POST: 2021-10-26T10:12:57+05:30

இன்கவியருவி புகழ் வெல்க !

கவிஞர் இரவிபாரதி அவர்கட்கு வணக்கம் .

தாங்கள் மாலைமலர் நாளிதழில் எழுதிய
கவியரசு கண்ணதாசன் பற்றிய தொடர்
கட்டுரையைக் கண்டேன் .

தங்கள் புலமையும் – அரசியல் பெருமிதமும்
என்றும் போற்றுதற்குரியன .

காலம் எப்படியோ நகர்ந்தபடியே உள்ளது .

தங்கள் மனம் பலரை வாழ்விக்கும் மனம் .

வாழ்த்துக்கள் ! .

அன்போடு

ஒளவை நடராசன்

மாலைமலர் – 9 .10.2021 –
பக்கம் எண் : 7

“ கண்ணதாசனின் அமெரிக்க பயணம் ”

நடக்கும் என்பார் நடக்காது…
நடக்காது என்பார்… நடந்து விடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது…
கிடைக்காது என்பார்…. கிடைத்து விடும்… !
-தாயை காத்த தனயன் படத்தில் கண்ணதாசன் .

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பல்வேறு தமிழ் அமைப்புகள் இயங்கி வருகின்றன.

அவற்றுள் “டெட்ரஸ்ட்” வட அமெரிக்கத் தமிழ் சங்கமும் ஒன்று.

1981 ஆம் ஆண்டு ஜூலை 3, 4, 5 ஆகிய மூன்று நாட்களில் அமெரிக்க வாழ் தமிழர்களால் மிகச் சிறப்பான முறையிலே அந்த மாநாடு நடைபெற்றது.

அப்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களையும், அரசவைக் கவிஞராக இருந்த கண்ணதாசனையும், தமிழறிஞர் அவ்வை நடராசனையும் உலகம் சுற்றும் தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனையும் அந்த மாநாட்டில் பங்கேற்க அழைத்திருந்தார்கள்.

வெளிநாடு செல்வதென்றால் மிகுந்த ஆர்வம் காட்டுகிற கண்ணதாசன் ஏனோ இந்த முறை புறப்படுவதற்கு மிகுந்த தயக்கம் காட்டினார்.

முதல்வராயிருந்த எம்.ஜி.ஆர். மிகவும் வற்புறுத்தியதால் இறுதியில் இசைந்தார்.

அமெரிக்காவைக்
காண்பதிலே ஆசையிருந்தாலும் உடல்நிலை அதற்கு இடம் கொடுக்க வேண்டுமே ?

அவரவர் உடல் நிலைமையின் தன்மை அவரவர்களுக்குத்தானே தெரியும்.

தன் மீது மிகுந்த பாசமும் நேசமும் கொண்டிருந்த அரசு நாச்சியப்பனை உடன் அழைத்துக் கொண்டார் கண்ணதாசன்.

ஜூலை ஒன்றாம் தேதி அன்று பம்பாய் சென்று அங்கிருந்து நியூயார்க் விமானத்தைப் பிடித்து ஏறக்குறைய 23 மணி நேரம் பயணித்து நியூயார்க் விமான நிலையத்தில் போய் இறங்கினார் கண்ணதாசன்.

இடையிலே லண்டன் விமான நிலையத்தில் இறங்கி சற்று ஓய்வெடுக்கலாம் என்றால் அதற்கு அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

உடம்பும், உள்ளமும் களைத்துப் போயிருந்தன.

பயணக் களைப்பு மிகுதியாக இருந்தது.

புறப்படுவதா? இல்லையா? என்று கடைசி வரை யோசித்துக் கொண்டிருந்ததால் எவருக்கும் முன் கூட்டியே தெரிவிக்காமல் இருந்து விட்டார்.

எனவே நியூயார்க் விமான நிலையத்தில் கண்ணதாசனை வரவேற்க யாரும் வரவில்லை.

கண்ணதாசனை அடை யாளம் கண்டு கொண்ட ராமமூர்த்தி என்பவர் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அடுத்த நாள் டெட்ராய்டு நகரில் நடைபெற உள்ள தமிழ்ச்சங்க மாநாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தார்.

டெட்ராய்ட் விமான நிலையத்திற்கு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் டாக்டர் மாதவனும், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும், வெங்கடேஸ்வரனும் நண்பர்களும் கவிஞரை புடைசூழ வந்து வரவேற்றார்கள்.

கவிஞரை நல்ல வசதியான நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்கள்.

போகிற வழியில் இயற்கை அழகு கொஞ்சும் எழில்மிகு காட்சிகளை கண்டு ரசித்தபடி சென்றார் கண்ணதாசன்.

ஒவ்வொரு வீடும் பரந்து விரிந்த ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்தது.

தேடுவதற்கு தேவையில்லாத அளவுக்கு தண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது.

வீட்டைக் கூட்டி மெழுகினாற்போல சாலைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருந்தது.

ஒரு சிறு துளி ஓசை கூட எழுப்பாமல் கார்கள் சாரை சாரையாக சென்று கொண்டிருந்தன.

மொத்தத்தில் கண்ணதாசன் மனதைப் பறிகொடுத்தபடி சென்று கொண்டிருந்தார்.

மாநாடு நடைபெறும் ஏதென்ஸ் கலையரங்கில் அன்று மாலையில் கலை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாயிருந்தது.

மாலினி ராகவன் என்ற பெண்மணியும், மீனா அழகப்பன் என்ற பெண்மணியும் சிறப்பாக நடனமாடினார்கள்.

உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட்டிருந்தகளைப்பும், சோர்வும் இருந்த இடம் தெரியாமல் நீங்கிற்று என்று “ பயணங்கள் ” நூலில் குறிப்பிடுகிறார் கண்ணதாசன்.

மேலும் தமிழறிஞர் அவ்வை நடராஜனும், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனும் அங்கே வந்திருந்து நிகழ்ச்சிக்கு பொலிவூட்டினார்கள்.

கவியரசைப் பார்த்த சந்தோசத்தில் எல்லோரும், கை குலுக்கி வணங்கி, ஆரத்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

ஆக மொத்தத்தில் அந்த மாநாடு அரங்கு களைகட்ட ஆரம்பித்தது.

அடுத்த நாள் தான் கவிஞரின் சிறப்புரை இருந்தது.

டெட்ராய்ட் தமிழ் சங்க மாநாடு தொடங்குவதற்கு முன்பாக, காலை பத்து மணி அளவில் ஒரு சிறு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் அமெரிக்காவில் வசிக்கும் பொறியாளர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் என முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

கண்ணதாசனும், அவ்வை நடராஜனும், பெருங்கவிக்கோவும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பெருமைச் சேர்த்தார்கள்.

அந்தக் கூட்டப் பேச்சு முழுக்க, அமெரிக்காவில் தமிழ் வளர்ச்சியை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றியே இருந்தது.

நமது குழந்தைகள் ஆங்கிலேயர்களை விட சிறப்பாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.

ஆனால் தமிழில் பேசவும் எழுதவும் தெரியவில்லை.

காரணம் அங்கே தமிழ் பள்ளிக்கூடங்கள் இல்லை என்ற கவலையை வெளிப்படுத்தும் விதமாக அன்றைய உரையாடல் இருந்தது.

அங்கே நிலவுகிற நடைமுறையை தெரிந்து கொண்ட கவிஞர் மிகவும் கலங்கிப் போனார்.

மொத்தமும் வருத்தமுற்றார்.

தனது உரையில்,

“மனதினில் ஒன்றுபட்டு சேர்ந்திருப்பீர்
மழலைகள் தமிழ்ப்பேச செய்து வைப்பீர்
தனதெனக் கொண்டு வந்தது ஏதுமில்லை பெற்ற
தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கை இல்லை”

என்ற வைர வரிக்கவிதைகளின் மூலம் அவர்களின் உணர்வுகளை உணர்ந்து வெளிப்படுத்தினார்.

கவியரசரின் புதல்வர் அண்ணாத்துரை கண்ணதாசன், மனப்பாடமாக இந்தக் கவிதையை ஒப்பித்தபோது எனக்கு மலைப்பாகவும், வியப்பாகவும் இருந்தது.

அது மட்டுமல்ல இந்தத் தொடரில் வருகிற பல செய்திகளை கவிஞரின் புதல்வர்கள் கண்மணி சுப்பு, காந்தி கண்ணதாசன் வழங்கிய பல புத்தகங்கள், பயணக் கட்டுரைகள், கவிஞரின் சீடர் ஆர்.பி.சங்கரன் ஆகியோரின் உதவியோடுதான் எழுதி வருகிறேன் என்பதை நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

மாலை 3 மணியளவில் தமிழ்ச்சங்க மாநாடு நடந்தது.

மாநாட்டின் ஏற்பாட்டாளர் டாக்டர் மாதவன் வரவேற்புரை ஆற்ற, பாக்கியம் காசிநாதன் விருந்தினர்களை அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்த மாநாடு கலகலப்பாகத் தொடங்கியது.

மதிய உணவிற்கு பிறகு ஓய்வெடுப்பது கண்ணதாசனின் வழக்கம்.

சளித்தொல்லை வேறு அதிகமாக இருக்கிறது.

எனவே முன் கூட்டியே பேசி விடுகிறேன் என்று டாக்டர் அவ்வை நடராசனிடமும், பெருங்கவிக்கோவிடமும் சொல்லிவிட்டு, ஒலிபெருக்கிக்கு முன் போய் நின்றார் கண்ணதாசன்.

உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும், இங்குள்ள தமிழர்களை எல்லாம் காண வேண்டுமென்ற பேராவலின் உந்துதலினால் தான் இங்கு வந்துள்ளேன் என்று பலத்த கைதட்டல்களுக்கு இடையே பேச ஆரம்பித்தார்.

பிறந்த இடத்தில் மூன்று லட்சம் தமிழர்களைச் சந்திப்பதைக் காட்டிலும் அயல்நாட்டில் அதாவது அமெரிக்காவில் முன்னூறு தமிழர்களைச் சந்திப்பதில் ஓர் அலாதியான மகிழ்ச்சி எனக்குள் ஏற்படுகிறது.

அந்த மகிழ்ச்சியை உங்களை நேரிலே கண்டபோது உணர்கிறேன் என்றார் கவிஞர்.

தமிழன் எந்த நாட்டிலே வாழ்ந்தாலும், வசித்தாலும் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் வாழ்ந்தாக வேண்டும்.

நீங்கள் பேசுகிற வாய்மொழி எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.

ஆனால் நமது தாய்மொழியாம் தமிழை உயிராக நேசியுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கும் பேசக் கற்றுக் கொடுங்கள்.

அதன் அருமையையும், பெருமையையும் படிப்பாக உணர்த்துங்கள்.

தமிழைப் போல இனிமையான மொழி உலகில் எதுவும் இல்லை.

இணையான மொழியும் எதுவும் இல்லை.

தொன்மையான மொழியும் உலகில் எந்த மூலையிலும் இல்லை.

இப்படிப்பட்ட பாரம்பரியப் பெருமை தமிழனுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.

இந்தச் சிறப்பினை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்தாக வேண்டும்.

தவத்துக்கு ஒருவரடி…
சவத்துக்கு நால்வரடி…
ஆனால் தமிழுக்கு இருவரடி…
என்று சொல்வதைப் போல இருவர் இருந்தால் போதும்.

தமிழின் பெருமையைப் பேசிப்பேசி ரசிக்கலாம். சுவைக்கலாம் என்று கவிஞர் பேசியபோது எழுந்த கையொலியும் ஆரவாரமும் அடங்க அதிக நேரமாயிற்று.

தமிழ்ச்செல்வம் புதையல் போன்றது.

அது தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும்.

அதைக் கட்டிக் காக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

இதை உணர்ந்துதான் இவ்வளவு பெரிய மாநாட்டினை நடத்துகிற உங்களின் தமிழ் உணர்வினைப் பெரிதும் பாராட்டுகிறேன்.

உங்களின் தமிழ்ப் பற்றினை நானும் இங்கே வருகை தந்துள்ள தமிழறிஞர் அவ்வை நடராசனும் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனும் தமிழக அரசின் கருத்திற்கும், முதல்வர் எம்.ஜி.ஆரின் கவனத்திற்கும் நிச்சயமாக எடுத்துச் செல்வோம் என்று கவிஞர் பேசி முடித்தபோது எல்லோரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டி கவிஞருக்கு மரியாதை செய்தார்கள்.

இப்படிப்பட்ட கவுரவம் இதுவரை எந்தத் தமிழனுக்கும் அமெரிக்காவில் கிடைத்ததில்லை.

கண்ணதாசனின் புலமைக்கும் திறமைக்கும் கிடைத்த நற்சான்று இந்தப் பாராட்டு என்று பெருங்கவிக்கோ வா.மு.சே அவர்களை நான் நேரிலே சந்தித்தபோது உளம் பூரிக்கச் சொல்லி மகிழ்ந்தார்.

மிகக் குறைந்த நேரமே பேசுவேன் என்று எங்களிடம் சொல்லி விட்டு கோடை மழைபோல, கொஞ்சு தமிழில் பொழிந்து விட்டீர்களே என்று கவிஞரின் கரங்களைக் குலுக்கினார் அவ்வை நடராசன்.

உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்.

நீங்கள் தமிழ்த்தாயின் தவப்புதல்வர் உங்கள் உடல்நலத்தை கவனமாகப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்பது ஒட்டு மொத்த தமிழர்களின் பெரு விருப்பம் என்று சொன்னபோது அதை ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொண்டார் கண்ணதாசன்.

அண்ணன் அவர்களை சென்னையிலே சந்தித்து ஒரு பத்து நிமிடம் பேசுவதென்பது எளிதானதன்று.

ஆனால் இன்று உங்களோடு அமர்ந்து, மணிக்கணக்கில் உரையாடி மகிழ்வது பெரும்பேறு என்று கண்ணதாசனின் கரங்களைப் பற்றிக் கொண்டு வாழ்த்திய காட்சி இன்றும் எனது நெஞ்சிலே பசுமையாக இருக்கிறது என்று நினைவு கூர்ந்தார் பெருங்கவிக்கோ.

அன்று மாலை 7 மணி அளவில் நடைபெற்ற சீர்காழி கோவிந்தராஜனின் கச்சேரியையும் முழுதாகக் கேட்டு ரசித்தார் கண்ணதாசன்.

அவர் மகன் சீர்காழி சிவசிதம்பரத்தின் குரலும் அப்பாவைப் போல கணீரென்று ஒலிக்கிறது என்று வாழ்த்தி பாராட்டி 10 நிமிடம் பேசியதாக “ பயணங்கள் ” நூலில் குறிப்பிட்டிருக்கிறார் கண்ணதாசன்.

எனக்கு அமெரிக்கா மிகவும் பிடித்திருக்கிறது.

இந்த நாட்டின் அழகையும், எழிலையும், அருவியாய் ஓடுகிற நீரையும் பார்க்கும்போது இங்கேயே இறந்து விடலாமா என்று தோன்றுகிறது என்று அவ்வை நடராசனிடம் பேசிக் கொண்டிருந்த போது எதேச்சையாகப் பேசியிருக்கிறார் கண்ணதாசன்.

அருகிலே இருந்த நண்பர் ஒருவர் கவிஞரின் இந்தச் சொற்களைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து விட்டார்.

எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது. இதையெல்லாம் பார்த்த மகிழ்ச்சியில் இந்தியாவுக்குப் போய் இறங்கிய மறுநாளே இறந்து விடுவேன் என்று மீண்டும் கவிஞர் சொன்ன போது நானும் பேரதிர்ச்சிக்கு உள்ளானேன்.

ஏன் இப்படி தொடர்பில்லாமல் கவிஞர் பேசுகிறார் என்ற வருத்தத்தோடு சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் உலகக் கவிஞர் மாநாட்டில் பங்கேற்க அவரிடமிருந்து நானும் பெருங்கவிக்கோவும் விடைபெற்றோம்.

அதுவே பிரியாவிடை ஆகி விட்டது என்று அவ்வை நடராசன் தனது புத்தகத்தில் மொத்த வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை நமக்கு உரிய நேரத்தில் அனுப்பி வைத்த அவ்வை நடராஜனின் புதல்வர் டாக்டர் அருளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *