‘தேனீ’,

சிவக்காத ‘கோவை’,

சிக்காத ‘பசும்பொன்’

என்று இரகுமானும், மீராவும் அடுக்கி அடுக்கி மகிழ்ந்தனர்.

கவிஞர் இரகுமான் ஆற்றிய சீவகசிந்தாமணி, திருக்குறள் தொடர் சொற்பொழிவுகள் பெயர் பெற்றவையாகும்.

கவிஞர் மீரா குறிப்பிட்ட வரி:

“ஒளவை நடராசன் பேச்சு, அனைவரையும் வளைத்துப் போடும்; பேச்சில் முதல் 5 நிமிடம் கிறங்கிப் போவார்கள். பிறகு கூட்டம் முடியும் வரை சுருண்டுக் கிடப்பார்கள்.

அந்தப் பாணியைக் கவிதையில் அப்படியே கொண்டுவந்து நிறுத்தும் ஆற்றல் இரகுமானுக்கு இருந்தது.

நெருக்கடி நிலையின்போது கம்பன் விழாக் கவியரங்கத்தின் புகழ்பெற்ற கவிக்கோவின் வரலாற்று வரிகள்,

“வரங்களே சாபங்கள் ஆகுமென்றால், இங்கே தவங்கள் எதற்காக?”

கவிக்கோ எந்தப் பொருளிலும், பல்வேறு உருவகங்களைக் காட்டுவது வழக்கம். அவருடைய நூல்கள் தலைப்பே புதுமையாக பொலியும்…

மின்மினிகளை வால் சிமிட்டும் வசீகரங்கள், அகிம்சை நெருப்பு, அழகிய தீப்பொறிகள், மினி நிலா, ஒளித்துளி, வசீகர பிரளயம், சலவைக்கல் சங்கீதம், சோக சௌந்தரிய சொப்பனம், சலவை மொட்டு, வெள்ளை மொட்டை, மார்க்கண்டேயப் பூக்கள்.

கவிக்கோவின் கல்வெட்டு வரிகள் இங்கே காணலாம்.

“எழுகின்ற போதும் இளங்கதிர் போல எழுந்தவன் நீ!

அழுகின்ற போதும் மேகம் போல் அழுதவன் நீ!

தொழுகின்ற போதும் அறிவையே தொழுதவன் நீ!

விழுகின்ற போதும் விதையைப் போல் விழுந்தவன் நீ!”

இக்கவிதையில் பேரறிஞர் அண்ணாவின் அறம், அறிவு, அன்பு, அரசியல் அமிழ்ந்து கிடப்பதைக் காணலாம்.

கவிக்கோவின் நீடுபுகழைப் போற்றும் வண்ணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தெருவிற்கு ‘கவிக்கோ சாலை’ என்றே பெயர் சூட்டியிருப்பது பெருமிதம் கொள்ள வைக்கிறது.

தமிழகத்திற்குக் கிடைத்த இரண்டாம் கலில் கிப்ரானாகவே மதிக்கப்படும் கவிக்கோவின் பெரும்புகழ் நின்று நிலவுவதாக.

———————————————————
பேராசிரியர் கு. ‘சிவமணியின்

ஔவையும் புலமையும்’ – (4)

1938 இல் ஐங்குறுநூறு மூலமும் முதலாவது மருதத்திணை உரைவிளக்கமும் என்னும் சங்கத் தமிழ்நூல் வெளியாயிற்று.

ஒளவையும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமும்
1939-இல் வடவார்க்காடு மாவட்டக் கல்வி அலுவலராக இருந்த திருவாளர் சச்சிதானந்தம் பிள்ளை அவர்கள் அப்போது உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒளவை அவர்களின் புலமைநலத்தைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகச் செயலாளர் தாமரைத்திரு சுப்பையா பிள்ளையிடம் எடுத்துரைத்து அவரைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பரிந்துரைத்தார்.

அதன் விளைவாக ஒளவையின் நல்ல பல நூல்கள் கழகத்தின் வாயிலாக வெளிவந்தன.
1
ஐங்குறுநூறு ( மருதத்திணை ) உரை
– 1938
2
சீவக சிந்தாமணிச் சுருக்கம்
– 1941
3
சிலப்பதிகாரச் சுருக்கம்
– 1942
4
சிலப்பதிகாரஆராய்ச்சி
– 1942
5
மணிமேகலைஆராய்ச்சி
– 1942
6
மணிமேகலைச் சுருக்கம்
– 1943
7
யசோதரகாவியம், மூலமும் உரையும்
– 1944
8
திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை
– 1945
9
திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை; ஞானவுரை
– 1945
10
புறநானூறு – முதற்பகுதி
– 1947
11
தமிழ்நாவலர் சரிதை, மூலமும் உரையும்
– 1948
12
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
– 1949
13
பதிற்றுப்பத்து உரை
– 1950
14
புறநானூறு – இரண்டாம் பகுதி
– 1951
15
சிவஞானபோதச் செம்பொருள்,
– 1953
16
சிவஞானபோத மூலமும் சிற்றுரையும்
– 1953
17
ஐங்குறுநூறு ( மூன்று பகுதிகள் )
– 1957
18
நற்றிணை ( இரு பகுதிகள் )
– 1966
19
சூளாமணிச் சுருக்கம்
– 1970
20
சைவ இலக்கிய வரலாறு
– 1978
21
திருவருட்பா – பேருரை (10 தொகுதிகள்)

22
சேரமன்னர் வரலாறு

23
வரலாற்றுக் காட்சிகள்

24
நந்தாவிளக்கு

25
ஒளவைத்தமிழ்

26
தமிழ்த் தாமரை

27
பெருந்தகைப் பெண்டிர்

28
மதுரைக்குமரனார்,

29
பரணர்,

30
புதுநெறித் தமிழ் இலக்கணம் (மூன்று பகுதிகள்)

31
மருள்நீக்கியார் (நாடகம்)

32
ஊர்ப்பெயர் வரலாற்றாராய்ச்சி

திருவள்ளுவர் ஆராய்ச்சி குறித்த அறிமுகம்
இவற்றுள் சமண சமய இலக்கியமாகிய யசோதர காவியம் ஓலைச்சுவடியைக் கழகச் செயலாளர் திரு.திருவரங்கர் அப்போது திருப்பதியில் பணிபுரிந்து வந்த ஒளவை அவர்களுக்கு அனுப்பி வைத்தார்.

அதனுடன் வேறு இரு ஓலைச்சுவடிகளை ஒப்பு நோக்கிச் செப்பம் செய்ததுடன் நூலுக்கு அழகான தெளிந்த உரையையும் வரைந்துள்ளார்.

சீவக சிந்தாமணிச் சுருக்கம்
கதைப்போக்குக் கெடாமல் இனிய செய்யுள்களைத் திரட்டிக்கோத்து இடையிடையே விடுக்கப்பட்ட செய்யுள்களின் தொடர்பைச் சுருக்கமாக ஆங்காங்கே எளிய உரைநடையில் எழுதிச் சேர்த்து, செய்யுள்கள் சீர், கடின சந்தி பிரித்தும் உரிய தலைப்புகளுடன் ஒவ்வொரு பக்கத்திலும் அடியில் தெளிவான உரைக் குறிப்புகளும் விளக்கமான ஓர் ஆராய்ச்சி முன்னுரையும் வரைந்து, 376 பக்கத்தில் இந்நூல் பதிக்கப்பெற்றது.

நச்சினார்க்கினியர் உரையோடு சீவக சிந்தாமணியைப் பயில்வார்க்கு இச்சுருக்கநூலும் உரையும் நன்கு பயன்பட்டன.

அக்காலகட்டத்தில் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் மணிமேகலையின் முதல் இருபத்தாறு காதைகளுக்கு மட்டுமே உரையை முடித்து, உடல்நலக் குறைவால் மேற்கொண்டும் அப்பணியைத் தொடரவியலாத நிலையில், புத்த சமயக் கோட்பாடுகளும் தருக்க நெறிமுறைகளும் நிறைந்த மணிமேகலையின் கடைசி நான்கு காதைகளுக்கும், ஆசிரியர் நாவலர் நாட்டார் விரும்பியவாறே மாணவர் ஒளவை உரை எழுதி நிறைவு செய்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது சைவ சமய வரலாறு எனும் நூலும், ஞானாமிர்தம், ஐங்குறுநூறு ஆகியவற்றின் உரை நூல்களும் பல்கலைக்கழக வெளியீடாக உருப்பெற்றன.

நற்றிணை விரிவான விளக்கத்துடன் இரு பகுதிகளாக வெளிவந்தது.

பொள்ளாச்சி அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களின் பரிவார்ந்த உதவியுடன் வடலூர் இராமலிங்க வள்ளலாரின் திருவருட்பா முழுவதற்கும் எளிய இனிய உரை வரைந்துள்ளார்.

அது சித்தாந்த கலாநிதி என்னும் மணிமுடியை அழகு செய்யும் மாணிக்கம் எனில் மிகையன்று.

மகேந்திரவர்மப் பல்லவனின் வடமொழி ‘மத்தவிலாசப் பிரகசனம்’ ஒளவையின் கைவண்ணத்தால் தமிழாக்கம் பெற்றது.

தமிழ்நாட்டு ஊர்ப் பெயர் வரலாற்று ஆராய்ச்சியும் ஏடுகளில் எழுதிய எண்ணற்ற கட்டுரைகளும் மாநாடுகளில் முழங்கிய ஆய்வுரைகளும் ஒளவை அவர்களின் விழுமிய புலமைநலத்தைப் பறைசாற்றுகின்றன.

அகநானூறு, குறுந்தொகை, தணிகைப் புராணம், தொல்காப்பியம் சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவற்றிற்கு வரைந்துவைத்த அரிய குறிப்புக்கள் உரைவடிவம் பெறவில்லை.

புலமைப்பேறு
ஆர்வத்தினால் தாமாகவே தமிழ் கற்கும் முயற்சியையும் கைக்கொண்ட துரைசாமியார், அறிஞர் பயிற்சியையும் தமிழுக்குக் பெருமக்களை அடுத்து முறையாகத் தமிழ் கற்க வேணவாக் கொண்டார்.

அக்காலகட்டத்தில் கலங்கரை விளக்கமாக மதுரைத் தமிழ்ச்சங்கமும் ,தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கமும் திகழ்ந்தன.

இரண்டுமே தமிழ்த் தொண்டினைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் அவற்றின் நோக்கமும் போக்கும் வெவ்வேறாக அமைந்தன.

இந்த இரண்டில் ஒன்றைத் துரைசாமியார் தேர்வுசெய்ய வேண்டும்.

மதுரைத் தமிழ்ச்சங்கம்
1901 இல் பாண்டித்துரைத் தேவரால் மதுரையில் தோற்றுவிக்கப்பட்டது.

தமிழின் தொன்மை, தோற்றம், தமிழர் பண்பாடு, கலை, நாகரிகம் முதலியவற்றின் வேர்களை வடமொழியாகிய சமற்கிருதத்தில் தேடிக்காண முயன்றது.

ஸ்ரீமான், ஸ்ரீமதி, அக்ராசனாதிபதி, காரியதரிசி, பொக்கிஷதார் போன்ற வடமொழிச் சொற்களை விடாப்பிடியாக வழக்கில் கையாண்டது.

அதனுடைய திங்கள் இதழ் செந்தமிழ்.

பிரவேச பண்டிதம் –
பால பண்டிதம் –
பண்டிதம்

என்னும் மூன்று தேர்வுகளை ஒவ்வோர் ஆண்டும் மதுரை, திருச்சி, சென்னை ஆகிய மூன்று இடங்களில் நடத்தியது;

மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்காகச் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலையைத் தோற்றுவித்து, அதில் சேர்ந்து பயிலும் மாணவர்க்கு உணவும் உறையுளும் வழங்கியது;

பண்டிதத் தேர்வுக்குரிய பாடங்களாக, தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களும், எட்டுத்தொகை நூல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, திருக்குறள், பெரியபுராணம், கம்பராமாயணம், திருவிளையாடற்புராணம் ஆகிய இலக்கியங்களும் இருந்தன;

இவை தவிர, கட்டுரை எழுதுதல், செய்யுள் இயற்றுதல் ஆகியவையும் உண்டு.

இக்கல்லூரியில் சேர்ந்து ஒவ்வொரு தேர்வுக்கும் 2 ஆண்டுகள் படிக்க வேண்டும்.

கல்லூரியில் சேராமல் தனிமுறையில் பயின்றும் இத்தேர்வை எழுதலாம்;

இதனைப் பயன்படுத்திப் பலர் பண்டிதர் ஆனார்கள்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *